வியாழன், டிசம்பர் 09, 2021

அப்பா விளையாட்டு

 சிவப்புக்கட்டி லைப்பாயில்

பாதியை வெட்டி
ஆற்றுக்குப் போகிறவர்களும்
கிணற்றடியில் குளிக்கிறவர்களுமாக
ஒரு குடும்பம் ஒரு சோப்பு
அப்பாவுக்கு மட்டும் விதிவிலக்காக
ரௌண்டு சந்தன சோப்பு
அட்டை விளையாட்டுக்கு
மாசமொன்று வரும்போது
எழுத்துக்கூட்டிவிட்டு
முகர்ந்து பார்க்கலாம் வரிசையாக
நெளிநெளியாக என்ன எழுத்து
அழகா இருக்கணும்னா
வாசனையா இருக்கணும்
தனி வாசனை வேணும்னா
அப்பாவாகணும்
அக்குளுக்கும் கழுத்துக்கும்
அள்ளி அள்ளி பவுடர் போடலாம்
காலியாகப்போனாலும்
அஞ்சு ரூபாய்க்குழி டப்பாவின்
அடிப்பிடித்த பூதரமாவை
பஞ்சுக்குள்ளிருந்து வந்துவிடும்போல ஒற்றி ஒற்றி ஒப்பேத்துகிற அம்மாவிடமிருந்து விடுதலை பெற்று
உள்ளங்கையில் கொட்டி அப்பிக்கொள்ளும் நாள்
அப்பாவான பின்தான் வரும்
அப்பா விளையாட்டில் மறக்காமல்
ஆளுக்கொரு சந்தன சோப்பு
ஆளுக்கொரு
பவுடர் டப்பா
வாங்கித்தருவான்
பின்னொருநாள்
குழறியபடி
வரத்தொடங்கிய அப்பாவின் வாசனை
அடி உதை அழுகுரலாக வீடெங்கும் மிதக்க
அப்பாவாகி விடாமலிருக்க
வேண்டிக்கொண்டது பிள்ளை மனம்

அவர்களின் உலகம்

 பக்கத்து வீட்டின் சமையலறை

மேடைக்குக்கீழோ

பத்தாயத்தின் மேலோ
சுவாதீனமாக
ஒளிந்து பிடித்து விளையாடிய பிள்ளைகள்
பால்குடி மறக்கடிக்கவென்று
தூக்கிச்செல்லத் தொடங்கி
மூன்றாவது வீட்டுப்பிள்ளையை
இடுக்கிக்கொண்டே
வேலை முடிக்கும்
அத்தைகள்
மருமகளைக் குறை சொல்லியபடி
திண்ணையில் உட்கார்ந்த
எதிர்வீட்டுக் கிழவிக்கும் சேர்த்து சோறுவடிக்கும் அம்மாக்கள்
இல்லாமல் போகவில்லை
இதைப் படிப்பதில்லை
அவர்கள்
இதைப் படிக்கும்
நம் வாழ்வில்
இல்லாமல் போன
ஆயிரத்தொன்றில்
இவையும் உண்டுதானே

என்பதில்தான்

 வரிசையாக நிற்கும்

எண்களிட்ட கறுப்பு வெள்ளை வண்ணமடித்த
குத்தகை மரங்கள் வழி வாகனம் விரையும்
ஒரு பொழுது
எண்ணிக்கைத் தொடர்ச்சியை கவனிக்கவிடாது
வரிசைப்படுத்திய ராஜாங்கம்
பாடல்நிற்குமேயெனப் பாதையில் நிற்காத பயணவேளைகள்...
சின்ன சொர்க்கங்களும்
வேகத்தடையில்
நின்றுபோகுமெனத் தெரியா பயணம்
********************************************************
ஒட்டிக்கொண்டிருப்பதில்லை
வெட்டிக்கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை
பாதி நிலவு தேய்ந்துவிட்டாலும்
பார்த்துக்கொண்டே கடந்துவிடத்தோதாக
இந்தப்பாதை
ஒரு நதிக்கரையோடுதான் போகிறது
எல்லாம் ஏதோ ஒரு சமாதானந்தான்
வேறெப்படி
வாழ்வதாம்
***********************************************
எப்படியாவது
முடிந்துவிடும்
எப்படி என்பதில்தான் எல்லாமே
எப்படியாவது தொடங்கிவிடும்
எப்படி என்பதில்தான்
எல்லாமே
எப்படியாவது அறிந்து கொள்வாய்
எப்போது என்பதில்தான்.

