சனி, அக்டோபர் 30, 2021

சொத்து பத்திரம்

 அலைபேசி ஒலித்ததே

எடுத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறவர்கள்

இங்கு நிறுத்துவார்கள்
நாலு கட்டிடம் தள்ளியிருக்கும்
நிறுவனத்துக்கு வருகிறவர்கள்
இங்கேயே இறங்கிக்கொள்வார்கள்
எவர்சில்வன் கேனும்
மூன்று நான்கு சர்க்கரையில்லா தேநீருக்கான
பிளாஸ்குகளுமாக
தனது படுபழைய சைக்கிளை நிறுத்திவிட்டு முகம் துடைப்பவரின் நேரம்
பதினொன்று
எப்படி வளர்ந்ததென்று
தெரியாமல்
வெட்டவும் மனம் வராமல்
மனைக்காரர்
அவ்வப்போது மௌனமாய் நின்று போவார்
யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளாத
அந்த வேப்பமரத்துக்கு
கரிந்து கொட்டும்
தன் இலைகளைப்பற்றி
யாரிடமாவது இரண்டு சொட்டுக் கண்ணீர்
விட மாட்டோமா என்ற தவிப்புதான்
காற்றே இல்லாதபோதும்
அப்படியும் இப்படியுமா ஆடிக்கொண்டிருக்கிறது
யாரோ உடுக்கு அடிப்பது போல

காட்சித் தட்டு பொம்மைகளின் உரையாடல்

 யாரும் வராத வீடுகளில்

சோபாக்களின் மேல்
நாற்காலிகள் கால் நீட்டிக்கொள்கின்றன
அடுத்தடுத்து தொங்கும்
புகைப்படங்கள்
திரும்பி
எதிர் எதிராக உட்கார்ந்து
கதைக்கத் தொடங்குகின்றன
காட்சிப் பேழையின் பொம்மைகள்
கைகளை உதறிச் சொடுக்கு எடுத்துக் கொள்கின்றன
அதிலொன்று
துறுதுறுவென்று
கேட்கிறது...
மறைமுகமா என்ன சொல்றாங்க
இந்தக் கதவு திறக்க முடியுமா இல்லையா
முன்னாளில் அவ்வீட்டுக் குழந்தை விளையாடி
இப்போது காட்சித்தட்டுக்குக்
குடிவந்துவிட்ட கரடி பொம்மை
இரு இரு...
நானே அவனுக்கு விசா கிடைக்குமோ இல்லையோன்னு இருக்கேன்...
வீட்டுத்தலைவி மெல்ல வந்து சின்னத்திரைக்கு உயிரூட்டுகிறாள்...
போச்சு..
ஒண்ணும் புரியப்போறதில்லை
ஊரடங்கா..
ஊரடங்கு மாதிரியா
கிசுகிசுத்துக் கொள்கின்றன பொம்மைகள்

நூல் இற்றுப்போன மணிமாலை

 துடியான தெய்வங்களைப் பின்மாலை இருளிலோ

நள்ளிரவு கடந்துமோ

வழிபட்டுக் கிடக்குமொரு மரபில்

படிகள்தோறும் ஏறி இறங்குகின்றன கால்கள்
யாருக்கும் இல்லாத வெட்கம் எனக்கென்ன
கிறீச்சிடுகின்றன கதவுகள்
கறை நல்லதாம்
பத்து ரூபாய் போதுமாமே
மிச்சமெல்லாம் வரவுதான்
***********************************
சற்றே பெரிய சட்டையாய் வாங்கிவைக்கும்
நினைவிலேயே
சன்னல் திரை தைத்தாயா அம்மா
போதாமையை எதிர்கொள்ள கைநிறைய யோசனைகளை வைத்திருந்திருக்கிறாய்
நூல் இற்றுப்போன மணிமாலையாக
உன் வாழ்வு
நெடுக சிதறிக்கிடந்தன
சொத்து என சொல்லிக் கொள்வாரின்றி
******************************************************
ஒரு குரல்வழிச் செய்தி வந்ததாக
அலைபேசி சொல்கிறது
சற்றே தாமதமாக
திறக்குமுன் யாவர்க்குமாக நீக்கப்பட்டதென
அதே அலைபேசி சொல்கிறது
அதைப்போலவே
எல்லாம்
தகவலெனக் கடந்துவிட முடியாத மனம்
நள்ளிரவிலும் தட்டியெழுப்புகிறது
என்னவா இருக்கும்
இந்தபூமி விற்பனைக்கல்ல

