இடுகைகள்

October, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யுகங்கள் கடந்து

படம்
நைந்த மனதோடும் அதைவிட  நைந்த தேய்பஞ்சோடும்  ஒட்டிக்கொண்டிருக்கும் சோப்பை
முடிந்தவரை துடைத்து துடைத்து
தேய்ப்பது அன்றாட நிகழ்வு
கனகத்துக்கு ஆனாலும் பொழுது மாறி விடிந்தது
மூடிய கதவுச்சமூகத்தின்  மூன்று வீடுகளுக்கான பணியாளாக வந்த
நாளிலிருந்து வாழ்க்கை  சிலபல சில்லறை சௌகரிய  கணங்களைக்கொண்டு வந்திருந்தது.
குழாய் திறந்தால் கொட்டும் தண்ணீர்
மிஞ்சியதென்றாலும் வண்ணமான உண்டி
மண்ணெண்ணெய்க்கு அலையா மகிமை மிகு வாழ்வு
மற்றபடி ஏங்குவதெற்கெல்லாம் நேரமுமில்லை
எதைப்பார்த்து ஏங்குவதென்று
தெரியவுமில்லை
அதே தேய்பஞ்சும் சோப்பும்தானென்றாலும்  சலிப்பில்லை
அவர்கள் மொழி அவர்கள் வழி
அவர்கள் கருவி அவர்கள் தரை
பழகத்தான் நாள்பிடித்தது தப்பிப்பிழைத்து தடுமாறி  வந்துவிட்ட சமையலறைக்குழாயடி ஒற்றைக்கரப்புக்கு
ஊளையிட்ட மக்களைப்பார்த்து
சிரிக்கிறாள்
எத்தனை உரையாடல்களை
இடுக்குகள்தோறும் நுழைந்து  வெளியேறும் கரப்புகளோடு  நிகழ்த்தியிருக்கிறோம்
தலை துண்டானாலும் ஒன்பது நாள் வாழும் கரப்பு
பசியில் உயிர்விடும் என்றறிந்து
இனமென்று அடிக்காது துரத்தியிருக்கிறோம்
பாற்சோறு போட்டும் பதமான உணவிட்டும்  நாய்பூனை வளர்ப்போருக்கு
தானே ஒளியும் தனிக்கரப்பிடம்
என்ன அச்சம் …

இருபத்தோராம் நூற்றாண்டின் திருவிளையாடல்

படம்
கருவிகளை எவ்வளவு 
கருணையோடு வடிவமைத்திருக்கிறோம்
அழித்துவிடு என ஆணையிட்டாலும்
தெரிந்துதான் சொல்கிறாயா
என்கிறது
நிச்சயமாக,சத்தியமாக
ஈசன்மீது ஆணையாக என
ஏ பி நாகராஜனாகும் வரை
விடாதிரு நீயாவது


இதுவும் பண்டிகைதான்

படம்
யாருடைய கருணைவழி 
பண்டிகை கொண்டாட்டத்தையோ நம்பி 
வேகின்றன பலகாரங்கள்
யாருடைய கனிவையோ நம்பி
காத்திருக்கின்றன 
மலிவுவிலைப் புத்தாடைகள்
சேரந்து கொண்டாட வந்திருக்கும் 
பண்டிகை பற்றி உணர்விலா
உறவுகளின் வீம்பில்
சில கண்ணீரத்துளிகளை
அடுப்பின் தீயில் சொரிந்து
கருணை காக்கும் தெய்வங்களின்
அருளாசியில்
நிரம்புகிறது குவளைகளின் இலக்கு
கோடிகளை விருப்ப நாயகன்
இழக்காதிருக்க ஓடிக்கொண்டிருக்கிறான் 
வந்த மகன் வெந்த பலகாரச்சுவையறிய
நேரமின்றி
யாருக்காக..இது யாருக்காக
எந்த நாளில் பாடியிருக்கிறாள்
அவள்
ஆயிற்று தீபாவளி


