செவ்வாய், டிசம்பர் 27, 2011

எங்கேந்த அதெல்லாம்...?

பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
காயும்வரை 
பின்னல் பிரிக்காது 
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும் 
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும் 
ஈருளியில் எரிச்சலாகி 
பேன்குத்தும் தாலாட்டில் 
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும் 
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
 புரியாது விழிக்கிறாள்
இந்நாளின் எழிலரசி      

பார்த்தேன்

சில
உணர்கொம்புகள்..
சில
கொம்புகள்...
சில
தலைகளுக்குமேல் ...
*************
சில பாம்புகள்
சில முதலைகள்
சில
முகங்களுக்குமேல்...
************
என் முகத்தில்
நேத்திர தடமே
இல்லைஎன்கிறது
தீர்ப்பு! 

திங்கள், டிசம்பர் 26, 2011

மண்வாசம்

இலை,மலர் ,....அரும்பு ,
உதிர்ந்ததா.....
விழுந்ததா,,,
காய்க்குமா ,கனியுமா..
விதைவருமா
அது
முளைவிடுமா .....
இறங்கிக்கொண்டேயிருக்கும்
வேர்
விசாரிப்பதேயில்லை....

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

அதுதான்...அதேதான்.....

நெற்றிமேல்
ஓட்டாஞ்சில்லும் 
அண்ணாந்த கழுத்துமாய் 
இச்சா...
இனியா...கூவி
பாண்டி கட்டங்கள்
தாண்டிக்கொண்டிருக்கும்
தமிழரசி அறியாள்
எதிகால பயிற்சி ஆட்டம்
இது என... 

உணர்வின் உணவு

வேண்டித்தான் இருக்கிறது
உள்ள்முக மோனத்தில்
உறைந்த
புத்தனுக்கும் 
நீ
புத்தன்தான்
நீ புத்தன்தான்
நான் உணர்ந்தேன்
என்றொரு
ஒப்புகைக்குரல்.....

கண்டு கொள்ளல்

தளும்பாக்கிணறும்
முகம் பார்க்கவாவது
அழைக்கிறது ....
இறைக்கச் சுரக்கா
ஊற்றும்
இனிப்பென்ற சொல்லில் பொங்கும் ! 

புதன், டிசம்பர் 21, 2011

ஆயுத எழுத்து

ம்ம் ...ம்ம்ஹும் ...
எழுத்து உணர்த்தா குறிப்பு
சொல்ல
வேண்டும்
முகக்குறிப்போ தெறிப்போ......
ம்ம் ....உதிராத
ஊமைப்பொழுதிலும்
உயிர்தரிக்கும் துணையின் 
ம்ம்க்கும் ...
நொடிக்குள் 
நொடித்துப் போகிறது  
உன் 
சாம்ராஜ்யம்!
முதலில் அவளும் அறியாள்
இதன் வலிமை.....!

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

எது நடந்ததோ

இந்த இடம்
metro ரயிலுக்கு .....
எங்கெங்கும் கண்ட
பாகப்பிரிவினை அறிவிப்புக்கு
சவால் விட்டது
தடுப்பின் ஓரத்தில்
எட்டிப்பார்த்த செடி....
இரைச்சலின் சாகரத்தில்
இது எப்படியோ ....
யோசனையில் கண்மூடியது
பாலத்தடி நாய்

சனி, டிசம்பர் 17, 2011

என்றோ மறைந்த முகம்

என்றோ மறைந்த முகம்

யாரோ வழிப்போக்கர்
திண்ணையில்
தவறவிட்ட
மஞ்சள்நிற கம்பளி
தன அலமாரித்தட்டில்
வைக்க ஒப்பாத
பள்ளி நண்பன்
சுப்ரமணியை பார்த்தேன்
கையூட்டுக் கைதுக்காக
முகம் மறைக்க முயன்ற
பத்திரிகைப் படத்தில்...


ஈரமான ஆரம்

புது மருமகள்
நகைப்பெட்டி நனைந்தது
போலிருந்தது ....
தன குடும்பத்தின் வியர்வையும்
கண்ணீரும்
இப்படித்தான் - விடாது
சுரப்பதாக சொன்னாள்...
தனித்தனி அடையாளம்
இல்லாவிடினும்
ஒவ்வொன்றுக்குள்ளும்
அவர்கள்
உண்ணாத பண்டங்கள்
உடுத்தாத துணிவகைகள்
போகாத சுற்றுலாக்கள்
கிராம்
கிராமாய்க்  குடியிருந்து
குரல் கொடுப்பதாகவும்
குறிப்பிட்டாள்..!
சலிப்போ
வெறுப்போ இல்லாது
ஒலித்த
அவள் குரல்தான்
உண்மையாக அச்சமூட்டியது!வியாழன், டிசம்பர் 15, 2011

தேவையில்லா நிழல்

கால காலமாய்
கரிதின்று கரிதின்று
புளி உதிர்த்த
மரங்களில் இனி இலக்கமிட வேண்டாம்!
மரங்களே இலக்கு ......
தூங்குமூஞ்சி ,புங்கை
துளிர் கொஞ்சம்
பாடம் செய்க!
அளவோடு உள்ளே
அவரவர்க்கு 
குளிர் பரப்பி பறக்கும் 
வாகன வரிசையின் 
அகலத்தேவைக்காக
அகற்றவேண்டும் அனைத்தும்...
தாருக்குப் பதில்
தங்கம் ஓடும்
சாலையில்
நிழல் கருணை தேடும்
மனிதனின் நிழலும்
வாராது!
பெண் மனம் 


ஆல மரத்தின்
வேர் விழுதெல்லாம்
பிடுங்கி 
அரளியாக்கி நட்டாயிற்று 
குறுக்குப் பாதைக்கு 
அடக்கமாக....
ஒடித்து ஒடித்து நடவும் 
வசதி 
வெடித்து விழவும்
வாய்ப்பில்லை...
புதைத்தது போலவும் ஆச்சு 
பூப்பது போலவும் ஆச்சு
   

புதன், டிசம்பர் 14, 2011

இடிந்த வாசல்

காலம்கடந்து நிற்கும்
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்.....   