 பள்ளியைவிட்டு வெளியே வந்தவுடன்

தின்பண்டக்கடைகள்
தெருமுனைதோறும்
குட்டியானைகள்
வெங்காயமோ
பூண்டோ
செவ்வாழையோ
மரவள்ளியோ
வைத்துக்கொண்டு
சிலேட்டுகளில் எழுதிய விலைநிலவரத்தோடு
மருத்துவமனைகளின் வாசலில்
பழைய பாட்டில்கள்
துண்டுகள்
கேன் டீ
இடியாப்பக் கூடைகள்
வீடு திரும்பு
வீடு திரும்பு
என்று
கூவுகின்றன
இன்ன பிற கீரைக்கட்டுகள்
பீங்கான் சாடிகள்
மல்லிகைச்சரங்கள்
இதையெல்லாம்
வாங்கிக்கொண்டு எங்கேதான் போக
வாங்காமல்
எங்கே போக

தீக்குச்சியின் ஒரு முகம்

 புதிய தீக்குச்சியால்

ஒரு முகம் ஒரு விளக்கு
அவ்வளவுதான் ஏற்ற முடிகிறது
அவ்வளவு சிறிதாக
அவ்வளவு விரைவாக
எரிந்து முடிகிறது
சிலநேரம் அந்த ஒற்றைச்சுடர்
சுடரும்வரை கூட தாங்காது கை உதறி விடுகிறேன்
தேய்த்து வைத்த சிம்னிகளின்
மண்ணெண்ணெய் ஊறிய திரிகளுக்கு
நல்ல விளக்குக்கு ஏற்றிய குச்சியால்
ஏற்றக்கூடாதென்பாள் ஆத்தா
எல்லாம் ஒளி
எல்லாம் வெளிச்சம்
எல்லாம் நம்பிக்கைதானே
என்றாலும்
விளக்கம் சொல்லா விலக்கம் வைப்பாள்
இந்த தீப்பெட்டி
ஒவ்வொரு முகத்துக்கும் விலக்கம் வைக்கிறது
ஐந்து குச்சிகள் என்ற எண்ணிக்கையில்
விலக்கம் கொள்ளும் மனசு
ஒரு முகமும் அழகுதான் என்கிறது

வியாழன், அக்டோபர் 28, 2021

சீட்டு

 உறக்கமின்மையைச் சொல்லி

ஏதாவது மாத்திரை வேண்டி
நிற்கிறான் இளைஞன்
கையளவு இடைவெளியில்
குனிந்து பார்த்து
மறுதலிக்கிறாள்
சீட்டு வேண்டுமென்று
தளர்ந்தும்
அடி அடியாக நகர்ந்தும் உழல்கிற
அவனைப் பின்தொடர்கிறது மனசு
மாத்திரைப்பெட்டியை
அண்ணாந்து நோக்கிவிட்டு
தனக்குள்ளும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறாள்
சீட்டு வேண்டுமென்று

