வெள்ளி, நவம்பர் 29, 2013

பூனை மீசையும் காட்சிப்பிழையும்


-- அந்த சுவர் சொல்கிறது 
நான் அதுவாய் ஒருபோதும் 
இருந்ததில்லை என்று....
ஆம்...நீயாய் இருந்திருக்கலாம் 
என்றுதான் இருந்தேன்...என்றேன்!

அந்த வெயில் சொல்கிறது 
நான் அதுபோல் தகிப்புடன் 
ஒருபோதும் 
ஒளிர்ந்தது இல்லையென்று...
ஆம்..வெளிச்சமோ,கணப்போ
எப்போதும் பற்றாக்குறையில்தான் 
எனக்கே என்றேன்...!

அந்தப் பூ சொன்னது 
என் இதழ் அடுக்கை நீ
ஒருநாளும் சரியாய்க் கணக்கிடவேயில்லை என்று..
மகரந்தம் வாசனை நிறம் என்று 
எதையுமே யூகிப்பதுதான் 
என் ரசனையென ஒப்புக்கொண்டேன் ...

என் காலடிப் பூனை 
சிரிப்பது போல் தோன்றியது...
பூனைகளின் மீசை அவ்வாறு 
போலிக் காட்சி காட்டுவதைத் தான் 
காட்சிப் பிழை என்றாயோ.....
-

ஞாயிறு, நவம்பர் 24, 2013

அவளுக்கு டிசம்பர் வருகிறதுகாற்றழுத்தத் தாழ்வுநிலை.....
மழை வரும் ,வரலாம்,வரவில்லை....
புயல் கிழக்கே,தென்கிழக்கே,மேற்கே தென்மேற்கே..
கடந்தது,
மாறியது,
வலுவிழந்தது..
மண்டலவிரதம்,அவசரமாலை,
வேன்,கார்,ரயில்,பேருந்துநிரம்பும் 
பக்தர்கள்,
பிச்சி,சாமந்தி,பட்டன்ரோஜா,கதம்பத்தோடு 
ஒருபந்து டிசம்பர் பூவும் கட்டிவைத்து
இம்மாதத்தைக் கடக்கிறாள் 
கனகாம்பர  சீஸனில் பிறந்ததால் 

கனகா வான கனகா.... 

வெள்ளி, நவம்பர் 22, 2013

மண்ணாகப் போகுமுன்...

கீற்று இணைய இதழில் நேற்று(21 11 13)

வண்ணம் வெளிறிய, பூச்சு உதிரும் 
சுவர்கள் காத்துக் கொண்டே இருக்கின்றன 
எதையாவது கிறுக்கவும்,
நினைவூட்டும் கோடுகள் புள்ளிகள் இழுக்கவும்,
மஞ்சள் வட்டமும் குங்குமமும் 
தீற்றிப் பூசை போடவும் ,
தன்மேல் சாய்ந்தபடி கதைபேச,
மூக்கைச் சிந்தித் துடைக்க,
தோரணையாகக் கையூன்றி நிற்க ...
ஒரு படத்தை, கண்ணாடியை, வாழ்த்துமடலை
எதையாவது மாட்ட -
சுத்தியும் ஆணியுமாக இடம் தேட ...
யாராவது வந்து உறவு கொண்டாடி
வெற்றிலை கிள்ளியபடி மீதிச் சுண்ணாம்பைத்
தடவும் ஒரு நடுங்கும் கையும்
நெருங்காமல்
இடிந்தே போய்விடப் போகிறோமோ
என்ற நடுக்கத்தில் ...
இடம்பெயர்ந்த எவரேனும் மீள வேண்டுமென்ற
வேண்டுதலை
வீட்டுத் தெய்வத்திடம் வைத்தபடி

செவ்வாய், நவம்பர் 12, 2013

சில விஷயங்கள் ...

சில நேரம் பசுமை 
நம்மைப் பறவையாக அழைக்கும்..
சிலநேரம் நதியின் நெளிவு 
துளி மணலாய்க் கிடக்க இழுக்கும்..
சில நேரம் வெயிலின் 
சூடு பருக வேண்டித் தொண்டை வறளும்...
எந்நேரமும் தோன்றுவதேயில்லை 
சில விஷயங்கள் ...

என் சில விஷயங்களும் 
உன்னுடையதும் 
ஒன்றுதானா எனத் தெரியாதவரை 
அவை சில விஷயங்களே 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...