வியாழன், அக்டோபர் 08, 2020

வாழ்வின் சந்நிதானத்தில்

 கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர *********************************************

நிறைய பேசினோம்
ஊர் நிலவரம்
வீட்டிலிருந்த காலொடிந்த நாய்
கிணற்றில் பூனை விழுந்து தூக்கியது
பட்டு டீச்சர் வைத்திருந்த பிரம்பு
ராமு மாமா சைக்கிள் அலங்காரங்கள்
கூடப்படித்த ரவி சேர்மன் ஆனது
என்றெல்லாம்
ஏதாவது வேண்டுமா எனக் கேட்டிருக்கலாமோ **********************************************
எத்தனை முயன்றும்
கப்பல் செய்யத் தெரியவேயில்லை
கோபித்துக்கொண்டு போன மழை போனதுதான்
நான் வேண்டுமானால் மிதக்கிறேன்
உன் உள்ளங்கையில் தண்ணீரேந்து
என்று ஆறுதல் கூறி முகம் பார்க்கிறது சிற்றெறும்பு

கிடுகிடுக்கும் சுவை

 

எல்லாம் என் தலையெழுத்து
என்ற முடிப்போடு
நீ
நகர்ந்து விட்டாய்
அதில் என் எழுத்தின் பிரதி உண்டா 
ஆராய்ச்சியிலிருந்து
மீளாத்திகைப்புடன்
நான்

செம்பாதி இல்லாவிடினும்
ஒவ்வொரு குவளையின் கசப்பையும் 
பாகம் பிரித்துக்கொண்டதற்கு
பொருளிருக்கிறதா
உன் தலையெழுத்துக்குத் 
தனி அடையாளம் சூட்டுகையில்

*************************************************


இவ்வளவு தித்திப்பாக எதையும் தராதே
கொஞ்சம் குறைவாக இட்டே பழக்கமாகிவிட்டதா
பட்டதும் பல் கூசுகிறது
அறுசுவை என்பது
எல்லோர் அகராதியிலும் அதே அளவாக இருக்கவில்லை

முழுசாக ஒன்று
வந்தால் கிடுகிடுத்துப்போகிறது *********************************************************
பேனாக்கத்தியால்
தோல் சீவிக்கொண்டே
விவாதிக்கிறாய்
இடையில் ஒரு சீவல்
இரத்தப்பொட்டை உறிஞ்சிவிட்டு
மீண்டும் பழம் திருத்துகிறாய்
எங்கே விட்டேன் என்று
எனக்குதான் புரியவில்லை

******************************************

நேரத்துக்குக் கிளம்ப வேண்டியிருக்கிறது
நேரத்துக்குக் குளி
உண்
உறங்கு
திரும்பு
எழு
களி
முன்வாசல் முருங்கைக்கீரை போல நேரத்தின் காம்புகளில்
சின்னதிலிருந்து
பெருசாக
பெருசிலிருந்து சின்னதாக
இதோ ஒரு நாள்
ஆய்ந்தாயிற்று
அலகில்
இழுபடும் கொத்து

தஞ்சமடி தஞ்சம்

 மழையே உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்

இரவிடம் தஞ்சம் புகுந்துள்ளது உனக்குப் புரியவில்லையா
சற்றே பேசாமலிரு
சன்னலில் வழிகிறாய் என்பது தெரியும்போது
குற்றமிழைத்தது போலத் திடுக்கிடுகிறேன்
என்னை வீட்டுக்கு வெளியே விட்டுப் பூட்டிவிட்டதான
திடுக்கிடல் அது
யாராவது ஒரு அதிர்ச்சி தகவலைச் சொல்லிக் கண்தளும்ப வைத்துவிடுவது
ஒரு மணிக்கு ஒருமுறை நடந்துவிடும் இந்நாட்களில்
அவர்களெல்லாம் உறங்கப் போயிருக்கும் இந்நேரத்தை எனக்கு அருள மாட்டாயா
எங்கே நல்லிரவு சொல் பார்க்கலாம்