திங்கள், அக்டோபர் 25, 2021

வளையத்திலிருந்து வெளியேறியவள்

     வட்டவடிவ மரவளையத்துக்குள்

பழக்கூடை, கிளி,பூங்கொத்து என்று

எதையாவது பின்னிக்கொண்டே இருப்பாள்
விஜிஅக்கா
பழம் எந்த ஓரம் சிவந்திருக்கும்
கிளியின் மூக்கு எப்படி வளைந்திருக்கும்
இலை ஓரங்களின் வளைவும் நுனியும்
எப்படி வேறுபட்டிருக்கும்
எல்லாம் அத்துபடி
திரைச்சீலைகளாக மேசை விரிப்புகளாக அவள் வளர்த்துவிட்டுப்போன கிளிக்கூட்டத்தை
அடுக்கிவிட்டுப்போன கனிவர்க்கத்தை
ஆசையாய்க் குசலம் விசாரிக்கிறாள் அம்மாவிடம்
இதே படங்கள்தானா
எனச்சலிப்பு காட்டிய தங்கையிடம்
முன்னொருநாள்
சொல்லியிருந்தாள்
புதிய இடம் புதிய ஊர்
தன் கற்பனையை வளர்த்தெடுக்கும் என்று
தங்கைக்கு செய்தி உண்டா
அன்னை கேட்கிறாள்

இங்கு அந்த மரவளையங்களே கிடைப்பதில்லை அம்மா...
திரைச்சீலை,விரிப்பு இடும் வழக்கமும் இல்லை
என்பதைச்சொல் அவளிடம்
இரண்டே நிமிடம் மகளே

 ஏதாவது

சொல்லவேண்டும்
உனக்கு
திப்பி திப்பியாக
தூக்கிக் கொண்டு நிற்கும் அந்த நெற்றியோரக்
கடும்சுருள் வளையங்கள்
உன் கூந்தலுக்கு
ஓவியச்சாயல்
தந்துவிடுவதை
தினந்தோறும்
மிகச்சரியாக
8 26 க்கு என்னைக் கடக்கும்
உன் சைக்கிளின் நேரந்தவறாமையை
நைந்த காது பட்டென்று அறுபட
உணவுச்சம்படத்தைத் தலைகுப்புறத் தள்ளிவிட்ட
சாப்பாட்டுப் பையின்
மீசையில் மண் ஒட்டாமல் தட்டிவிட்டபடி
சட்டென நகர்ந்தபோது
இமைக்குள்ளேயே அழுத்தமாக
நின்றுகொண்ட
உன் கண்ணீர்த்துளிகளின் கட்டுப்பாட்டை
இப்படி ஏதாவது சொல்ல வேண்டும் மகளே உனக்கு
8 28 க்கு நீ கடக்கும் யாரிடமாவது
சொல்லி அந்த இரு நிமிடத்தை நிறுத்தி வைக்க முடிந்தால்
எனக்குக்கிடைக்கும் இரு நிமிடங்களில்
அதைச் சொல்லி விடுவேன்

சீட்டு வேண்டும்

 அலுப்பு தரும் பேச்சுகள் முகங்கள்....

சுணங்கியபடி நகரும் கடிகாரம்
நொடிமுள்ளால் அவ்வப்போது நேரத்தின் முன்கையை வேறு சொறிந்து கொள்கிறது
பழையதைப் பிழிந்து காக்கைக்கு எறிந்துவிட்டு
நீராகாரம் மட்டும் பருகுவதுபோல்
செய்ய முடிந்தால்...
மனசைப் படிக்கவும் கற்றதுபோல்
நொடிமுள்
மிஸ்டர் நிமிடத்தின் இடுப்பில்
முழங்கையால் இடித்துவிட்டு
சிரித்தபடி நகர்கிறது... *******************************************
நிற்பது மாதிரிதான் இருக்கிறது
நகர்ந்து விட்டிருக்கிறாய்
சொல்லிக்கொண்டிருந்த சொற்களெல்லாம்
உதிர்த்து உதறிய உப்புக்கடலைத் தோல் மாதிரி கிடக்கின்றன
சமாதானமாகிறேன்
அப்படியென்றால்
உள்ளிருப்பை
நீ மென்றிருக்கலாம்
கரிப்பு
அதிகமோ
***********************************************
உறக்கமின்மையைச் சொல்லி
ஏதாவது மாத்திரை வேண்டி நிற்கிறான் இளைஞன்
கையளவு இடைவெளியில்
குனிந்து பார்த்து
மறுதலிக்கிறாள்
சீட்டு வேண்டுமென்று
தளர்ந்தும்
அடி அடியாக நகர்ந்தும் உழல்கிற
அவனைப் பின்தொடர்கிறது மனசு
மாத்திரைப்பெட்டியை
அண்ணாந்து நோக்கிவிட்டு
தனக்குள்ளும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறாள்
சீட்டு வேண்டுமென்று

