MANITHAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MANITHAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 16, 2012

பாராட்ட வருகிறார்கள்



அவசரமாய் 
 
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
 
சம்பிரதாய வாழ்த்து ,
 
அழுத்தும் கைகுலுக்கல்,
 
பொய்யெனப் புரியும் 
 
புனைந்துரைகள் 
 
எல்லாவற்றுக்கும் 
 
முகநூலின்
 
ஒற்றை விருப்பச் சொடுக்காக 
 
புன்னகைக்கலாமா?
 
பல்....?
 
தலையசைப்பு 
 
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
 
மையமாகவா?
 
கண் பணித்துவிடுமோ...
 
சீரான சுவாசத்தோடு 
 
வெற்றுப்பார்வை தோதாகுமா?
 
பெருமிதம்?கூச்சம்?
 
''எவ்வளவோ பாத்துட்டோம்..?
 
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்....?
 
எது பொருந்தும்....?
 
அவசரமாய் ஒரு கண்ணாடி
 
அல்லது 
 
 ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! 

                                            12 3 12 திண்ணையில் வெளியானது .

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

பெயர் துறப்பு விழா

ஒரு சுபயோக ,சுபவேளை 
குறியுங்கள்!
அவமானம்,  அவச்சொல் ,
தவிப்பு, புறக்கணிப்பு,
புலம்பல்,இயலாமை
சகலமும் துறக்க வேண்டும் !
இந்த இப்பிறவியின் 
தடங்கள் துடைத்தெறிய 
தற்கொலையை விட 
சிறந்த வழி!
ஒவ்வொரு எழுத்தாக 
உதிர்ப்பதா, உடைப்பதா,
பிய்ப்பதா 
கசக்கி நெருப்பில் இடுவதா ..
எதுவாயிருப்பினும் 
முகூர்த்தம் முடியுமுன் 
முடித்துவிடவேண்டும்...
பெயரற்று 
உலவி உலகைப் பார்த்தல் 
வாய்க்குமா...?
கிரீடமும் முள்முடியும் 
உனக்கன்று !
உன் பெயர்க்கே....
 

ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

சனி, ஜனவரி 28, 2012

ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

சொற்கள்


என்னோடு இருந்தன ....
இல்லாமல்  இருந்தன..
இல்லாமலும் ....
இருந்தன!
இருந்தாலும் 
இல்லாவிட்டாலும் 
என்னோடு, 
எனக்கானவையாய் இருந்தன...
இருக்கும் வரை  
இருக்கும்!

வியாழன், ஜனவரி 26, 2012

வாசம்

 
சாலைப்புறம்
இரவுதோறும் கிடக்கும் 
சில எலிகள் 
காலை வரும் 
காகத்தை ஏமாற்றாமல் .....
வேறொருபுறம்
காக்கை கிடைக்கலாம் 
ஏதோ ஒன்றுக்கு 
இரையாக....
இடையில் நாசி பொத்தியே 
நடந்து பழகிவிடுகிறது!
 

செவ்வாய், ஜனவரி 24, 2012

எல்லா இடமும் சதுர அடி

கருவைக்காடு 
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன் 
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல 
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ 
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து 
வீடுகள் சூழ நிற்கும் 



.

.

 

மயானம்..!.
அண்டை வீடுகளின் 
தொலைக்காட்சிப் பாடல் 
கூத்தனுக்குப் 
பழகியிருக்கலாம் 
நாற்றமும் சப்தமும் 
பழகிய நம்மைப் போல ..

திங்கள், ஜனவரி 23, 2012

பிறவிப் பெருங்கடல்

 


தேன்பிசுக்கு
இழையாகி இழுக்காமல்
சொட்டாகச் சேர்த்திருக்கும் 
மலரின்  சூட்சும 
அடையாளம் அறியாது 
வெற்று ரீங்காரத்துடன் 
அலைந்து  கொண்டிருக்கிறேன் 
வரம் வாங்கி 
வண்டான சிறு பொழுதிலும் ..........

