ஆன்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 11, 2015

ஆடும் பாடு


துள்ளும் சில நேரம்
துவளும் சில நேரம்
மருளும்,மயங்கும் ,உருளும் ,உரசும்
மேகம் போலவே திரளவும் திரியவும்
பிரியவும் உடையவும் உருகவும்
ஊறவும்
பல்கிப் பெருகவும்
புள்ளியாய்ச் சுருங்கவும் செய்யும்
இதன் பெயர்தான்
ஆன்மாவா
சனியன் என்ன பாடு

இசை நின்ற பொழுதுகளில்
காலைப் பிராண்டும்
உன்னை எப்படிக் கொல்வேன்
நான் ஓடிக் கொண்டிருக்கும்
இசை நாற்காலிப் போட்டியின்
ஒலிவிசைக் கட்டுப்பாடோ
ஒரு

பித்தனின் கையில் 

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

புதன், ஜனவரி 22, 2014

அவியாக் குவியல்

பொய்கள் இறைந்த முற்றத்தில் 
புழுங்கிய நெல் துழாவி விட 
இடம் தேடுகிறாள் வள்ளி 
ஒவ்வாமை சொல்லி 
குவிந்து கொள்கிறது 
அவிந்த நெல் 
எப்படியும் மூட்டை கட்டப் போவது 
தன்னையல்ல என்றறிந்த 
முற்றத்துப் பொய் 
காலாற ஒருகோடிக்கும் 
மறுகோடிக்கும் ....
ஊறவும் புழுங்கவும் காயவும்
இடியவும் 
இன்னொரு மூட்டை 
தயாராகிறது .....

செவ்வாய், டிசம்பர் 10, 2013

எங்கே நீயோ

வல்லமையில் நேற்று...
                         9 12 13http://www.vallamai.com/

--பிரியம் சொல்லில் தளும்பல்
உன் ப்ரியம்
கருணை கண்ணில் வழிவது 
பார்வைக்கு அழகு 
பார்ப்பவர்க்கு அழகா ..?
என் ஆன்மாவை 
துடைத்துத் தூபம் காட்டி 
இறுகப் பூட்டிவிட்டேன் 
புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

அழுக்கு தின்று மூச்சு விடும் 
மீன் அது என்பதை அறியாயோ 
அகவிழி திறந்து ஆன்மாவை 
உலவவிடு... 
தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு 
நீந்தும்போதில் 
நீயும் கற்பாய் பிரியமும் கருணையும் 
விரல் வழியும் வழியும் என்பதை...
  

வெள்ளி, நவம்பர் 29, 2013

பூனை மீசையும் காட்சிப்பிழையும்


-- அந்த சுவர் சொல்கிறது 
நான் அதுவாய் ஒருபோதும் 
இருந்ததில்லை என்று....
ஆம்...நீயாய் இருந்திருக்கலாம் 
என்றுதான் இருந்தேன்...என்றேன்!

அந்த வெயில் சொல்கிறது 
நான் அதுபோல் தகிப்புடன் 
ஒருபோதும் 
ஒளிர்ந்தது இல்லையென்று...
ஆம்..வெளிச்சமோ,கணப்போ
எப்போதும் பற்றாக்குறையில்தான் 
எனக்கே என்றேன்...!

அந்தப் பூ சொன்னது 
என் இதழ் அடுக்கை நீ
ஒருநாளும் சரியாய்க் கணக்கிடவேயில்லை என்று..
மகரந்தம் வாசனை நிறம் என்று 
எதையுமே யூகிப்பதுதான் 
என் ரசனையென ஒப்புக்கொண்டேன் ...

என் காலடிப் பூனை 
சிரிப்பது போல் தோன்றியது...
பூனைகளின் மீசை அவ்வாறு 
போலிக் காட்சி காட்டுவதைத் தான் 
காட்சிப் பிழை என்றாயோ.....
-

செவ்வாய், அக்டோபர் 08, 2013

உன்னை எனக்குத் தெரியாதே

பார்த்ததுபோல் இருந்தாலும்
பாராதுதான் போனேன்...


"நில்'...நின்றேன்...
"பாராது போகிறாயே.".
"உன்னை ...பார்த்ததில்லையே."..
"எல்லாம் அறிந்த முகம்தான் ..."
அம்ஹம்...
உறவா..நட்பா...
"மன்னிக்க வேண்டும்...நினைவுக்கு
வரவில்லை.."
"தெரிந்துகொண்டே தெரியாது என்பது....."
"தயவு செய்து நொடிக்காதே ...
அ ....  ஏதாவது குறிப்பு தரக் கூடாதா...
எங்கே பழக்கம்...பார்த்தது எப்போது ...ஏதாவது..."
"உண்மையில் தெரியவில்லையா..."
"உண்மையாய்த் தெரியவில்லை.."

