புதன், செப்டம்பர் 30, 2020

விரல்நுனிப்பூ

     கொஞ்சம்போல் தண்ணீர்சிந்தியது

மேசையைத் துடைக்கலாம்தான்
துணி எடுத்துவரவேண்டும்
சற்று யோசித்து
விரல்களால் தண்ணீரை இழுத்துவிட்டேன் ஏதோ ஒரு பூ மாதிரி
கிடந்தது
கூடக்கொஞ்சநேரம் ******************************************


யாரோ விதையிட
யாரோ நீரூற்ற
யாரோ ஆடுமாடுவிரட்ட
உன் கவலையெல்லாம்
குப்பை பற்றி


*********************************


உனக்குப் புரியும்
எனக் காத்திருக்கிறேன்
உன்னைத்தவிர
எல்லோரும்
ஆறுதல் சொல்லுமளவு புரிந்து கொண்டாயிற்று **************************************

யாரோ விதையிட
யாரோ நீரூற்ற
யாரோ ஆடுமாடுவிரட்ட
உன் கவலையெல்லாம்
குப்உனக்குப் புரியும்
எனக் காத்திருக்கிறேன்
உன்னைத்தவிர
எல்லோரும்
ஆறுதல் சொல்லுமளவு புரிந்து கொண்டாயிற்றுபை பற்றி

கூட்டலும் கழித்தலும்

     என்ன காரணத்தாலோ தொடர்பற்றுப்போன நண்பரைத் தேடிப் பேசியதும்

ஒரு துண்டு ரொட்டியைத் தெருநாய்க்குப் போட்டதும்
அன்புக்கும் கருணைக்கும் அடையாளமென்று மனம் சொன்னது
இவங்கள்ளாம்
எப்படித்தான் இருக்காங்களோ
ஒரு துளி அன்பும் கருணையுமில்லாமல்
தீன கருணாகரா ************************************
பளிங்குபோலச் சலனமற்ற முகங்களோடு
சாவு செய்தியைச் சொல்பவர்களைப் பார்க்க அச்சமாகிறது
என்கிறாய்
உன் கையிலிருக்கும் தீனியைச் சிந்தாது
கவனமுடன் பார்க்க முடிகிறவரை
கூட்டிக்கழித்துப் பார் கணக்கு சரியாகத்தான் வருகிறது

அன்பின் உண்டியல்

 இதுவரைக்கும் நடக்காததெல்லாம் நடக்கிறது இன்று விரிந்து பூத்திருக்க வேண்டிய அரை ரோஜாவை நேற்றிரவு ஏதோ கடித்துவிட்டது அணிலா எலியா என்ற வாதம் எங்களுக்குள்


*******************************************

மறந்துபோன மனிதர்களெல்லாம் அழைக்கிறார்கள்
பத்திரமாயிருக்கச்சொல்லி
குறுஞ்செய்தியாவது
அனுப்புகிறார்கள்
ஒரு தும்மல் வரும்வரை
கிடைக்கும் அன்பையெல்லாம் சேர்த்துவைக்கும் உண்டியல் இருக்கிறதுதானே

இருங்கள்

 நான் இருக்கிறேன் பசியோடு

நான் இருக்கிறேன்
நடுங்கும் மனதோடு
நான் இருக்கிறேன்
கடும்வேலைகளோடு
நான் இருக்கிறேன்
வேலையேதுமற்று
நான் இருக்கிறேன்
சொற்களற்று
நான் இருக்கிறேன்
கொதிப்போடு
நான் இருக்கிறேன்
வாதைகளோடு
நான் இருக்கிறேன்
யோசனையோடு
இருக்க வாய்த்திருக்கிறதே
எங்களைப்போல்
எவனும்
இழிசொற்களால் வாழ்வைக் குதறாவண்ணம்
இருங்கள் எப்படியேனும்