செவ்வாய், டிசம்பர் 13, 2011

தலைமுறை தாண்டியபின்னும் 
 
 
குரங்குபோல் 
உணர்வதைத் தடுக்க முடியவில்லை 
உன் குச்சியின் 
அசைவு தக 
குந்தியிருக்கும்போதும் 
குதித்தாடும்போதும் 
தொப்பி 
அணிந்தும் அகற்றியும் 
உன் அசைவில் அசையும்போதும் 
உன் உணர்வில் 
என் முகசசேட்டை பிறக்கும்போதும் .....
எப்போதோ 
இல்லை 
இப்போதும்  குரங்கென்றுதான்..... 
விலங்கியலார் கவனத்திற்கு

சிறகிருப்பதாக
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?
   அபி உலகம்-2
அபி இருப்பதில்லை  
அபி நாயே
அபி சனியனே
அபி எருமை
என்றெல்லாம்
விளிக்கும் வீடுகளில்
அபி இருப்பதில்லை....!
**************************
அவள்
எப்போதும் யாவர்க்கும்
அபிக்குட்டி
அபிச்செல்லம்
அபி பாப்பா 
அபிம்மா....
*****************************
அபியை ஆசீர்வதியுங்கள் 
சுடும் தொடுகையோ 
கொடும்பார்வையோ 
அவள் உடல் மேவாமல் 
குழந்தைமை திருடும் 
அவலம் படராமல் 
பத்திரமாய் 
பருவம் கடக்க....

திங்கள், டிசம்பர் 12, 2011

அபி உலகம்.......

அபிக்குப் புரியவேயில்லை
அக்கம்பக்கம் ,நட்புவட்டம்
ஊரிலிருந்து வரும்
உறவுகளைக்கூட
அவள்
ஆன்ட்டி என்றே
விளிக்கிறாள்.......
அம்மா அழைக்கும்
அத்தை ,சித்தி ,மாமி
பெரியம்மாக்களை
தான்
எப்போது சந்திக்கப் போகிறோம் என...
*******************************

அபிக்கு குழப்பம்
அம்மா போல
சூசன் ஆண்ட்டியும்
சூசன் ஆண்ட்டி போல
அம்மாவும்
புடவை வாங்கினார்கள்
தோடு,தொலைக்காடசி,
நாற்காலி,செருப்பு .....
எல்லாம் வாங்கினார்கள்......
ஆனால்...
தீபாவளி இனிப்பும் ....
கிறிஸ்துமஸ் மரமும்.....?
********************************
அபிக்குப் பிடிப்பதில்லை...
உடைந்துவிடும்
என்று பயமுறுத்தி
அம்மா பத்திரப்படுத்தும்
பொம்மையும் சாமானும்
பரிசளிக்கும்
எவரையும்....
********************************

சனி, டிசம்பர் 10, 2011

வெளியே போ தயவு செய்து

அலமாரி
திறக்கும் அவசரத்தில்
கவனிக்கவேயில்லை
உள்ளிருந்ததா...
உள்நுழைந்ததா என....

முதலில்
சந்தேகமாய்த்தான் இருந்தது
புடவை சித்திரம்
புறப்பட்ட பிறழ் காட்சியோ...

உயர்ந்திருந்த கைஉரசி
நான் நிஜம் என
தா(தீ)ண்டியது
பொன்வண்ண பட்டாம்பூச்சி

பெருவெளியான பாவனையில்
அலமாரி கதவு திறப்பிலே
சுற்றிப் படபடக்கும்
உன்னை என்ன சொல்லி விரட்டுவது?
சூ..சூ...?
நாப்தலின் மணக்கும்
அடுக்குகளுக்குள்
மூட மனமிலாதஎன்  தவிப்பும்
பறக்கும் நேரமும் புரியாமல்
சுற்றும் பட்டூ.....

திங்கள், டிசம்பர் 05, 2011

சருகு உலர்தல்

சென்ற பண்டிகையின்
புதுப்பட்டு
வாங்கி
நான்கே முறை அணிந்த
பவழ மோதிரம்
வங்கிக்கணக்கு ....
திசையெங்கும்
முளைக்கும் கரத்திலொன்று
இருளுக்குள் அமிழ்ந்து 
கனக்கும் 
முதியவள் 
முதுகு நிமிர்த்தி 
ஈரம் துடைக்க 
காத்திருக்கிறாள் 
கனவு தொலைந்த கண்களோடு...
***********************
ஏதிலியாய்க் 
கிடப்பவள் 
ஈரப் பிரக்ஞை
உதிர வேண்டியது 
முதல் வரம்.
இறப்பு....
இரண்டாவது. 

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

நூல் கயிறானது


உன் வினாக்கள் எல்லாம்
என்
விடை தேடியே பிறந்தன ....
***********

நானும் நம்பினேன்
நீயும் கூட !
உன் வினாக்களின் விடையே
நான் தருபவைதான் என...
*************

வினாக்களின்
நூல் நுனி
தொடர்ந்து
விடைஎடுப்பதே
வழக்கமானது......
*****************

நூல் திரிந்து
திரிந்து ...திரிந்து
கயிறானதைக்
கவனிக்கவேயில்லை 
நீ 
நானும் கூட ....
**************

இன்று 
வினாக்கள் 
சாட்டையாகவும் 
விடைகள் 
பம்பரமாகவும் 
சுழல்கின்றன....
************************ 

சனி, டிசம்பர் 03, 2011

டிசம்பர் மூன்று

மாற்றுத் திறனாளிகள் தினம் 
தவறாமல் 
அனுசரிக்க ஏற்பாடு 
செய்தது 
போபால் . 

