தும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 20, 2021

பெயரிலாக் காற்று

 நேற்றுதான் கவனித்தேன் புதிய தும்பைச்செடிகள் பூக்கத்தொடங்கியிருந்தன

பழைய செடிகள் இருந்த இடத்தில்
சாக்கடை வெட்டியிருந்தார்கள்
இன்றோ
புதிய செடிகளை மூழ்கடித்து
குப்பை மிதக்கும் மழைவெள்ளம்
எனக்குத்தெரியும்
நாளையோ மறுநாளோ
இது வடிந்தபின்
ஒன்றுமே நடவாதது போல தும்பை பூத்திருக்கும்
*******************************************************

மிதிபாகல்,பீர்க்கு
பிரண்டை
நாட்டுக்கொய்யா
ஆவாரம்பூ ,குப்பைக்கீரை,கருந்துளசி
இரண்டு கூடையும் ஒரு விரிப்புமாக
அரிதானவற்றைச் சேர்ப்பிக்கிறவள்
சில வாரங்களாகத்தான்
மீண்டும் விரித்துக் கொண்டிருந்தாள் அந்தச்சிரிப்பை
அவள் சேலையைப் போலவே அதுவும் வெளிறிப் போயிருந்தது
எல்லா இலை தழைக்கும் பெயர் தெரியும்
காற்றுக்குப் பெயர் உண்டு என்பதுதான் வினோதம் அவளுக்கு
சிறுகீரைக்கட்டை
"பிள்ளைத்தாச்சி சூப்பு வெச்சிக்குடி"
என்று சும்மா
சேர்த்துக் கொடுத்தவள்
இந்த மழை ஈரத்தில்
எங்கு காய்வாளோ

செவ்வாய், ஜூன் 11, 2019

குமிழ் மூடிய அருவி

ஒளிர்பூங்கண்களின்
சிரிப்பைச் செவிமடுக்க
உன் இரைச்சலை
முழுக்குமிழும் திருகி மூடினாயல்லவா
அப்போது முதல் வீழ்கிறது
இந்த அன்பின் பேரருவி
நதிமூலம்
கண்டடைவாயாக


**********************************************************
தட்டையான பார்வையால்
புரிந்துகொள்ள
முடியாதது
என் வெறித்த நோக்கின் வலிமை
என் வாசல் தும்பையின் அழகு
மற்றும்
அடைத்த கதவத்தினுள் பரவும்
ஒளி


**********************************************************
ஒரு கைப்பிடி பழஞ்சோறு
வைக்கத் தேடுகிறாய்
பூங்குயில் வரிசை

எதிர்மதில் காகம்தான்
இவ்விடம் வரும்
இதனைத்தொடும்
என்பது எப்போது புரியுமோ
*************************************************
பாடம் செய்யப்பட்ட
இலைகள்
பாடம் செய்யப்பட்ட வண்டு
பாடம் செய்யப்பட்ட
மனது
எழுதி முடிக்க வேண்டும்
**************************************************
நின்றுகொண்டே இருக்கிறோம்
பங்கிடப்படாத அன்புக்கு வெளியே
பொங்கி வழியும் குரோதத்தின் எதிரே
இறைந்து கிடக்கும் அலட்சியத்தின் நடுவே
உதிர்ந்து மூடும் புறக்கணிப்பின் அடியில்
கால்கடுக்க
ஏக்கத்தோடு நின்று கொண்டேயிருக்கிறோம்
அவர்கள் கண்ணைக் கட்டியிருக்கும் 
காந்தாரித் திரை விலகாதா என்று


திங்கள், அக்டோபர் 15, 2018

கிளி அமர்ந்த கிளையின் துளிர்

பொய்தான் எனத்தெரிந்தும் 
பாவங்களோடு கவனித்தலும் 
பொய்யே என உணர்ந்தும் 
பாவமாய்ச் சொல்லி முடிப்பதுமாக
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து
மெய்யாகத் தளர்கிறது வாழ்க்கை

***********************************************
அவ்வளவு தளர்ந்த முதுகைத் தாங்குகிறது
யாரோ விட்டுப்போன கோல்
பெருமூச்சு விட்டுக்கொண்டன கால்கள்

**************************************************************

தெப்பக்குளத்தில் ஆடும் நிழல் 
கோபுரத்துடையதாகவும் 
பறந்தோடும் புறாவுடையதாகவும் 
இரண்டையும் சேர்த்த வானத்தினதாகவும்
உன் கண்களோ
படியேறியிறங்கும் பாதங்களின்மேல்
*************************************************************

கிளி அமர்ந்த கிளையிலிருந்து 
பறக்கிற துளிர் 
உதிர்வது 
மரத்திலிருந்துதானா

**********************************************************************
எப்படியும் இயலாது
அதுபோலொரு வெள்ளைப்பூவை மலர்விப்பது
மல்லிகைக்கொடிக்கு மட்டுமல்ல
 தெருவோரத்தும்பைக்கும்
கைகூப்பி விட்டு வருகிறேன்


செவ்வாய், டிசம்பர் 09, 2014

கண்ணாரக் காண்


உண்மையைச் சொல் 
உண்மையைச் சொல் 
என்கிறாய் 
உண்மையைத்தான் சொல்கிறேன் 
வேலியோரத் தும்பைப்பூவையும் 
அகன்ற திரையில் 
உருப்பெருக்கிப் பார்த்தே 
அறிந்துகொள்ளும் உன்னிடம் 
எப்படி விளக்குவேன் 
உண்மை இதுதான் 
இவ்வளவுதான் என்று......


10 12 14 விகடன் சொல்வனத்தில் வெளியான கவிதை 
படம் -நன்றி ராமலக்ஷ்மி ராஜன் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...