புன்னகையின் வால்

 உண்மைதான் மருந்து என்றார்கள்

ஒரு வில்லை போதுமா என்றேன்
குழைத்து விழுங்கு என்றாய்
உண்மைதான் மருந்து என்றார்கள்
ஒரு கரண்டி போதுமா என்றேன்
உள்ளுக்கு எடுப்பதல்ல என்றாய்
உண்மைதான் மருந்து என்றார்கள்
குழிக்கரண்டியிலிட்டுக் காய்ச்சியபடி
தேடுகிறேன்
எங்கே ஓடிவிட்டாய்


*********************************************
நினைவாக இருக்கட்டும் என்றொரு படமெடுத்தோம்
நீ அளந்து பொருத்த முயற்சித்த புன்னகையின் வால்
பார்க்கும்போதெல்லாம் கண்ணில் உறுத்துகிறது
ஒருவேளை பார்த்தால்
விளக்கம் ஒன்றும் தந்துவிடாதே

வாழ்வு

 

லேசான வெம்மை

லேசான இருள்

கொதிக்காத நெற்றியைத்
தொட்டுப் பார்த்துவிட்டு
சன்னல் வழி கை நீட்டு

சுட்டுவிரலால் தொட முடிவதுதான் வானம்

சும்மா பரிதவிக்காதே

அவரவர் இருக்கிறார்கள்

அவரவர் பக்கம்

சுட்டுவிரல் நுனி வானத்தைச்
சற்றே உறிஞ்சு

சிறு கீறல் ரத்தத்தை உறிஞ்சுவாயே
அது போல

அவ்வளவுதான்

வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்

 

ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

நீ நான் நடுவில் ஒரு ம்

அவ்வளவு நீளம் வரவில்லையென்றாலும் எப்படியும் எம்பிப் பிடித்து விடுவேன் விடுவதுதான் முடியவில்லை

************************************

எவ்வளவு தள்ளியும்
இருக்கத்தான் செய்கிறது வானத்துக்கு எல்லை

*****************************************

ஒவ்வொரு நொடியிலும்
நீ என்ன சொன்னாய்
என்ன செய்தாய்
எல்லாம் தெரியும் உனக்கு
என்னவெல்லாம் விட்டாய்
தெரியும் எனக்கு
****************************************

எனக்குப் பிடித்தது
ஏன்
உனக்குப் பிடிக்குமென்றா
உனக்குப் பிடிக்கக் கூடுமென்றா
எனில்
எனக்கு' எதுதான்
பிடிக்கும்

குவளை ஈ

 நிலைப்படி தாண்டி ஒரு அணில் நாற்காலியின் கால்களுக்கிடையே உட்கார்ந்திருந்த காட்சி

ஏதோ புகைப்படமாக்கும் என நினைத்தது மனது
இரு நிமிடங்களில் திடுக்கிட்டேன்
அதுவும்
வாலை ஆட்டியபடி ஓடியபோது சிரித்தது போலிருந்தது
அவ்வளவா
வீடடங்கி விட்டேன் *********************************************
நம்பிக்கையோடு இரு
நம்பிக்கையோடு இரு
சரி
நடுங்கும் குரலில் அதைச்சொல்லாதே

******************************************
கைக்கெட்டும் தூரத்தில் தேநீர்க்குவளை
இடப்பாகமா
வலதா
எடுக்கப்போவது எது என்று ஏகப்பட்ட வாதம்
காலி குவளை சிரித்துக் கொள்கிறது
என்னால்தானோ என்றபடி பறக்கிறது விளிம்பில் இருந்த ஈ

