vaazhkkai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vaazhkkai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 29, 2012

கனவு நிறுத்தம்


   
ரோஸ்நிற சக்கரங்களும்,
மஞ்சள்,பச்சைநிற இருக்கைகளும்,
கைப்பிடியில் தொங்கும் 
சிவப்புக் குஞ்சலமுமாக 
புல்வெளிகளில் அலையவும் 
மைதானத்தில் வட்டமிடவும் 
முதுகு வளைத்து 
சாலையில் போட்டியிட்டு 
விரையவுமான 
கற்பனையிலிருந்து -அப்பு 
வெளிவந்தபோது 
சைக்கிள் பொம்மை விற்ற 
சிக்னலிலிருந்து
வெகுதூரம் வந்திருந்தது 
பேருந்து.
சிக்னல் பொம்மைகள்
கடையில் விற்பதில்லை 
கிடைக்கும் 
கடைகளுக்கு 
அம்மா போவதில்லை.              

வியாழன், ஜூன் 21, 2012

விடையிலாக் காட்சி

 ஜூன்20 வல்லமையில் 



விடையிலாக் காட்சி 
சிலநாட்களாகத்
தோன்றிக் கொண்டே இருக்கிறது 
 
சுழித்தும் ,வளைத்தும்,
இழுத்தும் 
"ஆ "எழுதும் காட்சி!
 
எழுதுவது நான்தானா
எனத் தெரியாவிடினும் 
நான்போலவே....
 
எங்காவது "ஆ"கண்டுவிட்டால்,
கண்ணுக்கும் ,எழுத்துக்கும் 
இடையே உலவும் புகையாக 
"ஆ"உருவாகும் காட்சி,....
 
சிரத்தையோடும்,சிரமத்தோடும்,
உதடு மடித்தும்,
"ஆ"எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது..
 
"அ"எப்படிக் கற்றாய் ,
"இ "சிரமமில்லையா என்றெல்லாம் 
கேட்டுவிடாதீர்கள்.
 
அது குறித்த காட்சி 
ஏதுமிலாததால் ,
என்னிடம் விடையில்லை.

புதன், மே 09, 2012

நாற்காலிப்பிசின்

மே 8 கீற்று இணையதளத்தில் வெளியானது 
நான்கு கால்களிருப்பதால் 
என் நாற்காலியும் 
உனதும் ஒன்றல்ல.
உன் நாற்காலியின்                                                  
நான்கு கால்களிலிருந்து 
வேர்பரவி 
நாற்றிசையும் வியாபித்திருப்பதை 
உலகறியும்.
கையிலிருந்து 
நழுவும் பாதரசமாய் 
என் நாற்காலியை 
எனக்கு ஒட்டாமல் 
உருட்ட 
உன்னால் முடியும் என்பாய்.
சுட்டுவிரல் நீட்டி 
என்னுடையதன் 
நான்கு காலும் முறித்து 
அந்தரத்தில் -
இருக்கை மட்டும் 
ஆடவைத்து அச்சுறுத்துவாய்...
இருக்கை அடியில் 
முள்ளோ, குண்டோ,
எனப் பூடகமாய்ப் 
பார்வையால் வெருட்டுவாய்...
இருக்கை 
எனக்கு கௌரவமன்று ..
உன்னை நினைத்தே 
என் கவலை...
வேரோடியிருக்கும் 
நாற்காலியின் கால்கள் 
வேறொருவர் கால்களை 
நோக்க நேர்கையில் ,
உன் இருப்பு.....?

செவ்வாய், மே 08, 2012

இருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...

மே 7 உயிரோசையில் இடம் பெற்றது

வியந்ததும்,ரசித்ததும்,

 கொண்டாடியதும்
நீதான்....

துளிர்பச்சை,அடர்பச்சை,

இலைப்பச்சை என்பாய்....

பழுப்பு படர்கையில்

அசுவாரசியம் மேவ,

சருகு கண்டு

சலிப்பதும் உண்டு...

சூரியன்,ஆடு,புழுதி,

மழை,நிலா.....

எப்போதும்,

நான் இருக்கிறேன்

இலையாக.....

வாழ்வைக் கொண்டாடிக்

கைதட்டும் 
ஒரு தருணம் ,

சருகாகி

உதிர்ந்துவிட்டேன் என்பாய்...

நான் இருக்கிறேன்
இன்னொரு துளிரில்......

புதன், ஏப்ரல் 25, 2012

தூறலுக்குள் இடி இறக்காதீர்

ஏப்ரல்  22 திண்ணையில் வெளியானது

-எடுக்கப்படாமல்
ஒலித்து நிற்கும்
 
தொலைபேசிமணி…
 
ஏகப்பட்ட
 
கேள்விக்கிளை விரிக்கிறது…
 
அச்சம்,எரிச்சல்,
 
ஆவல்….
 
ஏதோ மீதூர ,
 
மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்!
 