அம்மாவின் அலகளவு

 குனி

கொஞ்சம் குனி
கொஞ்சமாச்சும் குனி
குனிவது போல் பாவனையாவது செய்
சரி யாரங்கே
குனிகின்ற
மாதிரி
ஒரு பொம்மையாவது
என் எதிரில் வை
கை நடுக்கம் பெரிய வியாதிதான் போல
***************************************************
இதோ இதோ
இதுதான் வானம்
கூட்டின் வாசலுக்கு அழைத்துவந்து
காட்டிக்கொண்டிருக்கிறது
அம்மாப்பறவை

அம்மா
இது
உன் கண்ணளவா
உன் கையளவா

பிரமிப்பு மாறா என் செல்லமே
நீ
பார்க்கையில்
உன் கண்ணளவு
நீ பறக்கையில்
உன் சிறகளவு
இப்போது
என் அலகளவு
என்றபடி ஊட்டியது புழுவை

தங்கள் வரவு நல்வரவானது

 படிப்படியாக வேகம் பெற்று

தேங்காய்ப் பத்தையைத் தன்னைவிட நைசாக அரைத்தெடுக்க முடிந்த மிக்சியை
அம்மா
தெய்வங்களின் இருப்பிடத்தில் வைக்க நேர்ந்தது
ஒரு தற்செயல்
எங்கள் சமையலறை அலமாரித் தட்டில்தான்
நல்லவிளக்கோடு
பொங்கல் வாழ்த்து அட்டையை
பழைய காலண்டரை அலங்கரித்து
பின்
சட்டமிடப்பட்ட ஓரிரு தெய்வங்களும்
உட்கார்ந்திருந்தன.
ஒடுங்கிக்கொண்டு
மிக்சியை வரவேற்பதில்
அவற்றுக்கும் ஒன்றும்
ஆட்சேபமில்லை

வேண்டும் வேறு வாய்

    கண்காணாவண்ணம் எரவாணத்தில் செருகிவைத்த அம்மாவின் பழஞ்சீலைத்துண்டு

பல்லிமுட்டைகளோடு விறைத்துக்கிடக்க
ஒளிந்து நின்று உதறிச் செருகுபவளாக
ஒருமுறை பிறக்கக்கடவாய்
பழந்துணி தாங்காது
கறை சுமந்த உடையும் காலில் இறங்கும் உதிரமுமாய்
ஒருமுறை அலையக் கடவாய்
கஞ்சிக்கே வழியிலா வீட்டில்
காசேது வழித்துப்போட
பழம்புடவைப் பயன்களில் இதுவுமொன்று போ போ என்ற விரட்டலில்
குன்றக்கடவாய்
பழந்துணி படிந்த ரத்தக் கவுச்சியில்
குமட்டலும் மனக்குமைவுமாக
வாடக்கடவாய்
நடை நடுங்க தொடை தேய
அழன்ற தோலோடு
உன்போல் திருமுகங்களின் தெருமுனைச் சீண்டலைத் தாண்டக் கடவாய்
அக்கா தங்கைக்கு மட்டுமல்ல
அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும்
நாப்கின் வாங்க
இத்தனையும் நினைவில் கொண்ட
இன்னொரு பிறவியும் எடுக்கக்கடவாய்