புதன், நவம்பர் 30, 2011

முரண் (சற்றே பெரிய கவிதை)


வெற்றிக்கு விலாசம்
சொல்லாத
பயணம்..

குறிப்பு ஒட்டிப்
புதையல் தேடுபவன்போல் 
சந்துகள் தாண்டிய 
பொந்துக்குள் 
தலையோடு கால் போர்த்தியவன் 
குறட்டையி ல்  குறுக்கிட்டு 
கைகுலுக்கிப் புன்னகைத்தது 
வெற்றி...
அவனுக்கு 
அதையும் 
தன்னையும்  அடையாளமே புரியவில்லை...
முகங்கழுவி வா...
தேநீர் பருகி
விரிவாய்ப் பேசலாம்
என
ஒட்டுத்திண்ணையில்
கால்மடித்துகாத்திருக்கிறது 
வெற்றி!
***********************************

தன்னை சந்தித்தாக வேண்டியது 
வெற்றியின் விதி 
எனக் கிளம்பினான் இவன் ....

தெளிவாக 
முழுப்பெயர் (தலை எழுத்தோடு)
கதவு எண்< தெரு<நகரம்>வட்டம்
மாநிலம்<அஞ்சல்குறியீடு 
அலைபேசி எண் _உட்பட 
முழுமுகவரி தந்திருந்தான்...
எதற்கும் இருக்கட்டும் என 
மின் அஞ்சல் முகவரிகூட...

புன்னகையோடு காத்திருந்தவன் 
ஊர்ப்பக்கம்
வெற்றியின் நிழலே.......
....................................காணோம்
உறுதியான ஆவலில்
பரிமாறத் தயாரான விருந்து
ஊசத்தொடங்க
வாத்தியக்குழு தூங்கிவழிய
மாவிலைத் தோரணம்
வாடியுதிரச் சகியாது
விசாரித்தான்.....
வெற்றி
துளியும் அறியாப் புதியவன்போல்
விளக்கம் சொல்லாமல்
அவனை
வெறிக்கின்றது !
மஞ்சள் செம்பருத்தி 


அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்....

மஞ்சளாய்ப் பூத்தாலும் 
மஞ்சள் செம்பருத்தி 
என்று அழைப்பது போல்...
                                           *   *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் 
அவமானம் உணராதவனும் 
ஏக்க விழிக் குழந்தையின் 
சடைத்தலைக்கு 
சலிப்பவனுமான 
அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்...... 
        

செவ்வாய், நவம்பர் 29, 2011

சும்மா இரு...

நிறமற்ற மண் மீது
பெருவெளிச்சம்
படரப் படர ....
சோம்பல் முறித்து
நிமிரும் கிளைகள் ...

கிளை இடுக்கு நீரை
பறவை உலுக்க
சிறுமழை...
திடுக்கிட்டு
அண்ணாந்த வேருக்கு
அருகிலமர்ந்து
சமாதானம்  சொன்னது
இணைப்பறவை.....

ஈரச் சிறகை உதறி உதறி
இடம் மாறி
வெயில் காய்ந்து
"இப்ப எங்க போனே...
வம்பு பேச மழை தேடியது
முதற்பறவை ....

:சும்மா இரு
அலகால்  ஆகாயம் திறந்தால்
இரை தேடல்  இம்சை
கடிந்தது இணைப்பறவை .... 

தேய் பிறை அச்சம்
.

 பிடித்தபாடல்  
அலைபேசி அழைப்பில்
பதிய வேண்டாம்

அழைப்பின் போதெலாம்
ஒலித்து ஒலித்து
நம்
பிடிப்பு கரையலாம் ....

சமயா சமயமின்றி
ஒலிக்கும் பாடலை
கோபமாய் எரிச்சலாய்
நிறுத்த நேரலாம்

முழுமையாய்க் கேளாமல் 
உடனே எடுக்க 
திரையில் ஒளிரும் பெயர் 
நிர்ப்பந்திக்கலாம் 

புதிய எண் பார்த்து
யோசிக்கும் மனதுக்கு 
பாடல் எட்டாமலே போகலாம்...

இடம் பொருள் கருதி 
நாமே மென்னி திருகி 
அமைதிப்படுத்தலாம் 

இந்தப்பாடல் 
எதற்கென்ற 
விளக்கவுரை கேட்டு 
யாரும் நிர்ப்பந்திக்கலாம் 

புதன், நவம்பர் 23, 2011

வாடகை வீடு(நினைவுகள்  சொந்தம்)


எப்படித்தான் இருந்தீங்களோ
பழைய வீடு ....
கரிசனமாய் நண்பர்!


அழுக்கு சுவர்
ஈரம் ஊறும் மூலைகள்
எத்தனை ஓவர் எத்தனை பந்து
கணக்கறிந்து
கொக்கியிலாது  ஆடும்
ஜன்னல் கதவின் லயம்
மழையோடு மல்லு க்கட்டும்
கதவுக்கான நுட்பங்கள் 
மாற்றி மாற்றி 
மஞ்சள் வட்டம் பூசிய 
சாமி அலமாரியில் 
படிந்திருக்கும் வேண்டுதல்கள் 
எந்த பாத்திரம் 
எந்த நேரம் 
எப்படி ஒலிக்கும் 
எல்லாம் தெரிந்த சமையல் மேடை 
(சமயத்தில் உணவு மேசை )
உள்ளக்கிடக்கைஎல்லாம் 
சொல்லியபடியே 
ஒட்டி உறவாடிய 
அடுப்பு மேடை .....