தாவணிக்கவலைகள்

 வெள்ளையில் சிவப்பு புள்ளிகளும் சிவப்பு ஓரமுமாக சுங்கடிப்பாவாடை சொல்லிவைத்து வாங்கியபோதும்

'வி வைத்துக்கட்ட ஒருத்திக்கும் வரவில்லை

பழகப்பழக வருமென்றாள்
கே விஜி
சிவப்புத்தாவணி
மூன்றாம் முறை நனைத்தபின்
சுருண்ட ஓரங்களுடன் எப்போதும் இழுவை
கழுத்து ஒட்டிய வி
ரவிக்கைளை
எங்களுக்குமுன்
முந்திக்கொண்டு வரவேற்றார்கள் அம்மாக்கள்
ஆழ்கழுத்துகளை மூடிக் கரையேற்றும்
அற்புத வாய்ப்பென்று
சீயென்று ஆகிவிட்ட
சீருடைப் பச்சையை
வண்ணங்களின் பட்டியலைவிட்டு வழித்தெறிந்த ஆங்காரத்தில்
ஏழெட்டு ஆண்டுகளாவது
இருக்காது ஓருடையும்
மெல்லிய ஆர்கண்டிகளையும்
ஜார்ஜெட்டுகளையும்
புறக்கணித்தல் நல்லது
உடல்தெரியும்
ஓரம்பிய்ந்த உள்பாவாடையும் தெரியுமென்பதால்
தாவணிக்கும் மேலாக
இன்னொரு மாராப்பு
ரெக்கார்டு நோட்டுகள்
அவசியம் நினைவூட்டுவாள் அம்மா
எடுத்துப்போ
எடுத்துப்போ என்று
மானம் காத்த வகையில்
அப்பனையும் அண்ணன்தம்பிகளையும்விட
அதிகம் கடன்பட்டது ஊக்குகளிடம்தான்

நனைதலும் காய்தலும்

     சன்னலுக்கு வெளியே விரியும் தெரு

டைனோசரின் எலும்புக்கூடுபோல
அசைவின்றி கிடக்கிறது
நிசப்தமும் அசைவிலா நிலையும்
என்னை மட்டும் தொந்தரவு செய்யவில்லை
என உணர்ந்தபோது
நானும்
....கொண்டேன்
வௌவ். ...வௌவ்.
************************************************

உன்னைத் தெரியாதா
எனச்சிரிப்பவரை
உன்னைத்தான்
தெரியுமே
எனக்கெக்கலிப்பவரை
உன்னால் என்ன முடியும்
என ஏகடியம் செய்பவரை
உன் இடம் இதுதான்
என கோடு கிழிப்பவரை
திரும்பிய திசையெலாம் பார்க்கிறேன்
நனைதலும் காய்தலும் அவரவர் தேர்வு
மழைவெளிக்கு
உழக்குப்படியோடு வந்துநிற்காதீர்





புள்ளியின்மேல் ஏறிய நாள்

 யாருக்குத் தேவையாக இருக்கிறது

நீ கடந்து வந்தது

ஆனாலும்
தூணைப்பிடித்துக்கொண்டு
சாய்ந்தாடிய பாவத்திலேயே
பற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னொருகை
ஏதாவது பிடிமானம் கிடைக்காதா
என்று அலைகிறது.
போகிறபோக்கில் என்றோ ஒருமுறை
யாரோ சொல்லிவிட்ட
ஒற்றைக்கையால் சமாளிப்பதைப்பார்
என்ற விதந்தோதலை மெய்ப்பிக்கவே
ஆயுள் கழிகிறது
ஒரு கணத்தின்மேல்
இருபத்துநான்குமணி
நேரத்தையும் ஏற்றி வைப்பதேன்

