சனி, செப்டம்பர் 29, 2018

நதியில் தேயும் கூழாங்கல்

ஒருகை ஓசையைத்தான்
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
என்னிரு செவிகளும்
வேறு வேறு தளங்களில் கவனிப்பவை

கண்களோ முழுவட்டச்சுழல்

தலைசுற்றிய ஒளிவட்டத்தின்
ஒவ்வோர் சுடரின் அலைநீளமும்
ஆதியந்தம் அறியாது

என்ன ஒன்று
என் அழுக்குத் தளராடையும்
அள்ளிமுடிந்த கொண்டையும்தான்
எனக்கே என்னை நினைக்கையில்
தோன்றுகிறது

அளவுத்திட்டத்தில் சமைத்த கரண்டிக்கு
ஒருநாளும் கை குவித்தறியா சுவை
மனப்பாடம்
என்
கணிணியோ எனக்கு முன்
பைக்குள் நுழைத்துக்கொண்டு
படியிறங்கும்

என்னுடையதெல்லாம்
என்னுடையதல்ல என்பதறியும்
என்கடனட்டையின் காப்பு எண்

இருந்தாலும் கடையிதழில் அலட்சியம்
வழியவிட இன்னும் வரவில்லை உன்னைப்போல்

போகட்டும்
இப்படியே நதியில் தேயும் கூழாங்கல்

ஏப்ரல்2018 மங்கையர் மலர்

உதட்டோர ரத்தம்

திறந்த காயத்துக்கு
கத்தியால் மருந்திடவே
படித்த பரம்பரை
அரிவாளால் பூப்பறிக்கும்
பனித்துளியையும் விசும்பின்
கண்ணீரெனக் கசிந்த கதை
பூ மறக்கும்
கையோ கத்தியோ இங்கேதானே வரப்போகிறாய்
என சத்தமின்றிச் சிரித்தபடி காத்திருக்கும் மயானம்
அங்காளி உதட்டோர ரத்தத்தை
கைக்குட்டையால் சரிசெய்துவிட்டு

 நாவைச் சரியாக 
தொங்கப்போட்டுக் கொள்கிறாள்




மழை மழை....

நீங்கள் புறக்கணிப்பீர்கள் எனத்தெரிந்தாலும் 
காற்றோடு போராடிக்கிழிந்து 
உங்கள் கொல்லை வாழையிலேயே 
தங்கிவிடுகிறது இலை
ஆறுதலாக இரண்டு துளிதெளித்து 
நகர்கிறது மழை

****************************************
மழையின் குளுமை மனங்கொள்ள
வா
என்னை ஓரமாக எடுத்து வை 
யாரைக் கூப்பிடுவதெனத் 
தவிக்கிறது தொட்டிச்செடி

****************************************************
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவது போலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது 
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்
(nandri TK Kalapriya)
****************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...