செவ்வாய், ஜூலை 13, 2021

தின்னக் கொடு

 நம்மை நாம் தின்றுவிடாமலிருக்க

நினைவுகளைத் தின்னக் கொடுக்கலாம்
ரட்சிக்க வேண்டுமம்மா
பாடிக்கொண்டிருக்கிறார் பித்துக்குளி
நரம்பு கிள்ளிய வெற்றிலையை முழுசாக மென்றால்
உள் அண்ணம் வெந்துவிடுகிறது
காற்பகுதி கிழித்தால்
நடுத்தரத்தின் மனது
மிச்ச முக்கால் வாடாமலிருக்க வேண்டுவதே அப்போதைய கவலையாக்கி விடுகிறது
பிறிதொரு நாள் காய்ந்த வெற்றிலையும் நினைவாக
நம்மைத் தின்னக்கூடும் ******************************************************
அந்த தோல்
ரத்தத்தின் கவிச்சி வெளியே கசிந்துவிடாமல் போர்த்தி வைத்தது
குறுக்குமறுக்காக ஓடும்
சிறுநரம்புகள்
வெளிப்படும் நிழல்தான்
உங்கள் பார்வைக்குத் தெரியும்
நவீன படிமச்சித்திரம் ***************************************
யோசனைகளுக்கென நகங்கள் இருந்திருந்தால்
சுரண்டி ,கிள்ளி,
உதறி உதறி
இந்நேரம் முழுசாய்
உதிர்ந்திருக்கலாம்
*************************************************************************************

இறக்கிவிட்ட ஊர்

 என் ஆற்றங்கரையை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போனேன்

என் ஊர்ச்சிவன்தான்
தோள் மேல் எப்போதும்
தியாகபாதம்
திருவடி தூக்குந் தருணம் உதைப்பதுபோலொரு திடுக்கிடல் வேறு
ஊர்க்கழனியெல்லாம் மனையாகிப்
பிளாஸ்டிக்கில் மூச்சுவிடும் நாளிலும்
கணுக்காலில் ஒட்டிய சேற்றைக் கழுவாத பிடிவாதமெனக்கு
ஒரு தேநீர் பருக வண்டி நிறுத்தும் வழிப்போக்கனைப் போல்
ஒட்டிலாது பார்க்கும் ஊர்
எப்போது கையசைத்து இறக்கிவிட்டது என்னை

எங்கிருந்தாலும்

 சலவைவரிசை நடுவிலிருந்து ஒரு சேலையை உருவினால்

பக்குவமாக எடுக்கத்தெரிகிறதா
முன்னயோ பின்னயோ
ஒன்று முனை மடங்கியோ
ஒரு மடிப்பு பிசகி வழிந்தோ
குறுகுறுக்க வைத்துவிடுகிறது
இந்த நினைவுகளும் கூட நிலவு **********************************
இப்போதுதான் கரேலென்று கிடந்தது
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
நிகுநிகுவென்று
எந்த இடுக்கிலிருந்து வந்தானென்றே சொல்ல முடியாதபடி
வெளிச்சம்
விடியல் எப்படியும் நிகழும் ***********************************************

ஒரு திறப்பு வேண்டும் அவ்வளவுதான்
எங்கிருந்தாலும்
விகசிக்கிறது நிலவு

பயனற்றுக் கிடக்கும் பாதாளக் கரண்டி

 பேசிக்கொண்டிருக்கும்போதே

பொட்டு பொட்டென்று துளி
உதிரும்
சட்டெனத் தோன்றிவிடும்
அவளுக்கு
வெள்ளிக்கிழமையென்றோ
விளக்குவைக்கும்
நேரமென்றோ
சட்டென சிவந்துவிடாதபடி
பழக்கப்பட்டவை அவள் கண்கள்
**********************************************
பிடிவாதம் என்பாய்
அழுத்தம் அழுத்தம் எனப் பல்லைக்கூடக் கடிக்கலாம்
மறந்துவிடுவதுதான்
இயல்பு என்றால்

நினைவுக்கு என்றொரு மரியாதை இல்லையா
தழும்பைத் தடவிக்கொண்டே சுற்றுவதுதான்
வாழ்க்கையாக இருக்கிறது
நீ கேட்கிறாய் என்பதற்காக
கொசுவைத்தட்டிய
பாவனை செய்யவெல்லாம வராது

