இருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள்-4

ஏற்றிவந்த சுடர்
அகத்திருக்கிறது 
இருள் 
இருள் என 
அச்சம் கொள்ளாதே
*************************
ஆங்காரமும் அன்புதானாம் 
நன்றாகத்தான் இருக்கிறது 
இந்த 
மொழிபெயர்ப்பு
**********************************
ஒவ்வொரு மரணத்தின்
பின்னும்
உறவு பேணுதல்
குறித்த ஞானோதயங்களும் தீர்மானங்களும் பிறக்கின்றன
உயிர் வாழ்பவர்களால்
மரணிக்கின்றன

**************************************
தெரியும் என்ற இருப்பு
தெரியாததன் நெருப்பில்
நீர் தெளித்து
அவித்துக் கொண்டிருக்கிறது

*****************************
பழுத்த கம்பி 
நீ தொட்டாலும் சுடும் 
கனலின் அடையாளம் 
கற்றல் அவசியம்


************************

சனி, அக்டோபர் 25, 2014

இல்லாமல் இருப்பதுவும் இருப்பு



என் பெயர் எனக்கானது என்றிருந்தேன்
பெயரின் சுருக்கம்,குறுக்கம்
எதுவும் பெருமையோடு ஏற்றிருந்தேன்
பெருமைகள் பெயருடையதா
என்னுடையதா
பிரித்தே அறியவில்லை
பிறிதொருநாள் என் பெயர் சொல்லி
எவரோ அழைத்தது
எவரையோ
என்றறிந்தபோது
அது எனதானது மட்டுமில்லை
என்றானபோது
நான் என்று உங்களிடம்
எதை அறிமுகம் செய்வது
நான் என் பெயரிலும் இருக்கலாம்
 இல்லாமலும் இருக்கலாம் 

புதன், ஜனவரி 22, 2014

அவியாக் குவியல்

பொய்கள் இறைந்த முற்றத்தில் 
புழுங்கிய நெல் துழாவி விட 
இடம் தேடுகிறாள் வள்ளி 
ஒவ்வாமை சொல்லி 
குவிந்து கொள்கிறது 
அவிந்த நெல் 
எப்படியும் மூட்டை கட்டப் போவது 
தன்னையல்ல என்றறிந்த 
முற்றத்துப் பொய் 
காலாற ஒருகோடிக்கும் 
மறுகோடிக்கும் ....
ஊறவும் புழுங்கவும் காயவும்
இடியவும் 
இன்னொரு மூட்டை 
தயாராகிறது .....

ஞாயிறு, நவம்பர் 24, 2013

அவளுக்கு டிசம்பர் வருகிறது



காற்றழுத்தத் தாழ்வுநிலை.....
மழை வரும் ,வரலாம்,வரவில்லை....
புயல் கிழக்கே,தென்கிழக்கே,மேற்கே தென்மேற்கே..
கடந்தது,
மாறியது,
வலுவிழந்தது..
மண்டலவிரதம்,அவசரமாலை,
வேன்,கார்,ரயில்,பேருந்துநிரம்பும் 
பக்தர்கள்,
பிச்சி,சாமந்தி,பட்டன்ரோஜா,கதம்பத்தோடு 
ஒருபந்து டிசம்பர் பூவும் கட்டிவைத்து
இம்மாதத்தைக் கடக்கிறாள் 
கனகாம்பர  சீஸனில் பிறந்ததால் 

கனகா வான கனகா.... 

செவ்வாய், நவம்பர் 12, 2013

சில விஷயங்கள் ...

சில நேரம் பசுமை 
நம்மைப் பறவையாக அழைக்கும்..
சிலநேரம் நதியின் நெளிவு 
துளி மணலாய்க் கிடக்க இழுக்கும்..
சில நேரம் வெயிலின் 
சூடு பருக வேண்டித் தொண்டை வறளும்...
எந்நேரமும் தோன்றுவதேயில்லை 
சில விஷயங்கள் ...