தொடக்கம் எளிது

 ஏ ஃபார்ஆப்பிளை

வரைந்துகொண்டிருக்கும்போதே

மாம்பழ நினைவு வந்து
மஞ்சள் நிறம் தீட்டிய பாப்புக்குட்டி
மஞ்சளின் நினைவில்
சரிபாதியாக சோளத்தைப்போல
மணிகள் வரைந்தாள்
பிறகு பக்கம் முழுக்க நீலம் பூசினாள்
சோளம் வாங்க
கடலுக்குப் போன கதை இப்படியாகத்தான் படமானது
உருக்கிய மெழுகை பத்திரப்படுத்தினேன்
*******************************************************
சரக்கொன்றையென வருத்தங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
நிமிருமுன் பூத்தும்
தன்னுடையது
உதிர்ந்துவிட்டதென
ஆசுவாசம் கொள்ளுமுன்
என்ன மஞ்சள்
என்ன மஞ்சள்
**************************************************
தனியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது
நிலா
சிரிப்பிலும் அழுகையிலும்
நீ சேர்த்துக்கொள்ளும்போதும்
மறந்துவிடும்போதும்




கட்டுக்குள்

 என்னா வெயிலு

என்றபடி
கீரைக்கட்டுகளின்மேல்
தண்ணீரைத் தெளிக்கிறாள்
அந்த லோட்டாவை வாங்கி
அவள் வாடிய முகத்தின்மேல் தெளிக்க மாட்டோமா என்றிருக்கிறது
மனசுக்குள்
வாய்
இருவத்தஞ்சா அநியாயமால்ல இருக்கு என்கிறது
அடங்காப்பிடாரி
*******************************************************
ஒரு உழக்கு பாலின்
வெண்மை தளர்ந்த சாடையின் இறுதிக்கோட்டைத்தொடுமளவு
விளாவிய தேநீரை
அளந்து அளந்து எல்லோருக்கும் தந்தபிறகான
வண்டலைக் குடித்தே பழகிய அம்மா சொல்கிறாள்
எனக்கு சூடே ஆவறதில்ல என்று
ஏட்டையாவது எடுத்துப்போடு
அப்புறம் அதற்கொரு சாக்கு கண்டுபிடிக்க வேண்டும்

மாயப்பூட்டின் இரண்டு பக்கங்கள்

     இப்போது என்றில்லை

எப்போதுமே
உன் பார்வைக்கும்
என் பக்குவத்துக்கும் இடையே தொங்குகிறது ஒரு மாயப்பூட்டு
ஏழு கடல் ஏழு மலைக்கப்பால்
ஒரு கழுகு காத்திருக்கும் குகைக்குள் கிடக்கும் சாவியைத் தேடிப்போகும் நீ
ஒருமுறை
பச்சைக்கிளி வழி தொலைந்துபோனாய்
அடுத்த பிறவியிலோ
ஏழாங்கடலின் கரையில்
சங்கு பொறுக்கப்போனாய்
இப்படியே
மலைவேம்பின் பழம் உலுக்கி
எண்ணிக்கை தவறி
எட்டாம் மலை ஏறி என்றே போகின்றன உன் பயணங்கள்
பூட்டுக்கு இந்தப்பக்கம்
கழுகு கழுகு என்று நினைவூட்டியபடியே நான் காத்திருக்கிறேன்




தொடத்தொட

 எங்கோ மழை

இருண்ட திசைநோக்கி
வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடும் மேகங்கள்
ஆகாயத்தில் கால்கள் பின்னிநிற்க குடைகளை விசிறி ஆடும் நாயகியாக
என்றுதான் துள்ளியிருக்கிறோம்
துப்பட்டாவோ
முந்தானையோ
சடசடத்து இறங்காது காக்க
சலிந்து இறங்கிய சொட்டுகளை
நா நீட்டி சுவைத்தறியா வாழ்வு
ஆவிபிடி அதிகாரங்கள் முடிந்தபிறகாவது
ஒருநாள்
நனைதலுக்கு
ஒதுக்கலாம்
இப்போதைக்கு
தொட்டிச்செடி
துளிர்களின் குளுமையைத்
தொட்டுக்கொண்டு வாழ்வோம் வா