*****************************************************************
எனக்குப் பிடித்தவை என்று ஒரு வரிசை எப்படி இல்லாமலிருக்கும்
ஆனால்
அதில் சின்னச்சின்ன திருத்தமோ நகாசோ செய்து எப்போது மாற்றினாய் என்றுதான் தெரியவில்லை
இப்போது
ஒன்றுகூட அடையாளம் தெரியவில்லை
என்னவொரு
அமைதியாகப் பார்க்கிறாய்
கைகளை வேறு கட்டிக்கொண்டு...
அழுத்தி மூடிவிட்ட
கிணற்றுக்குள்
இந்தப் பாதாளக் கரண்டியை எப்படி இறக்குவேன்




நடமாட்டக் கோடி

     தெருவின் இந்தக்கோடியில் நிற்கிறேன்

நிச்சயம் ஆகாயம் அந்தக்கோடியைத் தொடும்
அதற்குள்தான்
எத்தனை நடமாட்டம் ***********************************************
இதற்குமேல்
என் உள்ளங்கையைக் குவிக்க இயலாது
சற்றே அடங்கு
நீரே
நிலவே
******************************************************
வெங்காயவடகம்
உருட்டுவதைப்போல
அழுத்தியும் அழுத்தாமலும்
சொல்வதுண்டு அம்மா
எல்லோருக்கும் விளக்கெண்ணெயும் பூண்டும்
வாடை என்றுதான் இருக்கும்
******************************************

முடிவு உன்னுடையதல்ல

 சமீபத்திய மழையில்

கலைந்துபோன பனியின் பயணம் அது
எப்போதும் போல்
அமையாத வருடத்திலிருந்து தன்னை உதறிக்கொண்டு புறப்பட்டபோது
ஆண்டுச்சாலையில்
சுங்கச்சாவடிகள் நிர்மாணிக்கப்பட்டதை
அது அறியவில்லை
ஏன் தடைப்படுகிறது பயணம் என எரிச்சலாகி எட்டிப் பார்த்தபோதுதான்
சுங்கச்சந்தா கட்டாத தன் தவறு புரிந்தது
என்ன நடக்கிறதென்று எனக்குதான் தெரியவில்லை
உங்களுக்கெல்லாம் என்ன கேடு
என்று எரிச்சலுடன் கத்தியது
உன் பயணம் மட்டுமல்ல
எங்கள் பயணங்களும் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன
சில சமயம் உள்ளூர் அரசியல்வாதி
சிலசமயம் தேசிய அறிவாளி
சிலசமயம்
மேலிடப் பார்வையாளன்
சிலசமயம்
முட்டுசந்தில் குடை ரிப்பேர் செய்பவன்

போகணும்னு மட்டும்தான் தோணனும்

துளிர்ப்பு

 


ஒரு விம்மலோடுதான்

வரவேற்றிருக்க வேண்டும்
ஆனால்
சின்னப்புன்னகை நெளிந்தது
தன்னை மீறிய வேகத்தில்
எழுந்து நிற்கிறாள்

இவ்வளவுக்குப் பிறகும்
அரிசிப்பையும்
வெல்லம் முந்திரிப் பொட்டலங்களுமாக
வந்துநிற்கும் மைத்துனன்
சுவரில் சார்த்திய கரும்பினால்
தன்னையே நாலு போட்டது போல
நெளிகிறான்
மறுவீடு போனபோது முறுக்கிவந்த மாப்பிள்ளை

என்ன பேசுவதென்று
வந்தவரும் நின்றவரும் திக்கிக் கொண்டிருக்கையில்
ஐ...கரும்பு எனத்தூக்கும்
அண்டைவீட்டுச் சிறுவன்
உடைக்கிறான
பனிப்பாளத்தை

தன்வீட்டு ரேஷன் அட்டையிலிருந்து 
தன்பெயரை அழிக்கும் வல்லமை  
சுடுசொல்லுக்கு இல்லையென்றானதில்
பொங்குகிறது அவள் கண்