சுற்றிய மத்தாப்பூ

படம்
எத்தனை தீபாவளிகளைக் கடந்துவிட்டோம்
தூங்கிவிழுந்தபடி மருதாணி வைத்துக்கொள்வதும்
தைக்க கொடுத்த பாவாடை 
கைக்கு வருமா என்பதுமே 
கவலையாக இருந்த தீபாவளிகள்
வளையலோ,பொட்டோ வாங்கிக்கொள்ள 
நமஸ்காரங்கள் கைகொடுத்த தீபாவளிகள்
மழை கெடுத்த பண்டிகையை
உள்வீட்டு சங்குசக்கரங்களோடும்
பொட்டுவெடிகளோடும் கடந்த
தீபாவளிகள்
கண்ணில் விழுந்த அரப்புத்தூளை
மறந்து அதிரசம் ஏந்திய 
கைகளில் நிரம்பிய தீபாவளிகள்
அவ்வருட உறவின் இழப்பு 
செலவைக்குறைத்த நிம்மதியில்
பெரியோர் இருக்க 
அர்த்தம் ஏற்காது
அழுகையினால் முகம் வீங்கிய
தீபாவளிகள்
பாதி வெந்த நேரம் முதல்
பள்ளியிலிருந்து திரும்பும் நேரம்வரை 
முறுக்கு கிறுக்குகளாய்ச் சுற்றிய தீபாவளிகள்
ஒற்றைப்புத்தாடையை காட்டிமகிழவே 
பள்ளிவேலைநாளுக்கு காத்திருந்த தீபாவளிகள்
கண்டதும் அதிகமில்லை
தின்றதும் அதிகமில்லை
உடுத்தியதும் ,படுத்தியதும்
அதிகமில்லை
மிட்டாய்ப்பெட்டி சுமந்து
அன்றாட உடுப்போடு ஊர்சுற்றவும்
உலகுசுற்றவும் கற்ற மக்களே
நினைவுகளே அதிகம்
எங்களுக்கு

படம்இணையத்திலிருந்து 
எஸ்.இளையராஜாவின் தூரிகை  பெயரில் என்ன இருக்கிறது

படம்
குடை என்பது நிழல்
நிழல் என்பது குளிர்ச்சி
குடை என்பது காப்பு
வீழ்ந்த வெண்கொற்றக்குடைகளையும்
காக்க மறந்த குடைகளையும்
காற்றோடு பறந்த குடைகளையும்
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடைமிளகாய்
எனப்பெயர் அது...அது...ஆங்
அது குடைமிளகாயில்லை
குடமிளகாய் குடமிளகாய் பதிலில் தொடங்கியது கேள்வி
குடம் நீர் நிரப்பிவைப்பது
நீர் தண்மை மிக்கது
தன்மையெலாம் சரிய
நீரிலாது ஆடும் குடங்களையும்
அடித்துக்கொள்ளும் குடங்களையும்  நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடமிளகாய் எனப்பெயர் போடா
குடையுமில்லை குடமுமில்லை
இது கேப்சிகம்
Capsicum

கையெழுத்து கலைக்கும் நினைவுகள்

படம்
எப்போதோ உதிர்ந்த பன்னீர்ப்பூ
சரசரவென சகடையில்  ஏறி இறங்கிச்சரிந்த வாளிநீர்
ஓரம் பெயர்ந்த துளசிமாடம்
மஞ்சளாய்ப்பழுத்து மட்டை தொங்கும்  கமுகமரம்
சுருள் சுருளாய்ப்பலவண்ண
குரோட்டன்
செண்டுமல்லிப்புதரின் அருகே
போகும்போதும் வரும்போதும்
குத்தும் எலுமிச்சை
கறுப்பு வெள்ளையில் நிலைத்த
சித்திரம் தருவது  அலுத்துக்கொள்ளும் பெருமையாக இருந்தது
எப்போதாவது போய்ப்பார்க்க
உரிமையிருந்தவரை கையெழுத்தும் காசும்
எதையும் மாற்றும் அழிக்கும்
இதையும்