கருணை மதிப்பெண்

    பொதுவில்தான் கிடக்கிறது

கொஞ்சிய
வெம்பிய
கசந்து துப்பிய அத்தனை சொல்லும்
என்
மௌனம் பீதியுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறது
எதை எடுக்கப்போகிறாய் என்று
உன் மௌனமும் ரகசியமாக ஓடிவந்து எனக்கும் எனக்கும் என்கிறது ***************************************
ஒருநாளுக்கொன்றென
பொன்முட்டை விதியையாவது
பின்பற்றக்கூடாதா விதியே
விவரமறியாச் சிறுபிள்ளையா
மனநலம் பிறழ்ந்த
பேதையா
எல்லா எண்களையும் வளைத்து உருட்டி பூச்சியமாக்கித்
தூரப்போடுகிறாயே
கருணை மதிப்பெண் தந்து காற்றுக்குத் தொண்ணூற்றைந்து தரப் பழகு
என்று எத்தனை கோரிக்கை வைப்பது
********************************************************

பயணக்குறிப்பு

 தூரத்திலுள்ள... என்ற முற்றுப்பெறா பயணக்குறிப்பை மட்டும் விட்டு வைத்திருக்கிறாய்

தூரத்திலுள்ளமலையுச்சிக்குப்போனாயா
தூரத்திலுள்ள கடற்கரை மணலில்
நடந்தாயா
தூரத்திலுள்ள வனத்தில் ஏதோ ஒரு மரப்பொந்தை அச்சத்துடன் அணுகினாயா
தூரம் என்பதை
எப்படித்தான் முடிவுசெய்து உன்னைத்தேட
பயணக்குறிப்பு படபடக்கிறது
தூரத்திலுள்ள
உன் மனம் என்று நினைக்க மாட்டாயா
காற்றில் பறந்துவிடாதே என்றொரு கனத்தை ஏற்றி அமைதிப்படுத்தினாள்
அமைதி! அமைதி!

இருக்கா இல்லியா

 ஒருநாளைக்கு

ஒருமுறையாச்சும்
வந்துடுது அலுப்பு
என்ன இருக்கு இந்த
சிரிப்பா சிரிச்ச பிழைப்பில
போகிறபோக்கில் யார் வீட்டுக்கொல்லையிலோ
நாலு பச்சை மல்லாட்டையைப் பிடுங்கித்தின்றபடி
நடந்த நாளின் சுவை
தொம்மென்று வாளி விழக் கரகரவென்று
கையெரிய இறைத்து
சண்டையின் ஆத்திரம்தீர
வாரியிறைத்து முகத்திலடித்துக்கொண்ட நீரின் சில்லிப்பு
சுட்ட மாம்பருப்பைக் கிள்ளிக்கிள்ளித் தின்றபடி
துவர்ப்பை வென்ற பொடிநடை
கட்டியாய்த்திங்கப் போதாமல்
கரைத்துக் குடித்த நாளில்
மிஞ்சிக்கிடைத்த சுண்டக்குழம்பைச் சும்மா வழித்துநக்கிச் சப்பிய விரல்கள்
தவணைக்கு வாங்கி கடன்சொல்லித்தைத்து
சீயக்காய் மணந்த ஈரத்தலைவழி நுழைத்துக்கட்டிக்கொண்ட
சின்னாளப்பட்டுப் பாவாடையின் புதுக்கருக்கு
திங்கறதுக்கு வாங்க
எப்பவோ கிடைச்ச ரெண்டுகாசுக்கு
தேன்மிட்டாயா
இலந்தைவடையா
பால்பன்னா
எதை வாங்கறதுன்னு
முழிச்ச யோசனை
ப்ச்
ஏதேதோ இருந்துதான் இருக்குல்ல

