வியாழன், டிசம்பர் 20, 2018

எங்கிருந்தாவது ஒருவன் வந்துவிடுகிறான்


பிடித்த தராசின் முள் நடுநின்றபின்னும்
நாலு அவரைக்காயை எடுத்துப்போட

வழியடைத்து நிற்கும் மக்களை விலக்கி 
ஆயாவை
வரிசை முதலில் முன்னேற்ற

பயிற்சியில் தடுமாறி
விழும் சிறுமியை நிமிர்த்தி
ஏசாமல் 
சைக்கிள் வளைவை சரிசெய்து வழியனுப்ப 

எல்லோரிடமும் கையொப்பம் வாங்கி 
சாய்ந்த மின்கம்பம் சரிசெய்ய

வெள்ளம் புயலென்றால் 
பதறிப்பதறி நிதி வேண்டிப் பொருள்வேண்டி 
ஊண் உறக்கமின்றி களம்காண

முக்கியமாக   இவையெதையும் 
தன் கூடுதல் மனிதமெனக் குழப்பியடிக்காது
எங்கிருந்தோ வந்து விடுகிற
ஒருவன்களை
இளக்காரச்சிரிப்பொன்றை
 இதழ்க்கடையில் சேர்க்காது
பார்த்தும் பாராதது போலக் 
கடந்து போங்கள் 
பரவாயில்லை


கனம்தாங்காக் காற்று


அடுத்த உடுத்தலுக்குமுன்
இந்தக்கோடியிலும் அந்தக்கோடியிலுமாக 
ஏதோ ஒரு பிடிமானத்தைப்
பற்றிக்கொண்டு
காயும் பழஞ்சீலை
கரைந்த சாயத்தையும்
காணாமற்போன கோடுகளையும் 
வெயிலிடம் பீற்றிக்கொண்டிருக்கிறது
முறையிடலின்
கனம்தாங்காக் காற்று 
உய் உய்யென ஓடிவந்து 
பரிவாகத்தடவிப்போகிறது

மழைத்தாரையின் கீழ் சுகமாக நிற்கிறது பாறை
பிரியம் என்றுமில்லை பேதமை என்றுமில்லை
சுகம் என்பதும் என் சொல்லே
களத்துமேட்டிலும்
கரிபிடித்த அடுப்பங்கரையிலும் கரைந்து கரைந்து
நைந்த
முந்தானை ஒன்றே காசு முடிச்சுக்கும் 
வியர்வை துடைக்கவுமாகக் கொண்டு
கூடை சுமக்கும் தெய்வானை ஆச்சியைப்போல

மேலிருந்து கீழாக


பட்டுப்போகவுமில்லாமல்
துளிர்க்கவுமில்லாமல்
சவலையாகவே நின்ற
மிளகாய்ச்செடியை அகழ்ந்தெடுத்துவிட்டுப் 
புதிய கன்று ஒன்றை நட 
ஒரு காலையும் சிறு கவலையும் 
போதுமாயிருந்தது
விளையவிருக்கும் காரத்தின் கற்பனையிலோ
ஒரு பருவமும் உளைச்சலும்
காம்பிலிருந்து வீழ்த்திய
பெரியப்பன் நினைவிலோ
கண்துடைத்தபடி படியிறங்குகிறான்
மாடித்தோட்டக்காரன்




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...