ஹத்ரஸின் பாடல்

 


மகளின்  முகம் பார்க்க விட்டிருக்கலாமே மகராசனே
ஒரு கை மண்ணும்
கிடைக்கவில்லையே அவளுக்கு

அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

எலும்புகளை உடைத்தது
உங்களுக்கு வசதிப்படவில்லை என்றா
அவளுக்கு
வலித்தது போதவில்லை என்றா

நாக்கு இருந்தபோதெல்லாம் பேசிவிடுகிறோமா என்ன

அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

ஒருவன் மனைவியை மற்றவன் பார்க்காதே
என்கிற மதத்தையும் சாதியையும்
அப்போது மட்டும்

உடுப்புகளோடு கழற்றி
எறிந்து விடுவீர்களா மகராசன்களே


அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

ஆமாம் மகராசன்களே
அடுத்தடுத்த நாட்களில்
நடப்பதிலிருந்து அறிந்து கொள்கிறோம்

நீங்கள்தான் இங்கு இருக்கிறீர்கள் 


காந்தி அழைப்பு

 எப்போதையும்விட

இப்போது நீ தேவைப்படுகிறாய்
சத்தியத்தின் உறுதியைப் பெற்றுதான்
எழுந்து நடமாட வேண்டும்


என்னை அப்படியே வழிபடு என்று
சாட்டை சுழற்றாத
முன்னோடியைத் தேடுகிறோம்


தன் தவறுகளை ஒப்புக்கொண்டு
பரிசோதனைகளைப் பகிர்ந்து கொண்டு

அதிகாரத்தினால்
வாள் பாய்ச்சாத தலைவனைத் தேடுகிறோம்

சந்தேகமாகதான் இருக்கிறது
நவநாகரீக ஆடையணியாமல்
தொடர்ந்து பொய்யுரைக்காமல்
பேதங்களை ஊதிப்பெருக்காமல்
இருக்கும் உன்னை எங்களுக்கு
அடையாளம் தெரியாமல் கூட இருக்கலாம்

உன்னை பிரமோட் செய்ய
 நிறுவனங்கள் உண்டா

தொலைக்காட்சி அரங்குகளில்
கண்மூடிக்கொண்டு கத்துவதற்கான
ஆள்பலம் உண்டா


இரண்டு வருடங்களுக்குள்
இன்னோவா தரமாட்டாயே நீ


ஏதாவது செய்வாய்
ஏதாவது தருவாய்
என்ற ரகசிய ஒப்பந்தங்கள் இல்லாது
வாய்மை அகிம்சை
என்ற வார்த்தைகளை நம்பி
கல்வியை,தொழிலை,
குடும்பத்தை விட்டுவிட்டு

நடப்பதற்கான கூட்டமாக
நாங்கள் இல்லை என்பதையும்
தெரிந்துகொண்டு ஏதாவது செய்

படம் :ஓவியர் ஆதிமூலம் 

    கடன்களின் கூட்டுவட்டி தள்ளுபடி

தள்ளிவைப்பு
வேட்டைகளின் நடுவே
விதைநெல் தவிர வேறெதுவும் தெரியாதவன்
வீட்டுத் தொலைக்காட்சியும்
கட்சிக்குள் சண்டையா என்றுதான் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கிறது ******************************************

நள்ளிரவு மழை பாவம் அனாதையாய்ப் பெய்து போய்விட்டது காலைப்பிசுக்கின் ஊடே பாதைகளில் விழுந்திருக்கக்கூடிய குழிகளின் நினைவுதான் வருகிறது ***********************************************


