ulagam kanavu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ulagam kanavu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 05, 2012

சருகு படர்ந்த கூடுகள்


மயில் நீலச்சேலை.
டிசைனர் ரவிக்கை,
பொருத்தமாய்த்தேடிவாங்கிய 
அணிகலன்கள் ,
செருகிய பூச்சரமும் 
ஒப்பனைப்பூச்சுகளும் ...
பொருத்தமும் ,திருப்தியும் 
கண்ணாடி மட்டுமன்றி 
உறவும்,நட்பும் மெச்ச ...
பெருமிதமாய்த்தான் இருந்தது....
 
எச்சில் இலை
எடுத்துப்போன 
பள்ளித்தோழியை.....

அடையாளம் காணும் வரை...!   

வியாழன், ஏப்ரல் 05, 2012

போக்கிடம்

8 4 12 கல்கியில் வெளியான கவிதை                                             
 
 
 
 
 மணல்
செங்கல்...மனைவிலை,
ஆட்கூலி...வேலைநிறுத்தம் 
எந்தக் கவலையுமின்றி ,
மொட்டைமாடி 
நீர்த்தொட்டியின் 
பின்புறக்கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது 
பெயர்தெரியாக்குருவி. 
**********************************
கைப்பை,கடன் அட்டை,
கள்ள நோட்டு,சில்லறை 
எந்தக்கவலையுமின்றி
தனியாளாய்ப் புறப்பட்டு 
தந்திவடத்தில் அமர்ந்து 
சிறகு தூக்கி 
அலகை நுழைக்கிறது காகம்
இருப்பை எடுக்கிறதோ,
அழுக்கு கோதுகிறதோ... 
***********************************
மச்சுப்படி,மாங்கிளை ,
கட்டைச்சுவர் 
ஏறி,தாவி.குதிக்கும்
அணிலுக்குத் தொண்டனாகி 
ஓடிப்போய்விட்டது மனசு-
நாற்காலியில் புதைந்திருக்கும் 
என்னைக்கைவிட்டு !
கவலைகளைக் கைமாற்ற 
இடமறியாது திகைப்பதைப் 
பார்த்து -சிரிக்கிறது 
ஒற்றைச் செம்பருத்தி.
                            

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஒளிவட்டம்

கடவுள்
வந்திருக்கிறார்
என்றான் தோழன் ....
அவரோடு பேச்சுவார்த்தை
உண்டு என்பான்..!
உன் அருகில்தான்
இருந்திருக்க வேண்டும்
பிரத்யேக நறுமணம்
உன் ஆடைகளிலும்
சிறிது படிந்திருக்கிறது...
"கடவுச்சீட்டு வாங்க
அல்லவா போயிருந்தேன்"
"மறந்து போனாயா
அவர் -சர்வ வியாபி"
நிஜத்தில்
பதற்றம் தொற்றியது
யாரது...
செய்தித்தாளும் அரைத்தூக்கமுமாக
முனனால் நின்றவரோ...
ஒற்றைக்கால்
மாற்றி மாற்றி மடித்து
சாய்ந்து பேசிக்கொண்டே இருந்தவரா...
சகலரும் பார்க்க
கையூட்டு அளித்தவனை
முனனால் அழைத்தவரா ?
குமுறிப் பொங்கியவர்...?
சலனமின்றி புகார் கேட்ட அதிகாரி...?
ஏதும் அடையாளம் முன்பே
சொல்லக் கூடாதா -கடிந்தேன்...
"பரவாயில்லை
உன்னில் கூடத்தான்
படிந்துவிட்டாரே ....
பிறகு பார்க்கலாம் "
என்றபடி விரைந்துவிட்டான்...
பார்க்கலாம்
என்றது...என்னையா...?
    

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

அபி உலகம்-4

அபி குளிக்கவில்லை
இன்னும்...
அப்பா சொன்ன ஆறு 
...
வேண்டுமாம் !
அடுக்ககத்தின் 
ஆறாம் தளத்தில் 
நாலுக்கு ஆறு
குளியலறை வாசலில் 
நடக்கிறது போராட்டம்!
**************************************
மின்விசிறிக்கு 
 
நேராய்ப் படுத்ததால் 
சளி பிடிக்குமென்றாள்
அம்மா...
கரடிக்கும் ஒரு குல்லா 
வேண்டுமென 
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள்
அபி ......
தனக்குக் குளிரவில்லை என 
பொம்மைகள் மேல் போர்த்தியபடி !
**************************************
எட்டுமணி ரயிலுக்கு 
சீட்டு வாங்கிய 
அப்பாவைக் கடிகிறாள் அபி 
"ஒம்பது மணிக்குதானே 
ஜோஜோ வரும் 
சொல்லிக்கொள்ளாமல் 
எப்படிக் கிளம்புவது?.....  ,
ஜோஜோ தினம் வரும் 
பூனை.
 

ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

திங்கள், ஜனவரி 16, 2012

ஆசை ஆசை




அகன்ற 
மலையடிவாரம் ..
விஸ்தாரமாய் வீசிப்போக 
காற்றுக்கு 
 
ஆசை... 
விழுந்தால் 
விரிவாக வளரலாம் 
விதையின் ஆசை...
ஆனால்...
வென்றது  மனிதன் ஆசை...
கொடியும் தோரணமும் 
குறுக்கு சாலைகளுமாய் 
புதிய நகர் 
இனிதே உதயம்...

ஞாயிறு, ஜனவரி 15, 2012

உன்னை விட்டால்.


         

படபடத்த 
தாள்களிலிருந்து
எழுத்துக்கள் 
எம்பி 
       எம்பி 
முறையிடுகின்றன....
வசவுக்குள்   போடும்போது 
வலிப்பதாகவும் 
பொய்யில் சேர்க்கும்போது 
புண்ணாவதாகவும்
வறுமைக் காட்சியில் 
தமக்கே 
வன்முறை வளர்வதாகவும் 
காதல் வசனங்கள் 
கரைத்துவிடுவதாகவும் ....
****************************************
நீயாவது 
உணர்கிறாயே என்றேன் ! 

சனி, ஜனவரி 14, 2012

ஒளியே வாழி!

ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம் 
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

புதன், டிசம்பர் 14, 2011

இடிந்த வாசல்

காலம்கடந்து நிற்கும்
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்.....   

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...