எண்ணால் கட்டியது

படம்
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அடையாளம் இருந்தது தொழிலாலோ,தோற்றத்தாலோ,
பூர்வீகத்தாலோ
அடைமொழி சூட்டி
அழைத்துக் கொண்டிருந்தோம்
கட்டிட மாற்றங்கள் கூட காரணிகளாகும்
புதுவீடு,மாடிவீடு என
ஒன்றுபோல இரண்டிருந்தால்
பிள்ளைகளால் பேர் சொன்னோம்
எங்கள் ஊர் அஞ்சல்காரரும்  எண்களை எழுத்தில் மட்டுமே பார்ப்பார் அடுக்கிவைத்த தீப்பெட்டிகளில்
குடியேறியபின் எண்ணே கண்ணானது
ஒன்று கூடினாலும் குறைந்தாலும்
போகுமிடம் சேரமாட்டீர்
கறாராய்க் குறியுங்கள்
இப்படியாரும் இங்கில்லையென
அடுத்த கதவின் இடுக்கும் முறைக்கும்

ரோஜா தேநீர்

படம்
இவ்வளவு சர்க்கரை இன்ன நிறஅளவு
இவ்வளவு திடம்
என்று தனது
விருப்பத் தேனீரை  அடையாளம் காணவும் நிதானமாக அருந்தவும்
உங்களைப்போல
தெருமுனைக்கடை வரையல்ல
நூற்றாண்டுகளைக் கடந்து
நடந்திருக்கிறாள் உங்கள் பிரியசகி காதலைச்சொல்ல
ரோஜா வேண்டாம்

விளக்கிற்கு வெளியிலிருக்கும் பூதங்கள்

படம்
விளக்கிலே திரி நன்கு சமைந்தது
 எனக்கவிஞன் எழுதியதெல்லாம் 
தெரியாமல் 
என் முன்னோடிப்பெண்டிர் 
அரிக்கன் விளக்கு,அடுப்படிப்பிறை விளக்கு
நல்ல விளக்கு,வாசற்பிறை அகல்
காடா விளக்கு, கண்ணாடிக்கூண்டிட்ட
இரவுவிளக்கு எனப்பார்த்து பார்த்து 
தேய்ப்பதும் திரிப்பதும் 
துடைப்பதுமாகவே 
வாழ்ந்தபோதும் 
விளக்கேத்த வந்தவளாக மட்டுமே இருந்து 
ஒளியை உணராது போயினர்
புளியும்,மண்ணும்,சாம்பலுமாக
அவர்கள்
தேய்த்த தேய்ப்பிற்கு நியாயமாக
ஒருமுறை கூட விளக்கிலிருந்து
 பூதம் வரவில்லை
வெளியிலே உலவிய பூதங்களுக்கு 
இவர்களன்றோ அடிமைகள்

கருணையின் அடையாளம்

படம்
மரணத்தைக்கண்டு அஞ்சவேண்டாம்
மரணத்தை இகழவேண்டாம் மரணத்தின் கரங்கள்
கருணை மிக்கவை
உங்களையும்
என்னையும்
நாம் போற்றும் கடவுளையும் விட  கருணை மிக்கவை தீர்க்க முடியாதவை என்று  நீங்களும் நானும் நமது கடவுளும்
கைவிட்டவற்றை
தீர்த்து வைப்பதைவிட  வேறென்ன கருணை இருக்க முடியும்

