சொல்வனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்வனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 05, 2022

சிற்றோவியம்

 

நீலநிற மெழுகு பென்சிலோடு வருகிறாள் பாப்பு
குட்டிக்கையை அசைத்து அசைத்துத் தீற்ற
அட வானம் இதுதானா
ஒரு மிட்டாயைச் சப்பியதும்
சக்தி பிறந்து விட்டது
இம்முறை குட்டிக்கை கடலைக் கொண்டுவந்து விட்டது.
நட்சத்திரத்துக்கு
மஞ்சள் பென்சிலால்
பொட்டு வைத்தாச்சு
மினுங்குதாம்
கைவலித்த நேரத்தில் பச்சைமெழுகு எடுத்து
கன்னாபின்னாவென்று தீற்றிவிட்டு சொன்னாள்
காற்று வேகமாம்
ஆடும்போது மரம் அப்பிடிதான் இருக்குமாம்
நோட்டுப்புத்தகத்தின் பக்கங்களுக்குள்
பிரபஞ்சம் குடியேறியது
இப்படித்தான்
வீடு வரைவதுதான் கஷ்டமாம்
கோடுகோடாப் போட வேண்டியிருக்கு
அலுத்தபடி
மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்
பாப்புக்குட்டி
ஆமாமா என்றாள் அம்மா

ஞாயிறு, டிசம்பர் 05, 2021

பால காண்டம்

 முழங்கையில் நீர் வழிய

கடிக்கும் தர்பூசணித் துண்டை
வேடிக்கை பார்க்கும் எவரிடமும் காட்டி
வேணுமா எனக் கண்ணாலோ
தலையசைப்பாலோ
கேட்டுக்கொண்டிருந்த குழந்தை
இவ்வருடம் யாரையும் பார்க்காது
உறிஞ்சி உறிஞ்சி தின்று கொண்டிருக்கிறது

ரஃப் நோட்டின் தாள் கிழித்து
கொய்யாக்காயை கிடைத்த கல்லால் நசுக்கி
துக்குளி துக்குளியாய்ப்
பங்கிட்டுக் கொண்டிருந்த நான் எந்த வயதில்
கடித்துத் தின்ன ஆரம்பித்தேன்
நினைவில்லை

பாலகாண்டங்கள்
திடீரென்று முடிந்துவிடும் போல

செவ்வாய், ஜூலை 13, 2021

துளிர்ப்பு

 


ஒரு விம்மலோடுதான்

வரவேற்றிருக்க வேண்டும்
ஆனால்
சின்னப்புன்னகை நெளிந்தது
தன்னை மீறிய வேகத்தில்
எழுந்து நிற்கிறாள்

இவ்வளவுக்குப் பிறகும்
அரிசிப்பையும்
வெல்லம் முந்திரிப் பொட்டலங்களுமாக
வந்துநிற்கும் மைத்துனன்
சுவரில் சார்த்திய கரும்பினால்
தன்னையே நாலு போட்டது போல
நெளிகிறான்
மறுவீடு போனபோது முறுக்கிவந்த மாப்பிள்ளை

என்ன பேசுவதென்று
வந்தவரும் நின்றவரும் திக்கிக் கொண்டிருக்கையில்
ஐ...கரும்பு எனத்தூக்கும்
அண்டைவீட்டுச் சிறுவன்
உடைக்கிறான
பனிப்பாளத்தை

தன்வீட்டு ரேஷன் அட்டையிலிருந்து 
தன்பெயரை அழிக்கும் வல்லமை  
சுடுசொல்லுக்கு இல்லையென்றானதில்
பொங்குகிறது அவள் கண்

வியாழன், ஆகஸ்ட் 31, 2017

நட்சத்திரப் பிடாரி

பாற்சோறு உண்ட இரவின்
நினைவில் 
பருப்பு சோறுக்கும் நிலவைத் 
தேடியவள்தான் 

எண்ணிக்கொள்ள ஆள்வைத்து 
குழல்விளக்கைத் தின்றவனை
அச்சத்துடன் பார்த்தவள்தான் 
இப்போதெல்லாம் 
நட்சத்திரங்களைத் தின்கிறாள் 

சட்டினியில் தட்டுப்படும் தேங்காய் 
நாருக்கோ
குழம்பில் நீளும் ஒற்றை முடிக்கோ 
தட்டெறியப் பழகாதக் கட்டுப்பாட்டோடு 
சொரசொரவேன்றிருக்கும் 
நட்சத்திரங்களைக் கடித்து 
விழுங்குகிறாள்

எத்தனை பேர் தின்றாலும் 
தீராது உடுக்கூட்டம் 
உங்கள் இதழ்க் கடைப் புன்னகையை 
அவள் நட்சத்திரமாக்கினாள்
சற்றே சாறு வழிந்தபோது 
பக்கவாட்டுப் பற்களை 
நீட்டி வரைந்தாயிற்று 

ஆனந்தவிகடன் சொல்வனம்-மே 2017


வெள்ளி, மே 15, 2015

எண்ணும் எழுத்தும்

குறிப்பெழுதி வைக்காமலே 
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத் 
தெரியுமளவு 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 