ஒரு கல் குறைவான தித்திப்பு

 சின்ன பூக்களை

குட்டி மீன்களை
பூ என்றும்
மீன் என்றும்
எழுதி
ரஃப் நோட்டின் பக்கமொன்றை வாழ்த்து மடலாக்கியளித்த குட்டிப்பையன் இப்போதும்
ஸ்விக்கியில் கேக் அனுப்புகிறான்
அவன் சொன்ன வாசகத்தை
யாரோ பிழிந்து எழுதும் தித்திப்பு
ஒரு கல் குறைவாகவே ருசிக்கிறது
***********************************************
தடதடவெனக் கருங்கல் ஜல்லி சரிந்து கொண்டிருக்கிறது
முதல் வண்டி
வந்த மாதிரி இல்லை இப்போது
எல்லாச் சத்தமும்
பழகிவிடுகிறது

எனாமல் ஆபரணம்

 பட்டை கொலுசை மறுத்தது ஆத்தாவுக்கு துக்கம்

திருகோடு ஒற்றைக்கொத்து சலங்கை இருப்பதில் எனாமல் பொட்டுகளோடு தேர்வு செய்தாள் அம்மா
அரைஞாண் கொடிபோலச் சுற்றியதைக் கொலுசென்று சொல்லித்தந்த சித்தியும்
தங்கத்தில் வேண்டுமென அடம்பிடித்த அத்தையும் சேர்ந்துதான் புலம்புகிறார்கள் ஜீன்ஸ் அணிந்த சின்னப்பாதத்தின் மறுதலிப்புக்கு

அழுவதை நிறுத்திவிட்டேன் எஸ் பி பி

 


அரஹர சிவனே அண்ணாமலையே பாட்டில்தான் தேயிலைத்தூளைச் சற்றுக் கூடுதலாக இடவேண்டுமென்ற முடிவெடுக்கிறேன்
இலக்கணம் மாறுதோ ஒலிக்க இட்லி குக்கர் அடுப்பிலேற்றுகிறேன்
இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் அஞ்சரைப்பெட்டி அனைத்தும் பக்கத்தில் வைத்தபடி துவங்கும் சமையல் மேடையில் நடுவில் இருக்கிறீர்கள் நீங்களும் ஒரு சிருங்காரச் சிரிப்போடு
பாருங்கள் தாளிப்பின் நெடியில் ஒரு ராராரீ வேறு
அவசரங்களினூடே
நிதானத்தையும்
ஆத்திரங்களூடே பக்குவத்தையும்
மண்டைக்குள் சுரக்கவைத்தபடி
அன்றும்
இன்றும்
என்றும்
இருக்கிறீர்கள்
நான் அழுவதை நிறுத்திவிட்டேன் எஸ் பி பி
உங்கள் மருத்துவக்கட்டணம்
உங்களைப் பார்க்க வந்தவர் வராதவர்
எதுவும் வேண்டாம் எனக்கு
நிலவு தூங்கும் நேரம்
தூங்கிடாத குரல் இருக்கிறது
எப்போதும்போல் என்னுடன்
அப்படியென்றால்
நீங்களும் இருக்கிறீர்கள்தானே

பாடும் நிலாவின் கிளிகள்

 உன் தோளில் தொற்றிய கிளியாகத்தான்
இருந்தோம் போல


மழைதருமோ என்மேகம் எனப்பாடிய
நாயகனை விட்டு

ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி
வானில் பறக்கிறது
என ஓடிய பிம்பத்தைவிட்டு
தேன் சிந்துதே வானம் உனை எனைத்
தாலாட்டுதே என்றதும்
உன் குழைவுக்கும்

சின்ன சிரிப்போடு பறந்த
சிறிய பறவைகள் கூட்டம்

அடிமைகள் ஆனது

ரகசியக்குரலில் பியூட்டிஃபுல் என்றுவிட்டு
நீ
அடுத்த வரிக்குப்போக
நகர முடியாது சுழலும் மனங்களோடு
வாழ்ந்துவிட்டுப் போவோம்