அப்போது இருக்கும் உனக்கு வேறு வாய்
வீதிக்கு வருமுன் விஸ்பர்

 இன்னும் நீங்கள்தான்

பஞ்சுக்குள் மையூற்றி விளக்குகிறீர்கள்
இன்னும் நீங்கள்தான்
சுற்றுமுற்றும் பார்த்து தாழ்குரலில் கேட்க வைக்கிறீர்கள்
இன்னும் நீங்கள்தான்
கல்லாவுக்கு இப்புறம் நீட்டுமுன்
கறுப்பு நெகிழியைச் சுற்றச் செய்கிறீர்கள்
இன்னும் நீங்கள்தான்
யார் எதை வாங்க வேண்டும்
என்ற வேலிக்குள் கிடக்கிறீர்கள்
மற்றபடி
தன் வீட்டுப் பெண்டிர் ரணம் உணரா
உம்மைப்போலன்றி
எங்கள் ஆண்கள்
பிராண்ட் பெயரோடு கம்பீரமாக சொல்லி வாங்குகிறார்கள்
போங்கப்பா
போய் ஒரு நாப்கின் பாக்கெட் வாங்கி
வீட்டில் கொடுத்து விட்டு
வாங்க வீதிக்கு

குளப்பாசியின் வீச்சம்

    குணமென்னும் குன்றேறி நின்றால்

தெரியாததெல்லாம்
சினமென்னும் குன்றேறியவனுக்குத்
துலங்குகிறது
பார்வை
தூரம்
குளப்பாசியின் வீச்சம்
புகைப்படத்தில் அழகென்று பதிகிறது
*******************************************

நீலக்கித்தான்களில்
அடுக்கிவைத்திருந்த
முப்பது ரூபாய் இருபது ரூபாய் பாத்திரங்களை உற்று உற்றுத் தேடுகிறாள்
மயானக்கொள்ளையில்
மல்லாட்டை இறைத்து முடித்தவள்
"எங்க ஆயாவோட லோட்டா மாறி இருக்கு"
உடன்வந்தவளிடம் எடுத்துக்காட்டியவளின்
கண் மினுங்குகிறதா
கலங்குகிறதா
அறியவிடாத அளவு இருள் சூழ்ந்துவிட்டது.
கட்டைப்பையில் ஆயாவைத்தான் மடித்துக்கொண்டு போகிறாளோ
கனத்தில் சற்றே
சாய்ந்த நடை *********************************************
மூசுமூசென்று இரைக்கிறது
பிடித்த நிறம் பிடிக்காத நிறமென்றில்லாமல்
வாழ்க்கையைப் போலவே கலந்துகட்டி
வந்தவரெல்லாம் அடுக்கிய வளையல் கையோடு
தெருவில் போகிறவளுக்கு
தோள்பை
சாப்பாட்டுப்பை
இரண்டுக்கும் இரக்கமாய்த்தானிருக்கிறது
அவளைப்பார்த்து
ஆனாலும்
தானாய்க் குறைக்கவியலா பாரம்
நாமும் அவளும்
...
முணுமுணுத்துக் கொள்கின்றன