நிறைமரத்தை உலுக்கியெடுத்தல்

 மிருகத்தை எதிர்கொள்ளல்

அல்லது
மிருகமாகப் பழகுதல்
இரண்டில் எது முடியும் உனக்கு
நிறைமரத்தை உலுக்கியெடுத்தல்
உதிரந்தவற்றை மடியில் சேர்த்தல்
இரண்டில் எது
இயலும் உனக்கு
தற்செயல் போல் மோதி உடைத்தல்
உடைசில்லை
ஒற்றி எடுத்தல்
இரண்டில் எங்கிருக்கிறது உன் கை
ஒரே தட்டு போதும்
இப்போது தராசுக்கு
சம அளவு
சம எடை தேடியலையாதே
*****************************************************
பொடிமணல்
எப்போதும் கிடப்பதுபோல
சிப்பியோ கல்லோ இல்லாது
யாரோ சலித்துவிட்டதுபோல
நீட்டி நிமிர்த்திக் கிடத்திவிட்டு வந்தேன் என் நிழலை

***************************************************

கொம்பு மஞ்சள் சாட்சி

 மெல்லிய இழைகளால்

சிக்குச்சிக்காகப் பாதையைக் கட்டி

ஏறிக்கொண்டிருக்கிறது பாகல்கொடி

தொங்கும் காய் குனிந்து பார்க்கவில்லை
தொடக்கப்புள்ளியையோ
கொடியின் முற்றுப்புள்ளியையோ

இந்த நினைவுகள்தான்
தொடக்கத்தையும்
தொடர்ச்சியையும்இழுத்து இழுத்துப்
படர்சிக்கு ****************************************************
நீங்கள் நம்பமாட்டீர்கள்
புருவம் உயர்த்தித் தோளை அலுங்காது குலுக்கியபடி
இளக்காரப் புன்னகையை வழிய விடுவீர்கள்
ஆனாலும்
அது உண்மைதான்
நிமிர்ந்து
சமமாக
சபையில்
உங்களைப்போல்
அட்டாணிக்கால்
போட்டு உட்காருவது
இன்னும் கனவாகக்கூட காணாதவள் அவள்
************************************************************
கொம்பு மஞ்சள் பார்த்துக்கொண்டே இருக்கும்போதுதான்
அது நடந்தது
உடன் கிடந்த
மல்லியும் மிளகாயும் மிளகும் சீரகமும்
கண்டும் காணாமலும்
காய்ந்து கொண்டிருக்கின்றன
பழைய தாள் விரிப்பைத் தாண்டி
குவிந்துவிட்டது எறும்புக்கூட்டம்
காக்கை வாய்க்குத் தப்பிய சதைத்துண்டு
இறைதலில்
முளைத்து இரைதலிலும் முடியலாம்

இங்கெல்லாம் யாரும் வருவதில்லை

    சுற்றுலா,சிற்றுலா எல்லாம் நின்றுபோய்

ஒளிந்து பிடிப்பவர்களின் இடமாகிவிட்டது
சீட்டு வழங்கவென்று கட்டப்பட்ட சிறு கட்டிடத்தின்
சிறு மேடை மேல் தன் அலைபேசியைக்
கண்ணாடியாக்கி முன்நெற்றி முடியைக் கோதிக்கொள்கிறாள் இல்லையில்லை
கலைத்துக் கொள்கிறாள்
பிறகு உதடு கோணி
கன்னத்தை உப்பிக்கொண்டு
என நாலைந்து சுயமிகள்
அதில் ஒன்றுக்கு
பூனை மீசையும்
கொம்பும் சிறகுமாக உருவாக்கி
யாருக்கோ அனுப்பிவிட்டு
செத்தடா மகனே என்று நடக்கிறாள்
குழம்பிய ஏரி நீருக்குள்ளிருந்து
திடுக்கிட்டு எட்டிப்பார்த்து
உள்ளோடுகிறது சற்றே பெரிய மீன்

சில நேரங்களில்

 ஒருமாதிரி என்று எச்சரிக்கப்பட்டவனைப் பார்க்க

என்ன மாதிரிப் போவது என்றும்
போகாமலே தவிர்க்கவும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டன
ஒரு மாதிரியாக இருக்காதே என்று
அவனுக்கு சொல்லிவைக்க யாரும் பிறக்கவில்லையா
கவனமாக ஊக்கு குத்திக்கொண்ட முந்தானையின் படபடப்பு என்னிடம் கேட்கிறது
தற்செயல் நகர்வுக்கு சனியன் என்று திட்டுவாங்கும் எரிச்சல் அதற்கு **************************************************
கிலோ அறுபது என்று வாங்கிய
கமலா ஆரஞ்சுகள்
கிலோ நாற்பதுக்குப் போன வாரம் வாங்கிய கமலாப்பழங்களை விட இனிப்பு சொட்டுகின்றன
கூடுதல்
நாளா
தொகையா
ரசமா
கிலோ நாற்பத்தைந்துக்கு
வந்த கொய்யா பதில் சொல்லாமல் அழுத்தமாய் முறைக்கிறது

