ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

மனம் என்ற மண்ணாங்கட்டி


தாண்டிப்போவதென்று முடிவுசெய்யும் வரை
ஆரிக்கிள் வென்ட்ரிகிள்
தெரியாது தறிகெட்டுத் தப்பாட்டம் போடக்கூடும்
விரல்நுனி போலிருந்து
முழங்கைவரை ஆடிநடுங்கலாம்
பாதம் முழுக்க மரத்து வேரறலாம்
நேர்ப்பார்வைக்கு வழியின்றி
கருவிழி ஒதுங்கி இமை இழுத்து அரைவாசி போர்த்தலாம் 
மனம் என்ற அந்த மண்ணாங்கட்டியைக் 
கரகரவென உதிர்த்துவிட்டுவிட்ட
அவர்களைப் பாருங்கள்
கெட்டவார்த்தையென்ன
கல் என்ன
கலவரம் என்ன
ஜாம்ஜாமென நடத்தவில்லையா

வியாழன், பிப்ரவரி 07, 2019

ஒடுங்கிக் கிடக்கும் ஒளிப்புள்ளி

பக்கம் திருப்புகையில்
ஒன்று கூடிவிட்டது
அப்போதும் தொடர்கிறாள் பாப்புக்குட்டி
இடைவெளிகளைப் படிக்க இயலாது 
எழுத்துகளைத் துடைத்துக் கொண்டிருக்கிறேன்
தொடர்ச்சி தொடர்வதிலா இருக்கிறது 
என்ற கேள்வியோடு படியிறங்குகிறது
கருப்புப்பூனையின்
அலுத்த மியாவ்


****************************************************
இருள் பிடிக்கும் உனக்கு
எங்கே கிளம்புகிறாய்
இரு இரு
இருளை நீ தின்னுவாயா
இருள் உன்னைத்தின்னுமா
ஒளிப்புள்ளியால் அளக்க வருவேன்
இருளோ நீயோ எல்லாம் பிரம்மாண்டம்
ஒளிப்புள்ளி ஒடுங்கிக்கிடக்க
தின்றதும் செரித்ததும் எப்போது
நாளையும் அதே நீ
அதே இருள்
அதே விலகல்பாட்டு

************************************************************


கடைத்தேற்ற நீளும்

வாகனத்தை நிறுத்துமுன்
காலணிகளைக் கழற்றிவிடுமுன்
சின்னதும் பெரிதுமாகக்
கரங்கள் நீண்டுவிடுகின்றன
மெலிந்து குழிந்த கரங்களைப் 
பார்த்தும் பாராதுபோல் நடக்கப் பயின்று
 பயின்று
பழகியேவிட்டது நீளும் கரங்கள்
பற்றிய கற்பிதம்
இப்படியான ஏதோ ஒரு பொழுதில்தான் 

தவறவிட்டிருப்பீர்கள் 
உங்களைக் கடைத்தேற்ற 
நீண்ட கரங்களையும்

கூடுடைத்தல்

பூக்கத்தொடங்கிய 
மரமல்லியின் 
கீழ் நின்று 
எப்படியும் ஒன்றிரண்டு 
கூந்தல் கலைக்காதா காத்திருந்தபோது
கலைத்தது காற்று
நீளக்காம்புகளோடு 

தரையெங்கும் மரமல்லியின் பரிகாசம்

***************************************************
மிதிக்காமல் நகரச்சொல்லி
 நிழல் இறைஞ்சிக்
கொண்டிருக்கிறது
கவனி

*****************************************************
நூதன இழை
கட்டியிருக்கிறது
அகாலத்தையும்
அக்காலத்தையும்

ஒற்றிய பிழை

**************************************
பளிங்குக் கருங்கல் பாவிய 
பழைய வீட்டின்முன்வாசலில் 
விழுந்தழுதபோது
சிராய்ப்புத்தான் என்பது சமாதானமாக இருந்தது
கொஞ்சம் காயம் பட்டிருக்கலாம்
தழும்பாவது மிஞ்சியிருந்திருக்கும்
**************************************************
நெளிந்தபடியே முடிந்துவிடுவோமோ 
அஞ்சுகிறது 
கூடுடைக்க வலிமையறியாப்புழு

குவிந்த கண்ணொளி

தோல்விதான் என்று முடிவானபிறகும்
ஒரு புள்ளியில்தான்
என்றொரு சமாதானம்

******************************************
முணுமுணுப்பு
தொடங்கி
பெரு ஓலம் வரை
நுரைத்தே கடக்கிறது கடல்
நுரைக்கென்று அர்த்தமிலா கடல்
************************************************

இதழோரம் கசிந்துகொண்டிருந்தது
விஷமல்ல 
இளநகை
முன்பின் பார்த்திராத உனக்கு 
எப்படி அடையாளம் தெரியும்
பாவம்
****************************************************
ஒன்றுமில்லாத கையையும் குவித்து மூடி 
எதையோ போல் பாதுகாக்கும் 
பாப்புக்குட்டியின் கண்ணொளியில்
கருகிப்போகிறார்கள் 
எதையோ கைவிட்டவர்கள்
மிச்சம் யாரோ

****************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...