"பொய்யையே பார்த்துப் பார்த்து
பொய்யுடன் பொய்யாய் கலந்து
உண்மையையே
அடையாளம் மறந்து போனதோ..."

உண்மைதானா என்ற
தயக்கத்துடன் நிற்கிறேன்...
அடையாளம் தெரிந்தவர் யாரும்
இருக்கிறீர்களா...

புதன், ஆகஸ்ட் 28, 2013

பிணையாளியாக


நிலவுப் பொழுதொன்றில்
கதவுகள் விரிந்தன...
பிரார்த்தனைகளிலிருந்து கசிந்த
தூபப்புகை
முதலில் வெளியேறியது ,,
தொடுத்தும் தூவியும்
சாற்றியிருந்த மலர்கள்
கிடைத்த தென்றலின்
கால்களை இறுகப்பற்றியபடி
மிதந்து கடந்தன ..
அவற்றின் பெருமூச்சை
நான் கேட்டபடி இருந்தேன்
இந்த வழியும் இந்தக் காற்றும்
போதுமானதில்லை
என்ற என் வார்த்தைகளைக்
கேளாதது போல்
விரைந்து கடந்தன
நான் இசைத்த தோத்திரங்கள் ......

புதன், ஆகஸ்ட் 14, 2013

நானும் நானல்ல

 நானொரு விருட்சம், நான் உதிரும் இலை,
மணம் கசியும் சிறுமலர்,
கனிந்து  வீழும்  பழமும் ,
அதனுள் கிடக்கும் வித்தும்
என ஏதோவொன்றாக  சித்தரித்து
வந்தபின்

சுற்றிலும் நெளியும் சர்ப்பங்களைக்
கடக்கவியலா கானுயிர்
ஆனேன் 

நெளிந்து வளைந்த சர்ப்பம் 
பார்த்தபடி கடந்தது வாழ்வு ..

சில நாள் அச்சம்..
சிலநாள் அருவறுப்பு ..
சிலநாள் ஆர்வம்
சிலது வெகு நீளம்
வெகு சிறியது
வெகு அழகு கூட
நிறங்களோ வேறு வேறு
புள்ளிகளும் வரிகளும்
செதில் தீற்றல்களும்
ஒன்றுபோலில்லை மற்றது 


அரவம் பார்ப்பது வழக்கமாகிப்போனபின்
ஒருநாள்
நான்
அமர்ந்திருந்த மேசையில் சிந்தியிருந்த
துளி விஷத்தை
நானே துடைத்தேன் யாருமறியாமல்
அல்லது அவ்வாறு நம்பியபடி...

ஞாயிறு, ஜூலை 21, 2013

எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது


யார் உன்னோடு இருக்கிறார்கள் ?
யார் உன்னோடு வருகிறார்கள்...
யாரும் யாரோடும் இல்லையாம்
தீர்மானமா ,திகைப்பா ,
அச்சுறுத்தலா ,அவமானமா
அன்றி ஆசுவாசமா....


யார் இருப்பதென்பதை
யார் தீர்மானிக்கிறார்கள் ..?
யாரோடு என்பதும்
யாரால் தீர்மானம் செய்யப் படுகிறது...
யாரின் நீ என்பதும்
உன்னின் யார் என்பதும் கூட
உன்னாலா,அந்த யாராலா,
அன்றி யாரோவாலா 


யாரும் இல்லாவிடிலோ
யாரோடும் இல்லாவிடிலோ
யாரின் துயரமது....


கேள்விகளின் வெள்ளத்தில்
மூழ்கி அபயக் குரலெழுப்புவது
யாரென்று மட்டும்
கண்டு கொள்ளாமல் நகருங்கள்

வேறு இடம் தேடி


பொறாமை பொன்னிறம் கொண்டதென்றும்
இறுமாப்புதான்
இளஞ்சிவப்பின் அடையாளமென்றும்
பரபரப்பின் குறியீடு பச்சை ,
மமதைக்கு மஞ்சள் ...
ஆறாக் குரோதம் ஆரஞ்சுப் பின்னணி
குழைவும் கோடுகளும்
வளையும்
சாத்தானின் ஓவிய வகுப்பில்
தலை மாணாக்கராய் இருப்பது
சுலபமல்ல ...,
ஒவ்வொரு கணமும்
மொட்டு விரியும் ரோஜாக்கொத்தைக்
கண்டுகொள்ளாமல் கடக்கும்
வண்ணம்
உன் புலன்களின்
திறமிழந்து பெற வேண்டும் அந்த இடம்

புதன், ஜூன் 12, 2013

என் தொடக்கமும் தொடர்ச்சியும்


ஒளியைக் கிள்ளி
உதட்டில் பொருத்திக் கொண்ட
அந்தக் கணத்திலேயே
உன் கண்களில்
தீச் சுரந்தது
எனக்குத் தெரியும் ...!



