ஞாயிறு, மார்ச் 22, 2020

இன்றைய கடல்

இன்றைய குளிரையும் வெயிலையும்
 பிசைந்து உருட்டிக் 
கடல் தின்றதைக் கண்டிருக்கவேண்டும்
நாளை பார்க்கலாமென்கிறாய்
இன்றைய கடல் இருக்காது என்றறியாமல்
நாளையைக் கொண்டுபோய் 
எங்கு ஒளிக்க....
நாளையாம் நாளை
****************************************************************
தொட்டியில்
நீர் நிரப்பிவிட்டேன்
அழகிய வட்டத்தொட்டி
அழகாக்குவதன் சாத்தியத்தை
அல்லிதான் வைத்திருக்கிறது
பார்த்திருக்கையில்
ஒன்றாவது பூத்துவிடுமா
************************************************************
காம்புத்
தண்டிலிருந்து
துளிர்த்து விரிவதற்குள்....
தவிப்பின் நிறம் பச்சை
************************************************************


திறந்திருக்கும் கதவு

முன்முற்றச் சிறுதொட்டி
சரிந்துகிடக்கிறது

தூறலில்தான் தொடங்கியது

சிறுபையோடு வெளியேறிய அவள் 
வீடு திரும்பிவிடுவாள் என்றுதான் 
எட்டிப்பார்க்கிறது 
மடங்கிக்கிடக்கும் கிளை
வீடும் அப்படித்தான்
நினைத்தது போல

கதவு ஒருக்களித்தபடியே
கிடக்கிறது

இழுப்பறை வெளிச்சம்

திரையில் விரியும் கடல் கண்டு 
விரிகிறது மனதின் கடல்
கடலான கடல் விரியும்போது
திரையிட்டுக் கொண்டுவிடுகிறது 

மனம்

**********************************************************
நீ
கிண்டலாகச் சிரிக்கும்போது 
கண்ணில் தெறிக்கும் 
பிரத்யேக மினுக்கு
என் மேசை இழுப்பறைக்குள்ளிருந்து 
கண்கூசும் வெளிச்சம்
ஒன்றுவிடாமல் சேர்த்தது
**********************************************************
பிறகு
எல்லாமே தெரிந்திருக்கிறது
என்ற முகமும் 
பொருத்திக் கொண்டீர்கள்
********************************************************
சன்னலுக்கு வெளியே ஒளிரும்...
இருங்கள் ஒருநிமிடம்
திரைச்சீலை தள்ளி பார்த்துவிட்டு சொல்கிறேன்
ம்ஹூம்
கும்மிருட்டு
நல்லவேளை பார்க்கத் தோன்றியது


நினைவுகளின் தாழ்வாரம்

கைப்பிடிப் புல்லைத் 
தெருவோரக் கன்றுக்குட்டிக்குப் 
போட்ட கணக்கிலேயே 
சொர்க்கத்தை 
உறுதிசெய்வார் சுந்தரம் மாமா
சிறுகிண்ணத்தில் 
பச்சரிசிவெல்லம் பிசைந்தபடி 
அடுத்தவீட்டுத்தொழுவம் நாடும் 
கமலத்தாச்சி
மறக்காமல் தாளில் சுற்றிப்போவாள் 
பிள்ளையார் பிடிக்க 
கைப்பிடி சாணம்
புட்டியில் கிடைப்பது
தரமில்லையென
தீட்டுகழிக்க கோமியத்துக்காக 
செம்போடு காத்திருப்பார்
சின்னதாத்தா
அன்றாடம் தவிடு கரைத்து
தீவனம்படைத்து
கைசிவக்கக் கயிறு இழுத்துக் கட்டிக் 
கொட்டில் கழுவும் ரங்கநாயகிக்கு
பால்குவளை தவிர 
வேறெதுவும் நினைவிருப்பதில்லை

சவுத்த ரொட்டி


பொழுது புலர்கையில்
கண்ணுக்குள்ளேயே வரிசை கட்டி நிற்கின்றன
அன்றாடத்தின் எதிர்கொள்ளல்கள்
சன்னல் காக்கை ஒரேமாதிரிதான் கரைகிறது
இங்கேயோ
சோம்பல் எரிச்சல் தயக்கம் துள்ளல்
ஆயிரம்
ஹார்மோனியக் கட்டைகள்
நாய்க்குட்டி போல் தலைசாய்த்து
காத்துக்கொண்டிருக்கும்
உங்கள் வாகனம் ஒரு உதையில் புரிந்துகொள்ளும்
தினத்தின் பாதைக்குள்
அன்றைய பாட்டைச்
சுமந்து நகரும்
தினம் என்பது
கிரீம் பிஸ்கெட்டின் எதிரி
அதற்குத்தெரியும்
இரண்டையும் பிரித்துக்கூட
நக்கித்தின்றுவிடும்
நீள் நாக்கை
மாலை மீண்டும் நாய்க்குட்டி
தலைசாய்த்து நிற்கையில்
படியேறுகிறது
கிரீம் உதிர்ந்த சவுத்த ரொட்டி

இழுக்காத திரைச் சீலை

பச்சைக்கடலையை
ஓடுடைத்து
ஓடுடைத்து
வாயிலிட்டுக் கொள்ளும் அதே லாவகத்துடன்
என்னையும் மெல்லத்தெரிகிறதே உனக்கு
*************************************************************
ஏதாவது ஏடாகூடமாக
நடக்கும்போதுதான்
மேடையில்
அம்போவென விட்டு
எங்கோ நகர்ந்துவிடுகிறாய்
திரைச்சீலை இழுக்காமல்

***********************************************************
ஒன்றேபோல
காலையும் தலையையும் 

அசைத்துக் கொண்டிருக்கின்றனர் 
மேடைநிறைந்த கலைஞர்கள்
ஒவ்வொரு மனசும்
அசைந்துகொண்டிருந்தது தனித்தனியாக


***********************************************************


அதே நீ

மிகநீண்ட இடைவெளிக்குப்பின் 
பார்த்துக்கொண்டோம்
எத்தனை ஆண்டுகள் கழித்து 
என்பதை வீடு திரும்பியதும்தான் 
கணக்கிட்டேன்
நீ முந்திக்கொண்டாய்
பகிர்ந்துகொண்ட அலைபேசி எண்ணிலிருந்து
பதினான்கு நீண்ட வருடங்கள் 
என்றொரு குறுஞ்செய்தி விழுந்தது
இப்போது 

உன்னை அப்படியே அடைந்துவிட்டேன்
அதே நீ


நீர்த்தகடு

மணற் பரப்பெங்கும்
சுவடுகள்
நேற்று நடந்தவர்
காலை நடந்தவர்
மாலை இளவெயிலில் 
ஆடிக்களித்த பிள்ளைக்கூட்டம்
சிறைப்படா நிலா
நீர்த்தகடுமேல் உருண்டு தளும்புகிறது


*************************************************************
புரிந்துகொண்டுவிட்டேன் என்ற
 மாபெரும் பொய்யை
எள்ளிச் சிரித்தபடி
நகர்கிறது நிலா

*************************************************************
எங்கிருந்தோ ஒரு நீள்கரம்
உதட்டோரப் பருக்கையைத் 

துடைத்துவிடும் கூச்சத்தோடு ஏற்கிறேன்
கழுத்துக்கும் உதட்டுக்குமிடைப் 

புரண்டுவிடும் சொல்லை 
எடுத்துக்கொடுக்கும் வேளை 
***********************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...