மாவிளக்கின் உப்பு

 பிரகாரத்தின் வெம்மை கருதி

குவிந்த பாதங்களுடன் தாவித்தாவிப் போகிறாள் அவள்
சுற்று எண்ணிக்கை தவறிவிடப் போகிறதே என மூலஸ்தானத்திலிருந்து வெளியில் வந்து எண்ணிக்கொண்டிருக்கிறாள் அங்காளி
********************************************************
என் வனங்களை எனக்குத் திருப்பிக்
கொடுங்கள்
இன்னும் எத்தனைகாலம் என்ற
அம்பை வீசியெறிந்துவிடும்
கிரீடங்களின் கண்ணில் படாது
ஒரு மிடறு நீரருந்த
என் குட்டைகளை விட்டு விடுங்கள்
உங்கள் காட்சியகங்களில் பத்திரப்படுத்த
சிறகுகளைப் பிடுங்க வருமுன்
அமர்ந்துகொள்ள வேண்டும்
ஒரு
தழைத்த மரம் ***************************************
பூக்கும்பம் சுமந்தபடி சீவனற்ற நடையில்
அவள் போகிறாள்
எப்படியும் அங்காளி
தன் மாவிளக்கின்
உப்புக்காவது பதில் சொல்லிவிடுவாள்
என்ற நம்பிக்கையுடன்
கொட்டு முழக்கு கூட்டத்தின் நடுவே இறங்கிப்போய்
அவள் சுமக்கமாட்டாது சுமக்கும் கும்பத்தையாவது
வாங்கிக்கொண்டுவிடலாமா என யோசிக்கிறாள்
பத்தடி உயர மின்விளக்கு அலங்காரத்தில் நிற்கும் அங்காளி

அரளிக்கொரு பரிவுப்பார்வை

 எப்படியோ தினம் அது நடக்கிறது

பச்சையில் ஏன் துருப்பிடிக்கிறது என நந்தியாவட்டையிடம் விசாரித்தபடி
வாசல் இரும்புக்கதவின் கொக்கியை
நான்
அகற்றும்போது
மிகச்சரியாக
அடுத்த வீட்டின் இருசக்கரவாகனம்
உருண்டு இறங்கும்
சறுக்குப்பாதையின் முடிவில் நிலைநிறுத்தியதும்
வண்டியோட்டுதலின்
ஒரு பகுதி போல
அரளியிலை ஒன்றைக் கிள்ளியபடி காத்திருப்பான்
கதவைப் பூட்டும்
இணைக்காக
ஏன் இதைச் செய்கிறாய்
என்று கேட்கத்துடிக்கும் நாவைச்சுருட்டி உள்திணித்து
ஓடும்
ஆயிரம் தருணங்களில் இதுவுமொன்றாகி விடுகிறது.
என்னால் முடிந்தது
அரளிக்கொரு பரிவுப்பார்வை
அவ்வளவே
**************************************************
பாதுகாப்பான இடத்தில் நின்றபடி
பார்த்து ரசிக்கிறவர்களிடம்
கோபித்துக்கொண்டு போகிறது
கடல்

வெளிச்சமிடு தீப்பெட்டிப் பொன்வண்டே

 திடீரென்று நினைவு வந்ததா

கனவு வந்ததா
தெளிவில்லை

ஒரு பொன்வண்டின் அசைவு
அவ்வளவுதான்
அந்த தீப்பெட்டியை
எந்த ஆண்டில்
எந்த வீட்டின்
எந்தப் பொந்தில் தேடுவதெனப் புரியவில்லை
பொன்வண்டின் வாழ்நாள் என்ன
நிச்சயம் எனக்காகக் காத்திருக்கிறது
மினுக்கும் புள்ளிகளோடு
நெருக்கியடித்துக் கொண்டு கிடக்கும்
பொன்வண்டே
நான்
வந்தடைய வேண்டிய பாதைக்கு
வெளிச்சமிட்டு
என்னைக் காப்பாற்றுவாயாக
*******************************************************
அழுவதற்கென்று மட்டும் உதிப்பதில்லை துயரங்கள்
மடக்கென்று விழுங்க
மென்று தின்ன
கடைவாயில் வைத்தபடி ஊறும் நீரை
உறிஞ்சிக்கொள்ளவும்
அவதரிக்கும்
பச்சை மூங்கில் பந்தல்காலில் சாய்ந்தபடி
சப்பித்தின்ற ஜவ்வுமிட்டாய் மாதிரி சிலநேரம்
நிறம் படிந்து காட்டியும் கொடுக்கும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...