வியாழன், நவம்பர் 22, 2018

குருவிவால் தேய்பிறையும் வடிவேலுவும்

வாய்ப்பின் அடுத்தபடி
குருவிவால் தேய்பிறைதான் 
இப்போதுதான் தோன்றுகிறது
தொடக்கத்தில் எந்தக்காயை 
நகர்த்தியிருக்க வேண்டுமென்பது
குருவிவாலின் நுனிக்கு 
சற்றுதொலைவில் இருப்பதாக
நினைத்துக்கொண்டிருக்கும்போதே 
இச்சா இனியா...
முடிவுக்கு வந்தாயிற்று

முடிவென்பது தொடக்கந்தானே
இப்போதும் குருவிவால் தேய்பிறை 
வரும்வரை கண்மண் தெரியவில்லை
"எத்தன"
"ஆங் இவுரு பெரிய வடிவேலு"

பேசாம ஐநூற்றுப்பிள்ளையாருக்கு அஞ்சு சிதறுகாய் வேண்டிக்கொண்டுவிடலாமா
ம்ஹூம்....இதுதானென்றால்
இத்தனைமுறை விழுந்திருக்க வேண்டாம்
நாற்றம்பிடித்த குருவிவாலோடு 
கண்ணாமூச்சி ஆடியபடி


இருப்பு



குளக்கரையின் யானைத்தூணில்
சங்கிலி மட்டுமே ஏழுகோணலாகக் கிடக்கிறது
தென்னைமட்டையை ஒருநாளைப்போல
இழுத்துவருகிறான் குட்டன்




















உன்இருப்பு தரும் அண்மையை
உன்சொற்களின் கரகரப்பை
முன்முற்றச்செம்பருத்தியிடம்
விட்டுச்செல்
நீ வரும்வரை

பறத்தல்-இருத்தல்

ஆரஞ்சா மஞ்சளா இது
வண்ணத்துப்பூச்சி
சம உயரச்செடியின் மலர்மேல் 
அலைகிறது
அரவமின்றிக் குனிகிறேன்
புறங்கை வீசித்துரத்துகிறது
ஒருமுறையேனும்
பறந்துவிட்டு வா



**************************************************************














செதுக்கிய யுகந்தாண்டி
தெறித்த துகள்கள் மிதித்து மிதித்து
எடுத்தெறிகையில்
எதிர்ப்படவேயில்லை
உறைந்த சிலையழகு



*******************************************************



உடலாகிய உயிர்

அந்தக் கடலின் அலை உயர எழும்பியபோது 
அம்முக்குட்டி அதில் தெரிந்தாள்
மரக்குதிரை மேலேறி வாய்கொள்ளாச்சிரிப்புடன் 
முன்பின்னாக ஆடிய தோற்றம்

கடற்கரை ஓரத்தின் ஐஸ்வண்டி மணியை 
ஆட்டிவிட்டபடி தலைசாய்த்து
குச்சியா கப்பா என நோட்டம் விடுவது அம்முதான்

இங்கே நடக்காதீர் பலகை பார்த்து 
எச்சரிக்கையாக
பூங்கா பாதைக்குள் மட்டும் 
குதித்தபடி நடக்கும் அம்மு

எங்கு திரும்பினும் ஏதாவது ஒரு அம்மு
ஏதாவது அழகில் எதிர்ப்படுகிறாள்
எப்படி முடிகிறது
அம்முவைப்போய் உடலாய்ப்பார்ப்பது 

ஆறறிவுப் பக்குவம்


தற்செயலாகத்தான்
நடந்திருக்கும்
இப்போதுவரை அறியவில்லை
என்று உருகினான்
பழைய புத்தகத்துக்குள்
பதிந்து கிடந்த சிறு பூச்சிபார்த்து
மீன்பிடிக்க மாட்டிய சிறுபுழு
நூலில் கட்டிய தட்டான்
கல்லெறிந்த தெருநாய்
வண்டிபழகியபோது காலொடித்த ஆட்டுக்குட்டி
சந்தையில் விற்றுவிட்ட லட்சுமிப்பசு....
வரிசைகட்டிய கழிவிரக்கத்தில் 
கவனப்பிசகாகவும் சேர்ந்துவிடவில்லை
 இழிமொழியாலோ இடித்தோ
 தடவியோ 
பதறவைத்த எவளும்

