சனி, ஜூன் 16, 2018

கனமுள்ள மடியே வாழ்க

நீங்கள் சரியாக யோசிக்கவும் 
செயல்படவுமான திறன் வளர்த்துக்கொள்ளுங்கள்
ஓட்டை வண்டிகளில் சென்று
ஐம்பது நூறுக்கான 
வாய்ப்புதருபவராகவே வாழ முற்படாதீர்
ஆயிரம் கோடிகளை அற்புதமாக
எடுத்துச்செல்ல வாய்ப்பு உண்டு
கசங்காத கோட்டுகளோடு
உங்களுக்காகப் பேச ஆள்வைக்கலாம்
மற்றபடி மாண்புகளைக் கருதாது
வாழத்தெரியும்வரை
மடி உடனே தெரிவதே காப்பு



பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

நேசத்துக்கு விளக்கவுரையை
அவள் ரத்தத்தால் எழுதும் 
சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன்
வெம்பும் வாழ்வுகளைப்பற்றி
ஒருநாள் பேசிக்கலைவோம்
கல்லெறிதலின் களைப்புத்தீர
நகைத்துமுடிக்க
பெண்ணுடல்
பெண்ணுறுப்பு
பெண்ணுயிர்
எதையாவது பேசுங்கள்
நாளையும் ஆயிரம் ஆயிரம்
பெண்கள் வாசல் தாண்டி
வருவார்
உங்கள் பார்வையால்
பழிச்சொல்லால்
இழிசொல்லால்
வல்லாங்கால்
சிறுமை சேர்க்காத அறிவு
சித்திக்கட்டும் உமக்கு
இது வினோதினிகளின்
அஸ்வினிகளின்
ஆராயிகளின் ...
....... தவித்த குரல்



அறுக்கப்படும் எண்கள்

எண்களோடு இவ்வளவு பிணைக்கப்படும் 
உங்கள் வாழ்க்கை என்று 
நீங்கள் நினைத்தறியா காலம் ஒன்றிருந்தது
மனப்பாடமாக சொல்ல முடியா அளவுக்கு 
உங்கள் நட்பும் உறவும் 
எண்களின் அடுக்கில் செருகப்படுவார்கள் 
என்றே நினைக்கவில்லை
அப்புறம் இதுவும் தொடங்கியது
எங்கெங்கும் உங்கள் முகம்
உங்கள் அங்க அடையாளம்
உங்கள் பெயர் எல்லாம் 

எண்ணால் மட்டுமே
உயிர்ப்பிக்கப்படும் உறைநிலைக்குப் போனீர்கள்
ஒரு எண் தவறி
உறவுகள் உருவாகின
முறிந்தன
கோபம் கொண்டன
கேவலப்பட்டன
எப்போதும்போல எல்லாம் சுபம் 

என்றே நீங்களும் 
எண்களை
இரத்தமும் நரம்புமாகப் பிணைத்துக் கொண்டீர்கள்
அது அறுத்தெடுக்கப்படும் 

சதையென்றபோது
உங்கள் அவஸ்தையைத்தான் காணச்சகியவில்லை



வியாழன், ஜூன் 14, 2018

கிருஷ்ணனும் ருக்மிணியுமானவர்கள்

சில பொம்மைகள் வேண்டும்
இப்படிப்பேசாதே
இப்படி உளறாதே
இப்படித் திருடாதே
இப்படி புறவழி செல்லாதே 
இப்படி மனதறிந்து பொய்யுரைக்காதே
என்று நீங்கள் சொல்ல விரும்புவதையெல்லாம்
சொல்ல
சில பொம்மைகள் வேண்டும்
குறிப்பாக
உங்களை மாற்ற முயலாத அளவில்
எங்கு கிடைக்கும்?


**********************************************************

பூக்கள் உதிர்ந்தன
இலைகள் உதிர்ந்தன
மீண்டு வருவனவற்றின் 

சாட்சியாய் நிற்பவற்றை விரும்பாத ஊரின் நடுவே
நிற்கத்தான் செய்கின்றன
மொட்டை மரங்கள்


******************************************************

எருக்கம்பூக்கள் கொத்து கொத்தாய்
 மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தன
சூடியிருந்த மயிற்பீலியை எடுத்துக்
காதுகுடைந்து கொண்டிருந்தான்
கிருஷ்ணன் 
தன் பீதாம்பர நிறத்துக்கு
எருக்கு பொருந்தலாமென்ற ஆவலில்
வளைத்துப் பறிக்கச் சொல்கிறாள் ருக்மிணி