அவிழ்க்காது விட்ட கொடிக்கம்பி 
துவைத்த துணி அளவும் 
போனதும் ஒட்டிய 
நடுக்கதவின் பாரதி 
வெள்ளையடிக்கா வருடங்களையும்
உப்பு ஊறிய கரிச்சுவர் 
சுவைத்திருந்த உணவையும் 
சொல்லும் சாட்சிஎன்றான்
புது வீடு ரசிக்கா 
சின்ன மகன் ....

எப்படித்தான் இருந்தீங்களோ 
நண்பரின் கூற்றுக்கு 
சிரித்துவைத்தோம்.    

திங்கள், நவம்பர் 21, 2011

வெளிச்சம் வெளியே இருக்கட்டும்...


அகல்,கைவிளக்கு
குத்துவிளக்கு
மின்விளக்கு ....
எந்த ஒளியாலும்
துடைக்க முடியா இருள்
அழுந்திக் கிடக்கிறது
அகத்தில்...!        
    
                               சூரியனையே
                               
சுவிட்சு  போட்டு  
             நிறுத்திடுவோம்ல.....  ,
கனவிலோடும் கவிதை...


கண்ணாடி...
மின்விசிறி...விளக்கு...
உறக்க சம்பிரதாயங்கள் 
தொடரும்போது 
ஜன்னல் பூனையாய்
ஒரு வரி.....

போர்வையின் வெளியே 
கண்கள் 
மின்னியபடி காத்திருப்பதான
பாவனையில் 
தலையணை அடியில் 
தள்ளிவைக்கவும் 
முயன்றேன்...

விழித்தபோது 
பூனை 
ஓடிவிட்டிருந்தது....

ஞாயிறு, நவம்பர் 20, 2011

பாடலைக் கண்டேன்...


மாற்றித்தடவிய 
தூரிகையாய்
நிறம் கலங்கிய மேகம்...
அழைப்புமணிக்கு
விரைவதாய் நகர...

அலைபேசிக் கோபுரங்கள் 
மின்வடங்கள் 
மாறிமாறி
பாண்டி ஆடிக் கொண்டிருந்தன 
பறவைகள் .

முதிராப் பசுமையோடு 
காற்றில் நடுங்கியது நாற்று 

சுழலாக் குறுந்தகடு 
தாண்டி 
மனதில் அதிர்ந்து கொண்டிருந்த 
நரம்பொலியில்
கசிந்த விழியோரம் கண்டு 
கரிசனமாய்க் கண்ணாடி ஏற்றினாய் ....

இசை நின்றது ...!     தோழர் வேணுவின் கட்டுரை தொடர்ச்சி....##
ஒளிச்சேர்க்கை


இந்த கோவை இலை
சிலேட்டு துடைக்கப் 
பறிக்கப்பட்டிருக்கிறதா...

இந்த மா,புளி,கொய்யா 
கல்லடிபட்டு 
செங்காய் உதிர்த்திருக்கின்றனவா..

இந்த மருதாணி
இலை பழுக்க வாய்ப்பிலாது
துளிர்க்க துளிர்க்க
உருவப்பட்டிருக்கிறதா ...

இந்தவேம்பின் கீழ்
துணிவிரித்து உலுக்கி
பூ ,பழம் வாரப்பட்டிருக்கிறதா,..

இந்த இலந்தைமுள்
இளரத்தம் பார்த்திருக்கிறதா...
ஆமெனில் 
இவற்றோடு 
வாழ்க்கை -இருந்திருக்கிறது.
இலையெனில் -இறந்திருக்கிறது. ,

இன்று விடுமுறை விடவில்லை..

மதயானையாக
இலக்கின்றித்திரியும் கருமேகங்கள்...
வானின்று வீழும்
நீரெல்லாம்
வாகனம்   கழுவி வழிய
பழுப்பேறிய கோடுகளோடு குளிக்கும்
பெருவழிச் சாலை

சீருடைப்பட்டியலில்
சேராத மழைக்கவசங்களால்
வாகனந்தோறும்
வர்ணச்செண்டுகள்

வாரி அடைக்க
வாயில் திறக்கிறான்
பள்ளி வாயிலோன் . 

திங்கள், நவம்பர் 14, 2011

நாம் செலவழிக்கும் உலகம்...
அவர்கள்
காத்திருக்கிறார்கள்....
கண் கூசும் ஒளியில்
கரைவது
கனவா..உணவா...
உயிரா.. மானமா..
ஏதுமறியாது..

தருவது எதுவாக இருப்பினும்
பெறுவது
உன் கரமாக இருக்கட்டும்
ஆசீர்வதித்து
நிறுத்துபவர்கள்
நீங்களும் நானும் கூட   
குழந்தைகள்....


கைகால் முளைத்த மலர்கள்
நடக்கும் குயில்கள்
வீடு நிறைந்திருக்கிறது
ஒற்றை வரம் இருப்பினும்...

சொல்லில் ,அசைவில்
கனவில் கேள்வியில்
மனம் ஒன்றும் நொடிகளில்
நீள் தவத்தில்
கிட்டா தரிசனம்
சித்திக்கும்!

குழந்தைப்பருவம்
நாமும்
நம் வீட்டுக் குழந்தைகளும்
தாண்டியபின்னும்
அந்த "பாவமும்
பரவசமும்
விலகா மனசு
மழைநின்றும்
தூறலின் குளுமை தங்கும்
காற்றும் புவியுமாக 
மகிமை தாங்குகிறது... 

ஞாயிறு, நவம்பர் 13, 2011

பெயரளவு


அம்மாவுக்கு செல்லா
பள்ளியில் கே.செல்லத்துரை
நண்பர்களுக்கு துரை
தெருவில் நடுவீட்டு செல்லா
(இன்னொரு செல்லா இருந்ததால்)

செல்லா (எ) கே.செல்லத்துரை (எ)
துரை(எ)நடுவீட்டு செல்லா 
எங்கோ 
தனியாக விபத்தில் மரித்தான் 
இத்தனை பெயரில் 
ஒன்றையும் சொல்லாமல் 

உத்தேச வயது ,பால் ,
நிறம் மச்சம் 
உடையின் நிறம் கூட 
சுமந்த 
காவல் பதிவு 
பெயர்:தெரியவில்லை
என முடிந்தது .

