வெள்ளி, நவம்பர் 21, 2014

செவிபடாது மிதந்தலையும் கானம்




வரி சொல்வாய் 
கருவி சொல்வாய் 
எத்தனையாவது நொடியில் எந்தக் கருவி முடிந்து 
எது தொடங்கும் 
கூட எது இழையும் என்பதும் அறிவாய் 
குரல் எப்போது குழையும் 
எங்கே நிமிரும் 
முத்திரை விழுந்திருப்பது எங்கே 
சாயல் வேறெங்கு உண்டு எல்லாம் 
பிரித்துக் கலைத்து 
ஆறிய தேநீரோடு பாடலை அருந்திய 
நாட்களின் சாட்சியான 
தோப்புமில்லை

கடைக்கார வைத்தியும் காலமானார் 

ஒலிநாடாக்கள் சுழலவும் வழியில்லாது 
மரப்பெட்டியின் ஓரத்தில் 
தூசியோடு துயில 
பதிவகங்கள் தேவையிலா உலகில் 
தரவிறக்கும் தனியாளாக 
நீயும் நுட்பம் கற்றிருக்கலாம் 

ஏதோ ஒரு  வானொலியோ ,தொலைக்காட்சியோ 
வழங்கும் பாடலுக்குள் புகவியலாது 
மணல் மிதிக்கும் என் பாதங்களைப்போல் 
நீயும் உணர்வாயோ 

19 11 14 விகடன் சொல்வனம் பகுதியில் இடம்பெற்ற கவிதை 

சனி, நவம்பர் 08, 2014

எனக்குத் தெரிந்தவன்



ஊர்ப்பக்கம் போனா
பொவொண்டோ வாங்கிவாஎன்பான் 

பன்னீர் சோடா மறக்காம குடி 
மாயவரம் தாண்டுமுன் என்பான் 

டிகிரி காபிக் கடைகள்தோறும் 
குடித்துப்பார்த்து  
அசல் நகல் சொல்லிடுவான் 

பச்சைத்தேநீர்,பால்கலந்தது ,இஞ்சி மிளகு 
எதெது எவ்வெப்போது 
பட்டியல் உண்டு அவனிடம் 
பழச்சாறு கடைக்காரனிடம் 
நீரும் சர்க்கரையும்
அருகில் நின்று கலந்தால்தான் 
திருப்தி அவனுக்கு 

என் வீட்டின் காபி பில்டர் 
அவன் தந்த பரிசுதான் 
டிகாக்ஷன் பக்குவமும் சொல்லித் தந்தான் 

மதுக்கூடமொன்றிலிருந்து
தள்ளாடி வெளியே விழுந்த 
அந்த நாளில் 
அவனை நான் பார்த்திருக்க வேண்டாம் -
அவன் குழந்தையோடு 

வியாழன், நவம்பர் 06, 2014

கமலஹாசனின் ரசிகைகள்




ஒல்லிக்குச்சி கமல்
அவள் ஒரு தொடர்கதையில்
எச்சில் விழுங்கிப் பாடுகையில் ரசித்தவள் 
மெச்சி அக்கா...
சப்புன்னு அறைஞ்ச கோபாலக்ருஷ்ணன்
கீதாவின் பிரியன்
நினைத்தாலே இனிக்கும் மைக்
சிம்லா ஸ்பெஷல் மைக்
சேர்ந்து பாட முடியா வருத்தம் பூரணிக்கு
வில்லனாக்கி விட்டதில்
பாரதிராஜா மேல் கொலைவெறி
சிகப்பு ரோஜா பார்த்த கிரேசிக்கு
சான்சே இல்ல -இந்த வார்த்தை
அப்போது புழக்கத்தில் வந்திருந்தால்
ராஜபார்வைக்குப்பின் தேவி
இதைத்தான் சொல்லித் திரிந்திருப்பாள்
சரோஜினியின் கணவன் குள்ளமாக இருந்ததில்
பிரச்னை ஏதும் தெரியவில்லை
அப்புவுக்குப்பின்
குருவின் காலத்தில்
தொங்குமீசை விரும்பிய
சச்சு அக்கா புரிந்துகொண்டாள்
சுருண்ட மீசைக்காரன் பின்னால்
விமலா சுற்றியதை -
அது தேவர் மகன் விளைவு என்று....
கனவுகளைப் பங்கிட
யார் யாரோ வந்தபோதும்
"கமலாசனின் "ரசிகைகள்
இருந்துகொண்டே இருந்தார்கள்
படங்களை வெட்டி ஒட்டியபடி...
பாடல்களை முணுமுணுத்தபடி...
சண்டை போடும்,சங்கடப்படும் ,
சங்கடப்படுத்தும்
கமல் ஹாசன்களையும் ரசித்தபடி....

ஞாயிறு, நவம்பர் 02, 2014

சக உதிரிகள் அல்லது சாமான்யர்கள்




இழவு வீட்டிலும் 
பிணமாகக் கிடக்க வரம் கேட்கும் 
"முன்னிலை"யாசகர்களின் உலகில் 
அவன் நுழைந்ததேயில்லை.....

கிடைத்தது தின்று 
கிடைத்ததில் வாழ்ந்து 
கிடைத்த வழியில் சாவான் 
விருப்பத் தேர்விலாமல் ...
.
இடிந்து குலையும் கட்டிடம் 
கவிழும் இரயில் 
வெடிக்கும் குண்டு 
எங்கும் ஒப்புக் கொடுத்தபடி 
உதிர்கிறான் ...

உதிரி மனிதன் ஒருவனை 
குப்பைக் குள்ளிருந்து 
மீட்டெடுக்கும் மஞ்சள் தொப்பிக்காரன் 
காமெராக் கண்கள் தின்ன 
அவனை அனுப்பியவாறே 
தானும் உதிரி சாம்ராஜ்யப் பிரஜையே 
எனச் சொல்லாமல் 
நகர்கிறான் 
இன்னொரு காலோ கையோ 


தேடியபடி... 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...