புதன், ஆகஸ்ட் 17, 2016

எப்போதும்போல்

எப்போதும்போல் இருட்டுகிறது
எப்போதும்போலப் புலரும்
எப்போதும்போல ஓடுகிறீர்கள்
எப்போதும்போல உறங்கப்போகிறீர்கள்
வேடிக்கை பார்த்தபடி
விமர்சனம் செய்தபடி
புலம்பியபடி
புன்னகைத்தபடி
எப்போதும்போல எல்லாம்
நடக்கும் உலகத்தில்
எவருக்காவது
எப்போதும்போல் இல்லாமல்
ஆகிவிடுகிறது


*****************************************************
நேற்று என்பது இன்றாக இருந்தபோது
இன்றென்பது நாளையாக இருந்தது
உனது கண்மை தொட்டெழுதிய
இருள் கரிந்து வழிந்து
அந்தக்கணத்தைக் கடத்திவிட்ட
இப்போது
எதை நேற்றென்பது
எதை இன்றென்பது எனத்
திகைத்திருக்கிறேன்
யாரோ பின்னிருந்து இழுத்து
நாளை ?எனச் சிரிப்பது கேட்கிறது
அது நாளையேதானா

*******************************************************
எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருக்கும்
எவருக்கானதோவான
வாழ்வில்
காய்தல் எது 
உவத்தல் எது
அச்சத்துக்கும் மரியாதைக்குமான
கோட்டை வரையுமுன்
மந்திரக்கோல்
நாலு தட்டு தட்டிவிடுகிறது


*************************************************************************

ஜூலை நிறைவில்

அப்போது தோன்றவேயில்லை
அதன்பிறகும்
நீயுமிருப்பாய்
நானுமிருப்பேன் என்று
***************************************
நீ போகாமலிருந்திருக்கலாம்
போனாய்
நீ வராமலிருந்திருக்கலாம்
வந்தாய்
நீ பேசாமலிருந்திருக்கலாம்
பேசினாய்
நீ எழுதாமலிருந்திருக்கலாம்
எழுதினாய்
எனக்கென்ன என்று கேட்கிறாயோ
நீ
பெண்ணல்லவா
எப்படி மறந்தாய்

**********************************************
காற்றைத்தேடி நீங்கள் சென்றிருக்கையில்
காற்று சுவாதீனமாக
புரண்டு திரும்பியிருக்கிறது
நல்லவேளை
காற்றின் இருப்பு வாய்க்காவிடினும்
காற்றின் தடம் புரிகிறது
நெஞ்சுகொண்டமட்டும்
இழுத்துவிட்டுக்கொண்டு
இன்னும் குறை காலம்
வாழ்ந்துவிடலாம்

************************************************************
நமது உரையாடலின்
பிசுக்கு
போவதேயில்லை
போகவேண்டும் என்று பூரண விருப்பமுமில்லை
அடுத்தமுறை எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்
தவறாமல் நினைத்துக் கொள்வதுதான்

இதுவும் ஜூலைதான்

பௌர்ணமிகள் எல்லாவற்றிலும் நிலா இருக்கிறது
நீ

****************************************************
நழுவும் விரல்மணல்
வழுவழுப்பாயிருக்குமா 
என்ன

***********************************************************
பரபரப்பான பாவனையில்
கடந்துவிட முயல்கிறேன்
இழுத்துப் பிடித்து 
கவனம் சேர்க்காது விடேன்
பிழைத்துப் போவேன்

**************************************************************
திடீரென்று வந்துவிழும்
தீத்துளியைத் தாங்குமளவு
திடமாக இருப்பதில்லை
நீங்கள் வனம் என நினைத்த மனம்
*************************************************************
கிளிஞ்சல் பொறுக்குவது
உனக்கு வேடிக்கை
எனக்குபிழைப்பு
மறைந்துகிடக்கும் கண்ணாடித்துண்டை 
தாண்டிச்செல்வது தொழில்நேர்த்தி
கீறலிலும் கண்ணீர் பெருக்காது
கடல்நீரில் அலசியபடியே
அடுத்த கிளிஞ்சலைத்தேடுவேன்
உனக்கோ அது ரத்தம்