வெள்ளி, நவம்பர் 11, 2011

சொல்லிக்கொண்டார்கள் ....

புடைத்த
கழுத்து நரம்பிலிருந்து
முதலில்
கொசு...
பிறகு தேள் ...
நெளிந்து துள்ளிய பாம்பு
டினோசர் கூட ...
எச்சில் குருதியோடு
எங்கும் புரள்கின்றன...
எது
யாரைக் கடித்தது?
யார் அடித்தார்கள்?
சம்பவங்களாகி
பதிந்து கிடக்கிறதாம்...

விழி தெறிக்கப் பார்த்தாலும் ...
கிடந்த இடம்
வந்த வழி
புலப்படவில்லை..
ஆனால்...

எல்லாம்
சொல்தானாம்....!
இருப்பதும் இல்லாததும்...


சிறகுகூட சுமைதான்

இறகு இறகாய்
உதிர்த்துவிடலாம் ...

உதிரும் இறகை
தொலைதூரக்
கிராமத்துக் குழந்தையொன்று
சொத்தாக சேமிக்கக் கூடும்..
மெத்தனமாக
வயசாளி ஒருவர்
காது குடைய வைத்துக்கொள்ளலாம்

கனமின்றி
காற்றில் மிதக்கையில்
யாராவது படம் பிடிக்கலாம் ...
வீண்குப்பை
என
பெருக்கித் தள்ளி
கொளுத்தியும் விடலாம்...

எப்படியாவது
இருந்துவிட்டுப் போகட்டும்
பறக்காத சிறகு.... 

செவ்வாய், நவம்பர் 08, 2011

சுற்றம் சூழ...

சின்னவன்
தோழர்களுக்கு
உணவு அடுக்கில்...

பெரியவனும்
அவன் தோழனும்
சாப்பிட இன்னொரு பாத்திரம்...

எப்படிப் பார்த்தாலும்

.............
குறைகிறதே ...?
இன்னும் நாலு...?


சுண்டெலிகள்
ஆளுக்கொரு மோதகம்
இழுத்து ஓடியதாகத 
தகவல் கிடைத்தது...

என்னைத் தவிர 
உனக்கு 
யார் என நினைத்தது 
தப்புக் கணக்கோ பிள்ளையாரே? 
உதிர்ந்தது....


நந்தியாவட்டை
கழுத்துவழி  நீண்டு
குறுகுறுக்க
திண்டாக மழுமழுத்த
திண்ணைக்கு
அப்புறம் நின்ற
பவழமல்லி
இந்தப்பக்கம் மட்டுமே
பூக்கவும் உதிரவும் வேண்டுமென
வேண்டுதல் ...

புது உரிமையே பழசாய்ப்
போன அடுத்தவீட்டு
அத்தையின்
அரைகுறை மனசிலான
அபூர்வ அனுமதி
"விளையாடினது போதும்
பூ பொறுக்குனது போதும் 
அப்புறம் வரலாம் 
போங்க ..போங்க..,


வெளியேறும் கணத்தில் 
ஒரு கேள்வி மட்டும் 
அங்கேயே கிடக்கும்...

தாததா ஏன்தான் 
இந்த வீட்டை விற்றாரோ?  

சனி, நவம்பர் 05, 2011

வாசமிலா மலராம்...


யாரோ சூடி வாடிக்கிடந்த
டிசம்பர் பூச்சரம்
மலரும் நினைவுகளை
ராமர் கலரில் விரித்தது...

கனகாம்பரம் டிசம்பர்பூ
நூறு(எண்ணி)
பத்துகாசுக்குத் தரும்
சுந்தராம்பா மாமியை
துரத்தித் தேடிய நாட்கள் ...
நடுத்தெருவுக்கு ஓடி
எண்ணிவாங்கி
கட்டிவைத்து 
பள்ளிக்கு ஓடி...

தேடிய நிறம் கிட்டாத 
சமரசத்தின் மீதான 
வெறுப்பில் 
ஒடித்துவந்து நட்ட 
டிசம்பர் குச்சியில்  
ரோஸும் ,ராமர் கலரும்
வெள்ளை-நீலக் கலபபுமாக
நூறு நூறாக 
கைவலிக்காமல் எண்ணி  
கனவில் குலுங்கிய பூக்கள்
வெள்ளை மொட்டு
வெளிப்பட்ட நாளில்
வாடி
வெளியேறின...
எதிர்பாரா சந்திப்பு...

காற்றில் உலரும்
காலை மலரும்
காலத்தில் வெளுக்கும்
காகித மலரும்
நலம் விசாரித்துக்கொள்ள
மேடை கிடைத்தது ...
பூ ஜாடிககுப் பக்கத்தில் 
கழுத்து மாலையை 
கழற்றி வைத்தவரை 
ஓரக்கண்ணால்  பார்த்தவாறே 
காலைமலர் கண்ணீர்  வடித்தது...

பறித்து அடைத்த
பைக்குள் அடங்கி
இறுக்கித் தொடுத்த
விரலில்  நசுங்கி
கண்டவன் கழுத்தேறி
வீழபபோகிறேன் சாலையோரம்...
ஒய்யாரம்தான் உன் வாழ்வு...!

உன் தொல்லை ஒருநாளில் முடியும்!
நாளொருமேடையும்
தெறிக்கும் எச்சிலும்...
வியர்வை வீச்சமும்..
சாயம் வெளுக்கும்வரை அல்லவா 
என் சங்கடம்.. 
காகிதமலர் 
கண்ணைக் கசக்கியது..