திங்கள், டிசம்பர் 06, 2021

மிச்சம்

 கேட்டுவிட்ட ஆசுவாசமே போதும்

பதில் தேவையில்லை
விரித்து நீவிவிட்டு
ஒரு கிளிப் போடுவதோடு முடிந்தது
காய்வது என் வேலையல்லவே *********************************************
இன்னும் கொஞ்சம் பேச வேண்டும்
இன்னும்சற்றே பெரிய குவளைத் தேநீரோடு
இன்னும் அதிர்சிரிப்புகளோடு
இன்னும் சில தோள்தட்டல்களோடு
மிச்சம் உள்ள ஒவ்வொரு புள்ளிக்காகவும்
ஒரு பூவில் அமரும் வண்ணத்துப்பூச்சிபோல
மிச்சம் உள்ள ஒவ்வொரு நாளுக்காகவும்

உன்னால் தின்ன முடியாத உள்ளொளி

வ்வப்போது

கிருமிஒழிப்பான்களால்
துடைப்பதும்
கழுவுவதுமாக
இருக்கும் கைகளைக் குவித்து விரித்து
ஒரு பூவை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்
மௌனத்தால் உலர்ந்திருக்கும் என் உதடுகளை நன்றாக ஈரப்படுத்திக்கொண்டு
ஒரு துள்ளிசையை முணுமுணுக்க விரும்புகிறேன்
கவசம் ஒன்று
கவசம் இரண்டு என்று இறுகப் புதைத்திருக்கும்
என் முகத்திலிருந்து
சோதிச்சுடர்
ஒரு துளியாவது வீச விரும்புகிறேன்
எனக்குத்தெரியும்
ஆழ்மனதில் இதே நாட்டத்துடன் உள்ள
உங்கள் கரங்களும் கைகுலுக்க நீள்வது

தேய்த்த காலம்

 உள்நாக்குவரை தொடும்

கசப்பாயிருந்தாலும்

ஒரு மிடறு தண்ணீர் பருகிப்பார் என்று
அதே நாக்குதான் சொல்கிறது
வாழ்க்கை
எப்போதாவது ஆரஞ்சு மிட்டாய்
நீட்டும்தானே
***********************************************
எப்போதாவது சொல்லிக்கொண்டிருந்த ஆறுதலை இப்போதெல்லாம்
ஒவ்வொரு மணிநேரமும்
சொல்ல வேண்டியிருக்கிறது.
உங்கள் வீட்டிலிருந்து அவர் போயிருக்கலாம்
ஆனால் அவர்களுக்குப் பிரியமான ஒன்று வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
அதில் அவர்கள் இருப்பார்கள்
என்று ஒருவரிடம் சொன்னேன்
கவிழ்ந்த எண்ணெய்க்கிண்ணத்தைப்போல
பிசுக்கு கூட இல்லாமல்
காலம் துடைத்துவிடும்
என்றா சொல்ல முடியும்
அப்புறம்
இந்த 'காலம்' என்பது நானும் நீங்களும்தான்
என்பதை மறந்தும் சொல்வதில்லை

கும்பிடு சாமிகள்

 நாங்க கும்பிட நிறைய சாமி உண்டு

சமயத்துல
அது மரத்தடியில நின்னுக்கும்
சமயத்துல ஆத்தங்கரை
குளத்தங்கரை
நடுக்காடு
மொட்டைவெயில் கூரைகூட கேட்காமல்
போறப்ப வர்ரப்ப
வைக்குற பொங்கலுக்கும்
எப்பயாச்சும் வெட்டற ஆடு கோழிக்கும்
என்னிக்கோ போடுற முதல்மொட்டைக்கும்
கணக்கு பாக்காம
காலம் பூரா காப்பாத்துற
எக்கச்சக்க சாமி உண்டு
முக்கியமா
எதையும் உடைக்கச் சொல்லாம
கோடி கோடியா வசூல் பண்ணச் சொல்லாம
அதது பாட்டுக்கு நிக்குது
எப்பவாச்சும் பாக்குறது
போதாதுன்னுதான்
போன நூற்றாண்டு
சாமிகளுக்கும்
தெருத்தெருவா சிலை வைச்சோம்
உலகம் அந்த சாமிகளை
அம்பேத்கர், காந்தி,நேரு,
பெரியார் அண்ணா'னு
கூப்பிடுது
தலைமுறையக் காப்பாத்த வந்த
இந்த சாமிங்க
சூடம் சாம்பிராணி கேக்குறதுல்ல...
பசிக்கிற வயித்துல விழுற பழைய சோறுகூட
அவங்களுக்குப்
படையல்தான்
கண்ணைத் தொடச்சுவிடவே கண்திறந்த சாமிகளை
இப்ப
கண்டா வரச்சொல்லுங்க