பூக்களிடமிருந்து தப்பித்தல்

படம்
யாரோ ஒருவரின் புத்தாடையின் ஒருபகுதியாக 
எப்போதோ இருந்த பூக்கள்
நிறம் குன்றாது
காற்றிலாடுகின்றன
திகைப்பாயிருக்கிறது
ஏந்திக்கொள்ளவோ ரசிக்கவோ 
இயலாத துர்ப்பாக்கியத்தில் நானிருக்கிறேன் 
என்பதை அந்தப்பூக்களிடம் 
எப்படிச்சொல்வதென

என்னைப்பார்த்து அவை பூக்கவுமில்லை
என்னைப்பார்த்து ஆடவுமில்லையென்ற 
சமாதானத்தோடு நகர்ந்துவிடுகிறேன்
என்னை
வேறெப்படி காப்பாற்றிக்கொள்ள

ஏறுவதும் இறங்குவதும்

படம்
நேரலைகளில் உணர்வுபொங்க
 வழக்குகளைப்பற்றியோ
கலகங்களைப்பற்றியோ
மறியல் பற்றியோ
சொல்லிமுடிக்கையில் தவறாமல்
ஒளிப்பதிவாளர் பெயரும் சொல்லிமுடித்து
 மூச்சுவிட்டுக்கொள்ளும் செய்தியாளர் 
அடுத்த இடத்துக்கான தகவல் தேட
குறிப்பிட்ட செய்திகளில் 
கூச்சலிட ஏற்றது எதுவென விவாதக்குழு
ஆய்ந்திருக்க
எப்போதும் போல் தள்ளுவண்டி
தண்ணீர்கேன்,பெட்ரோல்பங்க்
பள்ளி,கல்லூரி,அலுவலகம், அடுப்படி 
என்ற வட்டத்துக்குள் சுழலும் உலகு
நியாயங்கள்
ஏறுவதும் இறங்குவதும்
 உமக்கின்றி எமக்கில்லை


எங்களிடம் நீர் இருந்தது

படம்
எங்கள் கிணறுகளில் நீர் இருந்தது பத்து வீட்டுக்காரர்கள் வந்து இறைத்தபோதும் பகிர்வதில் கவலையின்றி இருந்தோம் எங்கள் குளங்களில் நீர் தளும்பியது உயர்த்திக்கட்டிய உள்பாவாடையுடன்  கதையளந்தபடி துணி சவக்காரத்தையே  இரண்டு இழுப்பு தேய்த்து  உடைந்த கரையின் சில்லில்  மஞ்சள் உரசிக்குளியல் முடிப்பதில்  கூச்சமின்றி நடந்தோம் பிழிந்த துணி தோளிலும்  தெருமுனைக்குழாயின் குடம் இடுப்பிலுமாக நடந்தபோதும் நனைந்த உடலின் வளைவுகள்  விரசமாகத் தெரியாத சகமாந்தர் உடன் நடமாடினோம் எங்கள் ஆறுகளில் நீரோடியது கரையோர மரங்களின் பூக்களும் வறண்டகாலத்தில் விழுந்திருந்த இலைதழையுமாக புனல் வந்தபோது ஒரு துறையில் பெருக்கு கொண்டாடினோம் பிள்ளைகள் மதகிலிருந்து சொருகு நீச்சல்பழக அப்பன்கள் ஆடுமாடுகளை வைக்கோல் பிரியோடு தேய்த்துக்கொண்டிருந்தார்கள் கிணறுகளில் நீரிறைக்க வலுவில்லாது  பொருத்திய மோட்டார்கள் பரிதாபமாக முனகும்போது  விழுந்த நீரிலும் வண்டல் பிடித்த மனதிலும் அதுவே மீன்வளர்க்க ஏற்றதாக குளமும் குட்டையும் மாறியபோது வீடெங்கும் குளியலறை கட்டுமளவு முன்னேறிவிட்டோம் யார் வீட்டு குளியலறையை யாரோ  எட்டிப்பார்க்கும் நாகரிகத்திலும் எங்கள்  ஆறுகளா.... மணல் கிடங்குகளாக…