இளம்புயல்கள்

 கார்களைப் பார்த்தவுடன் பெயர் சொல்லக் கற்றிருக்கிறான் ஒரு சிறுவன்

உலக உருண்டையைச் சுற்றிவிட்டு ஒவ்வொரு நாட்டின் இடமும் சொல்கிறாள் ஒரு பாப்பா
நூறு கொடிகளின் தேசத்தையும் படபடவெனச் சொல்வான் இன்னொருவன்
குறளைத் தலைகீழாக ஒப்பிப்பாள் ஒரு சிறுமி
புதிதாக வரும் புயல்களுக்குப் பெயரிட்ட பின்
வலுவிழந்த புயலோ
கரையேறிய புயலோ என்ன ஆனதென்று தெரிவதில்லை
*************************************
விளிம்பு உடைந்த கண்ணாடிக்குவளையைப்
பூச்சாடியாக்கலாம்
கறைபடிந்துவிட்ட கோப்பைகளுக்குள்
உட்காரப் போட்டியிடுகின்றன
ஸ்பூன்கள்
மரை குறைந்த பாட்டில்களை
மூடிதொலைந்த டப்பாக்களைக் குட்டித்தோட்டமாக்கி
கொத்துமல்லி,புதினா வளர்க்கலாம்
அள்ள அள்ளக் குறையாத ஐடியாக்களால்
ஒன்றும் செய்ய முடியாதது உன்னை மட்டுந்தான்

நூல்பிசிறு

 காத்திருக்கும் நேரத்தினை

வீணானதென எப்படிச்சொல்ல
ஏதோ ஒரு பொன்உருகலுக்கான
காத்திருப்பின் இடையேதானே
அழுது களித்து ரசித்து வெறுப்பேறி
வாழ்க்கை கடக்கிறது ***********************************************
கொலுசுப்பட்டையில்
சிக்கி இழுபடும்
பாவாடை நூல்போல
பிசிறாகத்தொங்கும்
நினைவுகளை மிதித்துக்கொண்டே நடக்கப் பழகிவிடுகிறாள் *************************************
வீடு ஒழித்தல் திருவிழாவில்
வழக்கம்போலக்
கிடைக்கின்றன
கைமறதியாய் வைத்த
ஒன்றிரண்டு பொருட்களும்
எக்கச்சக்க நொடிகளும்
முடிந்தாற் போலத்தான் *************************************
அத்தனை நசுங்கிய அலுமினிய அன்னக்கூடையைக்
குழந்தை போல ஏந்திக்கொண்டு போகிறாள்
அது அரையுடுப்போடு எங்கோ சுற்றுகிறது
அவள் பாசம் அப்படி என்கிறது
ஒரு நொடி உயிர்பெற்ற அவள் கூடை மீன்

தலை

      ஏதோ ஒரு கட்டத்தில்

வழியும் தலைமுடியோடு
வந்துநின்ற தம்பியின் முகவாய் தொட்டபடி வகிடு எடுக்க அதுவும் வாகாய்த்தான் இருந்தது
கோதிவிட்டுக் கடக்கும் வண்ணம்
கொஞ்சகாலம்தான் அனுமதிக்கிறது
இணையர்களின் தலை
வெட்கம் உண்டு எங்களுக்குமெனக் கூசிக்கூசி உதிர்ந்த தளத்துக்கு தாளமோ தட்டலோ
கிட்டலாம் அரிதாக
இருந்தாலும்
இறுக்கம் குறுக்கே
இருக்கும் பின்னே
எண்ணெய் தடவுகையில் அளைய முடியும்
மகன்களின் தலைக்கு கிரீம் உறவாகும்போது
தள்ளிப்போன விரல்களை நிதானமாக நெட்டி எடுத்துக் கொள்ளலாம்
இந்தப்பையன்கள்தான்
சுற்றிச் சுரண்டி விடுகிறார்களே






