vaarththai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vaarththai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 04, 2012

மோகினிச் சொல்

.ஏப்ரல் 30 கீற்று இணைய இதழில் வெளியானது 

ஒரு சுள்ளிக்கட்டு சுமந்து சென்றாய் நீ

சிறியதும், பெரியதும், நீளமும், குட்டையுமாய்
அடக்கி மடக்கிக் கட்டி வைத்திருந்த கட்டுமீறி 
ஒரு சுள்ளி பாதையில் விழுந்து விட்டது.
பின்னால் வந்த ஒருவன் எடுத்துப்பார்த்தான்.
"கோடு போலிருக்கே...."
இன்னொன்றைத் தேடி வைத்து இணை கோடாக்கினான். 
பக்கத்திலிருந்தவன், கேலிச்சித்திரக்காரன் போல்
ஒரு வளையத்தை மேலே வைத்து,
"தலையும்,கையும்" எனச் சிரித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன்,
தோதான இன்னும் இரு குச்சியால் 
உடல் கொடுக்க, உயிர் கொடுக்க வந்தான் மற்றவன்.
ஆடை ஒருவர் தர,"மூளியாக இருக்காதே" என 
ஆபரணம் சூட்டினாள் ஒருத்தி.
பால் பழத்தோடு ஒவ்வொருவர் போஷாக்கு தர,
லாஹிரி வஸ்துக்களோடு சிலர் சந்தித்ததாகவும் கேள்வி!
மறுநாள் நீ திரும்புகையில் 
ஒற்றைச் சுள்ளி மோகினி அங்கே உலவுவதாகவும் 
சூட்சுமக் கயிற்றின் முனை பிடித்தவாறு 
வழிப்போக்கன் வெகுகாலம் முன்பு கடந்துவிட்டதாகவும் 
கதைத்துக்கொண்டிருந்தார்கள் .....
உன்னிடமும் சொன்னார்கள் "எச்சரிக்கையாக இருக்கும்படி..."

சனி, பிப்ரவரி 18, 2012

பாலையின் அரும்பு

மருதாணிப்பூ
மணந்துகொண்டிருந்த பாதை
இன்று
வெறும் வெளிச்சம்
இறைந்து கிடக்க
வெம்மையின்
சுடுமணத்தைப்
பரப்பிக் கொண்டிருக்கிறது...
மெல்லடி வைத்துப்
பாடல் முனகியவண்ணம்
கடக்கவியலாதபடி !
கடும் முயற்சியில்
வரிகளை
நினைவில் இருத்துகிறேன்..
மருதாணிப்பூ
இல்லாவிடிலும்,
நாளை
ஒரு
சிறுமலர் -
அங்கே சிரிக்கலாம்...  

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

பெயர் துறப்பு விழா

ஒரு சுபயோக ,சுபவேளை 
குறியுங்கள்!
அவமானம்,  அவச்சொல் ,
தவிப்பு, புறக்கணிப்பு,
புலம்பல்,இயலாமை
சகலமும் துறக்க வேண்டும் !
இந்த இப்பிறவியின் 
தடங்கள் துடைத்தெறிய 
தற்கொலையை விட 
சிறந்த வழி!
ஒவ்வொரு எழுத்தாக 
உதிர்ப்பதா, உடைப்பதா,
பிய்ப்பதா 
கசக்கி நெருப்பில் இடுவதா ..
எதுவாயிருப்பினும் 
முகூர்த்தம் முடியுமுன் 
முடித்துவிடவேண்டும்...
பெயரற்று 
உலவி உலகைப் பார்த்தல் 
வாய்க்குமா...?
கிரீடமும் முள்முடியும் 
உனக்கன்று !
உன் பெயர்க்கே....
 

சனி, ஜனவரி 28, 2012

சொற்கள்


என்னோடு இருந்தன ....
இல்லாமல்  இருந்தன..
இல்லாமலும் ....
இருந்தன!
இருந்தாலும் 
இல்லாவிட்டாலும் 
என்னோடு, 
எனக்கானவையாய் இருந்தன...
இருக்கும் வரை  
இருக்கும்!