இருள்
உன்னை அவித்துவிடும்
என மனப்பாடம்
சொல்லித் தந்தாய்...
எனக்கு மையிட்டுக் கொள்ள
அதைக் கைப்பற்றினேன் ....


திரைச் சீலைகளின்
பின்னிருந்து பேச மறுத்து
அவற்றையும்
சேர்த்துச் சுமந்தபடி
சுழன்றாடும் என்
பாத சரங்கள் உன்மேல்
விழும் இடித் துண்டுகள்
எனக் கதைக்கிறது
நூற்றாண்டுகள் கடந்த உன்
துர்க்கனவின் பாடல்

வெள்ளி, ஜூன் 07, 2013

எச்சத்தால் ஆனது


 


 அன்பு ஒரு துளி
ஆசை ஒரு துளி
சினம் ஒரு துளி
வருத்தம் ஒரு துளி
அறிவு ஒரு துளி
கயமை ஒரு துளி
காதல் ஒரு துளி
கற்பனை ஒரு துளி
காமம் ஒரு துளி
வேகம் ஒரு துளி
விவேகம் ஒரு துளி
ஞானம் ஒரு துளி
மடமை ஒரு துளி
ஊக்கம் ஒரு துளி
சோம்பல் ஒரு துளி
முயற்சி ஒரு துளி
வக்கிரம்,உக்கிரம்,
தயை ,தாராளம் ,
இரக்கம் .....ஒருஒரு துளி
......
என்ன ஆயிற்றா ?
இன்னும் கொஞ்சம் விடலாம் "
"விடு..விடு..எதையாவது விடு ...!"
.......
அவன் கைக் குடுவையே
நீ..நான்....

வியாழன், ஜூன் 06, 2013

எனக்குத் தெரியாத நான்


அலைச் சலனத்தில்
துள்ளி நழுவும் சிறு மீனா...
மிதவைத் தெப்பத்தில்
சேர்ந்த குச்சியா....
அதையும் செலுத்தவல்ல
துடுப்பா ...

கரையோரம் நின்று
ஈரத்தில் ஊறும் வேரா ,
உதிரும் துளிரா ..
நீலமும் பச்சையுமிலா
நிறச் சேர்க்கையா ...
எங்கோ இருக்கிறேன் !
எங்கிருக்கிறேன் ....?
இருக்கிறேனா ...?

செவ்வாய், மே 28, 2013

பெரிது ஏலா வாழ்வு

நீ  அமர வாய்ப்பிலாச்
சிறிய இதழ்களோடு
நான் இன்று சிரிக்கிறேன்...
நீ
மேலும் சில நாள் தவிக்கலாம்..

.
சிறு சிறகுகளோடு
ஒரு பூச்சியோ தேனீயோ
அலையக்கூடும் 


நகர்கிறாயா ..


நிழலிலேயே மரிக்க
எனக்கு சம்மதமில்லை...

செவ்வாய், மே 14, 2013

பனிக்கட்டி யானை



சமுத்திரத்திரத்தின் அலைகளில்
தவழ்ந்தும் அமிழ்ந்தும்
சமுத்திரம் தேடும் மீன்.


மகரப்பொன் தூளாகப்
பிறவி கொண்டு
மலரின் மணம்
உணரா சுவாசம் .


நிலவின் வெளிவட்டமும்
அதனோரக் கறையுமாக
இருந்தபடி
வளர்பிறை தேய்பிறை
வழிநடை..


கிளையிருக்கும் துளிரும்
விழுந்திருக்கும் சருகும்
ஒன்றாய் சரசரக்கிறதென்று
சொல்ல உனக்கு எங்ஙனம்
வாய்த்தது ....

புதன், மே 08, 2013

மலர்வது.... முள்ளா ?




ஆன்மாவின் சிறகுகளுக்கு
வண்ணம் பூசுவது
வழக்கம் இல்லைஎன்கிறாய் 


அம்புகளின் நுனியிலும்
மலரிணைத்தே விடுப்பவள் நான்..


துப்பும் நிறத்தையே
அடையாளமாக அணிந்திடும்
மொட்டுகளுக்கு
குழப்பம் தருவதே
உன் வழக்கமாகிவிட்டது...


உன்,என்,
வழக்கங்களை மீறியும்
சிரிக்கிறது பூ...
கூடவே அதன் முள்ளும்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...