திடீரென்று நினைவு வந்ததா
கனவு வந்ததா
தெளிவில்லை
ஒரு பொன்வண்டின் அசைவு
அவ்வளவுதான்
அந்த தீப்பெட்டியை
எந்த ஆண்டில்
எந்த வீட்டின்
எந்தப் பொந்தில் தேடுவதெனப் புரியவில்லை
பொன்வண்டின் வாழ்நாள் என்ன
நிச்சயம் எனக்காகக் காத்திருக்கிறது
மினுக்கும் புள்ளிகளோடு
நெருக்கியடித்துக் கொண்டு கிடக்கும்
பொன்வண்டே
நான்
வந்தடைய வேண்டிய பாதைக்கு
வெளிச்சமிட்டு
என்னைக் காப்பாற்றுவாயாக
*******************************************************
அழுவதற்கென்று மட்டும் உதிப்பதில்லை துயரங்கள்
மடக்கென்று விழுங்க
மென்று தின்ன
கடைவாயில் வைத்தபடி ஊறும் நீரை
உறிஞ்சிக்கொள்ளவும்
அவதரிக்கும்
பச்சை மூங்கில் பந்தல்காலில் சாய்ந்தபடி
சப்பித்தின்ற ஜவ்வுமிட்டாய் மாதிரி சிலநேரம்
நிறம் படிந்து காட்டியும் கொடுக்கும்