மணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 02, 2020

சுவடுகளை விழுங்குதல்

 

தெரியும்
திறந்துகிடக்கும் வாசலைத் தாண்டி
சுவடின்றி நீ கடந்தாலும்
அது எப்படியோ தெரியும்
உனக்கும்

 

************************************************

 

 

கூடத்தில் படிந்துவிடும்
மணல்பார்த்து
ஆச்சர்யந்தான்
அதுவும் திகைத்துப் போய்விடுகிறது

கூட்டிக்குவித்ததும்



******************************************

 

 

எனது கடவுள் இவன்தான்
எனது சாத்தான் இவன்தான்
எனது மது  இதுதான்
எனது விஷம் இதுதான்
வரையறுத்துவிடவே முடியவில்லை

முடியவில்லையா

தெரியவில்லையா

தெரியவில்லை

 

செவ்வாய், நவம்பர் 21, 2017

நாடும் நாட்டு மக்களும் .......

சில சாலைகளின் படங்கள் 
நம்மை நடக்க அழைக்கின்றன
நடந்தவர்களுக்குத்தான் தெரியும் 
எப்போது 
தகிக்குமென

*******************************************

பூஞ்சையான ஒரு நாய்க்குட்டி
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
உங்கள் கவலையோ
அது வாலாட்டுவது 
யாரிடம் என்றுதான்

****************************************
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் 
கூச்சம் அடையுமளவு 
அவர்கள் நாகரிகம் பழகவில்லை
பார்த்துக்கொண்டே இருப்பது தீர்வல்ல 
என நீங்கள் உணரவில்லை
நாடும் நாட்டு மக்களும்....
...........,..........
அதிகம்போனால்
என்னவாம் என்பீர்கள் சந்தானம் போல
அவ்வளவுதான்


****************************************

அடித்துப்புரண்டோடும்
காட்டாற்றோரச் சிறு
பாறையாகக் கிடந்திருந்த நாளை நினைக்கிறது
கடலோரப் பெருமணல்
வாழ்வுதான்


***************************************

எவ்வளவோ நினைத்திருந்த ஒன்று 
ஏதுமற்றுப்போவதுவும்
ஏதுமறியா ஒன்றுக்காய்
எவ்வளவோ ஆனபின்னும்
ஏதேதோ தோணுவதும்
இவ்வளவுதானோ என்ற
கனத்துடன் அலைவதுமான
வாழ்வை
வட்டிலில் வைத்து நீட்டியிருக்கும் உலகை
கண்ணீரை விழுங்கும் கணத்தில் கூட 

காறித்துப்ப விட மாட்டேன் என்கிறீர்கள்
அடக்கிய கண்ணீருக்கு 

ஆயுள் முப்பது நாளா


மறைக்கும் குழல்

வெற்று நெற்றியில் 
ஒற்றைவிரலால் தள்ளிக்கொண்டேயிருக்கும்
முதியவளின் கண்ணை 
இன்னும் மறைக்கிறது
சுருண்டு ஆடும்
குழற்கற்றை
***********************************************

விழுதுகள் படர்ந்த தூரம் விட்டுப் 
பாதை போடச்சொல்லி கெஞ்சிப்பிழைக்கும்
பிழைப்பில் ஆலென்ன
அரசென்ன
சிறுமை சிறுமை எனக்கரைந்த காகம் 
அமர மின்வடமும் தோதுதான்


**********************************************

பிடித்திருப்பது எதுவெல்லாம் 
எனப்பிட்டு வைக்கத் 
தெரியாத பிரியங் கொள்ள 
நாடினேன் பிதாவே
பிட்டுப்பிட்டு வைப்பதென்ற வரியை மட்டும்
கோடிட்ட இடத்தில் நிரப்பியது நீயா
நானேதானா


*********************************************************


கைகளுக்குள் நிறைந்த நீரும்
கையிடுக்கில் உறுத்திய மணலும்
இப்போதும் இருக்கிறது
ஆற்றில் இல்லாத ஈரத்தை
அங்கேதான் கண்டடைந்தேன்



******************************************************

யாராவது ஒருவர் அரங்கிலிருந்து வாருங்கள்எ
ன மந்திர வித்தைக்காரர் அழைக்கும்போது 
நீ போவாயென நானும்
நானோ என நீயும்
ஆசனத்தை இறுகப்பற்றியவாறு பார்த்துக்கொண்டோம்.
தற்காலிகமாக தொலைவதில் 

என்ன சுவாரசியம் என 
நிச்சயம் சொல்லிக்கொள்வோம்
அடுத்த சண்டையில்


*****************************************************


பெருக்கெடுக்கும் கண்ணீர்நதியை விட
அதிகம் நனைத்து விடுகின்றன
வீழாது சுரந்து நிற்கும்
சில துளிகள்




***************************************
















வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...