எம் காதலனே
❤️
உயிருக்குத்தான் பிரிவு
உன் குரலுக்கல்ல 

புதன், அக்டோபர் 07, 2020

மாத்திரை

 பிரியமிருந்திருக்கலாம் பார்வையிலும் சொல்லாது போனவற்றை பல்லாங்குழிச் சோழி போல இப்போது எதற்கு இட்டு அள்ளி இட்டு அள்ளி ************************************

கொலோனில் நனைந்த கைக்குட்டையோடு
முடிந்துவிட மறுக்கிறது காய்ச்சல்
அது பற்றுக்காக என்று புரிய வரும்போது
ஒற்றை மாத்திரையை நீட்ட மாட்டாய்தானே *****************************************
என்னவோ உறுத்துகிறதே
அட தளராடையைத் திருப்பிப் போடுகிறேன்
மாற்றியாயிற்று
கண்டுபிடிக்கவும்
மாற்றிப்போடவும்
இப்படி முடிந்தால்
எவ்வளவோ உறுத்தல் சரியாகியிருக்கும் ************************************
உரச்சாக்குகளை இழுத்துத் தைத்து
கூரைக்குள் திணிக்கிறவனிடம்
கைநீட்டி யாசகம் கேட்கும் மழைதான் இதோ உங்கள் குரோபேகில் இறங்காமல் வழிகிறது

கண்ணாடிகள்

 நீங்கள் பிறந்த மாதம் சொல்லுங்கள்

உங்களைப்பற்றிச்
சொல்கிறேன்
ஆடு பிடிக்குமா
கோழி பிடிக்குமா
உங்களைப் பற்றிச்
சொல்கிறேன்
உங்கள் கைகள்
உங்கள் கட்டங்கள்
எதை வைத்தாவது
உங்களைப் பற்றித்
தெரிந்து கொண்டுவிட முடியாதா என்றுதான்
உங்கள் தவிப்பும்
பாவம் நாம்
கண்ணாடி இல்லா உலகில் பிறந்தவர்கள்
***************************************

முழு முதுகும் தெரிய
முடிச்சோடு முடிந்த ரவிக்கையுடன் ஒசிந்து நிற்கும் ஒருத்தியின் கண்ணாடி முன்னான படம்
பூத்தைத்த சடையோடு புகைப்பட நிலையக் கண்ணாடிமுன் கைகால்களைப் பக்கப்பதிய வைத்தபடி உறைந்து நின்றவளின் 2.0 என் மனசுக்கு
*****************************************

தூரத்தில் வேர் நுனி

புதிய பசிய கறிவேப்பிலையை ஈர்க்கிலிருந்து சரசரவென உருவி கொழுந்துமல்லித் தழைகளையும் சேர்த்துக் கொதிக்கும் ரசத்தில் போடும் கையா

நீரூற்றிக் களையெடுத்தது *********************************************
மழுமழுவென மின்னும் பீங்கான்
தொட்டியிலிருந்து கிள்ளிவந்த மணிபிளாண்டுக்கு
பழைய பால் பாட்டிலோடும் பேதமில்லை
*********************************************

நட்சத்திரம் இறைந்த துப்பட்டா வாங்கியபோது நினைக்கவில்லை
வானத்தை இப்படிப் போர்த்திக் கொள்ளமுடியுமென்று ************************************** தினம் நடக்கிற வழிதான்
தினம் வருகிற வெயில்தான்
என்றாவதுதான்
நிமிர்ந்து பார்க்க வாய்க்கிறது
கை வைத்து மறைத்தபடியாயினும்
*************************************
விதைத்தது நீ என்று உலகு அறியும்
வேரின் நுனி
உன் கையில்
என்ற ரகசியம் எனக்கு மட்டும்