என் சில விஷயங்களும் 
உன்னுடையதும் 
ஒன்றுதானா எனத் தெரியாதவரை 
அவை சில விஷயங்களே 

செவ்வாய், அக்டோபர் 08, 2013

உன்னை எனக்குத் தெரியாதே

பார்த்ததுபோல் இருந்தாலும்
பாராதுதான் போனேன்...


"நில்'...நின்றேன்...
"பாராது போகிறாயே.".
"உன்னை ...பார்த்ததில்லையே."..
"எல்லாம் அறிந்த முகம்தான் ..."
அம்ஹம்...
உறவா..நட்பா...
"மன்னிக்க வேண்டும்...நினைவுக்கு
வரவில்லை.."
"தெரிந்துகொண்டே தெரியாது என்பது....."
"தயவு செய்து நொடிக்காதே ...
அ ....  ஏதாவது குறிப்பு தரக் கூடாதா...
எங்கே பழக்கம்...பார்த்தது எப்போது ...ஏதாவது..."
"உண்மையில் தெரியவில்லையா..."
"உண்மையாய்த் தெரியவில்லை.."

"பொய்யையே பார்த்துப் பார்த்து
பொய்யுடன் பொய்யாய் கலந்து
உண்மையையே
அடையாளம் மறந்து போனதோ..."

உண்மைதானா என்ற
தயக்கத்துடன் நிற்கிறேன்...
அடையாளம் தெரிந்தவர் யாரும்
இருக்கிறீர்களா...

ஞாயிறு, ஜூலை 21, 2013

எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது


யார் உன்னோடு இருக்கிறார்கள் ?
யார் உன்னோடு வருகிறார்கள்...
யாரும் யாரோடும் இல்லையாம்
தீர்மானமா ,திகைப்பா ,
அச்சுறுத்தலா ,அவமானமா
அன்றி ஆசுவாசமா....


யார் இருப்பதென்பதை
யார் தீர்மானிக்கிறார்கள் ..?
யாரோடு என்பதும்
யாரால் தீர்மானம் செய்யப் படுகிறது...
யாரின் நீ என்பதும்
உன்னின் யார் என்பதும் கூட
உன்னாலா,அந்த யாராலா,
அன்றி யாரோவாலா 


யாரும் இல்லாவிடிலோ
யாரோடும் இல்லாவிடிலோ
யாரின் துயரமது....


கேள்விகளின் வெள்ளத்தில்
மூழ்கி அபயக் குரலெழுப்புவது
யாரென்று மட்டும்
கண்டு கொள்ளாமல் நகருங்கள்

வேறு இடம் தேடி


பொறாமை பொன்னிறம் கொண்டதென்றும்
இறுமாப்புதான்
இளஞ்சிவப்பின் அடையாளமென்றும்
பரபரப்பின் குறியீடு பச்சை ,
மமதைக்கு மஞ்சள் ...
ஆறாக் குரோதம் ஆரஞ்சுப் பின்னணி
குழைவும் கோடுகளும்
வளையும்
சாத்தானின் ஓவிய வகுப்பில்
தலை மாணாக்கராய் இருப்பது
சுலபமல்ல ...,
ஒவ்வொரு கணமும்
மொட்டு விரியும் ரோஜாக்கொத்தைக்
கண்டுகொள்ளாமல் கடக்கும்
வண்ணம்
உன் புலன்களின்
திறமிழந்து பெற வேண்டும் அந்த இடம்