காலத்தில் உறைந்தவள்

படம்
காதுவளர்த்த காலத்தின் நிறைவில் வந்து சேர்ந்த 
வளையங்கள் காதை இழுப்பதில் 
தண்டட்டிகளின் தங்கைமுறை என்ற 
அவதூறு உலவியது
வலுவில்லா எல்லா வதந்திகளையும்போல
அது மறைய
காதுகள்தோறும் வளையங்கள் கச்சேரி தொடங்கின
ஒட்ட வளைந்தவை மட்டுமல்ல
வாத்துகளை,தாமரைப்பூக்களை
,மணிகளை,முத்துகளை 
இணக்கமாக சேர்த்துக்கொண்டு
ஆடிக்கிடந்தன
இளமையின் அடையாளமான மெல்லிய
வளையங்களைப் பட்டையாக்கி 
வளமைக்காக ஒரு குண்டும் நட்சத்திரமும் 
சேர்த்துக்கொண்ட பெண்களால்
அவற்றைத்துறக்கவே முடியவில்லை
லதா மங்கேஷ்கர் பாடும்போது 
அவை ஆடுமா இல்லையா
சுசீலா மாற்றிவிடுவாரா
ஷோபனா ரவிக்கு செண்டிமெண்டா 
என்றெல்லாம்
சமூகமே கவலைப்பட்ட ரிங் எத்தனை
தங்கவளையங்களன்றி
பிளாஸ்டிக்,சில்வரில் சின்னதாய்த்தொடங்கியவை 
விரிந்து விரிந்து 
தோளைத்தொட்ட விட்டங்களான போதுதான்
புத்தகங்களை 
நெஞ்சோடு அணைத்தபடி 
வீதிகளில் இறங்கிய வரலாறு தொடங்கியது
ரிங் மாஸ்டர்களாக ஆண்களே நிலைத்த மண்ணில் 
ஆடும் வளையங்கள் 
ஆயிரக்கணக்கான பெண்களின் 
அடையாளமானது
லட்சம் மாதிரிகளைக் குவித்து
காதணி திருவிழா நடத்தும்
கடைகளேதுமில்லா காலத்தின் பிரதிநிதியாக 
வளையம் கேட்டு
வந்து நிற்கும்அபூர்வ பெண்களின்முன்
 திகைத்துதான் போகிறார் விற்பனைய…

தூண்கள் இல்லாத வீடு

படம்
சிலநேரம் வானவில்லுக்காகக் 
காத்துக்கொண்டிருக்கிறோம் 
எப்போதோ பார்த்தது 
பிள்ளைக்குக் காட்டலாமே என்று
மேகமே திரளாவிடில் என் செய்ய

****************************************************************
எவ்வளவோ இலைகள் உதிர்ந்துவிட்டன
இந்த உலகம் தோன்றிய அல்லது 
இலைகள் தோன்றிய நாளிலிருந்து
ஆனாலும்
இதோ இக்கணத்திலும் 
துளிர்த்துக்கொண்டிருப்பதை
நீங்கள் நம்பிக்கை என்கிறீர்கள்
அவர்கள் அறியாமை என்கிறார்கள்
நான் இயற்கை என்கிறேன்
அந்த துளிர் எதுவுமே சொல்வதில்லை

******************************************************************
திரும்பத்திரும்ப சொல்லப்படும் 
விளக்கம் அலுப்பூட்டுகிறது
திரும்பத்திரும்ப கேட்கப்படும்
கேள்வி பதிலை இழக்கிறது
திரும்பத்திரும்ப நடக்கும்
நிகழ்வில் கவர்ச்சி தேய்கிறது
திரும்பத்திரும்ப பகிரும்
செய்தியின் நிறம் மாறுகிறது
அதனாலென்ன
திரும்பத்திரும்ப எல்லாம்
நடக்கத்தான் செய்கிறது

