புதன், ஜூலை 06, 2016

துயரநதி

நீங்கள் சொல்வதே அறம்
நீங்கள் செய்வதே
கேட்பதே
பார்ப்பதே
ருசிப்பதே 
நினைப்பதே எல்லாம் எனில்
நீங்கள் மட்டுமே பிறந்திருக்கலாம்
நாங்களும் பிறந்துவிட்டோமே

**************************************************************
திருகிக்கிள்ளப்பட்ட
காம்பு நைந்து கிடக்கிறது
தன் பொழுதுவரை
விகசிக்கவே ஆசை

அந்த மலர்
கொடியிலேயே இருந்திருக்கலாம்
கொத்தாக மொட்டுவிட்டிருக்கலாம்தொடுக்கத்தோதாக
காம்பு விரியாமல்
இருந்திருக்கலாம்
ஒவ்வொரு விரலுக்கும்
ஒவ்வொரு பார்வை

பூ
பூத்திருக்கிறது
அதுதான் முடியும்
**********************************************************************
மிகுந்த துயரோடு
ஏந்திக்கொண்டிருப்பதால்
தளும்புவதாகச் சொன்னது
குவளை
குவளைகளின்
உயரம்,கனம்,நிறம்,
மேல்பூ
எத்தனை பார்த்தீர்கள்
அழும் வழக்கமுண்டா
கேட்டீர்களா
ஏந்துபவன்,எடுப்பவன்
கவிழ்ப்பவன்
எவர் துயரையும்
எடுக்கும்போதே உணர்ந்து
தளும்பத் தொடங்கிவிடுகிறது
எதைச்சரித்தாலும்
சரிபாதி அதன் துயரநதி
நதிமூலம் தேடப்புகுந்தால்
கண்டடைவீர் களிமண்
மிதித்தவளின்
கண்ணீர்ச்சுனையை
அதுவரை
உப்புக்கரிக்கும் பானமே
உமக்கு விதிக்கப்பட்டது
என்ன பொல்லாத துயரம்
எத்தனையோ போல
உடைத்தால் போயிற்று
*********************************************************************

பெருவெடிப்பின் முன்பாக

மல்லிகை இன்னும் செடியிலிருந்து
கொடியாக மாறவில்லை
சர்வநிச்சயமாக 
நேற்று கொத்தாக 
மொட்டு வைத்திருந்ததை
ப்
பார்த்தேன்
அதிகப்படியாக ஒரு ப்
அனுமதிக்காத திரைபோல
பூவுமில்லை மொட்டுமில்லை
எலி இதையெல்லாம்
தின்னாது என்ற சமாதானத்துடன் நீரூற்றி
நகர்வதைத்தவிர
வேறென்ன செய்வேன்

*****************************************************************
இன்னும் நினைவிருக்கிறது
அன்பில் கனிந்த உரையாடல்கள்
புன்னகையாய்ப் பிறந்து
தளும்பி வெடித்த சிரிப்புச் சிதறல்கள்
மாற்றி மாற்றி 
விட்டுக் கொடுப்பதான தியாக லேபிள்
எதுவும் ஒட்டப்படாத இயல்பான
பகிர்வுகள்
எதைப் பற்றியோ
நாம் முரண்படப் போகிறோமென்ற
அறிகுறியே இல்லாது
இட்டுக்கொண்ட அற்பச் சண்டைகள்

அப்படியே இருந்திருக்கலாம்
வளர்ந்துவிட்டதாகச் சொல்பவனையும்
வாழ்ந்து கொண்டிருப்பதாகச்
சொல்பவனையும்
ஒரு அறை கொடுத்துவிட்டுவருகிறேன்
நான்சொல்லிநீகேட்கவும்
ஒன்றுண்டு
இந்த காசைக்கண்டுபிடித்தவனை
போய் அறைந்துவிட்டுவா
எப்படியும் நிகழப்போவதான
அந்த பெருவெடிப்பு நிகழுமுன்


எளிதான நாள்

அன்பு போல இருக்கவில்லை
அன்பு
அக்கறைபோல
இருக்கவில்லை அக்கறை
பிளாஸ்டிக் முத்துமாலை
அழகாயும் எளிதாகவும்
கிடைக்கிறது

******************************************************
நொடி உதிராக்கடிகைகளைக் 
கண்டறிந்த பின்னரும்
முள் முள்தான்

**********************************************************சாத்தியங்களின்
பெருங்கடலில்
சமாதானமும் புரிதலும்
தேடுகிறேன்
நேற்றோ
பரிவும் முன்னெடுப்பும்
நாளையோ.....
எப்படியும் தேடுவேன்

***********************************************************
எல்லா வலிகளுக்கும் ஒரு காரணமிருக்கிறது
எல்லா வருத்தத்திற்கும் 
ஒரு நிவாரணமிருக்கிறது 
எல்லா துயரங்களுக்கும்
ஒரு முடிவு இருக்கிறது
எல்லா அவமானங்களுக்கும்..
இப்படி சொல்லி சொல்லியே
ஒத்திவைக்கப்படும் வெளிப்பாடுகளை நாங்கள்
கொட்டுவதற்கென்று
எந்த நாள் இருக்கிறது

