சனி, அக்டோபர் 24, 2015

தாய்க் குலத்தின் பேராதரவுடன் ....

பாத்திரம் பண்டமெல்லாம்
பார்த்துப் பார்த்து தேய்த்து
கூடுதலாக மேலிருந்தும் எடுத்து
தேய்த்து (பொறுப்பான மருமகள் )
வந்ததும் சாப்பிடத் தோதாக
சமையல் முடித்து வைத்து
வராதவர் மனங்கோணாதவாறு
தின்ன எடுத்துவைத்து
இடையில் சூடிச்  செல்ல
உதிரி மல்லி கனகாம்பரம் தொடுத்து
பரபரக்கும் வேலை நடுவே
நீ வரியா நீ வரியா
ஆள் சேர்த்து
சென்றுவந்தவளிடம் கதைகேட்டபடியே
ஆட்டுக்கல் தெறிக்க தெறிக்க
மாவரைத்து வழித்து
வியர்வையை வழித்தெறிந்து
தீபாவளி புடவைக்கு மாறி
வீட்டுப்பாடவிசாரணையும் இன்றி
நண்டுசிண்டுகளையும் இழுத்தபடி
காட்சிதோறும்
விரைந்தவர் கண்ணீரும் புன்னகையுமே
உங்கள் வெள்ளிவிழா பொன்விழாக்கள்

எங்கள் கதாநாயகிகளுக்கு
இப்போ
நிறைய வேலையிருக்கு பாஸ்
பாடல் பெறா வாழ்வு


என்ன பொறுக்குதென்றே
தெரியாத குருவிகள்,
எப்போதாவது வரும் புறாக்கள் 
எங்கிருக்கிறதென்றே இருப்பிடம் காட்டாது
அன்றாடம் தன் குரலால் இழுக்கும்
ஒற்றைக்குயில்
கேலி செய்வதுபோல் திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே தாவும் அணில்
எல்லாவற்றையும் பற்றி
எழுதியாயிற்று
அன்றாடம் ஒரு கவளம் சோற்றுக்கு
வருவது ஒரே காக்கையா என
ஏனோ நினைத்ததில்லை
நான் நினைத்தேனா
என அதுவும் நினைக்கவில்லை
எங்கள் பந்தம் ஒரு கவளம்
அதற்கு மேல் ஏதுமில்லை


இச்சை

முத்தத்தைப்பற்றியே 
பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
குறிப்பாகவும்வெளிப்படையாகவும்
மேலும் மேலும் வர்ணிக்கிறீர்கள்
உவமான உவமேயங்களால்
அலங்கரிக்கிறீர்கள்
பாடுகிறீர்கள்
மிகப்பெரிய அனுபவமாக
விவரித்துக்கொண்டேயிருக்கிறீர்கள்
அனுபவங்களுக்கு நேரமும்
வாய்ப்பும்இல்லாதவன்
கதாநாயகர்களின் சாகசங்கள்
தம்போல்வான் வாழ்வில்நிகழாதுஎன
திடமாக நம்பியபடி
உங்களைக்கேட்பதும் பார்ப்பதுமே
தம் அனுபவம் எனஎழுதிக்கொள்கிறான்


வருத்த வருத்தம்

இறந்தவர்
கடைசியாக என்னமனநிலையில்
எந்தவிளிம்பில்நின்றார்
என்பதை அறியாமல்
துக்கம் கேட்கப்போவது
பெருந்துயரம்
அன்றையநாளின் குலைந்த கிரமமோ
உச்சந்தலைக்கருகே உரசும் வாள்
நிர்ப்பந்தங்கள் கொண்டுநிறுத்தியிருக்கும்
இக்கையறுநிலையில் துளிர்க்கும்
உங்கள்கண்ணீரை
அவருக்கான துயரமாக மாற்றிப்
புரிந்துகொண்ட
எவரேனும் உங்களை
ஆற்றுப்படுத்தக்கூடும்
வருத்தத்தைவிட சௌகர்யமாகக்கூட
நீங்கள் உணரலாம்
பந்தலிலே பாவக்கா பாடல்
நினைவுக்குவருமுன்
எழுந்துவிடுங்கள்
சாவுவீட்டில் சொல்லிக்கொள்ளாமல்
போகலாம்
இல்லாவிடில் புன்னகைத்துத்
தொலைக்கப்போகிறீர்கள்