*************************************************************************
சொன்னால் போதும்என்ற 
அழுத்தம் நெருக்கும்போதெல்லாம் 
யாரிடமாவது சொல்லித்தீர்க்கிறீர்கள்
அந்த சொற்களுக்குப் புரிவதேயில்லை
அவற்றை நீங்கள் 
மாத்திரைகளின் அந்தஸ்தில் வைத்திருப்…

இரட்டை வாத்து டாலர் சங்கிலி

படம்
இரட்டை வாத்து டாலர் சங்கிலிகள் பெண்பிள்ளை
பள்ளி தாண்டுமுன் செய்துவைப்பது  எழுபதுகளின்  பொறுப்பான குடும்பத்தின் அடையாளமாம் அத்தை சொன்னாள்
வெள்ளைக்கல் பதித்து ஓரிரு சிவப்புக்கல்  அலங்காரம் கொண்ட வாத்துகள்  வசதியுள்ளவர் வீட்டுப்பெண்களின்  தாம்புக்கயிறு
சங்கிலிகளின் நுனியில் நீந்திக்கிடந்தன
கல்வைத்து நட்டப்பட கணக்கு பார்க்கும்  நகைச்சீட்டு அம்மாக்கள்  தங்கத்தில் தகடு போல  வாத்துக்களை உருவாக்கி  கண்ணுக்கு ஒரு சிவப்புக்கல் வைத்து  மகள்களை திருப்திசெய்தனர் வாத்துகள் நீந்துவது தண்ணீரிலல்ல  கண்ணீரில் என்பதைக்  கண்டுகொண்ட சிலபெண்கள்  கண்டுபிடித்தனர் தாமரைப்பூ டாலர்களை தவறாமல் இலை சேர்த்துச்செய்யுங்கள் என்று  அத்தை சொன்னாள்  தண்ணீரோ கண்ணீரோ ஒட்டாத  மலர்ச்சிக்கான கனவில்.
எப்போதம்மா டாலர் சங்கிலிகள்
வழக்கொழிந்தன என்றபோது
அத்தைக்குக் கேட்காதபடி
அம்மா சொன்னாள்
பத்து பவுன் போட்டாலும்
புலிநக டாலரோடு மாப்பிள்ளைக்கு  சங்கிலியென பங்கு கேட்ட  உன் மாமன் காலத்துக்குப்பின்தான்
வாத்துகளையும் தாமரைப்பூக்களையும்  கைவிட்டோம் என்று.
வாத்துகளாவது கரையேறினவே
எனப்பெருமூச்சு விட்டபடி
மாப்பிள்ளையின் கைச்சங்கிலிக்கு  பணம்கட்டி முடித்தாள் அக்க…

இருந்த காலம்

படம்
நாய்திங்குமா அந்த வரிக்கியை 
என்று வாய்சொன்னாலும் 
ஒரு காய்ச்சலுக்கு 
ஏங்கிய காலங்கள் இருந்தன
நடந்தே கடத்தல் இயல்பானபோதும் 
பாட்டு பாடியபடி தினமும் கடக்கும்
டவுன் பஸ்ஸுல 
ஒருநா ஏறிட மாட்டமா 
என்று ஏங்கிய காலங்கள்
இருந்தன
பிளஷர் கார் வாசலுக்கு வரவென்றே் 
சாவோ வாழ்வோ 
நெருங்கிவிட வேண்டும் 
என ஏங்கிய காலங்கள் இருந்தன.
வருவார்க்கொன்று ஈதலின்
புகழ்பாடியபடி
பழையது பிழிந்து உறிஞ்சிய 
காலங்கள் இருந்தன
இதையெல்லாம் கூட 
சொல்லிக்கிடக்கப்போகிறோம் 
என்று அறியாத காலங்கள் இருந்தன.