விழா இனிதே முடிந்தது!   

வெள்ளி, நவம்பர் 04, 2011

மெய் பிரியும் தருணம்..

சொற்கள் சாதுவாக
சுற்றியபோது
எழுத்துக்கள்
அச்சடித்ததுபோல்
அழுத்தமாக இருந்தன...
ஆக்ரோஷத்தின்
அழுத்தம் ஏறியபோது
மெய்யைக் கீழே தள்ளிவிட்டு
உயிரின் நீட்சிகள்
கொம்பாக காலாக
வளைந்து கிடந்ததிலிருந்து
நிமிர்ந்து 
பிணைந்து 
இறுகி இறுகிக் 
கயிறாக இறுக்கின

எதிர்ப்பட்ட 
அன்பு ஆசை காதல் 
காமத்தின் கழுத்தும் 
தப்பவில்லை...  

புதன், நவம்பர் 02, 2011

டார்வின் படிக்காத குருவி...


ஒருகாலத்தில்
களத்துமேடு இருந்த ஞாபகத்தில்....
ஒருகாலத்தில் 
கூட்டமாய் வந்த ஞாபகத்தில் ...
ஒருகாலத்தில் 
தானியம் கொத்திய ஞாபகத்தில் ...
புதிய நகரின் 
குப்பைமேட்டு 
டெட்ராபேக்குகளில்  
அலகால் தடவித்தேடும் 
குருவியைப் பார்த்து 
சிரித்தது 
சுவரொட்டி அசைபோடும் 
பசு. 

சனி, அக்டோபர் 29, 2011

மழை நின்ற காலை!

இரவு சரியான மழை...
சலசலத்து
ஊற்றியபடி கதையளந்தது
மொட்டைமாடி வடிகுழாய் ...
" உனக்கென்ன ...
தள்ளிவிட்டால் ஆச்சு...
உள்ளே-வெளியே
விளையாடும் நீர்
போதாதென்று
உன் தொல்லை வேற ...
குளிர் தாங்கலை..,:
புலம்பியது சுற்றுத்தரை .
மறந்துபோய்
வெளியில் வைத்துவிட்ட
மகாராசன் வரட்டும்...
மரத்துப்போன கால்களோடு
புலம்பிய ஏணிக்கும் 
வடிகுழாய் நீர் சிதறல் 
ரசிக்கவில்லை...
"என்ன விளையாட்டு,:;;;;
எரிச்சல்பட்டது...
கள்ளச்சிரிப்போடு
நகர்ந்தது
கருமேகம் !

வெள்ளி, அக்டோபர் 28, 2011

கண்ணாமூச்சி

சொற்களை
அழைத்துக் கொண்டிருந்தது
கவிதை...
மரவட்டையாக 
நீளும் குச்சியறிந்து
சுருண்டு சுருண்டு 
திரும்பிக் கொண்டிருக்கின்றன 
சொற்கள்..

காற்றில் 
அலைந்து திரிந்து 
சொற்களைத் துரத்தியது 
கவிதை..
பொறியை அறிந்த
எலிக்குஞ்சுகளாகி
கீச் கீச்சென
ஓடி ஒளிந்தன சொற்கள்..

தோல்வியை அந்த ஒலி
எதிரொலிப்பதாக 
துயரப்பட்டது கவிதை..

குழலூதும் பிடாரனாகி
சொற்களைத்
தன பின்னே தொடரச் 
செய்வதான 
சுகமான கற்பனையில் 
தூங்கிப்போனது கவிதை...

தொந்தரவின்றி 
சொற்கள் 
அலைந்து ...திரிந்து...
மிதந்து...பரவி... 
   
மழையின் அனல்மூச்சு...

விழும் துளிகளை
வணங்கி வணங்கி
வரவேற்க
மண்  புன்னகைத்தது ...
கோபாலன் குடையின்
மேலிருந்து
வழிந்து சொட்டிய
துளிகளை
உள்ளங்கையில் ஏந்திடக்
கிளை விரித்துக் காத்திருந்தன
நெடிய மரங்கள்...
செம்புலமில்லாது
விரியும் பிளாஸ்டிக்
தாண்டமுடியாது
தகிக்கும்
மழையின் அனல்மூச்சு  

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கணவர்களின் காலத்தில்  ...


முப்பது வருடம் முன் வாங்கிய 
தேன்கூடு தோடும
கிளிப்பச்சை சிவப்பு பார்டர்
புடவையும்
கமலாவுடையது
பாகப்பிரிவினை டிசைனை
அழித்துச் செய்த
பூத்தோடும்
ஆராதனா நெக்லசும் 
அரக்குப்புடவையும் 
சரோஜாவுடையது 
கல்தோடும்
தாம்புக்கயிறு செயினும் 
சின்னம்மாவுடையது ...
சீமாட்டிகளாகத்தான்
சிரிக்கிறார்கள்
எல்லோருடைய
கல்யாண புகைப்படங்களிலும்
புதிய பட்டும் பவுனும்
இல்லா
கவலையின்றி
  
உரையாடலின் பின்னே 


பேசுகிறாய் ...
பேசத்தெரியும்
என நிரூபிக்க...
படித்திருக்கிறாய்
பார்த்திருக்கிறாய்
கேட்டிருக்கிறாய்
யோசிக்கிறாய்
கண்டுபிடிக்கிறாய்
நுண் உணர்வு
முன்யோசனை
புத்திசாலித்தனம்
பெருமை
சாமர்த்தியம் ...
சகலமும் உணர்த்த
நீ பேசிக்கொண்டேயிருக்கிறாய்


என்னைச்சுற்றி 
இறைந்து கிடக்கும் 
வார்த்தைச் சில்லுகள் 
(சமயத்தில் என்முகமும்
காட்டுகின்றன)
கிழிக்காமல் 
கடந்து போவதெப்படி.. 
யாருக்காக?


