வியாழன், மே 27, 2021

மழை ஆடை பட்டாம்பூச்சி

      கண்கட்டி அழைத்துப்போகும் பாதை தெரிவதற்காக

ஒரு கதையில் கூழாங்கற்களை
இட்டுப்போகிறான்
இன்னொன்றில் சுள்ளிகளை
இட்டுப்போகிறான்
ஏதாவதொன்று வேண்டியிருக்கிறது
நமக்கும்
மறுபடி வரப்போகிறோமா
எனத்தெரியாத பாதைக்கும் **************************************
இளஞ்சிவப்பு பூக்கள் இறைந்த
மழைஆடைக்குள்ளிருந்து
சிணுங்குகிறாள் பாப்புக்குட்டி
அண்ணனின் மழை ஆடைமேல் மட்டும்
ஒரு பட்டாம்பூச்சி

உருகாத நஞ்சு

 காதருகே மணியளவு மரு'தான்

கீதாக்காவை அடையாளம் காட்டியது
கூடைப்பந்து பயிற்சிக்களத்தில்
டீச்சரின் செல்லப்பெண்ணாக
எங்களையெல்லாம் சட்டெனக் குட்டும்
அதிகாரம் கொண்டிருந்த கீதாக்கா
மணியாகிவிட்டால்
உச்சந்தலையை ரணமாக்கிய
கீதாக்கா
இடுப்பில் குழந்தையோடும்
தலையில் கட்டோடும் அழுதபடி நிற்கிறாள்
மருவெல்லாம் இல்லாதமுகம் எத்தனைவசதி
யாரோ ஒரு காவலராக விசாரிக்க முடியும்
**************************************************
இன்னும் தோயாத தயிர்போல
உயிர்ப்பற்று தளும்பும் புன்னகையோடு வாசல் திறக்காதே
நிச்சயமின்மை
என்பது நஞ்சு
கருணையாக அதை உருக்கிக்கொள்ள விதிக்காதே
அதைவிட
யாருமற்ற பாவனையில் அந்தக்கதவு திறக்காமலே கிடக்கட்டும்
**************************************************
போதும் என்ற சொல்லை வெயிலும் கேட்பதில்லை
மழையும் கேட்பதில்லை
நீயும் கேட்பதில்லை
அதற்காகச்
சொல்லாமலிருக்க முடியுமா
*******************************************

நிலமென்னும் நல்லாள்

 மழை இடைவிடா

களிநடம் புரிகிறது
உங்களைப்போலவே
குளிருக்கு இதமாக
எதையோ போர்த்திக்கொண்டு
சுருண்டு கிடக்கிறான் ஆதவன்
***********
வறண்ட சருமத்திற்கு
எண்ணெய் பூசியதாக
சிலநாள் மழை ஈரத்தில் மினுக்கிக் கொண்ட நிலமென்னும் நல்லாள் திணறிக்கொண்டிருக்கிறாள்
உலகமே ஒரு திசையில்
போனாலும்
விதை,நாற்றுகளோடு
கண்விழித்தவன் குடி
நீர்ப்பெருக்கில் மூழ்கிக் கிடக்கிறது
*********
கணக்கெடுப்புகள்
மும்முரமாகின்றன
காய்ந்தாலும்
பெய்தாலும்
மிதியடியும் நனையாத மிதவாழ்வுக்குள்ளிருந்து
அவர்களும்
மூழ்கியிருக்கிறார்கள்
கரையில் நின்றபடியே
காப்பாற்றிவிடுவதான
கற்பனைக் காட்சிகளில்
******
பூனைக்குட்டி உறங்க வேண்டாமென்ற நல்லெண்ணத்தில்
அடுப்புகளை அகற்றியாயிற்று
எதற்குப் பிடிவாதமாய்
நெல்,கரும்பு,வாழையென மல்லுக்கட்டுகிறீர்கள்
உங்கள் வசதிக்காகதானே
அனுமதித்திருக்கிறார்கள்
ஆன்லைன் சேவைகளை
இன்னும் புரியவில்லையேயென்றுதான்
எரிவாயு விலை ஏற்றிவிடுகிறது
இதுதான் மாற்றமென்று எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்