கிழிந்த கொசுவ மறைப்பு நகர்ந்த எரிச்சலில்
ஓங்கிய கையோடு துரத்துகிறான்
ஒரு குவளை தேநீருக்கு வழியிலா
நகரின்
அடுத்த சந்து திரும்பிவிட்டது
அவர்கள் கிருஷ்ணனும் ருக்மிணியுமாகினர்


படம்-இணையம் 




நீர்த்தடம்

மேலிருந்து காண்பவர் சுமையின் கனம் அறியார்
நடையின் தொலைவறியார்
வலியின் தளர்வறியார்
உடன் நடக்கவும் சுமக்கவுமான 
துணையிலா நெடும்பயணம்
பழகிய பாதையில் அனிச்சையாய்
நடப்பவளுக்கும்
உழைப்பின் உயர்வு கோஷமெல்லாம் தெரியாது
அவள் அறிந்ததெல்லாம் நீர்த்தடம் தேடியலைதலொன்றே


படம் RAVI PALET

விடைபெறுவதும் புதுப்பிறப்பும்

அடுக்க முடிவதெல்லாம்
 அடுக்கி வை 
அதற்கப்பாலும் படியும் தூசி

***************************************************
பூட்டிய நிலைக்கதவு மேலெல்லாம் 
நூலாம்படை 
அக்கரையிலிருந்தே பாவனையாய் 
நீ துடைப்பது யாருக்குப் புரியும்

*****************************************************
ஒரு ஆண்டு நாட்காட்டியின் 
தாள்களைக் கொண்டு மட்டும் 
அமைந்திருக்கவில்லை
நம் வாழ்நாட்களைக் கோர்த்த மாலை அது
இருப்பில் இருப்பதை அறிவிக்காது 
இளநகையோடு நகர்கிறது
குள்ளமாகா உள்ளங்கொண்டு 
உயரச்சொல்லியபடி கடைசித்தாளை உதிர்க்கிறது
மறந்திருக்கும் எண்ணங்களை
பிரிந்திருக்கும் உறவுகளை
உடைமைகளை
உரிமைகளை
கடமைகளை
கனவுகளை நினைவூட்டியபடி நகர்கிறது
பாதையோரக் குழந்தையாக நின்றுகொண்டிருக்கும் 

நீங்கள் கையசைத்தால் 
குதூகலமாக எட்டிப்பார்த்து ஆட்டும் ஒருவராக
சலனமின்றி பார்த்திருக்கும் ஒருவராக
கண்மூடித்தூங்கியபடி 

உங்கள் இருப்பை அறியாத இன்னொருவராக
எப்படி வேண்டுமாயினும் அது கடக்கட்டும்
வாருங்கள் 

நாம் குன்றா மகிழ்வோடு 
கையசைத்து ஆடுவோம்


2017 டிசம்பர் 25

எப்படியும் உதிரத்தான் போகிறது 
என்ற சமாதானம் எடுபடவில்லை 
வலுக்கட்டாயமாக நீளும் கிளையை 
ஒடிக்கும்போது 

எவரையும் எதையும் விடுவதில்லை 
எல்லைக் கோடுகள்

**********************************************************

வரிசை மாறாமல் நிற்கத் தெரியாத 
நட்சத்திரக் கூட்டத்தைக் 
கட்டி மேய்க்க வாய்க்கிற 
குளிர் முன்னிரவுக்கு 
தனி மணம் 
சுற்றிலும் எந்தக் கொடியும் செடியும் 
ஆடா இடத்திலும் 
ம்



********************************************************

சிலுசிலுவென்று வீசும் காற்று
நின்று பார்த்துப் போகிறது
எரிந்தும் எரியாத மனசை
சுடர் சுடுமா ஒளிருமா
என விளங்காது 
புறப்பட்டபோது அதற்கும் வியர்ப்புதான்


*****************************************************
நில்லென்று சொல்கையில் நிற்கவும் 
செல்லென்று சொல்கையில் தொடரவும் 
செய்யலாம்தான் 
வேறென்ன செய்வதென யோசியாது 
திருகவும் நிறுத்தவுமான 
பொம்மையாக சிந்தை மாற்றி
சாவியை உன் கையளித்தால்



2017 டிசம்பர் 23

அலை நனைத்த பாதங்களில்
நீலம் இருக்கலாம்
கடலே இருக்குமென கருதும் உலகே 
உனை என்ன சொல்ல

***********************************************
விம்மித்தாழும் மனசுக்குள்ளிருந்து
குதிக்க நினைக்கும் கேள்விகளுக்கு 
தயாராக வைத்திருக்கிறாய் பூச்சிமருந்து
இலைப்பேன்களோடு 
சுருட்டி வைத்தாயிற்று


*******************************************************

ஒரு மலர் இருப்பது 
தெரியுமளவு இடைவெளி உண்டு
காடென்றாலும்
************************************************************************





   

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...