பொம்மை,விலங்குகள்
குழந்தைகளுக்கான 
ஓவியங்கள் ..

பூக்கள் 
பதின்வயதுக்குரியவை 

கோடுகள்,வட்டங்கள் 
கட்டங்கள் 
வளர்ந்தவர்களுக்காக...

உற்றுப்பார்த்தும் 
ஒன்றும் புரியா 
குழப்பத்தீற்றல்கள் 
அறிவுஜீவிகளின் 
கவனத்திற்காம்

எதற்கும்
புன்னகையோடு
 பார்த்துவைக்கலாம் ..
சென்னைப் பூ 

அடுக்ககத்தின் 
தொட்டிரோஜா 
மல்லி ,சாமந்தி 
மட்டுமே தெரியுமென்றாள்
அமலா..
பவழமல்லி,செண்பகம் ,
மகிழம்பூ  காட்ட 
பாண்டிபஜார் கிளம்பினாள்
அம்மா.
குறுஞ்செய்தி பார்த்து 
கேட்ட மகளுக்கு 
தனது  இடைநகரில்
எங்கு காட்டுவதென 
தெரியாத் திகைப்பு 
சித்திக்கு ...     

வெள்ளி, அக்டோபர் 14, 2011

யாருக்காக....

வினோத வகைகளோடு
பார்த்துப் பார்த்து 
பதார்த்தப்பட்டியல் 

எதிரொலிக்கும் அரங்கிலும் 
இசைநிகழ்ச்சி கட்டாயம்
குதிரையோ ,யானையோ
ஊர்வலத்துக்கு அவசியம்!
வண்ண விளக்கு
வாணவேடிக்கை 
பன்னீர் யந்திரம் 
பந்தல் புதுமை
பந்தியில் புதுமை
எங்கு பார்த்ததையும்
ஒன்று சேர்ந்தொரு
கனவுத் திட்டத்தில்
கல்யாணம்!

செலவுக்காரன்
கலக்கத்தில்...
வரவுக்காரன்
கணக்கில்..
வந்தவர்
கடமையில்....
வெட்டு ஒன்று !


எப்போதுமே
இடையில்
ஒற்றை இழைக்கோடுதான்
ஆம்-இல்லை  
வேண்டும்-வேண்டாம் 
முடியும்-முடியாது 
நடக்கும்-நடக்காது....


ஆனால் 
கச்சிதமாக வரைய 
கை கூடுவது 
சிலருக்குத்தான்..
நேர் கோடிழுக்க 
நீளாக்கரமுடையார் 
தலை
தஞ்சாவூர் பொம்மை.....

புதன், அக்டோபர் 12, 2011

தப்புத்தாளங்கள் 

வெளியில் நீண்ட 
வேரா ?
அடியைத் தேடும் 
விழுதா?

அடையாளம் 
அறியமுடியாமல் 
படர்ந்திருக்கிறது 
வெறுப்பின் நீட்சி...

முளை விடும்
முன்னரே
கருகிவிடுவதோ
களைஎனக்
கருதிவிடுவதோ
விருப்பின்
தலையெழுத்து...வறுமைக்கோடு

எப்போதுமே 
உங்களுடையது
ஏட்டுச் சுரைக்காய்தான் ...


ஆனால் ...
அதில்
படமாவது இருந்திருக்கலாம்


முனை முறிந்த
பென்சிலால்
வரைந்தீர்களோ?


ஆனால்...
அதன்
தடமாவது பதிந்திருக்கலாம்


சுருட்டிய தாளுக்குள்
காணவேயில்லையே...

வறுமைக்கோடு


உழைக்கத் தெரியாதவனும்
பிழைக்கத் தெரியாதவனும்
கரைக்கும் அப்பால்
கடக்க முடியாத வெள்ளத்தை
கண்டு கொண்டிருப்பதாக

தொலை நோக்கியால்
உற்றுப்  பார்த்தவர்
உரைத்தார்...

அது
கட்டிய கரையல்ல ...
தேசத் துகிலில்
ஒட்டிய அழுக்கென்று
தொலைநோக்கி
பாவம்...
காட்டவில்லை!

வெள்ளி, அக்டோபர் 07, 2011

இடைவெளி 


புலால் மறுக்க 
புரட்டாசி தேடும் 
உனக்கு 
ஆச்சர்யம்தான்...

தச்சுக் கோளாறோ
பூச்சுக் கோளாறோ
நாற்காலிக்கும்
தரைக்கும் -நடுவே 
நொடிக்கும் இடைவெளியில் 
ஈ ,எறும்பு 
ஏதும் நசுங்காதிருக்க
பிரார்த்தித்தபடியே
அமரும்
அவனைப்பார்த்து ...

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

வசவுக் கணை 

உத்தரத்திலேயே 
தொங்கிக் கிடக்கும் 
எனக்கு இன்னும் 
நான்கு நாளில்
விடுதலை கிடைக்கலாம்..


என்னை
வீசியவனுக்கும்
தன்மேல் விழாமல்
தப்பித்தவனுக்கும்
பாகப்பிரிவினை ...

தன்மேல் நான் விழாதபடி
நகர்ந்து கொண்டேயிருந்த
இருவருக்கும்
நான்தான்
நடத்திவைத்தேன்!
உள்ளே - வெளியே

கொடியில் தொங்கும்
சேலையின்
எம்பிராய்டரிபூவில்
சுடிதார் நாடாவில்
சட்டையிலாது
அலையும் ஹாங்கரில் ....
கட்டில்,அலமாரி
இடுக்கில்...அடியில்....


