செவ்வாய், நவம்பர் 16, 2021

வீசும் காற்றில் பரவிய விஷம்

 அழுத்தமாய்

பாரமாய் இருக்கிறது என்றாள்
முதல் தவணையா
இரண்டாம் தவணையா
ஓரிரு நாளில் சரியாகிவிடும்
ஒத்தடம் கொடுக்காதே...
இரு இரு தடுப்பூசி பற்றித்தானே சொன்னாய்
இல்லையென்றாலும்
நீ சொன்னதுதானே
வேறு வழி
என்கிறாள் சிரித்தபடி

இந்த சிரிப்பு மட்டும் இல்லாவிட்டால்....
***************************************************

நாலாபுறமும் திணறல் செய்திகள்
குடும்பம் குடும்பமாக அவதியைப்
பங்கிடுகிறார்கள்
யார் யாரோ கவச உடைக்குள் கிடந்து
முறுகுகிறார்கள்
யாரோ ரத்தம் கொடுக்கிறார்கள்
யாரோ மருந்து அனுப்புகிறார்கள்
யாரோ கண்ணீர் விடுகிறார்கள்
யாரோ காசாவது தரட்டுமா
என்னால் ஒன்றும் முடியவில்லையே என்று
குற்றவுணர்வில் தளும்புகிறார்கள்
யாரோ சாப்பாட்டுப் பொட்டலங்களோடு
ஓடுகிறார்கள்
எதற்கும் அசையாமல்
சாதி சாதி என
பிணத்தைக் கட்டிக்கொண்டிருக்கும் பிறவிகள்
சாதி கவசம்
சாதி ஊசி
சாதி மருந்து
சாதி ரத்தத்தட்டு
சாதி சவக்கிடங்கு
கேட்பார்களோ
வீசும் காற்றில் பரவிய விஷம்
வேறுபாடறியாது கொல்கிறதே
இயல்பு

     சீக்கிரம் எல்லாம் பழசாகிவிட்டது

பழகிவிட்டது
அலுத்து விட்டது
மறந்துவிட்டது
கபசுரக்குடிநீர்
முகக்கவசம்
கிருமிநாசினிக் குழல்கள்
உடம்பு சுடும்வரை
வீடு
பகுதி பகுதியாக ஊரடங்கு
தடுப்பூசித் திருவிழாக்களில்
தேர்தல் திருவிழாக்களில்
பலூன்கள் பறக்கின்றன
யாவும் இயல்பு
மருத்துவமக்களே
அந்தக் காப்பீட்டு அறிவிப்பைக் கொஞ்சம் நகர்த்தி வைத்துவிட்டால்
தலைவரின் முகதரிசனம் நன்றாகத்தெரியும்
யாரப்பா அங்கே
பிரம்மாண்ட கட்டுமானங்களின் செங்கல் செலவைப்
பிணங்களை அடுக்கிக்
குறைக்க முடியுமா எனப்பார்
ஆக்சிஜன்,படுக்கை என்றெல்லாம்
புதிய கெட்ட வார்த்தைகள்
உருவாகியிருக்கிறதாமே
பயமே இல்லாமல் போய்விடுகிறது
இதற்கு ஏதாவது ஒரு வரி போட்டால்தான் சரிவரும்
குப்புறப்படுத்தால் ஆக்சிஜன் ஏறும்
அந்தப்பக்கம்
ஒரு விளம்பரத்தட்டி
நட்டுவை
PPE உள்ளே வேர்க்கிறதா
இன்னுமா பழகவில்லை
ஆறு மணிநேரம் வேலை செய்தால் அப்படித்தான் திணறும்
பதினெட்டு மணிநேரம் வேலைசெய்யப்
பழகுங்கள்
முன்னேர் வழி நடக்கப் பழகுங்கள்
ஒரே நாடு
ஒரே அழுகை
புதன், நவம்பர் 10, 2021

