சன்னதி வீதியைப்
படம்பிடித்துப் போட்டிருக்கிறார்கள் யாரோ
கோபுரத்திலிருந்து உலகைப் பார்ப்பதாக
பொதபொதவென்று இறங்கும் சேற்றுக்குழி
முன்னொரு காலத்தில்
தண்ணீர்ப்பந்தல் இருந்த இடத்தில்
டோக்கன் கொட்டகை
நேர்ந்துவிட்ட பிராணிகளின் ஒலியில்
அமிழ்ந்து கொண்டிருக்கிறது
வீதி உலாவின் ஆனந்தபைரவி
வரப்பிரசாதியாக மாறிவிடுமாறு
வலியுறுத்துவதை எதிர்த்து
புலித்தோலும் சூலமுமாக
வேகநடை போடுகிறான் சடையன்
அவிர்ப்பாகம் வாங்கித் தருகிறேன் வா
என்று இறந்தகால ஞாபகங்களோடு
பின்தொடர்கிறாள்
வேடப்பொருத்தம்
அழகு என்றபடி
இரண்டுரூபாய்
நாணயத்தை நீட்டுகிறான் எவனோ