வெள்ளி, நவம்பர் 09, 2018

பூந்துடைப்பம்

ரத்தத்தின் நிறமுள்ள பூக்களும் மணக்கின்றன 
ரத்தத்தையும் பூந்துடைப்பத்தால் ஒருமுறையும் 
தென்னை ஓலை வாரியலால் 
இன்னொருமுறையும் 
ஒட்ட ஒட்டக் கழுவித்தள்ள முடிந்தவர்கள் மத்தியில் 
ரத்தத்தின் நிறமுள்ள பூக்கள் 
ரத்தவாடை கொண்டிராது 

மணக்கின்றன அற்புதம்போல்

அபத்தமான சொற்களைக்கூட்டி
அமரகாவியத்தை எழுதிவிடவும் முடிகிறது
அபத்தத்துக்கும்
அமரத்தன்மைக்கும் கோடு 

எங்கே என உணராமலே
நீயும் இசைகூட்டுகிறாய் 


சக்கரம் உருளாப் பாதை

நெஞ்சம் நிரம்பி வழிகிறது 
தாகத்தின் உருவகமாக காலிப்பாத்திரம் 
மட்டுந்தானா 
**************************
விரிந்து நெளிந்து குழைந்து 
குடைந்து ஒடிந்து 
பரவிக் கொண்டேயிருக்கும் வேரை
முத்தியிரா பாவியர் 
நகம் வளர்க்கின்றனர் கிள்ளியெறிய 
*********************************************

திடும் திடும்மென அதிரும் 
இசைத்துளிக்குப்பின் 
ஒற்றைக்கம்பி நாதம் 
வில்லை ஒடித்தாலும் நிற்காது 

*****************************************

ஆறுதல் தேடுகிறது 
ஆறுதல் கொடுக்கிறது 
ஆறுதல் கொள்கிறது 
ஆறுதல் அழிக்கிறது 
ஆறுதல் தங்கா இதயம் 
ரத்தம் நிரம்பியிருக்கிறதா வழிகிறதா 

****************************************************

சிவந்த கொன்றைப்பூக்களை 
உதிராமல் எடுத்துச்செல் 
அன்றி 
உன் சக்கரங்கள் உருளாது 
இப்பாதையைப் பாழாக்கு 
அப்படியே போகட்டும் மிதிபடாது 
அரைபடாது 






புதன், நவம்பர் 07, 2018

தளர் நீலம்

தளர்ந்தநடையோடு இரவுப்பணி முடிந்த 
நீலர் போகிறார்
அவசரமாகச் சைக்கிள் மிதிக்கும் 
இளையனுக்கும் தெருக்குழிகளுக்குமாகத் 
தன்னை நிலைப்படுத்த 
இறுகப்பிடித்துக்கொண்ட பின்னிருக்கை
 நீலரின் புன்னகையைப் பெற்றுக்கொள்ளாது 
குனிந்தே கிடக்கிறது நடக்கும் நீலரின் தலை
போதும் போவெனத் 
தலையை முன்பக்கம் திருப்பிக்கொண்ட 
சைக்கிள் பயண நீலரின்
புன்னகை 
நேற்றுப்பார்த்த வாதங்கொட்டைபோல் 
நசுங்குமுன் நாமாவது எடுத்துவைப்போம் 
என்றுதான் வேகமாகப் படியிறங்கினேன்
" என்ன"
" ஒன்றுமில்லை. சும்மா"



நுனிக்காலில் நின்றாடும் பாப்புக்குட்டி

அரையே அரைக்கணப்புன்னகை 
கண்ணில் பட்டபோது அந்த சொர்க்கம் 
போதுமாயிருந்தது
தொட்டில் துணியோடு
மடித்து வைத்தபின்
பள்ளிவிண்ணப்பம் நிரப்பியாயிற்று


************************************************************
பதுங்கிக்கொள்ளும் அளவு 
இடம்தராதவற்றையும் 
குகை என்றழைப்பது
இதில் வள்ளல் பட்டம் வேறு


************************************************************


துயில்கலைவதன் அடையாளமா 
புறப்பட வேண்டிய ஆயாசமா
பொருள் புரியாவிடினும்
எனக்கு சமிக்ஞை
பறந்துவிட்டது குருவிக்கூட்டம்
வந்துவந்து சிரித்துவிட்டுப் போகிறது அணில்
ஆகவேண்டியதைப் பார்க்கலாம்


*********************************************************
புதியபொம்மை காட்டும் 
அப்பாவின் உயரத்தை அண்ணாந்து 
வியப்பும் குதூகலமும் பொலிய 
நுனிக்காலில் நின்றாடுவாள்
பாப்புக்குட்டி
நானோ ஒருநாள்போல
பால் பாக்கெட்டோடு உள்ளே திரும்புகிறேன் கதிர்பார்த்து



