ஞாயிறு, ஜூலை 21, 2013

எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது


யார் உன்னோடு இருக்கிறார்கள் ?
யார் உன்னோடு வருகிறார்கள்...
யாரும் யாரோடும் இல்லையாம்
தீர்மானமா ,திகைப்பா ,
அச்சுறுத்தலா ,அவமானமா
அன்றி ஆசுவாசமா....


யார் இருப்பதென்பதை
யார் தீர்மானிக்கிறார்கள் ..?
யாரோடு என்பதும்
யாரால் தீர்மானம் செய்யப் படுகிறது...
யாரின் நீ என்பதும்
உன்னின் யார் என்பதும் கூட
உன்னாலா,அந்த யாராலா,
அன்றி யாரோவாலா 


யாரும் இல்லாவிடிலோ
யாரோடும் இல்லாவிடிலோ
யாரின் துயரமது....


கேள்விகளின் வெள்ளத்தில்
மூழ்கி அபயக் குரலெழுப்புவது
யாரென்று மட்டும்
கண்டு கொள்ளாமல் நகருங்கள்

வேறு இடம் தேடி


பொறாமை பொன்னிறம் கொண்டதென்றும்
இறுமாப்புதான்
இளஞ்சிவப்பின் அடையாளமென்றும்
பரபரப்பின் குறியீடு பச்சை ,
மமதைக்கு மஞ்சள் ...
ஆறாக் குரோதம் ஆரஞ்சுப் பின்னணி
குழைவும் கோடுகளும்
வளையும்
சாத்தானின் ஓவிய வகுப்பில்
தலை மாணாக்கராய் இருப்பது
சுலபமல்ல ...,
ஒவ்வொரு கணமும்
மொட்டு விரியும் ரோஜாக்கொத்தைக்
கண்டுகொள்ளாமல் கடக்கும்
வண்ணம்
உன் புலன்களின்
திறமிழந்து பெற வேண்டும் அந்த இடம்

வெள்ளி, ஜூலை 19, 2013

கூழாகாக் கல்


 நிறமும்
தத்துவமும் தோற்றமும்
மாயையும் கண்டுபிடிப்பும்
வரிசையும் ஒழுங்கும்
பாடமும் படிப்பினையும்
கற்பனையும் காட்சியும்
....
ஏதாவதொன்று தேடும் உன் கண்ணில்
படுமுன்
உடைவதும் உருளுவதும்
தேய்வதும் திரள்வதும்
சிதைவதும் சிக்குவதும்
புதைவதும்
போய் ஒழிவதும் என
எதுவுமே பொருட்டாக இலா
வாழ்வு -இன்று
மழுங்கலே  அழகென்றானது
மறந்துவிட்டது -
சீராக இல்லாமல் கூராக இருந்தது

வியாழன், ஜூலை 18, 2013

பொய்யா மொழி

பசுந்தளிர் துளிர்த்தபடி
தலையசைத்துக் காத்திருக்கட்டும்

இதயம்
குயில் வந்து அமரலாம்
குழலோசை வருடலாம்


மகரப்பொடி சிதறத்
தேனருந்தி வண்டு இளைப்பாறலாம்
கதிரின் இளஞ் சூடும்
சாரலின் தீண்டலும் பழகலாம்
இன்னும் என்னென்னவோ
சொன்னதை மறவாது
நம்பிக்கையோடு
துடித்திருக்கிறது இதயம்
சீனத்தின் முதுசொல்
இவ்வூர்க் கதிருக்கோ
குயிலுக்கோ
யார் விரித்துரைப்பார் .....


வெள்ளி, ஜூலை 12, 2013

அவற்றைப்பேச விடாதீர்கள்

வண்ணத்துப் பூச்சி என்னென்ன
நிறங்களில் பறக்கிறது
ஆய்ந்து கொண்டிருந்தேன் ..
வண்ணத்துப் பூச்சி எங்கெல்லாம்
அமர்கிறது
என்ன வேகம் ..எத்தனை தூரம்...
கவனிப்பதே வேலையாய் இருந்தேன்
வண்ணத்துப்பூச்சியை
பிடித்துக் கொடுப்பவனை
நடுக்கத்துடன் பார்த்தவாறே
அட்டைப்பெட்டிக்குள்
இட்டு மூடியிருக்கிறேன்


பார்க்காத கலவைகளிலும்
அறியாத தீற்றல்களிலும் கூட
வண்ணத்துப் பூச்சியை
வரைய முடியும் என்னால்....
ஒருபோதும் சிறகு முளைக்காத
கூட்டுப் புழுவல்லவா  நீ
என நேற்றுப்  பார்த்த
வண்ணத்துப் பூச்சி ஏன்
கேட்டுத் தொலைத்தது ....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...