செவ்வாய், அக்டோபர் 23, 2018

அல்லிக்குளக்கரை

நான் என்ன செய்யவேண்டும்
எப்போதும் என்னைவிட
உங்களுக்குத்தான் தெரிகிறது
போலவே நீங்கள் செய்யவேண்டுவது
எனக்குத்தெரியும் என்பதை மறந்துவிடுகிறீர்கள்
அல்லிக்குளத்தின் சேறு
கரையேறுகையில் கழுவியாயிற்று
கரையிலிருக்கும் கால்களின் சேறு....
அதைக்காணாது அல்லிக்கொத்தை ஏந்தி நடப்பேன் 

அதன் சுகந்தம் 
நிறம்போலவே அடர்த்தி


இரட்டைப் பின்னலுக்கு நடுவே தொங்கும் தைரியம்

கண்ணாடிக்குவளை சிலுங்கென விழுந்து நொறுங்கியது
பொறுக்கித் திரட்டியாயிற்று
குப்பையில் விழுந்த சிலுங்கும்
தரையின் சிலுங்கும் 
ராகதாளம் ஒன்றேயா
முன்பின் எங்கும் கீச்சாத பரிசீலனை
வேறெதுவும் தோன்றவில்லை


********************************************************
பை பத்திரமா
மண்ணா
செடியா
வேரா
கிளையா
துளிர்த்துக்கொண்டிருந்த குட்டிமல்லியா
ஏறத்துடித்த அவரையா
எதை விசாரிக்க
எதையும் கவனித்ததில்லை 

எல்லாம் தரையிலிருந்தபோது
****************************************************************
தலைக்குப்பின்னால் போய்விழுந்த ஓட்டுச்சில் 
சரியாகத்தான் விழுந்திருக்குமென்ற 
ஊகத்தில் குதிக்கும்போதும்
தைரியம்
இரட்டைப்பின்னலுக்கு நடுவே
மல்லிச்சரமாகத் தொங்கிக்கொண்டிருந்தது
மல்லி கதம்பமானாலும் 

கனகாம்பரமானாலும் அதே
விசிறியாய் ஆடும் முழுக்கை சட்டை

மிகச்சரியாக பொத்தான்கள் இடப்பட்ட 
அந்த கடுங்காப்பி நிற 
முழுக்கைச்சட்டையை நீ மடித்துவிட்டிருக்கலாம் 
என்று ஏனோ பட்டது 
வாசல்முன் இறங்கியபோது
லேசாக விசிறி போலப் 
பொத்தான் அவிழ்ந்து ஆடும் சட்டையோடு 
தூறலுக்காக ஒரு கையுயர்த்திய நெற்றி மறைப்பில்
சற்றே குனிந்து 
விரைவில் படியேறியபோது நீ நனைந்துவிடவில்லை
புதியவன் முகம்பார்த்து 
மிரண்டு படியிறங்கிய
சோனிநாய்க்குட்டியை 
நனையாது திண்ணையேற்றியபோது
வீட்டின் மனம் நனைந்துபோனது

ருருரூ ரூரூரூ மின்மினி

ருருரூ ரூரூரூ என்று தொடங்கிய 
ஜானகி
குரலைத் தாழ்த்தி 
மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என்று சேர்ந்துகொண்ட வாசு
அப்போது மொட்டையாகியிராது 
எண்ணெய் வழியும் கிராப்பு தலையும் 
பெரியகாலர் சட்டையுமாக 
எங்கோ பார்த்திருந்த இளையராஜா
கொடுங்கோலர்களே...
எத்தனை காலங்கடந்தும் 
இப்படிப் படுத்துபவர்களை பின்னெப்படி அழைப்பது

நேற்றைய மலர்

எல்லாம் முக்கியம்தான்
யாருக்கு எது 
என்பதில் இருக்கிறது
யார் 
யார் என்பது

*****************************************
ஞாபகநதியில் நுரைத்த புனலோடு மிதந்து வந்த
நேற்றைய மலர் இன்றாவது கரை சேர்ந்திருக்கலாம்
கைக்கெட்டும் தூரத்திலாவது வந்திருக்கலாம்
எத்தனைகாலமும் இப்படியே
நேற்றைய மலராகவே மிதந்துகொண்டேதானா.
****************************************************
ரொட்டியும் வெண்ணெயும் சர்க்கரையும் 
மூடிவைத்துவிட்டு
சாரலை மென்று கொண்டிருக்கிறேன்
வளைந்து வளைந்து இறங்கும் 
மலைப்பாதையின் விளிம்பில்
ஆழத்திலிருந்து தவித்தேறி
ஆடிக் கொண்டிருந்தன
மலர்க்கொத்துகள்

*********************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

உரையாடல்களின் தேசம்


................
அதிகப்பிரசங்கி
பட்டிவாய் என்றெல்லாம் 
காலகாலமாக வையும் 
மெல்லினப் பதங்களை 
நன்கு இறுக்கி முறுக்கி
நெகிழிப்பைக்குள் திணித்து
வீசியெறி முதலில்..