உடையும் வைரஸ்

 எப்போதும் முச்சந்தியில்தான் நின்றுகொண்டிருந்தோம்

வேண்டும்
வேண்டாம்
ஒன்றுமில்லை
ஆம்
இல்லை
ஒன்றுமில்லை
நடக்கும்
நடக்காது
ஒன்றுமில்லை
மூன்றில் ஒன்றைத் தேர்வு செய் என்ற நரகவேதனையிலிருந்து தப்பிக்க
என்னபாடு பட்டிருக்கிறீர்கள்
ஒன்றுமில்லை என்ற ஒன்றுமட்டும் இருந்தால் போதாதா என்று எவ்வளவு தவித்திருப்பீர்கள்
உங்களுக்காக தேவன் இரங்கினான்
உங்கள் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை என்ற நற்செய்தியைச் சொல்லிவிட்டு மறக்காமல்
இருபது வினாடி சோப்பு போட்டு கை கழுவிக் கொண்டான்.
நல்ல நுரை
அப்பாடா...
வைரசின் உறை உடைந்திருக்கும்

புலம்

 அழுத்துவது எது என்றே விளங்காமல் ஆழக்குழிகளுக்குள் விழுவதும் தக்கி முக்கி ஏறுவதும் பின்னொரு மாயக்கரம் தள்ளுவதும்....

உட்கார வைத்து மருந்தடிப்பது
ஒன்றும் புதிதில்லை
*****************************************


யார்வீட்டு குப்பையையோ வைத்து விளையாடக் கற்றுக்கொண்டார்கள்
யார் வீட்டு மிச்சத்தையோ உண்டு வயிறடக்க கற்றுக்கொண்டார்கள்
எங்கோ தூங்கவும்
எவருக்கோ அடங்கவும் கற்றது போலவே
எதற்கோ ஓடவும் கற்றுக்கொண்டு எங்கள் குழந்தைகள்
நாங்களாகி விட்டார்கள்

ஒன்றரை காக்கை

 நூறு டிகிரி மட்டும் தெரியும் வானத்தில் இரண்டு காகங்கள் இல்லை ஒன்றரை

இந்த சன்னலுக்கு
விளிம்புமில்லை
அந்த நூறு டிகிரியில்
ஒரு கவளத்தை இட
இல்லை
வீசக்கூட
மண்ணுமில்லை
தளமுமில்லை
ஆனாலும்
ஒன்றரை காக்கைகள்
என்னைப் பார்த்துப் போகின்றன தினமும்

கூடக்குறைய முடியாத தூரம்

 எப்படியும் உருட்டி உருட்டி

மாறி மாறி
மாறி உள்ளே
வந்துவிடும்படி
வட்டமாய் வடிவமைத்தாய் பார்
அங்கு நிற்கிறாய்
இதோ சதுர சதுரங்களிலிருந்து
ஒரே தாவு
வந்துவிடுகிறேன்
வட்டங்களின் உலகுக்கு
உருட்டிக்கொள் *************************************
சதுரங்களுக்கு
ஒரே எரிச்சல்
சற்றேனும்
கூடக்குறைய இருக்க முடியாத சமதூரங்கள்தான் எத்தனை சுமை
.1 கூட
கூட முடியாத இறுக்கமான வாழ்வில் என்ன இருக்கு ப்ரோ *******************************************
 பேர்

தனிமைக் காலம்

 கைப்பிடிகளைப் பற்றாது கதவு திறக்கச் சொன்னாய்

பெருமணிகளின் நாவுகள் ஆர்வத்துடன் அக்கணம் நோக்கிக் காத்திருக்கின்றன
அசையாது
தானாய்ப்பிளந்து வழிவிடும் கடலுக்குக்
காத்திருக்கும் கூட்டத்தில் தலைச்சுமையோடு நிற்கிறேன்

************************************************
வேப்பம்பூங்கொத்துகளை இழுத்து வளைக்க ஒரு கரமும் நீளவில்லை
தார்ஊற்றப்படாத சாலையின் செம்மண்
வாகன அழுத்தத்தில்
பறக்கவில்லை
யாருமே நடக்காத பகலுக்குப் பழகிவிட்ட தெருநாய்கள் திடீரென்று தென்படுபவனைத் திருடனாக்குகின்றன