நாஸ்டால்ஜிக் உடைமை

 எப்படி இருக்கிறாய்

என்ற கேள்வியை
பதிலை எதிர்பாராது கேட்டு
நகர்ந்தும் விடுகிறீர்கள்
யாரிடம் போய்ச் சேர்வது என்று அலைகிறது
நல்...என்று தொடங்கிய மறுமொழி
அதன் முடிவு எனக்கும் தெரியவில்லை

****************************************************
புறங்கையால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டு
எழுந்துபோகிறாள்
துடைக்குமுன் வழிந்து காய்ந்து கிடக்கும் கண்ணீரின் பிசுபிசுப்பு
வியர்வையில் கரைந்துவிடும்
முடிந்தால்
பாத்திரம்
எதையாவது நங்கென்று வைக்கலாம்
நெஞ்சு பாரம் குறைய ***************************************************
கால்சட்டைப் பையிலிருந்த கோலிக்குண்டுகளை
கல்லூரிக்கால
கால்சட்டை சீப்பினை
நினைத்துக் கொள்வது போலத்தான் நினைத்துக் கொள்கிறாய்
இருப்பு தெரியாது அவளையும்
நாஸ்டால்ஜிக் உடைமை

அவியும் நினைவு

      யாரைப்போல இருக்கிறோம் பச்சைப் பிள்ளையாக இருந்தபோதாவது யாருக்கேனும் தெரிந்தது

****************************************

யாரைப்போலவும் இருக்க வேண்டாம் உதறி உதறி உதறிய வேகத்தில் யாருக்காவது தோன்றி விடுகிறது எங்கோ விழுந்த உதறல் ***************************************

புழுக்கிய நெல்லாக
திராவிக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளை
அவித்த வாசம் போச்சு
கொஞ்சம் ஈரம் மிச்சம்
*****************************************
எதற்காகவோ
யாருக்காகவோ
சொற்களை
விழுங்கி
சொற்களைத் துப்பி
விழுங்கி
துப்பி
இலையுதிர் காலமே....

********************************
எனக்கு புல்வெளி
உனக்கு
மேய்ச்சல் நிலம்
அவனுக்கோ சதுரமீட்டர்
கிண்டியபடி
நகரும் கோழி
இங்கே
வருவதேயில்லை
*******************************
ரகரகமாய்க்கட்டத்
தெரிந்து கொண்டேன்
ஒருமுறை கூடப்
பூக்கும் தருணம் தெரியவில்லை
அரும்பாகத்தான்
கிடக்கிறது
கடை மேடையில்உடையும் எழுத்தாணி

     வீட்டை விற்று

மனையை விற்று
வயலை விற்று
மொத்தமும் பணமாக கட்ட வேண்டுமெனச்சொல்லும்
எந்த சன்னலுக்கு முன்னாலும் நிற்கத் திராணியற்ற
தாய் தகப்பனுக்குப் பிறந்த
கல்லூரி விடுப்பில்
நடவுக்குப்போன
செங்கல் சுமந்த
பொட்டலம் கட்டிய
மருத்துவர்களையும்
பொறியாளர்களையும்
அறியப்போவதில்லையா
அடுத்த தலைமுறை
பிள்ளை படித்த எழுத்து
அப்பனுக்கு சட்டை போட
செருப்பு போட
உரிமையளித்ததெல்லாம்
பழங்கதையா
அரசின் காலணி
அரசின் சீருடை
அரசின் சோறு
தந்து ஆளான பிள்ளைகளை
பச்சை மசிப்பேனாவோடு
பார்க்கப் பொறுக்கலையா
என்னோடு தெருவில் நிற்கும்
உனக்கும் தெரியாமல்
உன் துணியை இழுத்துவிட்டு
அதுதான் சிறப்பென்று உன்னையே கைதட்டவைக்கும்
அழும்புதான்
தாங்கவில்லை

 