ஸ்வச் பாரத்

கேள்வி என்பது பதிலுக்கானது என்ற
மூடப்பழங்கதையோடு
விடாது கேள்விக் கல் போட்டுக்கொண்டிருக்கும் காகங்களே..
சாடி நிரப்பவே உங்கள் காலம் போதாது 
இதுவோ ஆழ்பாழ்கிணறு
மந்தையாய்ப் பின் வரும்
வரம் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது
பிறவிப்பயன் எய்தினீர்
***
தேர்ச்சட்டகங்களின் மேல் 
அகன்ற மார்பு விம்ம விம்ம நின்றபடி
கரமுயர்த்தி ஆசீர்வதிக்கும்
உங்கள் அழகிய லட்சமதிப்பு துவராடைகளின் 
வெளிச்சத்துக்காக 
கூசும் கண்மூடிச் சற்றே நின்றமைக்காக..
என்ன தின்ன
என்ன உடுக்க
எப்படி நிற்க
எப்படி நடக்க
யாரை நேசிக்க
யாரை வாசிக்க
யாரை வணங்க
யாரைத்தூற்ற
எல்லாம் உங்கள்
சுட்டுவிரலுக்கு உரிமையாக்கவா

எம் சோற்றில் உப்பு உண்டு
இன்னும் கொஞ்சம் துப்பு உண்டு
இது உரையாடல்களின் தேசம்
ஒற்றைக்குரல்களின் சந்தைமதிப்பு 
சட்டெனப் பாதாளம் போகும்
அக்டோபர் 1 முகநூல் வழி த மு எ ச க வழி வெளியானது 

சரிகை புல்லாக்கு மினுங்க

செல்லாத்தா செல்ல மாரியாத்தா 
மிதந்து கொண்டிருக்கிறது பந்தலில்
திருவிழா வரிசையில் வாங்கிய
புளியோதரைத் தொன்னையைத் 
தலைநடுங்க நிற்கும் மாரிக்கிழவியிடம் 
கையளித்துவிட்டு
ஒருநிமிடம் நின்று
அரைஞாண்கயிற்றில் காற்சட்டை ஏற்றியபின் 
வரிசைக்கு மீளும் அப்புவைப் 
பார்த்துதான் சரிகை புல்லாக்கு மினுங்க 
புன்னகைத்தாள் கழுத்துமாரி
அதை எல்லார் ஈஸ்வரி பார்த்துவிட்டார் போல
இந்தக் கண்களிருந்து என்ன பயனென்று 
சொல்லடி நீயாத்தா
தேர்முட்டி தாண்டி எதிரொலிக்கிறது

காமதேனு அக்டோபர் 1 

மழை தொட்டு நகரும் விரல்

ஒரு குழிக்கரண்டி சீனியோ 
பத்தாய் 
இருபதாய் உடைத்த 
அச்சுவெல்லத்துண்டோ கிடைக்கும்
உப்புக்கல் பொதிந்த 
வேப்பிலை உருண்டைக்குப்பின்
கூடவே உள்ளிருக்கும் உப்புக்கல்லோடு 
சமாதானமாகப் பழகு என்றஅறிவுரையும்
அது நடந்தது
எப்போது என்றுதான் புரியவில்லை

********************************************************************
மழைதொட்டபடி நகரும் விரல்களை 
ஏதோ ஒரு முடுக்கில் உள்ளிழுக்கவும் 
உதறவும் கற்றீர்களே
அன்றுமுடிந்த வாழ்க்கை இது
தொட்டகுறை விட்டகுறைதான்
அந்தக் கண்ணில் மின்னல்
மழையோ அதே தாளத்தோடு
****************************************************************
நீங்கள் ஒப்புக் கொள்ளாவிடினும்
உங்கள் சாயல் அதன்விருப்பப்படியே 
வளர்ந்து மலர்ந்து தளர்ந்து நரை கூடிப்போகிறது
குலைதள்ளும் வாழையின் 
திக்கும் உயரமும் பற்றிய கவலையும் உமதே
*******************************************************************
அன்றாடக் கவளத்திற்கு
பிரதியாகக் காக்கை விட்டிருக்கக்கூடும் 
அந்த விதையை
எட்டிப்பார்க்க யாருமிலா மதில்உச்சியில் 
தலையசைக்கிறது ஓரிலை

