வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 18, 2017

செய்



அந்தந்த நிமிடத்தில் வாழ்வதன் சுமை 
தாங்க இயலாதிருக்கிறது
இதற்கு முந்தைய நிமிடத்திலும் 
இப்படித்தான் தோன்றியது என்பதை 
நினைவில் கொண்டுவந்து 
ஆறுதல் கொள்ள முயற்சிக்கிறீர்கள்
அது எவ்வளவோ இலேசாக இருந்ததே 
எனச்சொல்லியபடி
இந்த நிமிடத்தை இறக்க முற்படுகிறீர்கள்
சங்கிலி எங்கு பிணைத்திருக்கிறது 
என்பதைக் கண்டடைவதற்குள்
இதுவும் முந்தைய நிமிடமாகிவிடுகிறது


*************************************************************************
விருப்பம் என்பது விருப்பமற்றிருப்பதற்கு 
அருகில்தான் இருக்கிறது
ஒற்றைப்படை இலக்கத்திற்கு எதிர்ப்புறமாக
இரட்டைப்படை இலக்கத்தினை
அமைத்திருக்கும் குறைந்தபட்ச
இடைவெளி கூட இல்லாமல்
அடுத்தடுத்தே இருக்கிறது
அடுக்கு செம்பருத்தியின்
இதழ்களைப்போன்ற அமைப்பில்
எது விருப்பம்
எது விருப்பமின்மை என்று
அடையாளம் காண்பதை 
வாழ்நாள் வேலையாகச் 
செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாய்
செய்

***********************************************************************************



செவ்வாய், அக்டோபர் 04, 2016

பெயரிலாக் குளங்களும் பெயருள்ள மீன்களும்

எந்தக் குளத்தில் 
நீந்திக் கிடக்கிறோமென 
மீன்கள் அறிவதில்லை.
நீங்கள் வைக்கும் பெயரையோ
செய்யும் அசுத்தத்தையோ
பொருட்படுத்தாமல்
வாழ்வதை விளையாட்டாகவே தொடர்கின்றன
முறையிடுவதுமில்லை
கிளர்ச்சிசெய்வதுமில்லை
உங்கள்தூண்டிலில்
அல்லது ஒருபறவையின் அலகில்
சிக்கும்வரை



வியாழன், மே 05, 2016

சொந்த முற்றமிலா வாழ்வு

முல்லை மலர்வதும்
வாழை மடலவிழ்வதும்
பார்க்குமளவெல்லாம்
வாய்க்கவில்லை
சொந்த முற்றமின்றி 
சோற்றுக்கவலை துரத்தும்
வாழ்வில்

வெள்ளி, டிசம்பர் 06, 2013

நானும் நானல்ல

டிசம்பர் 6அதீதம் இணைய இதழில்


 நானொரு விருட்சம், நான் உதிரும் இலை,
மணம் கசியும் சிறுமலர்,
கனிந்து  வீழும்  பழமும் ,
அதனுள் கிடக்கும் வித்தும்
என ஏதோவொன்றாக  சித்தரித்து
வந்தபின் 

சுற்றிலும் நெளியும் சர்ப்பங்களைக்
கடக்கவியலா கானுயிர்
ஆனேன்  

நெளிந்து வளைந்த சர்ப்பம் 
பார்த்தபடி கடந்தது வாழ்வு ..

சில நாள் அச்சம்..
சிலநாள் அருவறுப்பு ..
சிலநாள் ஆர்வம்
சிலது வெகு நீளம்
வெகு சிறியது
வெகு அழகு கூட
நிறங்களோ வேறு வேறு
புள்ளிகளும் வரிகளும்
செதில் தீற்றல்களும்
ஒன்றுபோலில்லை மற்றது 


அரவம் பார்ப்பது வழக்கமாகிப்போனபின்
ஒருநாள்
நான்
அமர்ந்திருந்த மேசையில் சிந்தியிருந்த
துளி விஷத்தை
நானே துடைத்தேன் யாருமறியாமல்
அல்லது அவ்வாறு நம்பியபடி...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...