நந்தியாவட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தியாவட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 23, 2020

நந்தியாவட்டையின் ஒளிர்பச்சை

 உப்பு ரொட்டியின் உடைந்த தூளைத் தொட்டுத் தொட்டு ஒற்றிக்கொள்வது கூட மீட்சிதான் பத்திய நாவுக்கு

*********************************************************

தாழ்ப்பாளின் துரு
காத்திருக்கும் தனிமை
காலணியின் சேறு
வாசலோரத் தெருநாயின் அரைத்தூக்க
முனகல்
அதிகாலையோ
அந்திமாலையோ
உனக்கென்ன
**********************************
மறந்தேபோய்விட்ட
பழையவீட்டு
நந்தியாவட்டைக் கிளையை வளைத்தபடி
நிற்கிற கனவு
எத்தனை ஒளிர் பச்சை
அதன் இலைகள் என்கிறாய்
அதிசயம்போல்

செவ்வாய், அக்டோபர் 23, 2018

இலை தெறிக்கும் குருதி

அந்த வளைவுகளை 
ஒன்றுபோல யார் வரைந்தாரெனக்
 கேட்டுக்கொண்டேயிருப்பேன் நந்தியாவட்டையிடம்
அதென்னவோ 
பாலசந்தர் கதாநாயகியர் போல 
இப்படியும் அப்படியுமாகத் தலையசைக்கும்
***********************************************************************

விளக்கைப்போல 
என்னால் ஏற்றி அமர்த்திவிட முடியவில்லை 
நிலவை
***************************************************************
அனிச்சையாகப் பேசியபடியே 
கிள்ளிப்போட்ட இலைகள் 
குருதி தெறித்திருக்கும்போல
அந்திவானில்
நீ எப்போதும்போல் தான்
சிரிக்கிறாய்

***********************************************************
பூக்குமுன் காய்க்குமுன்
முள் நீண்டுவிடுகிறது
பூக்குமே
காய்க்குமே என்றபடி
கீறலைத் தடவி விட்டுக் கொள்வாயாக

****************************************************************
மண்ணை அளைந்து குழைத்து குழப்பி 
கட்டிய வீட்டுக்கு 
ஒற்றைச்சன்னல் வைக்கலாம் எனத் தோன்றியதும்
திரும்பவும் அளைகிறாள் அபி
அம்மை எழுந்துகொண்டாள்

***************************************************************
எத்தனை பெரிய நிலாவாக இருந்தாலென்ன
உன் வெளிச்சம் உன் அழகு
எடுத்துச்சொல்லிக் கூட்டிவரவேண்டும்
எங்கோ முடங்கிப் போன
நட்சத்திரங்களை
****************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

திங்கள், அக்டோபர் 15, 2018

மழையை நேசித்தல்

ஒரு குட்டிப்புயலை மடித்து 
முகம் துடைக்க ஏதுவாக வைத்தாயிற்று
உன் சாதனை என்ன 
என்று கேட்கும் வரலாற்றில் பொறிக்க
விசிறியடிக்கும் தருணமெல்லாம் 
திரைமறைவுக்காட்சி

*****************************************************************
ஒரு சுகந்தம் பரவும்போதெல்லாம்
மூக்கடைப்பில்
அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள் விலகும்போது
வழக்கமான துர்க்கந்தம்
சிறு தூறல் விழுங்கால்
தவித்தபடி துணிவாரும் கடமை
முதல் நந்தியாவட்டையை அணுகும்போது
காலில் ஏறிவிடும் கட்டெறும்பு
******************************************************************
இதை மட்டுமே என்று முடிவு செய்யாதவரை 
எதையும் நேசிக்கலாம்
வருவது போலிருந்து ஏமாற்றும் மழை உட்பட
********************************************************************
பாதை நீண்டிருக்கிறது
அங்கோர் சிறுமலர்
அதுதான் முடிவெனும் புள்ளியில் 
தலையசைக்கிறது
வண்ணச்சீறடிக்கு வலி தெரியவில்லை



செவ்வாய், நவம்பர் 21, 2017

கிணற்றகல இருள்

இருளை விசிறுகிறவர்கள்
ஒளியைக் கைப்பற்ற 
உங்களைத் தூண்டுகிறார்கள்
அது விதியாகத்தான் இருக்கட்டுமே

**********************************************

கிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த 
இரண்டு 
நந்தியாவட்டைகள் மட்டும்
இன்னும் வெளிச்சமாக

**********************************************

தூவானத்துக்கென்று
தனி நிறம்
உங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி

********************************************************
நினைத்தது நிஜம்
நினைக்காததும்
இங்கிருப்பதெல்லாம்
இங்கில்லாததும்தானே

*****************************************************

செம்பருத்தியின் அடர்சிவப்பு காணாதவனே
சாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி 
ஏது வழியுனக்கு

***************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...