சனி, நவம்பர் 03, 2018

விம்மும் மனதின் ஒலி

பச்சையா நீலமா கறுப்பா என்று
கண்டுபிடித்துவிட
முடியாதபடி 
சலனமின்றி 
சிறு ஒளியை அருந்திய
இந்த ஆற்றுக்கு அக்கரையில்
நீயும் அப்படித்தான் இருக்கிறாய்
விம்மும் மனதின் ஒலியைப்
புறந்தள்ளி


*********************************************
குகை கடந்த ரயிலுக்குள்ளிருந்த கணம்
சட்டென வெளிச்சம் வருமென சிமிட்டியபடி
இருக்கிறது


*************************************************
கண்ணாடியின்
வரையறுக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் 

முகம் பார்க்க எட்டுகிறாய்
போதாதது 

எப்போதும் போதாதிருக்கிறது
உயரமும் தூரமும் பார்வையும்...



ராஜலட்சுமியைப் பார்த்தவள்


என்னால் சொல்ல முடியாது
சற்றுமுன்கூட பதற்றமானது

ஒளிபொங்கும் பாதையின்
சிறுகிளைச்சந்தில் தனித்து நடந்த 
சீருடைச்சுடிதார் சிறுமகள் பின்னால் 
நடந்து போன என் மனமே 
திரும்பாதபோது எப்படிச்சொல்வேன்

விற்பனைப்பணி முடித்து பேரங்காடி வாசலில் 
பேருந்துக்காக நிற்கும் ஒடிசல்பெண்ணின் 
சேலைக்கறை பார்த்தே கசங்கிவிட்ட
என்மனதால் எப்படி இயலும்
கொத்தாய் விழுந்த தலை 
கொண்டவளைப் பற்றி எழுத

வெஞ்சினங்கொள்ள
வெறிகொண்டு தாக்க
வெட்டித்தறிக்க
நூறாயிரங்காரணமுள்ள ஊரில்
ஒற்றைச்சிறுமி மேல் அத்தனையும் இறக்கிய 
இழிமகன் மேல் துப்ப
அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் தேக்கி 
எச்சில் கூட்டலாம்
எரிதழல் வீசலாம்
எழுதவும் கூடுமோ

சொட்டிய ரத்தம் பார்த்து
உறைந்த உடல்
உதறுகின்றது
சாதியா மதமா இனமா
பணமா
என்ன சனியனாகவும் இருக்கட்டும்
அவன் வீச்சரிவாளில் ஒட்டிக்கொண்டிருந்த அதை எப்படிக் கழுவப்போகிறீர்கள்
எட்டூர் வீச்சம் இன்னும் உங்கள் நாசி துளைக்கவில்லையா

வேர் தூர்ந்த செடிகள்


பத்துக்குப்பத்து குப்பத்துக்குடிசை 
உத்திரம் இடிக்கும்போதெல்லாம்
தீபாவளியோ திருவிழாவோ வர ஏங்குகிறான்
தோட்டத்தின்
கயிற்றுக்கட்டிலில்
கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்த
நீலக்கூரை பார்த்த நினைவில்

தயாரிப்பு கைவராது
திருப்பி அனுப்பப்படும் எச்சில் 
ஆலுபரோட்டாவை மெல்லும்போதெல்லாம்
சப்பை மூக்கைத் தடவிக்கொள்பவனின்
நாசிக்குள் ஏறி இறங்குகிறது
மலைக்குடிசையின் புகையும்
முக்காடை இழுத்துவிட்டபடியே
அலட்சியமாக அன்னை தட்டிப்போடும்
ரொட்டிவாடையும்

சூடிக்கொள்ள நேரமிலா காளி


ஒற்றை மலருக்கு உருகவும் பெருகவும் 
அறியவேயில்லை என்றும்
நிறுக்கவும் தொடுக்கவும் 
நறுக்கவும் நீட்டவுமான
நார்ப்பாடு
சற்று கூப்பாடு
சரங்களைச்சுற்றுகையில் 
உள்பந்தினுள் நுழைத்துவிடுவதுண்டு 
பிடுங்கல்களை
விரித்த பாலிதீன் 
எடுத்த கூடை
எல்லாம் அவளைப்போல 
மன(ண)த்தைக் கட்டிக்கொண்டு அலையாது
இறக்கி விடுவதே வாழ்வு

யீங்

அலமாரி இருள் புழுக்கத்திலிருந்து
அரை வெளிச்சம் பார்த்த ஒரு நாளைக் 
குடை அசை போட்டுக்கிடக்கிறது
சொட்டி முடிக்கும் கடைசித்துளியிடம் 
அப்புறம்..எப்போ என்றிருக்குமோ