கனமனம்

 சில்லிட்டுக்கிடக்கிறது

தரையெல்லாம்

உரச்சாக்கின்மேல்
கிடக்கும் மிச்ச மரவள்ளியையும் எடுத்துக்கொள்கிறாயா
என்று வெற்றிலை வழியச் சிரிக்கிறாள் அந்த ஆயா
"ரெண்டுகிலோவை வெச்சி நா என்ன செய்ய"
சங்கடமாக முனகினேன்
"காசு வோணாம்
எடுத்துட்டுப்போயி
அவிச்சி
என்னாட்டங் கிழங்கட்டைக்கு குடு"
பைக்குள் போட்டுவிட்டு
சாக்கைச் சுருட்டிக்கொண்டு
டெம்போவில்
நுழைந்துவிட்டாள்
பிறகுதான் என் தோள்பை வேதாளமாய்க் கனக்கிறது

பத்தாயத்துக்குப்பின்

 அரிசி,பருப்பு அத்தனைக்கும்

அளந்து போடக்
குவளைகள் வைத்திருக்கிறாள்
ஒன்றுக்கு இரண்டு கணக்குக்கென்றே
குக்கர் தம்ளர் உண்டு
இட்டிலி அரிசியில் கிடக்கிறது
நிறைநாழி நெல் கொண்டுவந்த பித்தளைப்படி
ஆகப்பெரிய அளவு அதுதான்
ஐந்நூறு சதுர
அடுக்கக வாழ்வில்
எத்தனை படி ஒரு மரக்கால் என்பதே
மறந்து
போனவளிடம்
எத்தனை குழி ஒரு மா'வுக்கு
எத்தனை மா ஒரு வேலியென்று
கேட்டுவிடாதீர்கள்
ஒளிந்து விளையாடிய பத்தாயம் நினைத்து
ஆத்துஆத்துப் போவாள் அம்மா

கண்ணாடிரவிக்கை

 கண்ணாடிவைத்து

தைத்த ரவிக்கையும்
மஞ்சள் சேலையுமாக
தலைவி பாடிக்கொண்டிருக்கிறாள்
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது
என்று
அந்தக் கண்ணாடிவைத்த
ரவிக்கை தைத்த
நினைவுகளை சொல்லியபடிப்
பார்த்துக் கொண்டிருந்த
பானு அக்கா,
சட்டென என்னிடம்
பானுப்ரியாவும் இப்ப
இந்த பாட்டைப் பாப்பாங்கள்ள என்றாள்
உண்மையில் அதைத்தான் கேட்க விரும்பினாளா

அரூபவல்லி

 எல்லோரும்

அலையில் கால்நனைத்து
ஆடைகளைப்
பற்றிக்கொள்ளும்
மணலை அலசி
மீண்டும் அலையாடி
மணல் உதறிக்
கொண்டாடிக்கொண்டிருந்த
புகைப்படங்கள் எதிலும் அம்மா இல்லை

எல்லோர் கைப்பை,காலணி இத்யாதிகளைக் காத்தபடி
அவள் இருந்த இடம் புகைப்படத்துக்குள் அடங்கா தூரம் ********************************************
அவர்களும் ஒருநாள்
ஒளிர்கண்களால்
நேரடியாக நம்மைப் பார்த்தார்கள்
கருகருவெனத் தலைநிறைந்த முடி முன்நெற்றியில் வழிய
மொழுமொழுவென்ற
விரல்களால் நம் முகம் வருடினார்கள்
இடுக்கு விழுந்த ,தெத்திய இயற்கையான பல்மினுங்க சிரித்தார்கள்
நினைவில் தங்கிய சித்திரத்தில்
வயது அவர்களின்
எல்லாவற்றையும் பறித்துக்
கொண்டுவிட
இளையவர்கள் யாரோவாகக்

கிழவர்களே உறவாயினர்

சமன் செய்வாய்ப்பு

 ஊடுபுள்ளிகளில்

எங்கோ ஒரு குழப்படி
இருந்தாலும் மாற்றி மாற்றி இழுத்துக் கோத்து
முடித்துவிடத் தெரிந்த அளவுக்கு
வாழ்க்கையை கோலமாகப் போடமுடியவில்லை
வண்ணங்கொள்ளா சிக்கு ************************************
குனிந்து குழைந்து
மறுமொழி சொல்லிய கணத்தைச்
சமன் செய் வாய்ப்பாக உன்முகம் பார்க்கும்
குப்பை மேட்டுக் குருவி பார்த்து ஒரு பாய்ச்சல்
வாலாட்டாமல்
வாழ முடியாதா என்பது
அதன் பொருளுரை *******************************************
உன்முன் இரண்டு கதவுகள் இருக்கின்றன
உன்முன் இரண்டு கேள்விகள் இருக்கின்றன
உன்முன் இரண்டு கோப்பைகள் இருக்கின்றன
இரண்டில் ஒன்றுக்காகவே இவ்வளவு நடையும்