மணிப்பயலின் வண்டி

படம்
ஈருளி ,பால்,மோர்,சர்க்கரை,
இடியாப்பக்குழல்
முறுக்கு உரல்
சமுக்காளம்,ஈச்சம்பாய், பாதாளக்கரண்டி
இரவல் வாங்கவென்றே 
யார் வீடு செல்வதென்று தெரியும்
உடைக்காதே,பிய்க்காதே,சிந்தாதே
அறிவுரைகளை கவனித்தது மாதிரியும்
உள்ளிருக்கும் குத்தலைக் 
கவனிக்காத மாதிரியும்
வரத் தெரிந்த மணிப்பயலுக்கு
டுர்..டுர் டுர்ரென ஒலியெழுப்பாமல் 
வண்டியோட்டதான் பழகவில்லை

அம்மாவின்நெளிமோதிரம்

படம்
நெளிமோதிரம்  ஒன்றிருந்தது அம்மாவிடம். மாங்காய் நெக்லஸும் குழுப்படத்திற்கு  நெளியைப்போட்டுக்கொண்டு போனபோது  தெரியாது
முகமே புள்ளியளவு தெரியும் படத்தில்  நெளியெல்லாம் பதியாதென்று மாங்காய் நெக்லஸ் எப்படியிருக்குமென்பதை  எங்கள் யாரையும்விட  எங்கள் ஊர் கூட்டுறவு வங்கி தராசும்  கடன்பிரிவு ஊழியரும் நன்கறிவார் விரலில்  போட்டுக்கொள்ள முடியாமல்  இற்றுப்போன நெளி  இப்போதும் என் பெட்டியில் கிடக்கிறது மாங்காய் நெக்லஸ் பழைய மாடல்
என்ற ஊகத்தில் அழித்தபோது  அதிலும்  மோதிரம்தான் செய்யலாம் என்றார் பத்தர்.
வருசாவருசம் வெக்கப் போனப்பயெல்லாம்  தேச்சு பாத்ததிலயே  தேஞ்சு போயிருக்கும் என்று  சமாதானம் செய்த அம்மாவுக்குத்  தெரியவில்லை  எங்களுக்காக எப்போதும் தேயும்  அவளுக்கு என்ன மிச்சமென்று

தவிப்பின் தொடர்ச்சி

பேசாதிருப்பது ஒரு தவிப்பு 
இல்லை 
தவிர்ப்பு என்று யாருக்கு சொல்ல 
விதை அடுத்த செடிக்கான 
தொடக்கம் என்றே பார்த்திருக்கிறேன்
இந்த செடியின் 
தப்பித்தல் என்கிறாய்

ஊர் வரைந்த மயில்

படம்
தன்மேல் எழுதப்படும் லிபி குறித்த 
விசனங்களோ கொந்தளிப்போ 
அடையாத தாளாகும் 
ஜென் நாளொன்றுக்கு காத்திருந்தேன்
இடையில்தான் எத்தனை யோசனைகள்
******************************************************************
ஆடு நகர்ந்துகொண்டேயிருக்கிறது
பச்சை படும்இடமெல்லாம்
கழுத்தில் கிட்டி மாட்டிவைக்காது 
என்ன வளர்ப்பு

********************************************************************
நீலம் ஒருவர்
பச்சை ஒருவர்
வட்டம் ஒருவர்
கோடு ஒருவர்
வரைந்து வரைந்து வந்திருக்கிறது 
நீங்கள் பார்க்கும் கோலமயில்
யார் அது என்பீர்கள்
யார்தானில்லை
*****************************************************************


செதுக்க முடியாதவை

படம்
இரண்டுநிமிடங்கள் முன்னதாக
 உன் அழைப்பு வந்து நின்றதாக 
அலைபேசி சொல்கிறது
இரண்டு நிமிடங்களுக்கு முன்
இங்கேயே இருந்ததாக மனசும் அறிவும் 
சேர்ந்தே சொல்கிறது
கேட்டதா கேட்கவில்லையா
கேட்பாய்