ஒரு சமாதானத்துக்காகவாவது
சொல்லலாம்
என் கோபம் உன்மேல் இல்லையென்று
தன்பாட்டுக்கு
வாகனம் முடுக்கிப் போகிற எசமான்
திரும்பும் வரை
தொய்ந்த முகத்தோடு கிடந்து
நுழைந்ததும் வாலாட்டித்திரிய வேண்டுமோ

******************************************************

 

தனியாக இருக்கிறாயா

 அவசரமாக மூக்கை உறிஞ்சிக் கொள்வதைக் கவனித்து கைக்குட்டையை நீட்டும்

பித்தவெடிப்பின் வலிக்கு விளக்கெண்ணெயும் மஞ்சளும் பூசிப்புரண்ட படுக்கை விரிப்பைத் தனியாகத் துவைக்கும்
மூன்றுநாள் மூர்க்கத்துக்கு எதிர்ச்சண்டை போட்டுவிட்டு
முடியலன்னா சொல்ல வேண்டியதுதானே
ஏன் விழுந்து பிடுங்கணும் என முணுமுணுத்தபடி
உணவுப்பொட்டலத்தோடு திரும்பும்
பிள்ளைகளோடு
போகும் பொழுதுக்கு
பங்காளிச்சண்டை வளர்த்து
அந்தக்கையோடே மகவைத்
தலைக்குமேல் தூக்கிப்போட்டுப்பிடித்து
தன் உரிமையை நிலைநாட்டும்
வாழ்வை
வாழாத எவனோதான்
கண்டுபிடித்திருப்பான்
ஏழு இலக்க எண்ணை அனுப்பி
உறவு பற்றிப் பேச வா
என்றழைக்கும்
பரிதாபத்தை

பாப்பூ -2

 பேசவைத்து

ஆடவைத்து வீடியோ எடுக்கும்
அம்மா
அப்பாவுக்கு
முன்னமே
தயாராகிவிடுகிறாள் பாப்பு
புதிய ஒன்றைச் செய்தவுடன்
புதிய உடையோடு

***********************************

பூப்பூவாய், ரிப்பன் கட்டி, வழுவழு சாட்டினில் குய்ங் குய்ங்கென அடிவைக்குந்தோறும் கூவும்படியாக விதவித காலணிகள் இருந்தாலும் அம்மாவின் பாதணிக்குள் ஏறி நடக்கத்தான் பாப்புவுக்குப் பிடிக்கிறது

பாப்பூ -1

 


தினமும் சன்னலுக்கு வரும் காகத்துக்கு
ஒரு பிடி சோறு வைத்துப் பழகிய
பாப்பு
காக்காஃபிரெண்டாக
சொல்லிக் கொடுக்கிறாள் 
பக்கத்துவீட்டுத் தோழனுக்கு
*************************************


 

பிரௌன் நிறத்தை
அரைத்தீற்றலாக இழுத்து வைத்த பாப்பு
அங்குமிங்கும் குனிந்து நிமிர்ந்து
தேடிக்கொண்டிருந்தாள்

பச்சை பென்சிலைக் காணோமாம்

பிரௌன் மண்ணில்
செடி எப்படி முளைக்கும் விசனத்தோடு
தேடல் தொடர்கிறது

அங்குமா
அலுத்துக்கொண்டார் தாத்தா


 ************************************************************


அந்நியயப்பொழுதுகள்

 பிரியமாக இருந்த பொழுதின் சாட்சி என்று எதைச்சுட்ட?

நாம் பகிர்ந்த பரிசுகள்?
உடைகள்?
தொடுகைகள்?
முத்தங்கள்?
உரையாடல் பாதையை அழித்தபின் இவற்றுக்கென்று
ஒரு குரல் இருக்கிறதா என்ன?
இப்பொழுது நீயும் எனக்கு கோடானுகோடி மற்றவரில் ஒருவர்
ஆனால் நானுமே எனக்கு
யாரோவாகி அச்சுறுத்தும் பொழுதுகளைத்தான் என்ன செய்ய

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...