நாற்காலிகள் நகைக்கும் ஒலி


வீட்டிற்கு ஒரு நாற்காலி
கூட இருக்காது
வீட்டுத்தலைவர்களுக்கும்
திண்ணையே போதுமாயிருந்தது
மறைந்து நின்றே பேசிப்பழகிவிட்ட ஆத்தாக்களுக்கும்
நாற்காலி கிடைக்கும்
இறுதி நாளில்
பல்லக்கில் ஏற்றியவுடன்
கழுவிக் கையளிக்கப்படும்
நாற்காலிகள்
ஊருக்குள் ஒன்றிரண்டு வீட்டிலுண்டு
மழுமழுவெனத் தேய்த்த
பிடிகளும்
வேலைப்பாடுள்ள கால்களுமாக
ஒற்றை நாற்காலி
அந்தஸ்தின் அடையாளம்
பிரம்பில் பின்னிய நாற்காலிகள் நான்கு வாங்கியபோது
அத்தை
பார்க்க வருவோர்க்கு தண்ணி கொடுத்து மாளலை
எனப் பெருமையோடு அலுத்துக்கொண்டாள்
ஆளரவமற்ற பொழுதுகளில்
அமர்ந்தும் பார்த்தாளாம்
ஒயர்பின்னலைக்கற்று
நாற்காலிகளால்
அமர முடிந்தது
பார்வையிழந்த நண்பருக்கு
பள்ளிகளில் கிடைத்த
பெஞ்சுகள் வீட்டில் கிடைக்க
வெகுகாலமானது
பெண்களுக்கு
தனக்கென்று ஒரு நாற்காலி கிடைத்த மகிழ்ச்சியில்
தனம் டீச்சர் சிந்திய கண்ணீரைப் பிள்ளைகள்
சாக்பீஸ் தூள் விழுந்துருச்சு
புது டீச்சர் கண்ணுல என மொழிபெயர்த்தார்கள்
மனைவியை அனுமதிக்கத் தோன்றாத நாற்காலியில்
மகளை அழகு பார்த்தவர்களின்
மருமகள்கள்
இன்னும் சில பத்தாண்டுகள்
கால் கடுக்க நின்றே பரிமாறினர்
நாற்காலி பழக்கியதே
திரையரங்குகள்தான்
மணற்குவியலையும்
பேக்பெஞ்சும் விட்டு
ஒரு ரூபாய் செலவில்
சமத்துவத்துக்கு முன்னேறிய தலம்
மடக்கு நாற்காலிகளின்
வருகையில்
மாதத்தவணையின் கருணையில்
வீடுகள்தோறும் நடந்தது
கிரீச்சென்ற மங்கல இசை முழங்கிய
இருக்கைப்புரட்சி
இதோ
வண்ணம் வெளிற வெளிற
கடையில் காத்திருக்கும்
பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு
உண்டு
வாசல்தோறும் கிடக்கும்
வாத்சல்யம்
குட்டி ராஜாராணிகளையும்
குனிந்து
ஏற்றுக்கொள்ளும்
அளவான இதயம் அவற்றுக்குத்தானே இருந்தது
மற்றபடி
நாற்காலிகளுக்காவே
நாணங்கெடுவோர்
பற்றிச் சொல்வதை
நாற்காலிகளே விரும்புவதில்லை
தான் மட்டுமே நிரந்தரம்
அமர்வோர் அல்ல
என்பதை நினைவூட்ட
சட்டென நொடித்துக்காட்டி
நகைக்கும் ஒலி கேட்கிறதா

கைகளைக் கழுவ விடுங்கள்

 