********************************************************************

பொறுப்பு

உடைத்துக்கொட்டிய கல்குவியலுக்கும் 
தகரத்தடுப்புக்கும் இடையே ஓய்வெடுத்து
அசைபோட்டுக் கொண்டிருக்கும் பசுவின்
தாடைக்குள் கிடப்பதைப்
பார்க்கத் துணிவதில்லை

************************************************************

நிலா பார்க்க 
விரல் கணுவுக்கெல்லாம் எண் வைத்து நட்சத்திரங்களெண்ண
சோப்புக்குமிழின் நிறங்களை உறுதியாய்
அறிந்திட முயலும் குட்டிப்பெண்ணொருத்தி
இதோ இந்த நெஞ்சுக்குழிக்குள்தான்
ஆடிக்கொண்டிருக்கிறாள்
என் கடமைகள் மேலெழும்
கவலைகள் கருத்துகள்
சங்கடம் சலிப்பு
இன்னோரன்ன
வளர்ந்த சிக்கல்களைக்
கையாளுகையில்
வெளியே வராதேயெனச்
சொல்லித்தான்
அவளை அங்கே நிறுத்தினேன்
வெளிவரும் தருணம்
அவளைப்போலவே
யானும் அறியேன்
இதற்கிடையில்
பொறுப்பான மனுசியென
கவசமொன்றை வேறு மாட்டிவிட்டீரே உலகத்தீரே

******************************************************************************************
கனத்த மௌனத்துடன்
நீ கவனிக்கும்படி
இமையோர நீரை
யாருமறியாது சுண்டிவிடவோ 
விம்மலைப் பெருமூச்சாக்கி இறக்கிவிடவோ 
செய்யும்வண்ணம்
கொத்துமலர்
பயிர்பச்சை அசைவு
இதனாலோ எனத்திகைக்கும் வண்ணம்
ஒரு பாடலைப்பாடிவிட வேண்டிய தருணம்தான் இது
என் பாடலோ
இறுகக் கை கட்டிக்கொண்டு
அடிவயிற்றில் நிற்கிறது


****************************************************************

செம்பருத்தி

புரிந்திருக்கும் என்ற
நம்பிக்கையை
ஒரு உச்சு 
இடித்து நசுக்கிவிடுகிறது
அது போக
அடியிலிருந்து சிதிலம் உதறி
எப்போ தலைதூக்க

*********************************************
இவ்வளவுதானே
இதற்குள் எதற்கு
அவ்வளவு

**************************************************
நடந்துவிடும் என்ற நம்பிக்கை
ஓடுடைத்துக் கொண்டிருக்கையில்
சிறகின் கோதுகளில்
முள்வைத்துத் தைக்கிறாயோ

**********************************************************
அந்த மீன்குஞ்சு
மரமேறுவதைப் பார்த்தேன்
பழம் பறித்து இறங்கியதோ
பழமாகித் தொங்கியதோ

********************************************************
இவ்வளவு இலைகளைப்
போர்த்திக்கொண்டு
உறங்கிய செம்பருத்தி
உதிர்ந்தபின்
பூத்திருந்த காட்சியை
ஊகித்து ஊகித்து....
பூத்திருந்தபோது ஒருவர் கண்ணிலாவது பட்டிருக்கலாம்

******************************************************************************

உதிர்த்துவிட ஏதுமிலா
சரஞ்சரமான கிளைகளோடு நிற்கையிலும்
அலைக்கழிப்புக்குக் குறைவில்லைஜூன்-18 முகநூலில்

தேக்கு மரத்தின் இலைதான்
ஆனாலும் உதிர்ந்து 
சுருண்டல்லவா கிடக்கிறது
****************************************************
எத்தனை அகலம்
கண்விரியப் பார்க்கும்
இதை என்னவென்று 
சொல்லித்தருவது
அபிக்கு
கொல்லை சாக்கடையளவு
தண்ணீர்கூட இல்லாத
ஒருகாலத்தின் ஆறு
வெறுமையாகக்
காத்திருக்கிறது
மண்டிய கோரையின் கீழ்


***************************************************
காற்றோ
எரிக்கும் வெயிலின் 
கொடுங்கவலையோ
அசைகிறது மரம்

*************************************************

ஜூன்-9 முகநூலில்

நீண்டநேரமாக
அசையாதிருந்த வளர்வேம்பு
சற்றே குனிந்து குழைகிறது
இறுக்கம் தாளா பெருமூச்சு
*************************************************
கண்ணுக்கெட்டிய தூரம் பறந்து கொண்டேயிருக்கிறது
அச்சிறு பறவை
என் காலால் கணக்கிட்ட
களைப்பின் தொலைவை
அறியாது
***********************************************
இலைகளையெல்லாம்
உதிரவிட்டு
குச்சி குச்சியாக நிற்கும்
கிளை
வெளிச்சம் விழுங்கிக்
கொண்டது
தண்டு பிடித்து உலுக்கிய
பிள்ளைக் கூட்டத்திடம்
புகார் ஏதுமின்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...