பார்க்கும் பெண்களெல்லாம் 
சியர்கேர்ள்ஸ் ஆகவே 
தென்படாதிருக்க 
ஐ பி எல் ஸ்கோர் போர்டுகள் தவிர 
மற்றவையும் கண்ணில் படுமளவு 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 

யார் யாரைக் 
கட்டிக் கொள்ள வேண்டும் 
அல்லது 
யார் எதைக் கட்டிக் கொள்ள வேண்டும் 
என்ற சர்ச்சைகளிடையே 
முகவரி மறந்த 
திருவிழாக் குழந்தையாக நிற்காமல் 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 

எவரோ உழும் நிலமும் போகுது 
நாம்  ஆடும் இணையக் களமும் போகுது
என்று அறியாமல் 
யாரோ ஒரு பெண்ணின் படம் இணைத்து 
புரளி பரப்பி கிளராதிருக்க 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 
20 5 15 ஆனந்த விகடன் -சொல்வனம் 

செவ்வாய், மார்ச் 31, 2015

அங்கே ஒரு கண்

திரையிடுக்கில் நின்றபடி 
ஆடிக்காட்டும் மிஸ்சும்
அங்கே ஒரு கண் 
அவையில் ஒரு கண்ணாய் 
ஆடும் குழந்தையும் 
ஆண்டுதோறும் கிடைத்துவிடுகிறார்கள் 
சம்பளம் எப்படியிருப்பினும் 

25 3 15விகடன் சொல்வனத்தில் 

செவ்வாய், டிசம்பர் 09, 2014

கண்ணாரக் காண்


உண்மையைச் சொல் 
உண்மையைச் சொல் 
என்கிறாய் 
உண்மையைத்தான் சொல்கிறேன் 
வேலியோரத் தும்பைப்பூவையும் 
அகன்ற திரையில் 
உருப்பெருக்கிப் பார்த்தே 
அறிந்துகொள்ளும் உன்னிடம் 
எப்படி விளக்குவேன் 
உண்மை இதுதான் 
இவ்வளவுதான் என்று......


10 12 14 விகடன் சொல்வனத்தில் வெளியான கவிதை 
படம் -நன்றி ராமலக்ஷ்மி ராஜன் 

வெள்ளி, நவம்பர் 21, 2014

செவிபடாது மிதந்தலையும் கானம்




வரி சொல்வாய் 
கருவி சொல்வாய் 
எத்தனையாவது நொடியில் எந்தக் கருவி முடிந்து 
எது தொடங்கும் 
கூட எது இழையும் என்பதும் அறிவாய் 
குரல் எப்போது குழையும் 
எங்கே நிமிரும் 
முத்திரை விழுந்திருப்பது எங்கே 
சாயல் வேறெங்கு உண்டு எல்லாம் 
பிரித்துக் கலைத்து 
ஆறிய தேநீரோடு பாடலை அருந்திய 
நாட்களின் சாட்சியான 
தோப்புமில்லை

கடைக்கார வைத்தியும் காலமானார் 

ஒலிநாடாக்கள் சுழலவும் வழியில்லாது 
மரப்பெட்டியின் ஓரத்தில் 
தூசியோடு துயில 
பதிவகங்கள் தேவையிலா உலகில் 
தரவிறக்கும் தனியாளாக 
நீயும் நுட்பம் கற்றிருக்கலாம் 

ஏதோ ஒரு  வானொலியோ ,தொலைக்காட்சியோ 
வழங்கும் பாடலுக்குள் புகவியலாது 
மணல் மிதிக்கும் என் பாதங்களைப்போல் 
நீயும் உணர்வாயோ 

19 11 14 விகடன் சொல்வனம் பகுதியில் இடம்பெற்ற கவிதை 

செவ்வாய், மே 06, 2014

-லதாம்மாவின் மரணம்


நான் ஏறிய பேருந்து,
அடுத்த தெருப் பள்ளிக்கூடம் ,
எங்கும் ஒட்டப்பட்டிருந்தது 
அந்தக் கண்ணீரஞ்சலி சுவரொட்டி ...

முட்டைக் கண்ணன் என்றோ,
தனா என்றோ கூப்பிடப்பட்ட 
லதா அண்ணன் அதிலே 
தனபால் ஆகியிருந்தான்...

வருந்தும் பா தனபால் குடும்பத்திற்குள் 
லதாவும் அடக்கம் என்றும் தெரியவில்லை,
லதாம்மாதான் 
ஆதிலட்சுமி என்றும் தெரியவில்லை

பறக்கும் தலையும் மூளிக்காதும்,
தாம்புக் கயிறுமாகவேதிரிந்த 
லதாம்மாதான் 
கொத்துச் சங்கிலியும் 
குறிப்பாகப் புன்னகையுமாகச் 
சுவரொட்டியில் பார்க்கிறாள் 
என்றும் தெரியாமல்தான் 
அன்று கடந்தேன் என்பதைச் சொல்லித் 
துக்கம் விசாரிக்கலாமா ..... 

7 5 14-ஆனந்தவிகடனில் வெளியானது.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...