செவ்வாய், அக்டோபர் 20, 2015

தொலைநோக்கு


அவல்பொரிகடலையை
ஆண்டுக்கு ஒருமுறை ஆவலுடன்
ஏந்திக்கொண்டு 
சக்கரைத்துணுக்கைத் தேடியடைவதில்
மகிழ்ந்த போதும்
தும்பைவரிசையைத் தாண்டி
ஒடித்த கிளுவைக்குச்சியை
நீட்டி நீட்டி
ஓடும் கூட்ஸ்வண்டியின் பெட்டிகளை
எண்ணிச் சொல்வதில்
போட்டியிட்ட போதும்
இத்தனை அருள்கேட்கும்
ஆவல் எங்களுக்கும் இல்லை
ஈன்றார்க்கும் இல்லை

சரஸ்வதி

நூறும் ஆயிரமுமே
போதுமாயிருந்தது எங்களுக்கு
வீட்டுப்பாடம் நடுவேயும்
வீடியோகேம் நடுவேயும்
விழுந்து விழுந்துவணங்கும் பிள்ளைக்கு
முன்மழலை வகுப்பின் முன்னே
சொல்லிக்கொடுத்துவிடுகிறோம்
உந்தன் வந்தனப்பாடல்களை
லட்ச லட்சியமென்றால் சும்மாவா
அப்புறம்
கைப்பிடிஅவலோடு காட்பரிஸ்
மறவாமல் வாங்கிவிடுகிறோம்
பிள்ளைகளுக்கு அவல் சேராது


வெள்ளி, அக்டோபர் 16, 2015

உனக்காகநட்சத்திரங்களுக்கு ஒளி குறைவு
நீ பார்க்கையில்

கதிர் எப்போதும்
உன் சிரிப்பைவிட மங்கல்தான்

சிரிப்பின் முடிவில்
உன்

கண்ணோரம் துளிர்க்கும்
கண்ணீரின் தண்மையிடம்
மழை பாடம் படிக்கவேண்டும்

இவ்வளவுதான்
இப்போ நினைவிருக்கு
வாட்ஸ் அப்பில் சுற்றுக்கு விட
நீ எழுதியது எனத் தெரியாமல்
எனக்கென்று ரசித்தது தலைவிதி

பன்னடுக்கு மருத்துவமனையின் 
ஏதோ ஒரு தளத்திலிருக்கும் 
உணவியலாளரிடம்
பத்தியப்பட்டியல் குறித்து,
மின்தூக்கி எதிரில்சிரிக்கும் 
பிள்ளையாரிடம் கன்னத்தில் போட்டபடி 
சிறப்பு மருத்துவர் முன் 
பவ்யம் காட்டி,
எதிர்ப்படும் காவலரிடம் 
அகால நுழைவுக்கான அபராதம் 
கையழுத்திவிட்டு ,
மூச்சு வாங்க வந்த வேகத்திலேயே 
ஆரஞ்சு  பிழியும் நேரம் 
தலைவிதி பற்றிப் புலம்ப 
ஏராளம் இருந்தது 

அடகும் அட்டை உரசலும் 
சண்டையைக் கூட சாத்தியப் படுத்தின

அடகுக்கும் ஏதுமின்றி
அட்டைக்கும் வழியின்றி
மஞ்சள் குங்குமம் குவிந்த
மரத்தடி அம்மன் முன் நின்றபின்
நீளும் வரிசையின் கடைசியில்
நின்று
படுக்கையும் பாயும் கூட இன்றி
நடைபாதையில் கிடக்கும் இடத்துக்கு
பங்கம் வந்துவிடுமோ என்ற
பதட்டத்தோடு சுருண்டவன்
வலிமுகம் சொன்னது
தலைவிதிக்கு விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 11, 2015

