
இப்படி ஒரு வினாவை
நான் எதிர்கொண்டதேயில்லை...
கனவு என்றால் என்ன...?
சொல்லோ ,பொருளோ புரியா வினாவோ,
அங்கதமோ எனக் கடக்க முடியாவண்ணம்
உன் குரல் உறுதியாக மீண்டும்...
கனவு என்றால் என்ன....
உலகாயத விடையா ,தத்துவமா,
மருத்துவமா,ஆன்மீகமா
எப்படி விடையிறுப்பது ..?
சொற்களைத் தேடினேன்..
மிரட்சியில் தலைதெறித்தது
அவைதானாம்..
கோடிட்ட இடங்களாகிவிட்டன
என் கவிதைகள் ....
கையடக்கமான தலையணை
நழுவிக் கரைந்தது...
கனவின் தடம் அறியாதவளே
நீ
உறக்கம் தொலைத்தாயா...
உறங்கியே தொலைந்தாயா...
அப்பொழுதுகளிலும்
கனவினை
அம்மாவின் சீலைத் துண்டாகக்
கைக்குள் சுருட்டியே
கிடத்தலன்றோ மனித வழமை...
ம்ம்ம்ம்ம்
உன் ஊரை நான் கேட்கவேயில்லை....