*********************************************************
தளர்நடையோடு முக்கி சுமந்துவந்து 
சொப்பு சாமான்களைப் பிரித்து 
விளையாட்டுக்குத் தயாராகும் 
குட்டிப்பாப்பா போலத்தான்
இருந்தது அதிகாலைச்சூரியன்
யீங் என்றொரு முனகலோடு
கால் மாற்றிப்படுத்துக்கொண்ட
நாய்க்குட்டியைப் பெரிதாய்க்
கண்டுகொள்ளாமல்


***********************************************


மழை பருகிய நாள்

இறக்கிவைத்தவன்
போனபிறகு
அந்த சொற்களைப் பாதுகாப்பாகப் 
பட்டுப் பேழையிலிட்டாய்
திறப்பதற்கு விரல் நீளும்போதெல்லாம் 
ஒரு செம்பருத்தியைக் 
கிள்ளிச்சுற்றிக்கொண்டுதானே நடப்பாய்
இன்றென்ன வந்ததாம்
ஊரெல்லாம் துர்க்கந்தம்


**************************************************************
முன்முற்றச்சிறு வெளியில் 
தேங்கிக்கிடக்கும் நீர் சொல்கிறது மழையை
உதறி உதறி
பிலுபிலுவென ஆடிக்கொண்டிருக்கின்றன 

அடர்வேம்பின் பழங்கள்
வெளி உலகின் மழையைப் பார்க்க 

ஒன்றிரண்டு இறங்கியுமிருக்கலாம்

***************************************************************
தவிட்டுக்குருவி
அணில் வரிசை
முன்பின்னான காக்கை
சோனி நாய் அதன் குட்டி
எல்லாமே உறங்கியாயிற்றா
மழை அரவந்தவிர 

வேறொன்றும் தொனிக்காத முற்பகலில்




நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி

கையை மாற்றி மாற்றிப் பற்றிக் கொண்டோம்
சுந்தரி டீச்சர் தொடங்கி 
நெட்டை கீதா குட்டை கீதா
நாங்கள் முதன்முதலில் பார்த்த
தேன்மிட்டாய்காரர் வீட்டு கிளிக்கூண்டு
ஒரு முழத்துக்குமேல் 
எப்போதும் வளராத கறிவேப்பிலைச்செடி

தெப்பக்குளக்கரை வளையல்கடை
கட்டுரைநோட்டு அடுக்கை
சாலைக்கு எதிர்புற வகுப்பறைக்கு 
எடுத்துச்செல்கையில் தவறவிட்டது

ஆச்சே....இருவது வருசம்கிட்ட
......ஒரு வருசம் பேசலாம் நம்ப கதைய 
எனச்சிரித்தபடி நகர்ந்தோம்
அப்புறம்தான் நினைவு வந்தது
வீட்டைச்சொல்லாது விடை பெற்றதும்
அவள் நெற்றித் தழும்பு
இப்போதும் தெரிந்ததும்....


மறந்துவிடாமல் குனிந்து நிலை தாண்டினேன்

அக்டோபர் 14 காமதேனுவில் 

நேற்று என்றொருநாள்


கண்பிய்ந்து வரும்படி தேய்த்துத் 
தேய்த்து துடைத்த நேற்று
எரிகற்களைப் பிடித்துப் பிடித்து
வெந்த உள்ளங்கையிலிருந்தே திருப்பி வீசிய நேற்று
தெள்ளிய நோக்கமே இதுவென
பொறுக்கிப்பொறுக்கி தோல்நீக்கி ஊதி 
நிலக்கடலை பங்குவைத்த நேற்று
புழுக்கத்தையெல்லாம் கொட்டிய நேற்று
கரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்த நேற்று
நாணயம் சுண்டிப் பயணித்த நேற்று
தலைசுமந்த குடங்கள் 
தளும்பாது நடந்த நேற்று
சுவர்களின் கரிவசவுகளைக் 
கண்கசக்காது கடந்த நேற்று
எல்லா நேற்றிலும் இருந்த நீ
எல்லா நாளையிலும் இருந்தாய்
இல்லாமல் போன நாளைகளும் 
இப்போது நேற்றாகிப்போயின
நேற்றிலிருந்து வெளியில் வருவதா
நேற்றிலேயே இருப்பதா 
குழம்பிக் கொண்டிருக்கையிலேயே 
நாளை நேற்றாகிவிடுகின்றது


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...