வினைச்சொல்

ஒரு தூக்கு வளையத்துக்குள் 
கழுத்தை நீட்ட 
முன்பதிவு செய்து 
காத்திருப்போர் பட்டியல்... 
நம்பிக்கை,
புரிதல்,
தைரியம்,
அன்பு,
நேர்மை,
....................
முடிவிலியாய்த்தொடரும்
வரிசையிலிருந்து 
முன்னுரிமை 
தீர்மானிக்கிறாய் 
நீ......
நானும்.... 
 

ஞாயிறு, ஜனவரி 15, 2012

முன் வைத்த கால்



மின் வெளியில் 
என் எழுத்துக்கள் 
என் எழுத்துக்கள் மிதக்கின்றன...
மிதக்கின்றன...
 திருத்தியிருக்கலாம் 
ஒருவரியை 
மாற்றி இருக்கலாம் 
ஒரு சொல்லை 
சேர்த்திருக்கலாம் 
ஒரு எழுத்தை 
முன்பே...
போட்டிருக்கலாம் 
ஒரு புள்ளியை...
ஆனால்...
                     விரல் நுனியிலிருந்து 
                      இறங்கிப் போனபின் 
எனக்குச்சொந்தமின்றி 
மின்வெளியில்..... 
 

சனி, ஜனவரி 07, 2012

உருப்பெருக்கி

நேராய் விழாத
நிழலுக்கு
நிலைக்கண்ணாடி
பொருந்தவில்லையாம்
உதிர்ந்த
ஒற்றை  இலை
சருகு கோபுரமென 
சலம்பியது 
ஜடாமுடியும் 
ஏறமுடியாத 
தாழைமடலோ
முள்
காட்டி மிரட்டியது 




இழந்த வரங்கள்

காதலை கண்ணீரை
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை   
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,

அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
 பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம் 

இனி எதற்கும் யோசியுங்கள்

கடற்கரையில் காந்தி
தாண்டிவந்த காற்று
மனிதனைத்
தேடியது
இல்லை
எனச்சொல்ல
நாணி
இற்று விழுந்தன
எங்கள் மரங்கள்.

திங்கள், டிசம்பர் 26, 2011

மண்வாசம்

இலை,மலர் ,....அரும்பு ,
உதிர்ந்ததா.....
விழுந்ததா,,,
காய்க்குமா ,கனியுமா..
விதைவருமா
அது
முளைவிடுமா .....
இறங்கிக்கொண்டேயிருக்கும்
வேர்
விசாரிப்பதேயில்லை....

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உணர்வின் உணவு

வேண்டித்தான் இருக்கிறது
உள்ள்முக மோனத்தில்
உறைந்த
புத்தனுக்கும் 
நீ
புத்தன்தான்
நீ புத்தன்தான்
நான் உணர்ந்தேன்
என்றொரு
ஒப்புகைக்குரல்.....

கண்டு கொள்ளல்

தளும்பாக்கிணறும்
முகம் பார்க்கவாவது
அழைக்கிறது ....
இறைக்கச் சுரக்கா
ஊற்றும்
இனிப்பென்ற சொல்லில் பொங்கும் ! 

செவ்வாய், டிசம்பர் 13, 2011

விலங்கியலார் கவனத்திற்கு

சிறகிருப்பதாக
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?
   

புதன், நவம்பர் 30, 2011

மஞ்சள் செம்பருத்தி 


அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்....

மஞ்சளாய்ப் பூத்தாலும் 
மஞ்சள் செம்பருத்தி 
என்று அழைப்பது போல்...
                                           *   *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் 
அவமானம் உணராதவனும் 
ஏக்க விழிக் குழந்தையின் 
சடைத்தலைக்கு 
சலிப்பவனுமான 
அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்...... 
        

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...