நட்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 09, 2019

கண்ணீர் நதிசூழ் அறை

ஒரு மழைமாலை
இருளும் குளிருமாக இருக்க வேண்டும்
நீ அண்ணாந்து பார்த்தவுடன்
நட்சத்திரங்கள் மின்ன வேண்டும்
அப்புறம் மொறுமொறுவென ஏதாவது
கொதித்த மணத்தோடு தேநீர்
சரி
உனக்கே தெரியும்
இதெல்லாம் இதே நியமத்தில் வராதென்று
மைக்கை மாற்றிக்கொடு
வேற...வேற...

******************************************************
இடுங்கிய கண்ணும் உதடுமாகச் சிரிக்கும்
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை 

நேரலையாகப் பார்க்க முடிகிறது
மனசு பொங்கினால் போதாதா
கண்களும் சேர்ந்து கொள்ளணுமா
" அப்பா....காமராவைச் சரியா வைங்கப்பா....
முகத்தைத்தவிர உங்க ரூமெல்லாம் தெரியுது..."
சிணுங்கிச் சிரிக்கிறாள் பெண்ணரசி
இனி
பக்கத்திலொரு கைக்குட்டை 

வாகாக வைக்க வேண்டும்
*********************************************************

செவ்வாய், அக்டோபர் 23, 2018

இலை தெறிக்கும் குருதி

அந்த வளைவுகளை 
ஒன்றுபோல யார் வரைந்தாரெனக்
 கேட்டுக்கொண்டேயிருப்பேன் நந்தியாவட்டையிடம்
அதென்னவோ 
பாலசந்தர் கதாநாயகியர் போல 
இப்படியும் அப்படியுமாகத் தலையசைக்கும்
***********************************************************************

விளக்கைப்போல 
என்னால் ஏற்றி அமர்த்திவிட முடியவில்லை 
நிலவை
***************************************************************
அனிச்சையாகப் பேசியபடியே 
கிள்ளிப்போட்ட இலைகள் 
குருதி தெறித்திருக்கும்போல
அந்திவானில்
நீ எப்போதும்போல் தான்
சிரிக்கிறாய்

***********************************************************
பூக்குமுன் காய்க்குமுன்
முள் நீண்டுவிடுகிறது
பூக்குமே
காய்க்குமே என்றபடி
கீறலைத் தடவி விட்டுக் கொள்வாயாக

****************************************************************
மண்ணை அளைந்து குழைத்து குழப்பி 
கட்டிய வீட்டுக்கு 
ஒற்றைச்சன்னல் வைக்கலாம் எனத் தோன்றியதும்
திரும்பவும் அளைகிறாள் அபி
அம்மை எழுந்துகொண்டாள்

***************************************************************
எத்தனை பெரிய நிலாவாக இருந்தாலென்ன
உன் வெளிச்சம் உன் அழகு
எடுத்துச்சொல்லிக் கூட்டிவரவேண்டும்
எங்கோ முடங்கிப் போன
நட்சத்திரங்களை
****************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

செவ்வாய், டிசம்பர் 19, 2017

சன்னத நட்சத்திரம்

இன்று ஒரு நட்சத்திரம் கேட்கிறேன் 
மௌனமாய் நகர்கிறது வானம் 
உன் முகம் போலவே எதையும் காட்டா இருள் 

சன்னதம் கொண்ட சந்தர்ப்பங்களை 
மீள்நினைவு கொள்ளவும் அறியாது 
மௌனமாகக் கல் பொறுக்கிக்கொண்டு 
அமர்ந்திருப்பாள் கனகா அத்தை
யாருமிலாத பொழுது ரகசியமாகக் கேட்பாள்
அப்பிடிஎல்லாமா கத்தினேன்
தலையசைத்தாலும்
அவள் கண்களில் தெரிவது திருப்தியா
அவநம்பிக்கையா
இன்றுவரை புரியவில்லை 


என்னால் முடிந்தது
அமாவாசை வானிடம் நட்சத்திரம் கேட்பது
பின்
மௌனத்தை எதிரொலிப்பது



வியாழன், ஆகஸ்ட் 31, 2017

நட்சத்திரப் பிடாரி

பாற்சோறு உண்ட இரவின்
நினைவில் 
பருப்பு சோறுக்கும் நிலவைத் 
தேடியவள்தான் 

எண்ணிக்கொள்ள ஆள்வைத்து 
குழல்விளக்கைத் தின்றவனை
அச்சத்துடன் பார்த்தவள்தான் 
இப்போதெல்லாம் 
நட்சத்திரங்களைத் தின்கிறாள் 

சட்டினியில் தட்டுப்படும் தேங்காய் 
நாருக்கோ
குழம்பில் நீளும் ஒற்றை முடிக்கோ 
தட்டெறியப் பழகாதக் கட்டுப்பாட்டோடு 
சொரசொரவேன்றிருக்கும் 
நட்சத்திரங்களைக் கடித்து 
விழுங்குகிறாள்

எத்தனை பேர் தின்றாலும் 
தீராது உடுக்கூட்டம் 
உங்கள் இதழ்க் கடைப் புன்னகையை 
அவள் நட்சத்திரமாக்கினாள்
சற்றே சாறு வழிந்தபோது 
பக்கவாட்டுப் பற்களை 
நீட்டி வரைந்தாயிற்று 

ஆனந்தவிகடன் சொல்வனம்-மே 2017


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...