நாய்க்குட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாய்க்குட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 08, 2020

அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்

 ஸீரோவா

ஜீரோவா என்று
வாதிட்டுக் கொண்டு வீடு வந்த நாளுக்குப்பின்
பள்ளி செல்லவில்லை பாப்புக்குட்டி
நாளைக்கி மிஸ் கிட்ட
கேக்கலாம்னு சொன்னாம்மா மித்து
( அது மித்ராவா,மித்திராவா தெரியவில்லை)
நாளக்கி எப்பம்மா வரும்?
காலடியில் தொங்கும் பாப்புக்குட்டியிடம்
சும்மா தொணப்பாம
போய் விளையாடு என்ற அம்மாவசனம் சொல்லித் தப்புவது எத்தனைநாள் *****************************************************
முன்னங்காலை
வளைத்து சற்றே குனிந்து உற்றுப்பார்த்த நாய்க்குட்டிப் பார்வைக்கு மிரண்டே குழறினேன்
உன்னை அவ்வளவு பிடிக்கிறது அதற்கு
தூக்கு
என்றவள் சிரிப்பில்
பொறாமைதான் பெருகுகிறது
எதைத்தான் சரியாக அடையாளம் தெரிகிறது எனக்கு **********************************************************
திடீரென்று பாதையில் வந்துவிட்டது அந்த குட்டியானை
பக்கவாட்டு சாலையிலிருந்து
பக்குவமின்றி நுழைந்தவனைத் திட்ட முடியாமல்
சற்றே நிதானிக்கிறாள்
பின்னால் வந்து தாண்டும் சக ஈருருளியானுக்கு
ஒரே கேள்விதான்
செருகிவந்த
முந்தானை பறந்தால்
துப்பட்டாவின் முடிச்சு பிரிந்தால்
மணியாயிற்றே என்று சற்று முடுக்கினால்
பெண்ணைப்பார்த்துக்
கேள் என்று
மரபணுவில் புதைத்து அனுப்பிய கேள்வியை மறவாமல் வீசிவிட்டு
திரும்பும் கண்களில் சில
குற்றவுணர்ச்சியில்
தாழ்வதுண்டு
எவ்வளவு தூரம்
தாண்ட

நேற்றைய சம்பங்கி

 படரட்டுமெனத்தானே கயிறெல்லாம் கட்டி விட்டீர்கள் அது கைப்பிடிச்சுவர் பிடித்து ஏறுவது அவ்வளவு உறுத்துகிறதா கொழுந்து இலை நாலு கீழே கிடப்பதற்கு அணிலைச் சந்தேகப்படுவதா உங்களையா பிடிபடவில்லை

**************************************

படிக்கட்டில் சுருண்டிருக்கும் நாய்க்குட்டியாக
அவள் பாத வீக்கம்
தற்செயல் பார்வைக்குப்பின்
இழுத்துவிட்டுக் கொண்டாள் கொசுவத்தை
தெரியவேயில்லை
வீசி நடக்கும் நாழி
*****************************************
ஆளரவமற்ற மண்டபத்தில்
ஒரு வௌவால் படபடப்பாவது கேட்கிறதா
இருவாசியைத் தொட்டுவிட நீள்கிறது
அவன் கைத் தழல்
செஞ்சடைப்பிரியிலிருந்து
உதிர்கிறது
நேற்றைய சம்பங்கி ********************************************
சொல்லிக்கொண்டே
இருப்பது மட்டுமல்ல
சொல்லாமலிருப்பதும்
பதில்தான்

**********************************************

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

அடையாள அட்டையில் புச்சுக்குட்டி

 புன்னகையோடுதான் சொல்கிறீர்கள்

உங்கள் ரயிலைத்
தவறவிட்டுவிட்டதை
உங்கள் செல்ல நாய்க்குட்டி
தொலைந்துபோனதை
உங்கள் வரம் விழுந்து நொறுங்கியதை...

அதே புன்னகையோடு கேட்டுவிட்டு
பிறகு சந்திக்கலாம்
டேக் கேர் என்று கைகுலுக்கினார் அவரும்

எத்தனை நாகரிகம் வளர்ந்துவிட்டது

***************************************************
தந்தையின் இருசக்கர வாகன முன்னிடுக்கு
சரியாகத்தான் இருக்கிறது
நின்றுகொண்டு
ராஜ்ய பரிபாலனம் செய்ய
தெருமுனையில்
சுருண்டிருக்கும் புச்சுக்குட்டியை
அச்சசூ இன்னும் தூங்குதுப்பா
என்று சிணுங்கியபடி கடந்து செல்கிறாள்
பாப்புக்குட்டியின்
சீருடைக்கு மேலாடும்
அடையாள அட்டைக்குள்ளும் ஒரு
புச்சுக்குட்டிதான்
*****************************************************