நீங்கள் உணவளிக்கப் பிறந்தவர்கள்
நாங்கள் கைகழுவப் பிறந்தவர்கள்
அவுரி கண்ட மண்ணுக்கு
ஆண்டுக்கணக்கில் விதையெதற்கு
உரமும் நீரும் ஊக்கத்தொகையும் உங்கள் கவலையாகாது
நகரும் கால்களில்
உங்களுடையது
நான்காமிடமோ
நாற்பதாமிடமோ
உடைமை என்பதே பெருஞ்சுமை
அதை இறக்கத்தானே
இத்தனை பாடு
*********"*
நைச்சிய சொற்களின்
அடையாளம்
நாளும் களைபறித்த
கண்களறியாதா
கொழுமுனை கீறிய நிலத்துக்குள்
புதையட்டும்
பொய்ம்மையின் பசப்பல்
வரலாறு
எல்லாவற்றையும் பிடுங்கிப்பிடுங்கி
உருட்டி உருட்டி
நாலாய் எட்டாய் மடித்து விழுங்க
எங்கள் வாழ்வென்ன
உங்கள் அம்மைசுட்ட ரொட்டியா
விழுங்கும்வேகத்தில்
ஒரு விக்கல் வந்தாவது
நினைவூட்டாதா
தொண்டைக்குக்கீழே
எல்லாம் ஒன்று
எல்லார்க்கும் ஒன்று என்று
பக்கத்திலிருக்கும்
முதலாளிமார்க்கும்
தங்கத்தில் வேகவில்லை
தானியத்தில்தான் வேகிறது
எங்களுடையது
கஞ்சி
உங்களது
பாரிட்ஜ்
உண்டு கழுவ விரும்பும் கைகளையுடைய நாங்கள்
உதறிக்
கைகழுவும் உங்களிடம்
இரத்தல் தகுமோ

கடவுளின் குட்டிக்கரணம்

 தன்னியல்பில்

உள்முற்றத்தில் கால்நீட்டிக்கொண்டு

தூத்தல் ' வலுக்கும்வரை
உட்கார முடியும்
ஆளிருக்கும் வேளைகளில்
அதற்குமேல்
என்றால்
மறந்தாற்போல
குடையை விட்டுக் கிளம்பு
******************************************
கிழக்கிருந்து சற்றே சாய்வாக
விழும் தாரைகளின் ஊடே
மின்கம்பியைப்பற்றிக்கொண்டு
ஒரு குட்டிக்கரணமிட்டுவிட்டு
சர்ரென சகதிக்குள் இறங்குகிறான் கடவுள்
கதவடிக்குள் நின்றிருக்கும் எனைப்பார்த்து அவன்
கையசைக்கும் தருணம்
ஒன்றும் புரியாமல் "பார்த்து பத்திரம்" என்கிறேன் ******************************************
காணாமற்போனதாக
நினைத்திருந்த
ஒரு சிறுபெட்டி
இன்று கையில் தட்டுப்பட்டது
அலமாரியில் இவ்வளவு ஆழமான ஓரம் இருந்திருக்கிறதா
திறக்காமலே மீண்டும் அங்கேயே அதை
வைத்துவிடலாம்
சின்னச்சின்னதாக
எதெதுவோ
அதற்குள் இருக்கிறது என்றும்
எல்லாமாகக்
காணவில்லை என்றும் நினைத்திருந்தேன்
அதில் ஒன்று இல்லையென்றாலும்
வேறு எங்கு போனதென்று யோசிக்க வேண்டாம்

நேடிவ்

 ஒருநாள்

ஒரே ஒருநாள்
விட்டுவிட்டுப் போனால்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வீடு
நேடிவ் போயிருந்தேங்க
அலைபேசியில் சொல்லிக்கொண்டே நடக்கும்போது
தலையில் நிலை இடித்தாற் போலிருந்தது
சொன்னவுடன்
சொல்கிறாள் தோழி
நீ பாட்டுக்கு ஊர்வீடு போல
நாமதான் குனியாம வந்துட்டோம்னு நினைக்காதே
எனக்கென்ன குறைச்சல்
கறிவேப்பிலைக்கொத்தேன்னு
நிலைதான் இறங்கிக்குட்டியிருக்கும்
இப்போது நானென்ன செய்ய
நம்புவதா
இன்னொரு முறை
"நேடிவ்ல ...."
சொல்லிப் பரீட்சிப்பதா

வியாழன், மே 20, 2021

பெயரிலாக் காற்று

 நேற்றுதான் கவனித்தேன் புதிய தும்பைச்செடிகள் பூக்கத்தொடங்கியிருந்தன

பழைய செடிகள் இருந்த இடத்தில்
சாக்கடை வெட்டியிருந்தார்கள்
இன்றோ
புதிய செடிகளை மூழ்கடித்து
குப்பை மிதக்கும் மழைவெள்ளம்
எனக்குத்தெரியும்
நாளையோ மறுநாளோ
இது வடிந்தபின்
ஒன்றுமே நடவாதது போல தும்பை பூத்திருக்கும்
*******************************************************