உண்மைக்கு மிக அருகில்

 உங்கள் அருகேயும் இருப்பார்கள்

உண்மைக்கு மிக அருகில் உட்கார்ந்து கொண்டே
அது எங்கோ
அமெரிக்காவிலோ
ஆஸ்திரேலியாவிலோ உள்ள ஊர்போன்று
உச்சரிக்கவே சிரமப்படுகிறவர்கள்
பற்றி எரியும் கோட்டை நடுவே நின்று
அந்த நாளில்...என்று பஞ்சாங்கம் படிக்கிறவர்கள்
ஆனைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்
கொள்ளையடிகன்னா வர்ரம் என்ற
கொள்கைப்பிடிப்பாளர்கள்
வலி என்று தொடங்கியதும் தன்வலி சொல்லி
வழி என்றதும்
முதலில் ஓடிவிடுகிறவர்கள்
தூக்கத்திலும்
நாற்காலியிலிருந்து விழுந்து விடும்
அச்சத்திலேயே அதிகார ஒலியோடு
குறட்டை விடுகிறவர்கள்
பிறகேன் அதிசயப்படுகிறீர்கள்
உயரத்தில் நின்று உளறுகிறவர்களைப் பார்த்து
அம்மையப்பன்தான் உலகம்
உலகம்தான் அம்மையப்பன் என்று
ஞானப்பழம் தின்னலாம்
இல்லையென்றால் உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்
என்று செந்திலாகலாம்

அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல்

      காசு முக்கியமென்றால்

ஏற இறங்கப் பார்ப்பீர்கள்
முணுமுணுப்பீர்கள்
கேட்காதபடி கெட்ட வார்த்தை கூட சொல்வீர்கள்
ஆணென்றால் முதலெழுத்தையும்
கடைசி எழுத்தையும் புள்ளியிட்டு எழுதி
வீரத்தையும் கண்ணியத்தையும்
ஒருங்கே காத்து விடுவீர்கள்...
சல்லிக் காசில்லாமல் நிற்கும்போது
பொறை வாங்கிப்போட்ட
தெருநாய் வாலாட்டலுக்கே உடைந்து அழத்தோன்றும்
யாரோ யாரையோ
சீத்துக் குறைவாகப் பேசினால்
சாடை தனக்கோ எனக் குறுகுறுக்கும்
வளப்பமாயிருக்கையில் வாங்கிய உடையை
உடுத்தவும் உறுத்தும்
இரக்கமாய் தரவரும்
பொருளுக்குள் நஞ்சு சுரக்கும்
பரவாயில்லை என்று சொல்பவனை
ஓங்கி அறைந்துவிட்டு
வக்கத்த நாயிக்கி என்று வசவு வாங்கியவருக்குத்
தெரியும் இதெல்லாம்
மற்றவர்
அமைதியாய்க் கடப்பாராக

**********************************
என்னைக் கடத்தினால் என்றொரு அலை
எல்லோரும் முங்கியெழுகிறார்கள்
புதிய பார்வை
என்றதும்
பார்த்த ஞாபகம் வராத படங்களோடு வருகிறார்கள்
என்னைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய்-
யேசுதாசின் குரலில் கேள்வியைப் போடுகிறார்கள்
எல்லாம் எதற்காக
மலைக்கோயில் மதில்மேல்
மரத்தின்மேல்
சீரற்றுத் தாவிக்கொண்டிருக்கும் குரங்குக்குட்டி
கைப் பண்டம் பிடுங்குமுன்
ருசித்துக்கொள்ளும் ஆவல்தான்
ஒரு புன்னகையை வீசுங்கள்
பிழைத்துக் கிடப்போம்
அந்தந்த நேர முகம்

 சற்றே தாமதமாக

சாப்பிடப்போகாதீர்கள்
சற்றே தாமதமாகக்கடைக்குப் போகாதீர்கள்
சற்றே சீக்கிரமாகத் துயிலெழ வேண்டாம்
சற்றே சீக்கிரமாகத் தேநீர்க்கடை தேடாதீர்கள்
மற்றபடி யாவும் சுபம்
யாவரும் நலம்
வெயிலைக் குடித்தபடி
கொரோனாவைத் தொட்டுக் கொள்பவர்களுக்குத்
தடையில்லை
ஏரியாவை அடைத்து
வீடு வீடாகப் பாலும் காய்கறியும்
கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வருகிறதா
நல்ல ஆளும் மண்டையும்...
சப்ஜாடா விநியோகம் முடித்து
எப்போ எண்ணுவீர்கள் என்று காத்திருப்போமா
இதை எண்ணுவோமா
******************************************
முன்பெல்லாம் நான் பார்த்துவிட்டேனோ
என்ற தவிப்பில் சரேலென்று ஒளிந்துகொள்ளும்
சுண்டெலி
இப்போதெல்லாம்
என்ன பண்ணப்போறே என நின்று நிதானித்து
கடப்பதைக் கூட
விட்டுவிடலாம்
ஒளிந்துகொள்ளும் இடத்திலிருந்து
வாலை நீட்டியே வைத்திருக்கும்
அலட்சியம்தான் தாள முடியவில்லை