தலைக்குள் மத்தாப்பூ

 கொஞ்சம் சின்னதுதான் ஆனாலும் ஒரு காகிதக்குல்லாவை தலைமேல் பாவனையாக வைத்திருக்கையில் வந்துவிடுகிறது சற்றே பாப்புவின் சாயல்

இது பாப்புவா நானா என்று கேட்டுக்கொண்டு வராதீர்கள்
அவளுந்தான் பட்டென்று கன்னத்தில் கைவைத்தபடி நானாகிவிடுகிறாள் ******************************************







என்னவோ சொல்லப்போகிறேன்
என்று காத்திருந்துவிட்டு
உதிராத வசவு
தலைக்குள் சுழலச்சுழலப் போனாய் பார்
மத்தாப்பூதான்

பிராயத்தின் குழல்

சமுத்திரக்கரைகள் எப்போதும்போல கிளிஞ்சலுக்குள் சூரியனை அடைக்கப் பார்க்கின்றன

விலாத்தெறிக்க
துடுப்பு தள்ளுகிறான்
மனிதன்
*****************************
எப்படிக் கூப்பிடுவது
நிற்பது அறிந்தும்
நில்லாது போகும்
உன்னை

சற்றே படபடவென்றிருந்திருக்கலாம் உனக்கும்
பாவம் **********************************

பிராயத்தின் காற்றில் மேல்கீழாகப் புரள்கிறது
முன்நெற்றி குழல்கற்றை
ஞாபகங்களோடு
ஒதுக்கிவிட்டுக் கொள்கிறாள்


ருசி

 ஒரு வெங்காய தோசை
எப்படி இருக்க வேண்டுமென
அவனுக்குத் தெரியும்

உணவகங்கள்தோறும்
வெங்காய தோசை
விரும்பிக் கேட்பதும்
குறைபாடுகளைப் பட்டியலிடுவதும்
வழக்கமானது

பிறகொரு நாள் அவன்
உளுந்து வடை பற்றி
சொல்லத் தொடங்கினான்

அவ்வாறே ரசம் குறித்து....

சொல்வதில் உள்ள ருசி
தின்னுவதைவிட
அதிகம் என்ற ரகசியம்
அவளுக்குப் புரிந்தபோது
அவன் வடைகறி வகுப்பெடுத்துக்
கொண்டிருந்தான் வீட்டில்

பரிசாரகர்களைப் போலப்
பணிவோடு கேட்டுக் கொள்ள
அவளுக்கும் தெரிந்து விட்டது.

உக்கிரத்தின் நதிமூலம்

 சுருள்பொட்டலமாகக் காத்திருக்கும் செம்பருத்தி வெண்ணிலவின் சிரிப்பினைக் காணாதும் பிரதி செய்து விடுகிறது மலர்ச்சியை

உன் உக்கிரம் ஒவ்வொன்றுக்கும்
நதிமூலம் எதுவோ

********************************************
சொப்புச்சாமானில்
பாவனையாகத்
தயாராகிக் கொண்டிருக்கிறது
விருந்து
பாவனையாகச் சாப்பிட்டு முடிக்கும்
விடுதலை நோக்கி காத்திருக்கிறாள் பாப்பு
பாவனையாகச் சமைத்து முடிக்கும்
விடுதலை நோக்கி அம்மா

அவள் முகம்

 அவளுடைய தேநீர்க்குவளையை நமது அபிப்ராயங்களால் நிரப்பாது இருப்போமாக

கண்ணுக்குத் தெரிவது
குவளையின் பூவேலைப்பாடுகள்
குழந்தைபோல் ஏந்தியிருக்கும் பாங்கு
மற்றும்
முகம்

*****************************************************
அதன்போக்கில் நகரும் நிலவை
மறைக்க வந்துவிடுகிறது
ஒற்றைமரம்
கிளையிடுக்கில் சிக்கிவிடாது
விடுவித்து மேலெழுகையில்
மறைக்கப் போதுமாயிருக்கிறது
மொட்டைமாடிகளின்
சின்டெக்ஸ் தொட்டித்தொடர்
************************************************
முகம் பார்க்காது திரியும் நாட்களிலும்
சுணங்க வைத்த
உன்சொல்லைச் சொல்லும்
எவர் குரலிலோ
எட்டிப் பார்த்துவிடுகிறாய்