மிதிபாகல்,பீர்க்கு
பிரண்டை
நாட்டுக்கொய்யா
ஆவாரம்பூ ,குப்பைக்கீரை,கருந்துளசி
இரண்டு கூடையும் ஒரு விரிப்புமாக
அரிதானவற்றைச் சேர்ப்பிக்கிறவள்
சில வாரங்களாகத்தான்
மீண்டும் விரித்துக் கொண்டிருந்தாள் அந்தச்சிரிப்பை
அவள் சேலையைப் போலவே அதுவும் வெளிறிப் போயிருந்தது
எல்லா இலை தழைக்கும் பெயர் தெரியும்
காற்றுக்குப் பெயர் உண்டு என்பதுதான் வினோதம் அவளுக்கு
சிறுகீரைக்கட்டை
"பிள்ளைத்தாச்சி சூப்பு வெச்சிக்குடி"
என்று சும்மா
சேர்த்துக் கொடுத்தவள்
இந்த மழை ஈரத்தில்
எங்கு காய்வாளோ

தைக்கா முள்

 உண்மை பேச

முடிவு செய்தபின்தான் தெரிகிறது

அவிழ்த்தெறிய முடியாத
பொய்யின் கதகதப்பு
****************************************
நம் இருவர் உள்ளங்கையிலும்
இருக்கிறது முள்
ரத்தம் வராதபடி
கைகுலுக்குவதில்
எவ்வளவு
தேறிவிட்டோம்
புகைப்படமோ
புன்னகையால்
ததும்புகிறது
*************************************

நசுங்கி விழுந்த நகம்

     அழுந்தத் தாழ் போடக்கூடிய ஒரு கதவு வாய்க்குமுன்னும் கூட இரவு பகல் வந்து போனதே இந்த வீட்டுக்கு

ஏற்ற இறக்கமான இரண்டு கதவையும்
தாழிடத் தோதாக
இழுக்கும் முயற்சியில்
இதோ இந்த வலது சுண்டுவிரல் நுனி கன்றிப்போகாத நாளேயில்லை

அட ஆமாம்
இந்த நகமே முதல் நகமில்லை
நசுங்கி விழுந்து முளைத்தது
இத்தனை எளிதாகப் பூட்டிவிட வாய்த்த வாழ்வே
உன் கருணையே கருணை ******************************************
அடிப்பிடித்து கரிந்துபோன,
உப்பு ஏறியோ,மறந்தோ போன
திடமோ,நிறமோ குறைந்த
எதுவொன்றையும்
நீ
மறப்பதேயில்லை
உன்
நினைவின் தராசுக்கு
சப்புக்கொட்டிய தினங்களைக் கொட்டிக் கவிழ்த்துவிடும் மாய ஆற்றல்

நவம்பர் 19

 உடன் நடக்கும் உயிர்காத்தல் கடமையென வாழ்பவன்

தன் உண்டி,தன் குடி,தன் புகையென ஒடுங்குதல் அறியாதவன்
முத்தங்களை ருசித்த அதே இயல்பில்
தைலத்தைத் தேய்ப்பவன்
தலைநிற்காப்பிள்ளையும் ஏந்திக்கொண்டு துணிமாற்றத் தெரிந்தவன்
அம்மையை,சோதரியை,
இணையை,தோழியை
எவர்முன்னும் இளக்காரம் பேசாதவன்
ஆடை விலகிடும் தற்செயல் தருணங்களிலும்
கண்பார்த்துக் கதைக்க முடிபவன்
தன்னை முந்திச்செல்லும் வாகனக்காரியை
ஏகவசனத்தில் இரையாதவன்
உங்களையெல்லாம்
வாழ்த்தாது
யாருக்கு வாழ்த்து சொல்லப் போகிறேன் *சர்வதேச ஆண்கள் தினம்

சகிக்க முடியாத அன்பு

 கையிலேறும் எறும்பைப் போலப் பாராமலும் பதறாமலும் தட்டிவிடப்படும் அந்தஸ்தில்தான் இருக்கின்றன சில நினைவுகள்