என்னவாக இருக்கிறாய்


கிருஷ்ணபாதம் வரைந்த வீட்டில் ஊசியிலை மரமும் ஆடுகிறது
பெருநாளுக்குப் பிரியாணி தின்று கொடை கொடுக்கிறீர்கள்
ஆம்
எங்கள் கண்ணன் அச்சுப்
பாதங்களில் குழந்தை யேசுவும் தளிர்நடையிடுவார்
வேலுக்கும் சிலுவைக்கும் வரப்புத்தகராறில்லை
பிறையிருக்குமிடத்தில்
நட்சத்திரமும் ஜொலிக்கும்
ஆண்டாளைப்போலவே
அனீஃபாவும் பிடிக்கும்
தேவாப்பிரசன்னம்
தேடியும் தொழுவதுண்டு
கூம்பு ஒலிபெருக்கியாக இந்தமனம் எல்லா மணியோசையையும் எதிரொலிக்கும்
என்னவாகத்தான் வாழ்கிறாய்
மனுஷியாகத்தான்
போதாதா

வருகை

 தேவகுமாரன் வருகையை அறிவிக்கும் நட்சத்திரங்களை

தெருவில் ஒவ்வொரு வீடாக
ஒன்று இரண்டு
என எண்ணிக்கொண்டே வந்த பாப்புக்குட்டி
நம்ம வீட்டுலயும் ஒண்ணு கட்டுவோம்
என்றாள் மினுங்கும் கண்களோடு
அப்போது எண்ணிக்கையில் மூன்று சேர்ந்துவிடும் *******************************************************
நம்பிக்கைகள்
துளிர்க்க
காய்ந்த வைக்கோல் மேல் பொழியும் பனியோடு பிறந்திடுவான் ஒரு தேவகுமாரன் என்ற வாசகம்
உங்கள் கைகளில் வழங்குகிறது அப்பத்தை
நீங்கள் பெருக்கி வழங்குவீர்கள் யாவர்க்கும் திராட்சை ரசத்தை
முற்றங்கள்தோறும்
இறங்கிப் புன்னகைக்கும் நட்சத்திரத்தில் எல்லாம் தெரியவில்லையா அந்தக்
குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு

வியாழன், ஜூலை 08, 2021

இப்போதும் இப்போதும்

 பொடித்துப்போடாத வெல்லக்கட்டியாக

அன்பு கிடக்கிறது
வாழ்க்கை இத்தனை சப்பென்று
இருப்பதேனோ கலக்காது கலங்குகிறாய்
இருக்கிறது
ஆனால்
இல்லை

************************************************
இலந்தைவடை,கடலைஉருண்டை
கமர்கட்,தேன்மிட்டாய்,பால்பன்,ஓமரொட்டியென
இருகைவிரலுக்குள்
அடங்கியவற்றை
கண்ணாடிப்பெட்டிகளில் மட்டும் காண வாய்த்திருந்தது
ஒருசேர இருசுவை அறிய அனுமதிக்காது
அவ்வப்போது கிடைக்கும்
அஞ்சு பைசாக்கள்
நிறநிறநிறமாய்த்தொங்கும்
உப்பிய நெகிழிக்குள் உறங்கும் சுவையறியா அரும்புகள் உண்டுதானே இப்போதும் ***************************************************
இப்போதும் இருக்கிறதுதானே அந்த வானம்
ஒரு கூரை அதை மறைத்தாலும்
இப்போதும் இருக்கிறதுதானே அந்த வெளி
ஒரு கதவு அதைப் பிரித்தாலும்
இப்போதும் இருக்கிறதுதானே
அந்தப்பாடல்
சுழற்சி நின்றாலும்
இப்போதும் இருக்கிறாய்தானே நீ ***********************************************

இங்கே
இந்த நெஞ்சுக்குள்
உறைகிற கீதம்தான்
வார்த்தைகள்தான்
ஒளிந்து கொள்கின்றன
ஆரஞ்சுத்தோலாக
நினைவை உரித்து உரித்து
எடுத்துக் கொண்டிருக்கிறேன்
நெருங்கிவிட்டேன்
****************************************************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...