அந்த முனையில் ,
 
உக்கிரமான வாதம்
ஓடிக்கொண்டிருக்கலாம் !
 
உருக்கமான பிரார்த்தனை
பக்கத்தில் நடக்கலாம்..
 
கடன்காரனோ,
 
அதிகாரியோ,
திணறடித்துக் கொண்டிருக்கலாம்…
 
மரணச் சடங்கோ,
விபத்தோ,கூட்டமோ,
தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்!
 
தவறவிட்ட உறக்கம்
நேரங்காலமின்றி
வாய்த்திருக்கலாம்.-

திங்கள், ஏப்ரல் 16, 2012

கடன் வாங்கிக் கழித்தல்

 
நேற்றைய நடுக்கத்திடம் 
இன்றைய தினத்தைக் 
கடன் வாங்கியிருந்தேன் !
முந்தாநாளைய வெறுப்பிடம்
இரவல் வாங்கியதுதான் 
நேற்றாக இருந்தது!
இன்றைய எரிச்சலிடம்
நாளையைத் தரச் 
சொல்லியிருக்கிறேன்....

அச்சத்திடமும்,அவமானத்திடமும்,
இரங்கலிடமும் 
ஏதுமிலாவிடினும் 
புழுக்கத்திடமாவது 
கேட்டுப் பெற்றவைதான் 
போன வாரத்தின் 
போன மாதத்தின் 
போன வருடத்தின் 
நாட்கள் கூட....

நிறைவு நாளாவது
நிறைவிடம் 
பகிர்ந்து கொள்ள 
வாய்க்குமோ ....
தெரியவில்லை.

வியாழன், ஏப்ரல் 05, 2012

போக்கிடம்

8 4 12 கல்கியில் வெளியான கவிதை                                             
 
 
 
 
 மணல்
செங்கல்...மனைவிலை,
ஆட்கூலி...வேலைநிறுத்தம் 
எந்தக் கவலையுமின்றி ,
மொட்டைமாடி 
நீர்த்தொட்டியின் 
பின்புறக்கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது 
பெயர்தெரியாக்குருவி. 
**********************************
கைப்பை,கடன் அட்டை,
கள்ள நோட்டு,சில்லறை 
எந்தக்கவலையுமின்றி
தனியாளாய்ப் புறப்பட்டு 
தந்திவடத்தில் அமர்ந்து 
சிறகு தூக்கி 
அலகை நுழைக்கிறது காகம்
இருப்பை எடுக்கிறதோ,
அழுக்கு கோதுகிறதோ... 
***********************************
மச்சுப்படி,மாங்கிளை ,
கட்டைச்சுவர் 
ஏறி,தாவி.குதிக்கும்
அணிலுக்குத் தொண்டனாகி 
ஓடிப்போய்விட்டது மனசு-
நாற்காலியில் புதைந்திருக்கும் 
என்னைக்கைவிட்டு !
கவலைகளைக் கைமாற்ற 
இடமறியாது திகைப்பதைப் 
பார்த்து -சிரிக்கிறது 
ஒற்றைச் செம்பருத்தி.
                            

சனி, மார்ச் 17, 2012

விலகிய சக பயணி

பரபரப்பான                                                                                 
நகரச் சந்தடியில் தொடங்கியது ...
புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.

முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !

   

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

பெயர் துறப்பு விழா

ஒரு சுபயோக ,சுபவேளை 
குறியுங்கள்!
அவமானம்,  அவச்சொல் ,
தவிப்பு, புறக்கணிப்பு,
புலம்பல்,இயலாமை
சகலமும் துறக்க வேண்டும் !
இந்த இப்பிறவியின் 
தடங்கள் துடைத்தெறிய 
தற்கொலையை விட 
சிறந்த வழி!
ஒவ்வொரு எழுத்தாக 
உதிர்ப்பதா, உடைப்பதா,
பிய்ப்பதா 
கசக்கி நெருப்பில் இடுவதா ..
எதுவாயிருப்பினும் 
முகூர்த்தம் முடியுமுன் 
முடித்துவிடவேண்டும்...
பெயரற்று 
உலவி உலகைப் பார்த்தல் 
வாய்க்குமா...?
கிரீடமும் முள்முடியும் 
உனக்கன்று !
உன் பெயர்க்கே....
 

ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

சனி, ஜனவரி 28, 2012

நிறம் தந்த சாமி


 

அமர்ந்து எழுகையில் 
வண்ணத்துப்பூச்சி 
தடவிச் செல்லும் 
மினுங்கல் பொடியா?
சந்திரபிறை பொழியும் 
இரவின் ஒளித்துளியா?
ஆரஞ்சு குழம்பாய் 
அரங்கேறும் 
கதிர்ச்சொட்டா?
விரிந்த நீளத்தின்
மேக நீலங்களில்
ஏதோ ஒரு நீலமா?
துளிர்ப்பச்சை....
இலைப்பச்சை....
வெளிர்ப்பச்சை....
என்னை வரைந்த தூரிகை 
எதில் தோய்ந்தது...? 
 

ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

வியாழன், ஜனவரி 26, 2012

வாசம்

 
சாலைப்புறம்
இரவுதோறும் கிடக்கும் 
சில எலிகள் 
காலை வரும் 
காகத்தை ஏமாற்றாமல் .....
வேறொருபுறம்
காக்கை கிடைக்கலாம் 
ஏதோ ஒன்றுக்கு 
இரையாக....
இடையில் நாசி பொத்தியே 
நடந்து பழகிவிடுகிறது!
 

செவ்வாய், ஜனவரி 24, 2012

எல்லா இடமும் சதுர அடி

கருவைக்காடு 
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன் 
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல 
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ 
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து 
வீடுகள் சூழ நிற்கும் 



.

.

 

மயானம்..!.
அண்டை வீடுகளின் 
தொலைக்காட்சிப் பாடல் 
கூத்தனுக்குப் 
பழகியிருக்கலாம் 
நாற்றமும் சப்தமும் 
பழகிய நம்மைப் போல ..

திங்கள், ஜனவரி 23, 2012

பிறவிப் பெருங்கடல்

 


தேன்பிசுக்கு
இழையாகி இழுக்காமல்
சொட்டாகச் சேர்த்திருக்கும் 
மலரின்  சூட்சும 
அடையாளம் அறியாது 
வெற்று ரீங்காரத்துடன் 
அலைந்து  கொண்டிருக்கிறேன் 
வரம் வாங்கி 
வண்டான சிறு பொழுதிலும் ..........

வினைச்சொல்

ஒரு தூக்கு வளையத்துக்குள் 
கழுத்தை நீட்ட 
முன்பதிவு செய்து 
காத்திருப்போர் பட்டியல்... 
நம்பிக்கை,
புரிதல்,
தைரியம்,
அன்பு,
நேர்மை,
....................
முடிவிலியாய்த்தொடரும்
வரிசையிலிருந்து 
முன்னுரிமை 
தீர்மானிக்கிறாய் 
நீ......
நானும்.... 
 

திங்கள், ஜனவரி 16, 2012

ஆசை ஆசை




அகன்ற 
மலையடிவாரம் ..
விஸ்தாரமாய் வீசிப்போக 
காற்றுக்கு 
 
ஆசை... 
விழுந்தால் 
விரிவாக வளரலாம் 
விதையின் ஆசை...
ஆனால்...
வென்றது  மனிதன் ஆசை...
கொடியும் தோரணமும் 
குறுக்கு சாலைகளுமாய் 
புதிய நகர் 
இனிதே உதயம்...

ஆற்றின் மேல் ஒரு சமாதி (பழைய பாலம்)

இப்படித்தான் 
என்னோடும் 
உறவாடிக் கொண்டிருந்தார்கள் 
கைப்பிடியோரம் 
சைக்கிள் சாய்த்து வைத்து 
கதையளக்கும் நிரந்தரக் கூட்டம் 
சரசரவென 
விரையும்  வாகனவரிசை 
சமயங்களில் 
வழிவிடாச் சண்டை 
மோதி மோதிக் 
கடந்து போகும் காற்று .....
*************************************
எல்லாம்
 ஒரு சந்தேகத்தில் 
முடிந்து விட்டது !
வலுவில்லை எனக்கென 
வந்தது புதிய பாலம் !
காற்றும் குப்பையும் 
மட்டும் 
கடந்துபோகக்  கிடக்கிறேன்  
பக்கத்து பரபரப்பின் 
பார்வையாளனாக ......

ஞாயிறு, ஜனவரி 15, 2012

உன்னை விட்டால்.


         

படபடத்த 
தாள்களிலிருந்து
எழுத்துக்கள் 
எம்பி 
       எம்பி 
முறையிடுகின்றன....
வசவுக்குள்   போடும்போது 
வலிப்பதாகவும் 
பொய்யில் சேர்க்கும்போது 
புண்ணாவதாகவும்
வறுமைக் காட்சியில் 
தமக்கே 
வன்முறை வளர்வதாகவும் 
காதல் வசனங்கள் 
கரைத்துவிடுவதாகவும் ....
****************************************
நீயாவது 
உணர்கிறாயே என்றேன் ! 

முன் வைத்த கால்



மின் வெளியில் 
என் எழுத்துக்கள் 
என் எழுத்துக்கள் மிதக்கின்றன...
மிதக்கின்றன...
 திருத்தியிருக்கலாம் 
ஒருவரியை 
மாற்றி இருக்கலாம் 
ஒரு சொல்லை 
சேர்த்திருக்கலாம் 
ஒரு எழுத்தை 
முன்பே...
போட்டிருக்கலாம் 
ஒரு புள்ளியை...
ஆனால்...
                     விரல் நுனியிலிருந்து 
                      இறங்கிப் போனபின் 
எனக்குச்சொந்தமின்றி 
மின்வெளியில்..... 
 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...