புதன், மார்ச் 30, 2016

மார்ச் பூக்கள்

ஒளிச்சுடர் என்னைக்கடந்து செல்கிறது ஆரஞ்சு தளும்ப
மஞ்சள் மின்னலை 
எதிர்நோக்கிய கண்களோ
பாதையில் அலைபாய்கின்றன
******************************************
குவிந்த கரங்களுக்குள்
பொன்வண்டு 
சிறகடிப்பதை நிறுத்தாது
தீப்பெட்டி சதமில்லை 
சிறகுக்கு
சொல்லிக் கொண்டுதான்
இருக்கிறேன்
உயர்ரக தினை மற்றும்
கத்தரி என்வசமுண்டு என

**************************************
வெயில் இறங்கி இறங்கி 
முற்றத்தையும்
வாசலையும் விட்டு 
வெளியேறி 
தெருவின் அடியில்
படுத்துக்கொள்ளத்தானே
போகிறது.
அதை நினைத்து
துடைத்திடு
வியர்வை அல்லது கண்ணீர்ஏதிலி நிலா

பாசிநிறஅலைகள் 
பேரமைதி தளும்பிக்கிடந்த
நதியோரம்
அடியாழத்திலிருந்து
ஒரு கை நீண்டுயர்ந்து
பாசி விலக்கிச்சிரிக்கலாம்
அலை புரளலாம்
ஏதுமின்றி
இம்முழு நிலவை 

வேறிடம் போகச்சொல்கிறது காற்று
முகம்சுண்டி அடுத்த வாசல்
நகர்ந்த ஏதிலிப்பெண்ணும்
நிலாமகள் போலவே
இறுகிய முகம்


இடரினும்

நல்லது
கனிவர்க்கம் போல் அடுக்கிவிட்டீர்கள்
நல்லரசனை உமக்கு
அன்பு,மரியாதை,மனிதாபிமானம்
அப்புறம் வெறும்மானம் 
எல்லாம் அலமாரியில்
இறுக மூடுங்கள்
புறப்படுங்கள் அரிவாளோடு
இன்றைக்கு வெட்ட
ஏற்ற தலை தீர்மானித்திருப்பீர்களே
தலைமுறை தலைமுறையாக
ஆனால்
அடுக்கி மூடியவற்றை எப்போதுதான்
எடுத்து பொருத்திக்கொள்வது என்ற
துர்ப்பாக்கிய சிந்தனை
எப்போதாவது இடறினால்
இடறினால்தானே....

ஆணவ ஆபரணம்

சொற்கள் எதிரேதான் கிடக்கின்றன
சில துளிகளோடு காய்ந்த
தேநீர்க்கோப்பை
சாய்ந்த சாயமா
செய்தித்தாளின் படத்திலிருந்து சொட்டிய 
பச்சை ரத்தமா
எதுவென்று தெரியாத
கறை படிந்த மேசை மேல்
எழுந்து என்ன செய்யப்போகிறேன் போ
என்ற ஆயாசத்துடன் கிடக்கின்றன
தொலைக்காட்சி மின்வடத்திலிருந்து சொட்டும் ரத்தம் நின்று
ஐந்தே நிமிடங்களில்
அடுத்த அரிவாள்
ஒவ்வொரு சங்கமாக
ஆதரவு அறிக்கை வாங்கி
அடுக்குங்கள்
ரத்தப்பொட்டுகள்
நாளாவட்டத்தில் காய்ந்து
நீலமாகி ஆட்காட்டி விரல்நுனியின் ஆபரணமாகிவிடும்
சொற்கள் அப்படியே கிடக்கட்டும் மனசுபோல
உலர்ந்துகொண்டு....


புறப்படு

சரி வந்தாயிற்று
சற்றே இளைப்பாறலாம்
இந்த நிலா நினைக்காததை
அந்த கதிர் நினைக்காததை 
தக்காளித்துண்டில் தடவப்பட்ட
விஷப்பசையைத்தின்ற எலி கூட
நினைக்காததை
நீ ஏன்..
விண்வெளிஓடம் எனப்படித்ததற்காக
துடுப்பெல்லாம் வேண்டாம்
புறப்படுதல் மட்டுமே
உனது கடன்


புதன், மார்ச் 09, 2016

தலைப்பு இல்லை

கொஞ்சம் அமிலம் கிடைக்கிறதா
தேடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்
களிமண்ணால்தான் ஆகியிருக்கிறது
முஷ்டி போதும் உடைக்க எனக் 
கை ஓங்குகிறான் ஒருவன்
மெழுகு பொம்மையல்லவா
சிகரெட் கங்கோடு
நெருங்குகிறான்ஒருவன்
கண்ணாடிப்பளிங்குக்கு
ஒருகுச்சிபோதுமென்றும்....
சொல்,வலி,அறிவு,ஆயுதம்
உடைந்தவற்றைத் தடமின்றி
ஒட்டவைத்து எழுகிறாள்
விழுந்திருக்கும் கோடுகள்
புன்னகைஎன்பீர்

மகளிர் தினம்

வலியைப்பற்றி பேசவும்
வாழ்த்தி வாழ்த்தி நகரவுமான
நாள் நிறைவுபெற்றது.
எப்போதுமான 
தன்னிரக்கம் 
எப்போதுமான ஓட்டம்
எழுந்திருக்கையில்
இருக்கும் தலைமாட்டில்

அழுத்திதேய்த்த போது(காது)

அவள் காதுகளைத் தேய்த்துக்குளித்து நாளாயிற்று 
என திடீரெனத் தோன்றியது
அழுத்தி அழுத்தி
தேய்க்க முற்பட்டபோது
குளியல் வேளைகளில்
மனதில் பதிந்திருந்த 
அடுப்பிலேற்றிய குக்கரின்
அழுத்தம்
முடிக்காது கிடக்கும்
பிள்ளையின் வீட்டுப்பாடம்
முறைத்தபடி வெளியேறிய
கணவன் தள்ளாடி வருவானோ என்ற பதட்டம்
இன்னும் இன்னுமான
அழுக்குகளின் அவசரத்தில்
காது கழுவ மறந்தே போனது நினைவில் வந்தது
இன்று தேய்த்துவிடலாம் என்று அழுத்தி இழுத்ததில்
காது நீளும் எனத்
தெரியவில்லை
நீண்ட காது கேட்பதோடு
நில்லாமல்
பேசவும் செய்கிறது.
அதுவும்
எதிர்த்துப்பேச வேண்டாமென வாய்க்கு
சொல்லித்தந்ததெல்லாம்
புரியாமல் பேசுகிறது
மௌனியாய் இருக்க
மனதிற்கு இட்ட கட்டளைகளை உடைத்துப்
பேசுகிறது
வாயாடி "யாக இல்லாதவளின் காது
கர்ஜிப்பதைத்தாங்க இயலாமல் முதலில்
வீடு காது பொத்திக்கொண்டது.
பின்னர் ஊர்.
விசாரித்த போது காது தேய்த்த கதை தெரியவந்ததால்
காது தேய்க்காது அழகியாக மாற 
விளம்பரப்படங்கள் உருவாகின்றன
ஒரு காது வளர்ந்ததுபோதும்
அவள் அவர்களாவது
ஆபத்து என்ற எச்சரிக்கையோடு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...