**********************************************

வியாழன், செப்டம்பர் 24, 2020

அம்மாவுக்கு எல்லாம் தெரியும்

 நச்சு நச்சென அம்மியில் தேங்காய்ப் பத்தைகளை நசுக்கும் முன்னரே அம்மாவுக்குத் தெரிந்திருந்தது

அதிலிரண்டு பத்தை
கடைவழியிலேயே
அதாங்க இது
வாழைப்பழமாகத்
தொலைந்திருக்கும் என்று
அளவை ஈடுகட்ட
அதற்குமுன்பே
உளுந்து வறுத்திருந்தாள்

தோள்வீடு

 

மனையின் கீழ் போட
பூசைகளில் சேர்க்கவென
வாங்க முடியும்
படி நெல்
எப்படி அவித்து
அதே வாசனையை நுகர

********************************************

 


 

 

 

 

எங்கள் தோள்வலி
அறிந்த பைகளுக்குள்
என்னவெல்லாம் உண்டெனக்
கேட்டானொரு நண்பன்

வேறென்ன போ

அதுவே எம் சின்னவீடு என்றேன்

 

காலண்டர் சாமிகள்

 புதிய காலண்டர்களுக்கான 
 வேட்டையை 
நடத்த டிசம்பர் பூக்களே
நினைவூட்டிவிடும் மாமாவுக்கு 

பற்றுச்சீட்டில் தீபாவளி ஆடைகளை 
வாங்கிய கீதா சில்க்சைவிட்டு 
பொங்கல் துணிக்கு 
புதிய ராமன் ஸ்டோருக்குப் போவார் 
அவ்வப்போதாகக் கணக்கெழுதி மளிகை வாங்கும் 
செட்டியாரிடம் 
எப்பதான் காலண்டர் போடப் போறீங்க
என உரிமையுடன் சலித்துக்கொள்வார் 

யாரெல்லாம் சாமி காலண்டர் 
போட்டிருக்கிறார்களோ
அவர்களிடம் நிச்சயம் உண்டு ஒரு 
உறவாடல் 
அல்லது பற்றுவரவு 

இப்போதும் அவரைச் சுற்றி 
காலண்டர்களில் தொங்கும்  
அந்தப் பழைய சாமிகள்தான்
எச்சில் ஒழுகப் படுக்கையில் கிடக்கும் 
மாமாவுக்குப் பேச்சுத்துணை 

பழைய வருடங்களின் சாமிகளுக்கு 
ஆசாமிகள் அளவு பரிச்சயம் மறப்பதில்லை  

சிலேட்டுப்பூ

 

ஒரு முட்டை

அதைச்சுற்றி ஐந்து வளையம்

கீழே ஒரு வளைகோடு

சற்று நீட்டியும் பார்த்தாள் பாப்புக்குட்டி

திருப்தியாகவில்லை

கோட்டை எச்சில்தொட்டு

அழித்துவிட்டு

பலகையின் அளவு

வளையங்கள் பெருக்கிக்கொண்டே போனாள்

அத்தாம்' பெரிய பூவின்

வாசனை தாங்கவில்லை

சிலேட்டுக்கு

 

கரிப்புமணி

 

உப்பாக இருப்பதென்று ஆனபிறகு

கைப்பிடியென்ன

மேசைக் கரண்டியென்ன

 

*******************************************

 

கடல் எத்தனை நீளம்

எத்தனை ஆழம்

எத்தனை வேகம்

இருக்கட்டும்

இன்று அளத்தில் உறைந்தாலும்

இருந்திருக்கிறேனே

அந்த நீளத்தில்

ஆழத்தில்

வேகத்தில்

அப்படித்தான் கரிப்பேன்

 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...