விஷம் இறங்கிவிட்டதான பிரமையை உதறு

வெற்றுக்காலுடன்
புல்மீது நட

உள்ளிறங்கியிருந்தாலும்
இப்போது கழிந்திருக்கும் மிச்சசொச்சம்
**************************************************
சகிக்கவில்லை
இத்தனை அன்பாய் இருப்பது
நெற்றி சுருக்கினாய்
அன்பாய் இருப்பதுபோல்
இருப்பது
எனத் திருத்தம் போட்டேன்
பார்க்கவும் செய்தேன்
உன் கண்களுக்கு
மகிழ்ச்சியை மறைக்கத் தெரியாத நொடியை ********************************************

வெள்ளி, மே 14, 2021

பால்யத்தின் பசை

    யாரென்றே தெரியாத ஒருவன்

என் வீட்டு வாசலில்
சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறான்
தலைக்கேறிய கோபத்தோடு கொஞ்சவா போகிறேன்
யாரடா நாயே என்றேன்
எங்கிருந்தோ ஓடிவந்து
இருவரையும் மாறிமாறிப் பார்க்கிறது தெருநாய்
நகரச்சொல்லும் அவமானம்
தொண்டைக்குள் புரள்கிறது ****************************************



வார மாத இதழ்களின் பக்கங்களுக்குள்
சப்பாத்தியைத் தேய்த்து வைப்பாள் அம்மா
எங்கள் பால்யங்களைப்போலவே
ஒட்டாமல் வரும்
இப்போது
ஒட்டவே வாய்ப்பில்லை
இடவும் சுடவுமாக இரு என்று எச்சரிக்கிறார்கள்
அச்சில் ஈயம் இருக்குமாமே
உங்கள் பால்யமும் இப்படித்தானே

*************************************

தடுக்கிய சொல்

 மூன்றே ரூபாயைத் தர முடியாமல்

திண்ணையிலிருந்து
சொற்ப உடைமைகளோடு
தளர்ந்து நடந்த துரைதாத்தாவிடம்
பின்னாடியே போய்
சிரித்துக் கொண்டிருந்தோம்
கிழிந்த சட்டைக்காக
ரேவதியின் பொன்வண்டு காணாமல் போனது
வளையல் நொறுங்க விஜயாவோடு கைமுறுக்கி சண்டையிட்டது
வாசுவோடு பேசிய சாந்தியின் கன்னம் பழுத்திடக் காரணமானது
எல்லாவற்றின் பின்னாலும் இருந்தது
குழந்தமைதானா ******************************************************
ரொம்பநாள் சுமந்து கொண்டிருந்தேன்
உடனுக்குடன் சொல்லாத நன்றியை
கேட்காத மன்னிப்பை
குட்டிச் சொற்கள்தானென்றாலும்
கனம்...
பிறகு...
பிறகென்ன இலகுவாயிருக்கலாமென
எடுத்துப்போட்டாயிற்று
அதிலொன்றுதான்
சற்றுமுன்
நீங்கள் தடுக்கிவிழப் பார்த்தது

மடங்கா இறக்கை

 ஒரு கனவுக்கு

எதையோ கிளறிவிடும் சாகசம் தெரிகிறது
கள்ளப்புன்னகையோடு ஒளிந்துகொண்டுவிடவும் தெரிகிறது
எதையோ வதக்கியபடி
கிளறியபடி
உளறியபடி
தேடுவதும்.... *********************************************
மடக்கவும் உயர்த்தவும் முடியாத இறக்கைகளோடு இருப்பது பறவை வாழ்வல்ல
அறிவேன்
நிறுத்துவதும் குறைப்பதும் தொடக்குவதும் உன் மனம்போல
*********************************************
பூஜ்ஜியம் என கண்ணுக்கெதிரில்
நின்று அறையும்வரை
ஏதோ இருப்பதான இருப்பில் எவ்வளவோ கணக்குகள்
பக்கத்தில் இருந்தாலும் போதும்
கடன்வாங்கி கழித்துவிடலாம்
என்ற நம்பிக்கையில்
விழுகிறது பார்
ஒரு துளி சிரி
**************************************************