ஆடும் பாடு


துள்ளும் சில நேரம்
துவளும் சில நேரம்
மருளும்,மயங்கும் ,உருளும் ,உரசும்
மேகம் போலவே திரளவும் திரியவும்
பிரியவும் உடையவும் உருகவும்
ஊறவும்
பல்கிப் பெருகவும்
புள்ளியாய்ச் சுருங்கவும் செய்யும்
இதன் பெயர்தான்
ஆன்மாவா
சனியன் என்ன பாடு

இசை நின்ற பொழுதுகளில்
காலைப் பிராண்டும்
உன்னை எப்படிக் கொல்வேன்
நான் ஓடிக் கொண்டிருக்கும்
இசை நாற்காலிப் போட்டியின்
ஒலிவிசைக் கட்டுப்பாடோ
ஒரு

பித்தனின் கையில் 

பெரிய பள்ளம்தோரணவாயில்,கட்அவுட்,பேனர்
எந்த இலக்கணப் பிழையுமின்றி
சகல ஆடம்பரங்களோடும்
நடந்து முடிந்தது திறப்பு(திரு)விழா

என் ஆயுசுல இவ்ளோ பெரிய
பாலம் பார்த்ததேயில்லை
வியப்புடன்
பேரனோடு வேடிக்கை பார்க்க வந்தார்
பக்கத்து ஊர் முருகேசன்

நுரை ததும்பி ஓடிய காலத்து
வெள்ளத்தில்
ஆடு மாடு ஏன் மனிதர்களும்
அடித்துச் செல்லப்பட்ட கதையும்
அளவான பெருக்கில்
ஆறு குடைந்து நீந்திய பெருமையும்
பேரனோடு பேசிக்கொண்டே
வந்து சேர்ந்தார்
பாலம் கட்டிய நீண்ட வருடங்களுக்குள்
வட்டம் மாவட்டம்  ஆனகதையும்
மாற்றுப்பாதையில்
கும்பகோணம் பில்ட்டர் காபி ,பரோட்டா கடைகளோடு
வாகனப்பழுது நீக்கும் கடைவரை
ஒவ்வொன்றாய்
முளைத்து புதிய நகர் வந்த கதையும் 
மனதுக்குள் தனியே ஓட
பாலத்தின் மேல் நின்று பார்க்கையில்
என்னவோ பரவசம்தான் அவருக்கு

கீழே என்ன தாத்தா
இவ்ளோ பெரிய பள்ளம் என்றான்
ஆறுகளின் வரலாறு அறியா
பேரன்

என் பெயர் நீலா

ருந்தி வருந்திச் சொல்கிறீர்களே 
என்றுதான் வாங்குகிறேன் 
டென்ஷனும் செலவும் நீள நீள
பத்துக்கு நாலு ஸ்கின் ப்ராப்ளம் ..
 
கரைத்துக் கரைத்து ஊற்றினாலும் 
நான் வளர்கிறேன் 
எனக் குதிக்காத பிள்ளை 
உங்களைப்போலவே  கிண்ணத்தில் குழைத்து 
ஊட்டியபோது களுக்'கெனச் சிரிக்காமல் 
தூவெனத் துப்பி,விழுங்கினால் 
வீறிட்ட செல்வமல்லவா 
 
அழுக்கு நைட்டியும் 
அதில் துடைத்த ஈரக்கையுமாக ஏற்றினால் 
டிசைனர் சுடிதாரில் வந்து சிக்கெனக் 
கொளுத்தாத காரணத்தால் 
கொசுக்களும் மடிவதில்லை 
 
நானும் யோசிக்கிறேன் 
குடும்பத்தலைவியாய் உணரமுடியாமல் 
வேலைக்காரிபோல் 
திரிவதன் காரணம் 
பிளாட்பாரம் நைட்டிதானோ என...
 