வியாழன், ஜனவரி 26, 2012

நினைவின் சரத்தில்

அந்த மனோரஞ்சிதம் 
வருடங்கள் கடந்தும்  
வாடாமல் சிரிக்கிறது !
பிரத்யேக மணமும் 
பெயரற்ற நிறமும் கூட 
மங்குவதேயில்லை...
வெல்வெட் துணியிலிட்ட 
முத்துமாலைகூட
சற்றே 
பழுத்த வெண்மையில் ...
ஆனால் 
என் ஒற்றை மனோரஞ்சிதம் 
முணுமுணுத்த பாடல் வரிகளையும் 
வெளுத்த கனவுகளையும் 
இதழ்களாய் இணைத்தபடி 
வாடாமல்....  

திங்கள், ஜனவரி 16, 2012

நிரம்பா அரங்கம்





ஓரிருவர் ...
தொடர்பிலா திக்குகளில்.... 
அலைபேசி நோக்கியவாறு 
சில தலைகள் 
அருகே எவருமிலா 
மூலைஇருக்கையை 
கவனிக்க வசதிஎனத் 
தேர்ந்திருக்கலாம் .
தாமதமாக
சபை நிரம்பலாம்...
**************************************
எந்த சமாதானமும் 
தராத நிம்மதியை 
காலி இருக்கைகளுக்கும் 
காதுகள் இருக்கலாம் 
என்ற கற்பனை தந்தது...
இருக்கைதோறும்
கைப்பிடிபோல் 
ஈரிரு காதுகள் முளைத்தன ...... 
காத்திருக்கும் செவிகள் 
மீதான காதல்  
தூறலாய்த் தொடங்கி 
பெருமழையென நனைத்தது 
ஆளில்லா இருக்கைகளையும் .......
 

ஞாயிறு, ஜனவரி 15, 2012

உன்னை விட்டால்.


         

படபடத்த 
தாள்களிலிருந்து
எழுத்துக்கள் 
எம்பி 
       எம்பி 
முறையிடுகின்றன....
வசவுக்குள்   போடும்போது 
வலிப்பதாகவும் 
பொய்யில் சேர்க்கும்போது 
புண்ணாவதாகவும்
வறுமைக் காட்சியில் 
தமக்கே 
வன்முறை வளர்வதாகவும் 
காதல் வசனங்கள் 
கரைத்துவிடுவதாகவும் ....
****************************************
நீயாவது 
உணர்கிறாயே என்றேன் ! 

முன் வைத்த கால்



மின் வெளியில் 
என் எழுத்துக்கள் 
என் எழுத்துக்கள் மிதக்கின்றன...
மிதக்கின்றன...
 திருத்தியிருக்கலாம் 
ஒருவரியை 
மாற்றி இருக்கலாம் 
ஒரு சொல்லை 
சேர்த்திருக்கலாம் 
ஒரு எழுத்தை 
முன்பே...
போட்டிருக்கலாம் 
ஒரு புள்ளியை...
ஆனால்...
                     விரல் நுனியிலிருந்து 
                      இறங்கிப் போனபின் 
எனக்குச்சொந்தமின்றி 
மின்வெளியில்..... 
 

செவ்வாய், டிசம்பர் 27, 2011

பார்த்தேன்

சில
உணர்கொம்புகள்..
சில
கொம்புகள்...
சில
தலைகளுக்குமேல் ...
*************
சில பாம்புகள்
சில முதலைகள்
சில
முகங்களுக்குமேல்...
************
என் முகத்தில்
நேத்திர தடமே
இல்லைஎன்கிறது
தீர்ப்பு! 

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உணர்வின் உணவு

வேண்டித்தான் இருக்கிறது
உள்ள்முக மோனத்தில்
உறைந்த
புத்தனுக்கும் 
நீ
புத்தன்தான்
நீ புத்தன்தான்
நான் உணர்ந்தேன்
என்றொரு
ஒப்புகைக்குரல்.....

கண்டு கொள்ளல்

தளும்பாக்கிணறும்
முகம் பார்க்கவாவது
அழைக்கிறது ....
இறைக்கச் சுரக்கா
ஊற்றும்
இனிப்பென்ற சொல்லில் பொங்கும் ! 