மூச்சு

 அல்லும் பகலும்

அறுபது நாழியும்
சின்னச்சின்னக்
கல்லாக எடுத்து
எடுத்து வைத்து
கட்டிய நினைவேயின்றி
ஒற்றைச்சொல்லில்
சரிந்துபோன சிதிலங்கள்
அடிவயிற்றைக் கலக்கத்தான் செய்கின்றன
யார் மனையோ என்றாலும் **********************************
எனது திரவியங்கள்
எனது மூச்சு முட்டல்கள்
எனது நாவூறல்கள்
எனது தலையசைப்புகள்
போ
உன்னுடையதைக்
கண்டுபிடி
ஒவ்வொன்றுக்கும்
உச்சுக் கொட்டிக்கொண்டு... **************************************
மூச்சை விடுங்க இழுத்துப்பிடிங்க
என்பதைத் திரும்பத்திரும்ப சொல்லிப்பழகிப்போன
மருத்துவர்
மூச்சு
மூச்சு என்கிறார் சுருக்கமாக
நமக்குத்தான்
எப்போது விடுவது
பிடிப்பது எனப் புரிவதில்லை
எப்போதும் போல

ஒரே

 விருந்து நிறைந்தது

ஒரு ஐஸ்கிரீம் கிண்ணம்
உங்களுக்குப் பிடித்த
சுவை
நிறம்
கலவை
எடுத்துக்கொள்ளலாம்
எடுத்துக்கொண்டீர்களா
கூடுதலாய்
சாக்லேட் துகளா
ஸ்ட்ராபெர்ரியா
பழத்துண்டுகளா
அலங்கரியுங்கள்
அலங்கரிக்கத் தெரியாவிட்டாலும்
வைத்தாலே அலங்காரம்தான்
சரி
வாருங்கள்
நல்லிசை மிதக்கும்
தோட்ட இருக்கைக்கு
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பொருளாதார வீழ்ச்சி பற்றி...
ஏதேனும் உதவி தேவைப்படுமா அவர்களுக்கு...
ஒரே ரேஷன் அட்டை தந்தாயிற்றே பிறகென்ன
எனது கார்வரை அழைத்துப்போக முடியுமா
சற்றே அளவு அதிகமாகிவிட்டது

அரிசி

 சற்றே வெளுத்து

கொஞ்சம் பொருக்கு உதிரத்தொடங்கியிருந்த சுவரில் சாய்ந்து கொண்டாள்

அலைந்து இழுத்த தலைமுடியைக் கொத்தாய்த்தூக்கிச் செருகிக்கொண்டபிறகு
ஒரு இடைஞ்சலும் கிடையாதென்றுதான்
தோன்றியது
நீட்டிய காலை ஆசுவாசமாய் மடக்கி நீட்டிக்கொண்டாள்
கல் பொறுக்க எடுத்துவந்த அரிசியிலிருந்து
ஒருபிடி அள்ளிப்போட்டு
மெல்லலானாள்
ஏட்டீ கல்யாணத்துல மழை வந்துரும்டீ எப்போதும் கூவும்
ஆத்தா பார்த்தால்
இனி என்ன சொல்வாள்
மழை வந்துதான் கலியாணத்தைக் கெடுக்கணுமாக்கும் **************************************************

கொடுக்கு

 உரியாமட்டைக் குவியலுக்குள்ளிருந்து

வெளிப்பட்ட தேள்

நேராக அவன் நாக்கிலேறிக் கொண்டது
வாழ்நாள் கொட்டு
வாங்கிக்கொண்டேயிருந்த அவள்
மரணத் தறுவாயில்
கொடுக்கைப் பிடுங்கி பத்துநூறாய்ப் பிய்த்துப் புதைத்தாள்
ராட்சதவரம் தெரியாமல்
பரம்பரையே கொடுக்குகளைப் பற்றிக்கொண்டு திரிகிறது *****************************************************
சுவர் மீது கண்ணாடிச்சில்லுகளைக்
கவனமாய்ப் புதை
இரும்பு முள் கம்பி
சகாயமாய்க் கிடைக்கிறதெனக் கட்டிவை
கண்காணிக்க எத்தனைரக காமெராக்கள் வந்தாயிற்று
அதையும் ஏன் விட்டு வைக்க வேண்டும்
ஞாபகமாய்
வெளியிலிருந்து வரக்கூடிய ஆபத்துகளுக்காகத்தான்
இத்தனையும்
என்பதை
அவ்வப்போது சொல்லிக்கொண்டிரு
கட்டுப்பாடா
அவளுக்கா
நெவர்
உன் சிலுப்பலைக் கேட்டு சிரித்துக்கொள்ளும்
வளர்ப்புநாய்