எங்காவது இருக்கலாம்

கண்ணாடியின்
பின்புறம் சாய்ந்தோ
துணிகளிடையே   
 படுத்துக்கொண்டோ 
இருக்கலாம் ....
மின்விசிறி 
இறக்கைகளோடு  சுழலாம் ...

குளிர்சாதனப் பெட்டியின்
மேல்கூட காத்திருக்கலாம்...

தைல வாடை
பிடிக்காது வெளியேறிய
கால்வலி....
நேற்று -இன்று-நாளை!


குழந்தைப் பார்வையில்
கவிதைகள்
எழுதேன்..

நண்பரின் ஆலோசனை!
எழுதலாம்தான்!

ஆனால்.......


உணர முடியவில்லை....
குழந்தைகள்
வெளியேறிவிட்டார்கள்

வீட்டிலிருந்தும்....
......மனதிலிருந்தும்...மீண்டும்
வரும் பருவந்தானே...
நண்பரின் ஆறுதல்!

ஒருவேளை
அப்போது
கவிதை வெளியேறியிருக்கலாம்!

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மின்அணு  தகனம் .


துக்கத்துக்கு 
உகந்த நேரமாய் 
இதுதான் இருக்கிறது ...


அவர் குடும்பத்துக்கு 
ஆறுதல் சொல்லும் 
சுமையின்றி 
சடங்கு சம்பிரதாய 
சர்ச்சைகளில் 
தலையிடுவதா வேண்டாமா 
தடுமாற்றம் இன்றி 

துக்கம் கேட்க 
அருகிருந்து 
வருவோர்க்கு வழிவிட 
நகர்ந்து நகர்ந்து ....
சொல்லாமல் 
வெளியேறும்வரை 
அலைபேசி அமைதிப்படுத்தி ....


வெளிப்படுத்தா துக்கம் ....
இனி மின்ன வாய்ப்பில்லா
அந்த அலைபேசிஎண்ணிலிருந்து
விம்மி வழிந்தது....!


நடுங்கும் விரல்நுனி
நீள்கிறது
அழி _கட்டளையிட

சனி, செப்டம்பர் 24, 2011

 வாழ்க்கையெனும் வட்டம்

வருடங்களைத்

தாண்டும் முயற்சி ...

தாத்தா
T-ஷர்ட்டில்

பேரன்
ஜிப்பாவில் ...


புதன், செப்டம்பர் 21, 2011

வாழ்க்கைக்கல்வி


ஓட்டைக் குடிசைக்குள்
சாரல்
ஒழுகும்இடம் அறியாது
மழைக்குத் தயாராகிறது
மனசு...

ஒதுங்காமல்
ஒடுங்காமல்
ஒழுகலுக் கெல்லாம் 
ஒழுகாத பாத்திரம் 
ஏந்துவதும் ...
ஊசிக்குளிர்
உறுத்தாதது போல்
உள்ளேவிட
கப்பல் மடிப்பதும் ........
அட....
வாழக்கற்றாய் ...!
வாழிய ...வாழிய ...! 
மலர்கள் எங்கிருப்பினும் ...

சவ ஊர்வலத்தின்
முன்னே
மாலை சுமந்த வாகனம் !

சிறகடித்தபடி
முன்னேறும்
சில வண்ணத்துப்பூச்சிகள்

கொள்ளிச்சட்டி
பிடித்தவனுக்கு
கூடுதல் கவலை...

சுடுமோ ...படுமோ...
வண்ணத்துப்பூச்சிகளோ
மயானம்வரை
மரணத்தை
முன்மொழிவதுபோல் ....
நீரின் கீழே ...


கல்
போட்டு
கல்
போட்டு
          நீர் பருகும் காகம்
கல் போட்ட
ஜாடியின்
கனம் அறிவதில்லை !   
மழையும் குளிரும்...!


வார்த்தைச்சீதளம்
வருத்தும்போது
மௌனக்கம்பளி
இதம்...
மௌனக்கம்பளி
உருத்தும்போது  ....
சொல் விசிறி
பதம்...!
 
 
பருவக்காற்று
திசையின் உதவியால்
மழையைத் தீர்மானிக்கிறதா?
மன இருளில்
திசையே தெரிவதில்லை...
திசைகாட்டி ?
 
 
குளிரக் குளிர
பூமி
நனைக்கும் மழை
திசை தப்பி
ஆதவச்சூடு
அவிக்கப்பெய்து
 
ஆவி பறக்கிறது!

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

மயிலேறும் பெருமாள் 

உதைத்து முறுக்கி 
ஊர்வலம் போக 
அரைலட்சம் வைக்காதவன் 
சிவனுமில்லை!
சீவனுமில்லை!
பொய் (நெய் )


உனக்கொரு வாய்
பூனைக்கொரு வாய்
ஒப்பந்தப்படி
உணவுநேரம் ...
இரண்டு கிண்ணங்களோடு
நான் தயார் ...
நெய் சேர்த்து ஒன்று ...
பொய் சேர்த்து ஒன்று..
தவிக்கும் புத்தர்!

தியானம் தவிர்த்து
கைகள் விரித்து
தொந்தி வளர்த்து
அகலச்சிரித்து ...
உன்
ஆசை
என் துன்பம் !
தங்க வேட்டை !

நெற்றிச்சுட்டி
...........................
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த  தமிழரசி 
காது .மூக்கின் 
வேப்பங்குச்சி மாற்றினாll   lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கால் மாறி ஆடியவன் !

வலி உணர்வது
மனமா..
உடலா..
அடர்த்தியின் அளவு
அவரவர் நேர்விலா
     அணுக்கப்பார்வையிலா
பித்தாய் ,
பேயாய் ...
உருண்டு உருண்டு
   உழன்று திரிந்து
கண்டறியாதன
காண வரவைத்த
"திருப்பாதம்"
திருப்பி ஆடியது
பாண்டியனுக்காகத்தானா?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...