தொடர் ஓட்டம் தொடர்க

 மடித்த பேப்பரின்

சிவப்பு வட்டத்துக்குள் பார்த்த நாட்களைவிட

துடிப்பாக இருக்கிறது தொண்ணூற்று நான்கு
தொண்ணூற்றைந்து பார்க்கும் பொழுதுகள்
நகங்களில் வெள்ளைப்பூப்போடும்
பிரார்த்தனை போல
அண்ணாந்து காத்திருக்கிறேன்
எல்லா சிவப்பு வட்டங்களுக்குள்ளும்
அதே மதிப்பெண்களைப்
போட்டுப்போகும்
தேவதைக்காக

******************************************
விட்டுப்போன மன்னிப்புகளைக்
கேட்டுவிட வேண்டுமென்று
ஒருவர் நினைக்கையில்
விட்டுப்போன கருணையைக்
காட்டிவிட வேண்டுமென்று
ஒருவர் நினைக்கையில்
விட்டுப்போன முத்தத்தைப்
பகிர்ந்துவிட வேண்டுமென
ஒருவர் நினைக்கையில்
விட்டுப்போன முகத்தை ஒருமுறை
சேர்த்தணைக்க வேண்டுமென
ஒருவர் நினைக்கையில்
ஆகட்டும் அவ்வாறே என்று
சொல்லிவிடாதே தேவதையே
உன் முற்றுப்புள்ளிகளை அழித்துவிடு
விடுபடல்களைத் துரத்தி வாழ
வந்து சேரட்டும்

உள்ளே வெளியே

 இந்த உலகம் என்பது

பௌர்ணமி நிலவொளியைப் பற்றிக்
கவலையே படாமல்
வண்டியில நெல்லுவரும் என அலறவிட்டுக் கொண்டிருப்பவர்களும் சேர்ந்ததே
இந்த உலகம் என்பது எல்லோரும் விரல்தேய ஆழ்ந்த இரங்கல் செய்தியை
அனுப்பிக் கொண்டிருக்கையில்
கமிஷன் கணக்கைக்
கூட்டிக் கழித்துக்
கொண்டிருப்பவர்களும் சேர்ந்ததே ****************************************************
விறுவிறுவென்று நடந்து செல்பவர்களைப் பார்த்து
போலச்செய்கிறது நிலா
புதினா மணக்கும் தேநீர் அலுங்காமல்
சன்னல் வானத்தோடு
முடிகிறது
கதவுக்கு வெளியே கால்வைக்காத நாள்

யாரோ மணி அடிக்கிறார்கள்

 கடைகளின் ஷட்டர்கள் மேலேறும் ஒலி

தடதடவென இருக்கைகள் ஆடும் பேருந்துகளின் ஒலி
கூட்டத்துக்கிடையே உறுமிக்கொண்டே இருக்கும் வாகனங்களின்
ஒலிப்பான்கள்
அச்சமாயில்லையா
இன்னும் கொஞ்சம் அழுகை
இன்னும் கொஞ்சம் இழப்பு
இன்னும் கொஞ்சம் பரிதவிப்பு
விளையாட்டுக்காக யாரோ இரும்பு தண்டவாளத்தைத் தட்டிவிட்டாலும்
பையைச் சுழற்றிக்கொண்டு ஓடும்
வயதிலிருந்து வளரவேயில்லையா *************************************************************
அறிவேன் புத்தனே
எந்த அஞ்சறைப்பெட்டியிலும்
அந்தக்கடுகு இல்லையென்று
ஆயினும்
அழாதே துயர்கொள்ளாதே என்று ஆணிவேர் அறுந்த இலைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது உன் பாஷையில்
பேராசை
காலங்கடந்து நிற்கும் கல்மரமல்ல நாங்கள்
வேர்பிடித்து நிமிரவாவது வரம் கொடு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...