ஞாயிறு, மார்ச் 22, 2020

சவுத்த ரொட்டி


பொழுது புலர்கையில்
கண்ணுக்குள்ளேயே வரிசை கட்டி நிற்கின்றன
அன்றாடத்தின் எதிர்கொள்ளல்கள்
சன்னல் காக்கை ஒரேமாதிரிதான் கரைகிறது
இங்கேயோ
சோம்பல் எரிச்சல் தயக்கம் துள்ளல்
ஆயிரம்
ஹார்மோனியக் கட்டைகள்
நாய்க்குட்டி போல் தலைசாய்த்து
காத்துக்கொண்டிருக்கும்
உங்கள் வாகனம் ஒரு உதையில் புரிந்துகொள்ளும்
தினத்தின் பாதைக்குள்
அன்றைய பாட்டைச்
சுமந்து நகரும்
தினம் என்பது
கிரீம் பிஸ்கெட்டின் எதிரி
அதற்குத்தெரியும்
இரண்டையும் பிரித்துக்கூட
நக்கித்தின்றுவிடும்
நீள் நாக்கை
மாலை மீண்டும் நாய்க்குட்டி
தலைசாய்த்து நிற்கையில்
படியேறுகிறது
கிரீம் உதிர்ந்த சவுத்த ரொட்டி

வியாழன், அக்டோபர் 10, 2019

கொஞ்சூண்டு வானம்

போகன்வில்லாவின்
முட்கள்
உன் ரத்தச்சொட்டுகளைக்
கவனிப்பதில்லை
ரோஜாவினதும் கூட
ஆக
இரண்டும்
ஒன்றுதான்

*********************************
வேப்பங்கிளைகளின்
இடுக்கில் தெரியும்
கொஞ்சூண்டு வானத்தை
அண்ணாந்து பார்த்துவிட்டு
புரண்டு படுத்துக்கொண்டது நாய்க்குட்டி
என் கண்களோ பாதையில் மட்டும்

********************************************
உக்கிரத்தை அடக்கு
அழுகையை அடக்கு
வன்மத்தை அடக்கு
ஆசையை அடக்கு
நாவை அடக்கு
உணர்வை அடக்கு

நீ
என்னை அடக்குவது
போல்தானே
******************************************
மன்னித்தே ஆகவேண்டுமென 
மனதைத் தயார்படுத்துங்கள்
உங்கள் ஆவேசத்தின்போது
முகமளவு மனமும் சிவந்துகிடப்பது தெரியும்
ஆனாலும் மன்னிக்கத் தயாராகுங்கள்
சட்டென நகர்ந்துவிடாமல்
குற்றவுணர்ச்சியின் 
எச்சில் தெறிக்கும் வார்த்தைகளைச் சேகரியுங்கள்
உதிர்ந்த பவழமல்லியைத் 
துணி போட்டுச் சேகரிப்பீர்களே அதுபோல்தான்
ஆனால்
நீங்கள் துணிவிரிக்குமுன்பே
பவழமல்லியின் பூக்கும் பருவம் 
முடிந்து விட்டிருக்கிறது


சனி, நவம்பர் 03, 2018

யீங்

அலமாரி இருள் புழுக்கத்திலிருந்து
அரை வெளிச்சம் பார்த்த ஒரு நாளைக் 
குடை அசை போட்டுக்கிடக்கிறது
சொட்டி முடிக்கும் கடைசித்துளியிடம் 
அப்புறம்..எப்போ என்றிருக்குமோ

*********************************************************
தளர்நடையோடு முக்கி சுமந்துவந்து 
சொப்பு சாமான்களைப் பிரித்து 
விளையாட்டுக்குத் தயாராகும் 
குட்டிப்பாப்பா போலத்தான்
இருந்தது அதிகாலைச்சூரியன்
யீங் என்றொரு முனகலோடு
கால் மாற்றிப்படுத்துக்கொண்ட
நாய்க்குட்டியைப் பெரிதாய்க்
கண்டுகொள்ளாமல்


***********************************************


வியாழன், ஜனவரி 21, 2016

ஜனவரிப்பூக்கள் -2

முள்ளிருக்கிறது என்ற நினைப்பில்
ஓரக்கண் பார்வையோடு கடந்துவிட்ட
ஆரஞ்சுப்பூங்கொத்தைத் தயங்காது 
வளைத்துப்பறித்து
முகத்தோடு உரசியபடி
ஏழாவதுவயதில்போல
மென்குதிநடையோடு போக
இந்த முகம்தான் தடைஎனில்
கொஞ்சம்நில்லுங்கள்
சற்றேதிருகி எடுத்துத் தந்துவிடுகிறேன்


************************************************
உலர்ந்த கேள்விகள் 
கொடிக்கம்பியில் சேர்ந்துகொண்டேபோகின்றன
கிளிப்பே துணை
கிளியை நினைத்தீர்களா என்ன
உங்கள் நினைப்பிலும்
இந்தப்பிழைப்பிலும் வீசுகிறதுகாற்று


*******************************************
வாய்மூடி நகர்வதில் பிழையில்லை 
உனக்குத் தெரியாது 
உனக்குப் புரியவில்லை 
என்று சமாதானித்துக் கொள்வதில்
சிரமமில்லை
உதட்டைச்சுழித்தபடி மட்டும்போகாதே

***********************************************
நொண்டிக்கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி
அப்படியாகவே நினைவின் சித்திரத்தில்
தங்கிவிட்டது
அபூர்வ விருந்தாளியாக வந்தவருக்கு
அதுவோ 
கால்ஆறி,வயதேறி ,நுரைதள்ளி
வண்டியிலும் ஏறிப்போய்விட்டது
விசாரித்தபோது
துரத்திய நாள்தவிர்த்து
சொல்லிமுடித்தோம்

********************************************************
மறந்திருக்கும் எனநினைத்ததை
நினைத்திருப்பதும்
நினைவிருக்கும் எனநம்பியதை
மறந்திருப்பதும்
சுவாரசியம்.

அசுவாரசியமாகவும் இருக்கலாம்
***************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...