வெள்ளி, ஜூலை 19, 2013

கூழாகாக் கல்


 நிறமும்
தத்துவமும் தோற்றமும்
மாயையும் கண்டுபிடிப்பும்
வரிசையும் ஒழுங்கும்
பாடமும் படிப்பினையும்
கற்பனையும் காட்சியும்
....
ஏதாவதொன்று தேடும் உன் கண்ணில்
படுமுன்
உடைவதும் உருளுவதும்
தேய்வதும் திரள்வதும்
சிதைவதும் சிக்குவதும்
புதைவதும்
போய் ஒழிவதும் என
எதுவுமே பொருட்டாக இலா
வாழ்வு -இன்று
மழுங்கலே  அழகென்றானது
மறந்துவிட்டது -
சீராக இல்லாமல் கூராக இருந்தது

வியாழன், ஜூலை 18, 2013

பொய்யா மொழி

பசுந்தளிர் துளிர்த்தபடி
தலையசைத்துக் காத்திருக்கட்டும்

இதயம்
குயில் வந்து அமரலாம்
குழலோசை வருடலாம்


மகரப்பொடி சிதறத்
தேனருந்தி வண்டு இளைப்பாறலாம்
கதிரின் இளஞ் சூடும்
சாரலின் தீண்டலும் பழகலாம்
இன்னும் என்னென்னவோ
சொன்னதை மறவாது
நம்பிக்கையோடு
துடித்திருக்கிறது இதயம்
சீனத்தின் முதுசொல்
இவ்வூர்க் கதிருக்கோ
குயிலுக்கோ
யார் விரித்துரைப்பார் .....


செவ்வாய், ஜூன் 11, 2013

ஆறுதல் நன்றன்று

ஒரு பேரன்பை ,
ஒரு புன்னகையை,
ஒரு முத்தத்தை,
ஒரு பரவசத்தை,
ஒரு பூக்கணத்தை ,
ஒரு  மகிழ்பொழுதை ,
ஒரு பாடலை,
ஒரு கவிதையைக்
கொண்டாடும் -அதே கனத்தோடு ,
ஒரு புறக்கணிப்பை,
ஒரு துரோகத்தை,
ஒரு சீற்றத்தை,
ஒரு சீண்டலை,
ஒரு துன்பத்தை,
ஒரு விம்மலையும்
தாங்க முடிந்தால்
என்ன சொல்வீர்,.....

***************************


பச்சைத் தேநீர்
இன்னும் ஒரு மிடறு பாக்கியிருப்பதால்
நீ எதி
ர்பார்க்கும்
விடை சொல்வது கடினம்
....

ஞாயிறு, ஜூன் 09, 2013

புத்தனும் நானும்


வனமலர்கள் சில மலரக் கூடும்
வெடிப்பெலாம் குழம்ப
குளம் நிறையக் கூடும்...
ஓடியாச் சுள்ளிகளோடு
உயர்ந்து நிற்கும் மரம்
பசிய துளிர்களின் வாசத்தைத்
தானே தலையசைத்து
ரசிக்கக்கூடும் ....
விசும்பின் துளி வீழும்
தேவகணத்தைத் தொடரும்


இந்த வரிசையில்
தேவனுடையதோ-
சாத்தானுடையதோவான
கனியும் கிடைக்குமென ...


கிடைக்குமென
காத்திருக்கிறான்
பாசி படர்ந்த புத்தன்.....
பாசி
ஈரத்தின் விளைவல்லவென
நோன்பு தொடங்கு
முன்  யுகத்திலேயே
உபதேசித்தது நினைவிருக்கிறது.

வியாழன், ஜூன் 06, 2013

எனக்குத் தெரியாத நான்


அலைச் சலனத்தில்
துள்ளி நழுவும் சிறு மீனா...
மிதவைத் தெப்பத்தில்
சேர்ந்த குச்சியா....
அதையும் செலுத்தவல்ல
துடுப்பா ...

கரையோரம் நின்று
ஈரத்தில் ஊறும் வேரா ,
உதிரும் துளிரா ..
நீலமும் பச்சையுமிலா
நிறச் சேர்க்கையா ...
எங்கோ இருக்கிறேன் !
எங்கிருக்கிறேன் ....?
இருக்கிறேனா ...?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...