புதன், டிசம்பர் 21, 2011

ஆயுத எழுத்து

ம்ம் ...ம்ம்ஹும் ...
எழுத்து உணர்த்தா குறிப்பு
சொல்ல
வேண்டும்
முகக்குறிப்போ தெறிப்போ......
ம்ம் ....உதிராத
ஊமைப்பொழுதிலும்
உயிர்தரிக்கும் துணையின் 
ம்ம்க்கும் ...
நொடிக்குள் 
நொடித்துப் போகிறது  
உன் 
சாம்ராஜ்யம்!
முதலில் அவளும் அறியாள்
இதன் வலிமை.....!

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

நூல் கயிறானது


உன் வினாக்கள் எல்லாம்
என்
விடை தேடியே பிறந்தன ....
***********

நானும் நம்பினேன்
நீயும் கூட !
உன் வினாக்களின் விடையே
நான் தருபவைதான் என...
*************

வினாக்களின்
நூல் நுனி
தொடர்ந்து
விடைஎடுப்பதே
வழக்கமானது......
*****************

நூல் திரிந்து
திரிந்து ...திரிந்து
கயிறானதைக்
கவனிக்கவேயில்லை 
நீ 
நானும் கூட ....
**************

இன்று 
வினாக்கள் 
சாட்டையாகவும் 
விடைகள் 
பம்பரமாகவும் 
சுழல்கின்றன....
************************ 

வெள்ளி, நவம்பர் 11, 2011

சொல்லிக்கொண்டார்கள் ....

புடைத்த
கழுத்து நரம்பிலிருந்து
முதலில்
கொசு...
பிறகு தேள் ...
நெளிந்து துள்ளிய பாம்பு
டினோசர் கூட ...
எச்சில் குருதியோடு
எங்கும் புரள்கின்றன...
எது
யாரைக் கடித்தது?
யார் அடித்தார்கள்?
சம்பவங்களாகி
பதிந்து கிடக்கிறதாம்...

விழி தெறிக்கப் பார்த்தாலும் ...
கிடந்த இடம்
வந்த வழி
புலப்படவில்லை..
ஆனால்...

எல்லாம்
சொல்தானாம்....!

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

உரையாடலின் பின்னே 


பேசுகிறாய் ...
பேசத்தெரியும்
என நிரூபிக்க...
படித்திருக்கிறாய்
பார்த்திருக்கிறாய்
கேட்டிருக்கிறாய்
யோசிக்கிறாய்
கண்டுபிடிக்கிறாய்
நுண் உணர்வு
முன்யோசனை
புத்திசாலித்தனம்
பெருமை
சாமர்த்தியம் ...
சகலமும் உணர்த்த
நீ பேசிக்கொண்டேயிருக்கிறாய்


என்னைச்சுற்றி 
இறைந்து கிடக்கும் 
வார்த்தைச் சில்லுகள் 
(சமயத்தில் என்முகமும்
காட்டுகின்றன)
கிழிக்காமல் 
கடந்து போவதெப்படி.. 

வெள்ளி, அக்டோபர் 14, 2011

வெட்டு ஒன்று !


எப்போதுமே
இடையில்
ஒற்றை இழைக்கோடுதான்
ஆம்-இல்லை  
வேண்டும்-வேண்டாம் 
முடியும்-முடியாது 
நடக்கும்-நடக்காது....


ஆனால் 
கச்சிதமாக வரைய 
கை கூடுவது 
சிலருக்குத்தான்..
நேர் கோடிழுக்க 
நீளாக்கரமுடையார் 
தலை
தஞ்சாவூர் பொம்மை.....

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

வசவுக் கணை 

உத்தரத்திலேயே 
தொங்கிக் கிடக்கும் 
எனக்கு இன்னும் 
நான்கு நாளில்
விடுதலை கிடைக்கலாம்..


என்னை
வீசியவனுக்கும்
தன்மேல் விழாமல்
தப்பித்தவனுக்கும்
பாகப்பிரிவினை ...

தன்மேல் நான் விழாதபடி
நகர்ந்து கொண்டேயிருந்த
இருவருக்கும்
நான்தான்
நடத்திவைத்தேன்!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...