சிறகு முளைத்த நத்தை

 திரைச்சீலையைச் சற்றே ஒதுக்கினேன்

வெளிச்சத்துக்காக
கண்ணாடிக்கு இந்தப்பக்கமிருந்த
என்னால்
அந்தப்பக்கம்
தொங்கும் வெள்ளைப்பந்துமிதக்கும் வானச்சீலையைத் தொட்டுத்தள்ளிவிட முடியுமெனத் தோன்றுகிறது
எப்பேர்ப்பட்ட வெளிச்சம் ********************************************
யார் கண்டுபிடித்தார்கள்
இந்த வயதை
இருபத்துநாலு மணிநேரமும்
அந்த எண்ணைக் கர்ணகுண்டலம் போல மாட்டிக்கொண்டு திரியவேண்டுமா
இந்த தோடும் வேண்டாம்
அது கவிழ்க்கும் ஓடும் வேண்டாம்
கூட்டுக்கு அடியில்
ஒளிந்திருக்கும் மழுமழு நத்தை உடலுக்கு இரண்டு சிறகு பொருத்தலாம் வா

வியாழன், மே 13, 2021

சித்தம் தெளிய

 

தூர மலைமுகட்டுக்குப் பின்னொளிரும்
வெளிர்சிவப்பு 
காய்ந்தும் தேய்ந்தும் அதை நோக்கிச் செல்லும்
வளை பாதையின் புங்கைப் பச்சை,
காற்று தாளாது படபடக்கும் இளமஞ்சள் 
நெல்வயல்கள் 
பனையோடு ஏறும்  கோவைக் குலகொடிகள் 
மல்லிகை வெள்ளரி தூக்கி ஓடிவருபவளின் 
வெற்றிலைச் சாறு  
அழுத்தமான வண்ணங்கள்
அவ்வப்போதைய மழையில் 
கரையக் கரைய 
அதே ஆவேசத்தில் அரிவாள் ஓங்கும்
அய்யனாரின் கண்கள் 
பக்கத்தில் 
அரைக்கல் 
மண்டபத்தில்
எடுத்தவள் மனம்போல் 
கத்தரிப்பூ புடவையில்  காட்சி தரும் 
அங்காளியின்  முகத்தில் எந்தப் புகாருமில்லை 
ஏழெட்டு மாதங்கழித்து 
அரைப்படி மாவிளக்கும்  
வண்டி வண்டியாய் வேண்டுதல்களுமாக 
வந்திருக்கும் 
உங்களுக்கு மட்டுமல்ல 
அவளுக்கும் தெரியும் 
வேறு வழியில்லை என்று.
சூலத்தின் ஒற்றை எலுமிச்சையில் 
காலத்தின் விடாய் தீரப் 
பருகிக் கொண்டிருக்கிறாள் 
துரு பொருட்டில்லை அவளுக்கு 
ஊருக்குப் போக வேண்டும் 
ஊருக்குப் போக வேண்டும் என்று
நீங்கள் புலம்பும் போதெல்லாம் 
புரைக்கேறுவதை 
பக்கத்தில் ஓடும்
நட்டுவாக்கலி,சாரையிடமெல்லாம் 
சலிப்பும் பெருமையுமாய்ச் சொல்லியபடி 
காத்திருப்பவள்தானே 

சத்தியம் சொல்லாதே


சொல் சுட்டுவிடும்
வுட்டேன் வுட்டேன் என்றால் சரியாகிவிடும் என்பாள் பாட்டி
இப்போ
காட் பிராமிஸ்
மதர் பிராமிஸாக
சத்தியம் சர்க்கரைப்பொங்கல்
பொய் புளியோதரை
போயேன்
சாமிக்கே
எடைக் குறைப்பாம்
சத்தியத்தைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய் ***********************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...