முந்தானையிலொடுங்கும் சிறு கடவுள்

  கடற்கரைக்குச் செல்லுந்தோறும் பின்கொசுவச்சேலையும்

பூண் இட்ட கோலுமாகச் சுற்றிச்சுற்றி வருவாள் ஒருத்தி

அவளையொத்த இன்னொருத்தி
சற்று தொலைவில்
வலப்பக்க முந்தானையும் முக்காடுமாகச் செல்பவளையோ
சரிகைப்பொட்டு சேலை தடுக்க தடுக்க
தன்குழுவோடு இணைய ஓடும் வெளியூர்ப்பெண்ணையோ
துரத்திக் கொண்டிருப்பாள்
போனவாரம்
தர முன்வந்த பத்து ரூபாய் மறுத்து
உன் கை நீட்டினால்
என் கை நீளும் என
சிரித்து நகர்ந்தவள்
அவளா
இவளா
தெரிந்து கொண்டிருக்கலாமோ
துக்கத்தின் நெருப்புத் துண்டை
நொறுங்கத்தின்று
நூறுவயது வாழப்போவதை
மறுக்க மறுக்க யாரையாவது
துரத்தி
விதி சொல்ல அழைக்கும்
அவளும்
அப்படியொரு நெருப்புத்துண்டு
ஊண்காரியாகத்தான் இருப்பாளோ
அக்கினிக்குஞ்சின்
பொந்தாக
அசைகிறது
அவள் இடுப்பிலாடும் சுருக்குப்பை
இடதுமூக்கில் வளையமிட்ட
நாணச்சிரிப்பழகியின்
முந்தானையிலொடுங்கும் சிறு கடவுள் சிரிக்கிறது
சகல துன்பமும் தடுக்க
அவள் நீட்டும் தாயத்து பார்த்து
யதாஸ்தானம்

 மரணம்

எங்கே உட்கார்ந்திருக்கும்
அரட்டையடிக்க தோதாக விடலைகள் அமரும்
ஊர் மதகுகளில் வந்து உட்கார்ந்து
நிலவொளியில்
பேரேடு திருப்புமா
பழைய அரைவேட்டியை
முண்டாசாக்கி
அலக்குக்குச்சியை
ஊன்றுகோலுமாக்கி
கண்மறைத்து
ஆடு எண்ணும் மேய்ப்பனிடம்
எண்ணிக்கை பழகுமா
கிறீச்சு கிறீச்சென
பழைய துருவியில்
வளைத்து வளைத்து
ஒட்டதுருவியெறிந்த
கொட்டாங்குச்சி சாய்ந்து கிடக்க
தேங்கிய கோடைமழையைப் பருகி தாகசாந்தி பெற்றபடி
அன்று உடைபடப்போகும்
பானைகளுக்காகக்
காத்திருக்குமா
இடம் தெரிந்தால்
நாக்கைப் பிடுங்கும்படி
நாலு கேள்வி கேட்கலாம்

ஆத்தா

 எதற்கென்றும் இல்லாமல்

புன்னகைத்தபடியே இருக்கிறாள் ஆத்தா
முகமே அப்படியாகிவிட்டது
பிடித்த நிறச்சிற்றாடை கட்டி சிரிக்க நினைத்தது
பிடித்தவனைக் கட்டி
சிரிக்க நினைத்தது
மழலைகளோடு
சிரிக்க நினைத்தது
எதுவும் நடந்ததா தெரியாது
கரகரவென்று சாம்பலையள்ளி கரிப்பாத்திரம் தேய்க்கவே பிறந்தது போலக்
கடந்த
ஆண்டுகளும்
தேய்ந்த
கைகளும் கூட நினைவின்றி
சிரித்துக் கொண்டிருக்கிறாள்
அவ்வப்போது எதையோ
சரிபார்ப்பது போலக் கையை விரித்தபடி
வீட்டில் சாவு விழுந்தாலும் சிரித்தபடி இருக்கும்
ஆத்தாவை
வையும் உறவுகளுக்கும்
இல்லாமலில்லை
என்றாவது ஒருநாள்
சிரித்துவிடும் ஆசை

சமாதானம் சமாதானம்

      நீயாகத்தான் நினைத்துக் கொள்கிறாய்

குட்டி போட்ட நாய் போல
அங்குமிங்கும் அலைந்து
தேடுவது
ஒரு பதிலை
தட்டித்தடவி தவதாயப்பட்ட பின்
கிடைத்தது
பதிலா
சமாதானமா என்று
அடையாளம் காணவியலா
தாழ்சர்க்கரைக்குப்
போய்விடுகிறாய்
நிதானம் மீள்கையில்
சமாதானம்தான் பதில்
என்ற சமாதானத்துக்கு வந்துவிடுகிறாய்
குறைந்தபட்சம்
இன்னொருமுறை
குட்டிபோடும் வரையாவது *********************************************