இரண்டு நிமிடத்துக்குமுன்
என்ன நடந்ததென்று மறந்து போகிறதே
இந்த வரலாறு எப்படித்தான் எழுதப்படும்

எவ்வளவைத்தான் தஞ்சாவூர்க்
கல்வெட்டில் செதுக்கி வைப்பது

புலரிவேளை

படம்
அன்பு புலரியில் அவிழும் 
மொட்டு 
போலிருக்கும் என்றாய்

அதுவோ

நீர்த்துறை காணாதலையும்
சிறுத்தை போலிருக்கிறது

கரையில் நின்றிருக்கிறேன்
புலரிவேளைக்காக

அதன்முன் இருளும் என்பதை மறந்து

உதிர்தலின் சரக்

படம்
உதிர்ந்த இலைகளையே 
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பசிய தளிராக கிளையோடு 
தண்டோடு ஒட்டிக்கொண்டு 
முளைத்தெழுந்த நாள் முதல்
அவை பேச முயற்சித்துக் கொண்டேயிருந்தன
நம்காதில் கேட்டதெல்லாம்
உதிர்தலின் சரக்"தான்


காலம் தப்பிய காலம்

படம்
ஆகாயத்தின் நிறம்
 மாற்றியே தீருவேன் என 
உதைத்துக்கொண்டு அழுதிருக்கலாம்
எதிரிலிருப்பவர் கையில் 
என்ன இருக்கிறது என கூச்சப்படாமல்
காட்டச்சொல்லியிருக்கலாம்
பொம்மைகளை 
விட்டுக்கொடுக்காது காத்திருக்கலாம்
பூச்சிக்கும் பாம்புக்கும் 
பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது
முக்கியமாக
எப்போதும் ஒரேமாதிரி 
சிரிக்கவும் அழவும் முடிந்திருக்கும்
என்ன செய்ய
குழந்தையாக இருப்பது 
குறுகிய காலத்துக்கே அனுமதிக்கப்படுகிறது

சொல்லித்தந்த சரஸ்வதி

படம்
பாதிவிலையில் வாங்கிய 
பழைய பாடப்புத்தகத்தில் 
ஏற்கனவே வைத்த பொட்டிலிருந்து 
தள்ளிவிடாத கச்சிதத்தோடு 
மஞ்சள்குங்குமம் வைக்கவும்
புதுவாசனை ஆசையை 
நோட்டோடு நிறுத்திக்கொள்ளவும்
சொல்லித்தந்திருந்தாள் சரஸ்வதி

உன்னைப்போல் நான்

படம்
நான் பேசுவதேயில்லை
நீயேன் பேசுகிறாய்
என்றபோது வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீ பேசிதான் இதைச் சொல்லுகிறாய் என்பதை
எடுத்துச்சொல்லாது பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னைப்போல் நில்
நட
பாடு..தூங்கு ...கட்டளைகளைக்
கார்ட்டூன் குரலில் சொல்லியபடியே சுழல்கிறாய்
உன்மேலன்றி
என்மேல் எனக்குக் கோபமாக வருகிறது
உன்னைப்பற்றியே நீ
நினைக்கவிடாது
என்னைப்பற்றியே நினைக்க வைத்திருக்கிறேனே என்று.

நிற்க.
இது காதல் கவிதை இல்லை


வெளிப்படை

படம்
கொய்யாவை சிவப்புதானென்று நிரூபிக்க  பிளந்து வைத்து
கடை நடத்துபவள்
கற்றுத்தருகிறாள் வெளிப்படைத்தன்மையை
அப்படியொரு சொல்லே அறியாமல்
நமக்கோ 
அவள் மட்டும் அப்படியிருந்தால் போதும்
அவளுக்கென்ன ஒரு தள்ளுவண்டி எடைக்கல் தட்டு
நமக்கு அப்படியா