பேரன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

இடிக்கும் நிலை

சண்டை சிறிதாயிருக்கும்போது
உன் குறைகள்
எதுவும் விட்டுவிடாமல் நினைவூட்டிக் கொள்கிறேன்
தூபக்காலில் வம்பாடுபட்டு
மூட்டிய தணலை
அள்ளிப்போட்ட சாம்பிராணித்தூளே 

அவித்துவிடும் எனத் தெரிந்தபோதும் கூட

****************************************************************************
பிடித்த நிறம்
பிடித்த உணவு
பிடித்த பானம்
பிடித்த தீனி
உன் எல்லாப் பட்டியலும்
நினைவு தெரிந்த நாளாக
மாறுதலின்றி இருக்கிறது
அலுத்துக் கொள்வதெல்லாம்
சும்மா
சரி நீயாவது அப்படி இரு

*******************************************************************
குனிந்தபடி நுழைந்தபோது 
நிலை இடிக்குமெனக் காரணம் இருந்தது

அவள் உயரம்
நிலையை என்றும் இடிக்கும்படியும்
குனியும்படியுமே வைத்தது
**************************************************************
நீட்டிய கைகளோடு
நீ வருவதான கனவு
பரந்த பேரன்பின் குளிர்ச்சியை 
வருந்தோறும் உணர்த்திக்கொண்டே இருக்கும்
பாறைகளின் மேல் கோடையருவித் தடமென
நிஜத்தில் உன் விரல்கள் மட்டுமே நீள்கின்றன
ஒடுங்கிப்போய்விடும் பரிவைச்சுட்டியபடி
எப்போது நுரைக்குமோ

செவ்வாய், அக்டோபர் 23, 2018

இலை அழுத துளி

அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் 
என்கிற 
உன் சொல்லில் நிற்கிறது முள்

*****************************************************

செம்மண் பள்ளமெங்கும் நீர்
இறைத்து ஊறியதோ
இரைந்து ஊறியதோ
***********************************************
சரளைக்கல் நொறுங்க நொறுங்க 
குறுக்கு மறுக்காக 
ஓடிக்கொண்டிருக்கின்றன சக்கரங்கள்
பூசி மெழுகியபின் வரலாம்
உறுத்தாது
*******************************************************

எத்தனை துளிர்க்கையிலும் 
மலரா முகத்துக்காக 
இலை அழுத துளி 
மழை மாலையில்
************************************************************
ஒரு இளஞ்சிரிப்போடு
கடந்துவிடுகிறீர்கள் பேரன்பை
கொடுஞ்சொற்களுக்கு தாரை வார்க்க 
முழு இரவை ஏந்தியபடி
***************************************************
உரசுகிறது வேர்
துண்டுப்பலகையின் துணையில் 
பள்ளத்தைக் கடக்க முடிகையில்
*****************************************************************




புதன், அக்டோபர் 17, 2018

சாயமிழந்த சிற்றாடைப்பூ

குடைஜிமிக்கியின் ஓரச்சலங்கைமுத்து 
அளவே உள்ள அன்பைப்
பேரன்பு
என்கிறாய்
கோயிலின் கண்டாமணியையே
ஒத்துக்கொள்ளாத உலகத்திடம்
தருவதின் அளவும் 
பெறுவதின் அளவும் உணர்வதன் நாழி நிறை
தன்னைத்தானே 
சுற்றிச்சுழன்றாடும் சிறுமியின் சிற்றாடைப்பூ
சாயமிழந்த மலர்ச்சிக்கு முன்
ரங்கராட்டினத்தின் சக்கரம் சிக்கிக்கிடக்கிறது


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...