வியாழன், ஜூன் 21, 2012

விடையிலாக் காட்சி

 ஜூன்20 வல்லமையில் விடையிலாக் காட்சி 
சிலநாட்களாகத்
தோன்றிக் கொண்டே இருக்கிறது 
 
சுழித்தும் ,வளைத்தும்,
இழுத்தும் 
"ஆ "எழுதும் காட்சி!
 
எழுதுவது நான்தானா
எனத் தெரியாவிடினும் 
நான்போலவே....
 
எங்காவது "ஆ"கண்டுவிட்டால்,
கண்ணுக்கும் ,எழுத்துக்கும் 
இடையே உலவும் புகையாக 
"ஆ"உருவாகும் காட்சி,....
 
சிரத்தையோடும்,சிரமத்தோடும்,
உதடு மடித்தும்,
"ஆ"எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது..
 
"அ"எப்படிக் கற்றாய் ,
"இ "சிரமமில்லையா என்றெல்லாம் 
கேட்டுவிடாதீர்கள்.
 
அது குறித்த காட்சி 
ஏதுமிலாததால் ,
என்னிடம் விடையில்லை.

சனி, ஜூன் 16, 2012

மாயச் சலங்கை


ஜூன்15 கீற்று இணையத்தில் வெளியானது 


உதிர்ந்து கிடந்த 
எழுத்துக்களைப் பரிசீலித்துக் 
கொண்டிருந்தேன்...
சலங்கையொலி 
தூரத்தில் தொடங்கியிருந்தது..
நாட்டியக்காரி யாரும் 
நடக்க வாய்ப்பிலாத 
இடமும் பொழுதும் தாண்டி 
என் எழுத்துக்களைச் 
செல்லம் கொஞ்சவிடாமல் 
இம்சித்து நெருங்கியது 
அந்த ஒலி...
பூம்பூம் மாடோ, கிருஷ் வேடதாரியோ ...
சுற்றிவளைத்த ஆர்வத்தினால் 
வாசல் வந்தபோது 
வெறித்த சாலையில் 
மணலாவது கொஞ்சம் கிடந்திருக்கலாம்.
 

சனி, ஜூன் 09, 2012

"முடிசூடா மன்னர்"


என்னுடைய கிரீடத்தை 
நீங்கள் 
பார்த்திருக்கிறீர்களா ?
பரம்பரையாய் 
ஆகிவந்தது.
ரசனையில் தேர்ந்தவன் 
செய்தது ....
நுணுக்கமான வேலைகள் ...
நல்ல பசும்பொன் 
நவமணிகள்...
என் ராசிக்கேற்ற 
பெரிய கோமேதகமும் உண்டு..
சரியான கனம்!
அப்புறம் ஒன்று ....
இந்த ...பெட்டிக்கடை பாக்கி 
தீர்க்க 
முன்னூறு ரூபாய் கிடைக்குமா?
 
அடுத்த மாதம் திருப்பிவிடலாம்.

செவ்வாய், ஜூன் 05, 2012

சருகு படர்ந்த கூடுகள்


மயில் நீலச்சேலை.
டிசைனர் ரவிக்கை,
பொருத்தமாய்த்தேடிவாங்கிய 
அணிகலன்கள் ,
செருகிய பூச்சரமும் 
ஒப்பனைப்பூச்சுகளும் ...
பொருத்தமும் ,திருப்தியும் 
கண்ணாடி மட்டுமன்றி 
உறவும்,நட்பும் மெச்ச ...
பெருமிதமாய்த்தான் இருந்தது....
 
எச்சில் இலை
எடுத்துப்போன 
பள்ளித்தோழியை.....

அடையாளம் காணும் வரை...!   

பொருள் விளங்காப் புள்ளிகள்

 
தொடக்கத்திலேயே 
முடிவும் 
சேர்ந்துதான் இருக்கிறது.
கேள்வி,ஆச்சரியம் 
இரண்டின் கீழும் 
இடும் புள்ளிகள் 
இணைக்கவும் ,பிரிக்கவும் 
தெரிந்து வைத்திருக்கின்றன ....
தோளில்
ஆட்டுக்குட்டியோடு 
வனமெங்கும் 
புள்ளிக்குப்பின் 
போய்க்கொண்டே......இருக்கிறோம் 
முடிவுறாப் பயணமாக.... 

அவளாக வேண்டும்

ஆதிகடவுளின் சாயலில் 
சுருள்முடி 
நெற்றி வழிந்து காற்றிலாட ,
பொருளறியாப் புன்னகை 
மிதக்கும் முகத்தோடு 
மிதிவண்டி ஓட்டிச் செல்லும் 
சிறுமியாக 
ஒரு வாய்ப்பளியுங்கள்...
இயலாதென்றால் 
அவள் 
முணுமுணுக்கும் பாடலாக ,
விரும்பி அணியும் 
மஞ்சள்வண்ண ஆடையாக,
அலட்சியமான பாவனையில் 
தோளில் மாட்டிச் செல்லும் 
பையாக....
நளினமாகக் கையாளும் 
மிதிவண்டியின் 
குஞ்சலங்களாக....
ஏதாவதொன்றில் 
என்னை உள்ளிருத்துங்கள்....
அவளது அன்றாடப் பயணம் தரிசிக்கும் 
மரத்தடியாக 
மாற்றினாலும் சரியே !

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...