எப்போதாவது
நீங்களும் சொல்லியிருப்பீர்கள்
போதும் போதும் இன்னிக்கி ரொம்ப சிரிச்சாச்சு
ரொம்ப அழும்போதோ
ரொம்ப திகைக்கும்போதோ
ரொம்ப ஆத்திரப்படும்போதோ
வராத மனத்தடை சிரிப்புக்கு
நமக்கே உள்ளே
இருக்கிறதுபோல
சிரிப்பு அந்நியம் என்று
மலர்ச்சி அந்நியம்
என்ற விதி மாம்பூக்களையும் விடுவதில்லை
பாருங்கள் *******************************************

ஜனநாயகத்தின் சீசேம்

 முனை பழுத்த கொப்புளத்தைக் கிள்ளத் துறுதுறுக்கும் கை

அச்சோ
இரு இரு...தடுக்கும் அறிவு
தினம் ஒன்றாகப் பழுக்கிறது
சொல்லால் கிள்ளாது
சும்மா இருக்க வைப்பது சும்மா இல்லை

*************************************************
கடையில்
புதிய ரொட்டிதான்
தரப்படுமென்று
நம்புகிறீர்கள்
தெருநாய்
உங்களைப்போல
ஏமாறுவதில்லை
வாழ்க்கைக்கு
நீங்கள்
தெருநாய்தான்

***********************************************
தவறான சாவியில்லை
ஆனாலும் பொருந்தும்வரை
குழம்பி குழம்பி
எடுத்து ஒருமுறை
உறுதி செய்தும் திறக்காத அலமாரிகள்
யாராவது வந்து சீசேம் சொல்லுமுன்
திறந்துகொண்டு விடுகின்றன

இரண்டாம் ஆட்டம்

 எங்கு

எத்தனை பேர்
கணக்கு விகிதம்
வீட்டருகேயா
உறவிலா
நட்பிலா
அறிந்தவரா
அறியாதவரா
செய்திகளைக் கேள்
சொல்
சற்றே படபடப்பாக இருக்கிறதா
தேர்வு
ஆன்லைன்
தள்ளிவைப்பு
ரத்து
இதுவரை இல்லாத அளவாக...
சொற்களையும்
சம்பவங்களையும்
மீள்பதிவு செய்கிறதா
கொரோனா
இல்லை
கால இயந்திரத்தில்
சென்ற ஆண்டுக்குப் போய்விட்டோமா
இருங்க
நடுநடுவே
தடுப்பூசி
இரண்டாம் அலை
கும்பமேளா
தேர்தல்மேளா
ஓ..
இது இந்த வருடம்தான்...
சரி
சாலைகளின் பெயரை மாற்றிப் பார்ப்போம்
கண்ணாடியைத் திருப்பினா
ஆட்டோ ஓடாதா

திங்கள், நவம்பர் 01, 2021

பெயிண்ட் இல்லை

          வேணாம் சார்

வீடு எப்படியோ இருக்கட்டும்
எண்ணெய்க்கை
பிள்ளைகள் வீட்டுக்குள் கிரிக்கெட் அடித்து ஆடும்
டென்னிஸ் பந்து கறை
அதிகப்படியாகப் பிதுக்கி
அவசரமாகத்தள்ள முயன்று
உள்ளே போகாது சுவரில் தடவிய
அடர் சிவப்பு பற்பசை
உரித்து ஒட்டி
உரித்து ஒட்டி
இனி உதவாதென விட்ட ஒட்டுப்பொட்டுகள்
துளி அதிகமாகி வழித்த மையும்
சாயமும் சுண்டிவிட்ட சுவடுகள்
முன்கை மாதிரியே தெறித்த தாளிப்பின்
சுவடேந்திய அடுப்படி
குழைந்து கரைந்த சோப்பின்
பாத்திரக்குலாவலுக்கு மீந்த உப்புப்படிவம்
எந்த நிறமுமில்லாது லேமினேட் செய்த வீடு எதற்கு
ஆயினும்
ஒரு உபகாரம் முடியுமா
அணிலாடும் முருங்கைப்பூக்கிளை
தளிர்நடையின் சிவந்த முதல் அடி
அருந்திய பால்துளி இதழ்க்கடையிலொழுக
கண்ணயர்ந்து சிலிர்த்த சிரிப்பு
முத்தத்தை
ஐ..எச்சி...எனத்தள்ளிய நாணத்திருமுகம்
ஒன்றிரண்டாவது
லேமினேட் செய்து தர இயலுமா

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...