பத்தாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 09, 2021

அவர்களின் உலகம்

 பக்கத்து வீட்டின் சமையலறை

மேடைக்குக்கீழோ

பத்தாயத்தின் மேலோ
சுவாதீனமாக
ஒளிந்து பிடித்து விளையாடிய பிள்ளைகள்
பால்குடி மறக்கடிக்கவென்று
தூக்கிச்செல்லத் தொடங்கி
மூன்றாவது வீட்டுப்பிள்ளையை
இடுக்கிக்கொண்டே
வேலை முடிக்கும்
அத்தைகள்
மருமகளைக் குறை சொல்லியபடி
திண்ணையில் உட்கார்ந்த
எதிர்வீட்டுக் கிழவிக்கும் சேர்த்து சோறுவடிக்கும் அம்மாக்கள்
இல்லாமல் போகவில்லை
இதைப் படிப்பதில்லை
அவர்கள்
இதைப் படிக்கும்
நம் வாழ்வில்
இல்லாமல் போன
ஆயிரத்தொன்றில்
இவையும் உண்டுதானே

செவ்வாய், நவம்பர் 08, 2016

இட்லி அரிசியும் சாப்பாட்டு அரிசியும்


நிறைநாழி நெல் முந்தானையில் ஏந்திக்கொண்டுதான் 
உள்ளே நுழைந்தார்கள்
வாழவந்த பெண்கள்
மணையில் அமருமுன் கவனமாக
அடியில் நெல் பரப்பியே சமுக்காளம்
விரிப்பது மங்கலநிகழ்வுதோறும்
கொத்தான புதிர்நெல் எரவாணத்தில்
அடுத்த கொத்து வரும்வரை
உலர்ந்தாலும் உதிர்ந்தாலும் தொங்கும்
பத்தாயங்களின் வாசனையோடு
கோணிச்சாக்குகளின் உதறலோடு
மழையும் வெயிலும் முற்றத்தில் இறங்கின
இதெல்லாம் தொன்மமாகிவிட்ட வீடு இது
நேராக உட்கார்ந்தே அறியாத தலைவன்
சாய்வு நாற்காலியில்
அகன்ற திரை தொலைக்காட்சி பார்த்தபடி
நடவு,அறுப்பு என்று அலைந்துகொண்டிருந்த தலைவி
நல்லவேளை நமது நாலு ஏக்கரும்
பிரதான சாலையில் இருந்தது
என்று பெருமூச்சோடு ஆறுதல் அடைகிறாள்
நல்லவேளை நமது ஊருக்கு
கலெக்டர் ஆபீசும் கல்லூரியும் வந்தது
என்கிறாள் தாய்வீடு வந்திருக்கும்
இளைய மகள்
நல்லவேளை நீயும் அப்பாவும்
வயலை மனையாக்க சம்மதித்தீர்கள்
என்றாள் தாய்வீடு வந்திருக்கும்
மூத்தமகள் தலைதுவட்டியபடி
உங்கள் வாழ்வு அல்லவா
என்றபடி தானும் தலைதுவட்டத்
தொடங்கினாள் தலைவி
அவர்கள் அப்போதுதான் துக்கவீட்டிலிருந்து
திரும்பியிருந்தார்கள்
காய்ந்த வயல் பார்த்துக் கடனை நினைத்துப்
பாலிடால் பருகிய பங்காளி சாவு அது
"அம்மா என்ன வாங்கவேண்டும் "
பட்டணத்திலிருந்து வந்திருக்கும்
மகன் கேட்கிறான்
அரிசி வாங்கணும்பா
இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா
தலைவர் சற்றே திரும்பிப் பார்த்தார்
எரவாணத்தில் காய்ந்த புதிர் ஆடும்
இடத்தை

புதன், ஆகஸ்ட் 05, 2015

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்



குறுக்கே முளைத்த 
"............. ஜுவல்லரி"பலகையின் 
வளர்ச்சி  புரியவேயில்லை 
உழவு நடக்கா வயலில் 
ஒதுங்கி முளைத்திருந்த 
காட்டாமணிப் புதருக்கு....
************************************************
கண்ணுக்கெட்டியவரை 
கல்வளர்ந்த நகரின் நடுவே 
எங்கிருக்கிறதோ 
எங்கள் பத்தாயத்தின் கல்லறை 

இருந்த போதாவது சாலையோரம் 
இருந்திருக்கலாம் 
எங்கள் நிலம் 
கூட நாலு காசு தேற்றவும் 
இங்கேதான் இருந்தது 
எனச் சந்ததியிடம் காட்டவும்...
***********************************************
எங்களைப்போல் 
நீங்களும் இருந்துவிடாதீர்கள் 
உங்கள் வயலில்,தோப்பில்,கொல்லையில் 
நின்று 
படம் எடுத்துக் கொண்டுவிடுங்கள் 
குறைந்தபட்சம் செல்பி ..
வரலாறு முக்கியம் 
*****************************************
அக்டோபரில் வேண்டுமானாலும் 
தமிழ்ப் புத்தாண்டு பிறக்கட்டும் 
பச்சடி வைக்க வருடம் முழுதும் 
மாங்காய் கிடைக்கிறது 
பழமுதிர் சோலைகளில் 
**********************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...