நிஜப்பெயரில் இதெல்லாம் 
பகிரமுடியாமல் 
புனைப்பெயர் சூடினேன் நீலா என்று ..
 
ஐயோ ..இதென்ன 
இந்தப் பெயருக்கு 
இத்தனை போட்டியா

சனி, அக்டோபர் 10, 2015

அடையாளங்கள்

பைத்தியக்காரத்தனத்தின் அடையாளங்கள் 
எவை எவையாக இருக்கலாம்
பறந்துகொண்டிருக்கும் மகிழம்பூக்களைப்
பொறுக்கி எடுத்துப் படம்பிடிக்கலாம்
அந்தப் படத்தைப்
போட்டு
தோழனுக்கு வாழ்த்து சொல்வதைக்
கவுரவமாக நினைக்கலாம்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்
தன் கனவுக்கன்னி( பாத்தியதை எங்களுக்கும்உண்டுல்ல)
அணிந்திருந்த
ஜானி ஸ்டில் முத்துமாலையை
இப்போதும் தேடலாம்
லட்சத்தைத் தொட்டு விலை சொன்னால்
ஆயிரங்களில் அடைக்கலமாகலாம்

சகபைத்தியமொன்று
தேடிக்கொணர்ந்த புளியம்பிஞ்சுகளைச்
சுவைத்தவாறே இதைத் தட்டச்சலாம் smile உணர்ச்சிலைஆறுதல் புன்னகை

களிம்புகளும் ,பசைக்குழாய்களும் 
இறைந்து கிடக்கும் 
மேசையடியில் அமர்ந்துதான் 
தொலைக்காட்சி பார்ப்பது 
நறநறத்துக் கிடக்கும் 
மனசுக்கென்றும் 
ஒருத்தி புன்னகைப்பாள் 
என்ற நப்பாசையில் 
சின்னத்திரையை 
உற்று நோக்கிக்கொண்டே ....


18 5 15  கல்கியில் 

வெள்ளி, அக்டோபர் 09, 2015

சமூகம்


அருவருப்பாகத்தான் இருக்கிறது
நான்கு நாட்களாகப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்கு வெளியில்
உதிரக் கொத்தோ
உதிரிமலர் அழுகலோ
தெரியவில்லை.
அப்புறப் படுத்தப் படாமலே கிடக்கிறது.
யாருக்குத்தான் பொறுப்பிருக்கிறது.

ஆயாசமாக இருக்கிறதுஎத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்பது
எத்தனை பேருக்கு சொல்லிக் கொடுப்பது

உடலைத் திறப்பதால்
ஒருவரை அவமானப்படுத்திவிட
இன்னும்எத்தனை
நூற்றாண்டுகள்வரை
இம்மூடர் கூடம் துடித்துக்கொண்டிருக்கும்

தின்றால் பாவம் கொன்றால்போச்சு
எனத் தலைகீழாக்குகிறீர்கள்

யார்வீட்டுத் துக்கமும் ஒப்பாரியும்
உங்கள்தூக்கம் கலைப்பதேஇல்லை

வயிறுஎரிவதே இல்லை
ரயில் தண்டவாளத்திலோ
தூக்குக்கயிற்றிலோ
எவர்வீட்டுச் சுடரோ
இழுத்து அணைத்துப் போடப்படுவதைக்
கண்ணுற்றபோதும்

அகன்றதிரைத்தொலைக்காட்சியின்
துல்லியம் காரணமாகக்
காண்பதெல்லாம்
சேனல்காரன் போட்டியில்
வாங்கிய திரைப்படம் என்றா
நினைக்கிறீர்கள்

ஆயாசமாக என்றாசொன்னேன்
இல்லை
ஆபாசமாக எனத் திருத்திக் கொள்ளுங்கள்

சே...வாயாரத்
திட்டத் தோதாக
ஒருபோலிக் கணக்கையாவது
ஆரம்பித்துவிட வேண்டும்
முகநூலில்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...