****************************************************************

நீல புத்தன்

பேசிக்கொண்டிருக்கப் பிரியப்படும்
மனிதர்கள் அருகிருக்கையில்
மௌனம் கொண்ட வாழ்வு
பேருந்தின் சன்னலோரக் காற்றில் முடிபறக்க
எவரோ போகும் காட்சி
ஏனோ தவிப்பைப் பெருக்குகிறது
ஓடிப்போய்த் தொற்றிக்கொள்ள
படி காட்டாப் பேருந்துகளல்லவா கடந்துகொண்டிருக்கின்றன

*********************************************************************
எப்படியாவது மாறிவிடும் என்று
நினைத்திருக்கிறீர்கள்
எப்படியாவது கைவிட்டுவிடலாம் என்று
காத்திருக்கிறீர்கள்
மாறுவதும் கைவிடுவதும் 
நீங்கள் செய்துமுடிக்க வல்லதல்ல
என்பதைப் புரிந்துகொள்ளும்போது
நீண்டபாதையின் தாழ்வாரங்கள்
ஒழுகத் தொடங்கிவிடுகின்றன
கதவுகளோ
இறுகத்தாழிட்டுத் துருவேறி

**********************************************************************
கையகப்படுத்தியதெல்லாம் வாழ்வின் துளியுமல்ல
ஏந்திய பசுங்கிளை
மெல்ல நகர்ந்தபோது அறியாய்
பிரம்மாண்ட வேர்பிடித்துவிட்ட
இத்தருணமே உணர்கிறாய்
நிலவின் கிரணங்களைப் பார்க்கலாம் அந்த வேரடியில்
கிடந்து
போதாதோ


கதவு திறக்க

கதவு திறக்க வேண்டி காத்திருக்கிறார்கள்
பணிநிமித்தம் சென்றவர்க்காக
பணியை நிமித்தமாக
சொல்லிச் சென்றவர்க்காக
நண்பரோடு கதைத்துத்
திரும்புகிறவருக்காக
மதுக்குவளைகளை சரித்துத்
திரும்புகிறவர்களுக்காக
ஏமாற்றங்களைச் சுமந்து
எங்கோ திரிந்தலைந்து
வருபவருக்காக
கலைந்த தலையை அள்ளி முடிந்தபடி
கதவு திறக்கும் அன்பின் கனம் தெரியாதவர்க்கும் 

கதவு திறக்கக் காத்திருக்கிறார்கள்
அடுத்து
உணவுத்தாலத்தோடு திரும்புவார்கள்
தட்டிலிருப்பது
வெறும் சோறு என்றே நினைப்பவர்களுக்காகவும்


JULY 16 முகநூலில்

அங்கேயே இருக்கிறேனோ
என நினைக்கிறாய்
அப்போதுதான் வந்தேன்
என்கிறேன் 
ஏதோ ஒன்று பாவனையாக
இருக்கலாம்
பிழைத்துக்கிடப்போம் பாவனைகளாலும்

***********************************************************
கொஞ்சம் அமைதி வேண்டியிருக்கிறது
குறைந்த ஒளி 
விழித்தால் எழுந்துவர
சற்றுமுன் நிகழ்ந்த துரோகம் உட்பட சகலத்தையும்
அருகிருக்கும் மேசை இழுப்பறையில் தள்ளி மூடி
எடையற்ற நிலைக்கு இறங்கிப் 

பெறுவதென்னவோ ஒருமணிநேரத் தூக்கம்
இதற்கே இவ்வளவெனில்
எழாத் துயிற் பொழுதின்முன்
எவ்வளவை முடிப்பேன் பரனே

************************************************************
வயதாவதன் சௌகரியங்கள்
இந்த உடலும் இதன் சூட்சுமங்களும் பழகிவிடுகின்றன
வண்டிமாடு போல
உடலும் நம்மைப்பழகி விடுகிறது

எதுவெல்லாம் ஒவ்வாது
எதையெல்லாம் ஏற்கவேண்டுமென பிடிபடலாம்
அனுபவித்தவை தவிர
மற்றவற்றைத் தேடப்
பட்டியல் தயாரிக்கலாம்
இடங்கள்,மனிதர்கள்
சமூகம்,சந்தர்ப்பம் எதைப்பற்றியும் கருத்து சொல்லலாம்
கிடைக்காதவற்றைப் பற்றியும்
நடக்காதவற்றைப் பற்றியும்
தவறுகள் பற்றியும்
தவறியவை பற்றியும்
நீங்கள் எதையாவது சொல்லிக் கொண்டேயிருக்கலாம்
மிக முக்கியமாக
அதை யாரும் கேட்பதில்லை
என்பதையும் அலுத்துக் கொள்ளலாம்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...