பச்சை பீடித்த அகல்

சாய்ந்து அமர்ந்திருந்த
ஒடுங்கிச்சுருண்டிருந்த 
சுவரும் தரையும் பெயர்ந்து பெயர்ந்து
வாழ்வின் தருணங்களைக்
காலம் சப்பியெறிவதைக் காட்டிக்கொண்டிருக்க,
நடந்து ஓடி ஆடிக்கிடந்த தரையில்
உதிர்கூரையின் சருகுகளை
ஒதுக்கியபடி,
எப்போதோ ஒளிசிந்தி
மிஞ்சிய எண்ணெய்ப்பிசுக்கில் 

பச்சைபீடித்த அகலின் 
நிலையாமைக்கும் நிலைப்புக்கும் 
இடையே ஆடிப்போனதாகத் தளும்பிய பிறகும்
வாழத்தான் செய்கிறோம்


நினைவுச் சுருணை

நினைவுகளைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போதே
தற்செயலாகக் கை 
அதன் கழுத்துப்பக்கம் போனாலும் விதிர்விதிர்த்து
நகர்ந்து போகிறது
கொல்வதற்கு எப்படிக் கற்க
பழைய துணிதானே
சுருணைக்கு எனச்சொல்லி
துண்டு துண்டாய்க் 
கிழித்தெறியும் வாய்ப்பை 
முயன்று பார்த்தீர்களா
அனுபவக் குறிப்பில் 
கத்தரியின் பயன் எவ்வளவென்றே குறிப்பிடவில்லை
எதையாவது விட்டுவிடுகிறீர்கள்
எப்படியாவது ஆட்டம் தொடங்கி விடுகிறது


இலை தெறிக்கும் குருதி

அந்த வளைவுகளை 
ஒன்றுபோல யார் வரைந்தாரெனக்
 கேட்டுக்கொண்டேயிருப்பேன் நந்தியாவட்டையிடம்
அதென்னவோ 
பாலசந்தர் கதாநாயகியர் போல 
இப்படியும் அப்படியுமாகத் தலையசைக்கும்
***********************************************************************

விளக்கைப்போல 
என்னால் ஏற்றி அமர்த்திவிட முடியவில்லை 
நிலவை
***************************************************************
அனிச்சையாகப் பேசியபடியே 
கிள்ளிப்போட்ட இலைகள் 
குருதி தெறித்திருக்கும்போல
அந்திவானில்
நீ எப்போதும்போல் தான்
சிரிக்கிறாய்

***********************************************************
பூக்குமுன் காய்க்குமுன்
முள் நீண்டுவிடுகிறது
பூக்குமே
காய்க்குமே என்றபடி
கீறலைத் தடவி விட்டுக் கொள்வாயாக

****************************************************************
மண்ணை அளைந்து குழைத்து குழப்பி 
கட்டிய வீட்டுக்கு 
ஒற்றைச்சன்னல் வைக்கலாம் எனத் தோன்றியதும்
திரும்பவும் அளைகிறாள் அபி
அம்மை எழுந்துகொண்டாள்

***************************************************************
எத்தனை பெரிய நிலாவாக இருந்தாலென்ன
உன் வெளிச்சம் உன் அழகு
எடுத்துச்சொல்லிக் கூட்டிவரவேண்டும்
எங்கோ முடங்கிப் போன
நட்சத்திரங்களை
****************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

திருவாளர் பொதுஜனம்எலி ஓடுகிறது என்று தெரியும்தானென்றாலும்
உருளும் சப்தம் கேட்கையிலெல்லாம்
 தூக்கிவாரித்தான் போடுகிறது.
புத்தம்புது பயம்

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
என்ன சொல்கிறார்கள் என்று
வாய்பிளந்து கவனிக்கும்
புத்தம்புது ஆச்சர்யம்போலவே
காமதேனு செப்டம்பர் 16

அரசியலில்லா அரசியல்

கேட்கப்படாத கேள்விகளின் 
கேள்விக்குறியைத் தொட்டுப்பாருங்கள் 
தொட்டுத்தான் பார்க்கவேண்டும்
தூக்க இயலாது
யாரோ இயக்கும் கிரேனின் கொக்கி அது
எப்போது 
உங்கள் கழுத்தில் விழப்போகிறதோ 
என்ற அச்சத்துடன் வீசி நடக்கலாம்
 முடிந்தால் ஓடவும் செய்யலாம்
கொக்கிக்கு தூரம் பொருட்டில்லை
காணாக்கண்ணுக்கு கொக்கி பொருட்டில்லை


*********************************************************************
ஒருவாரம் கார் ஓட்டாதீர்கள்
பெட்ரோல் விலை குறையும்
ஒருவாரம் உணவு உண்ணாதீர்கள்
தெருவெல்லாம் சோறு கிடைக்கும்
ஒருவாரம் மூச்சு விடாதீர்கள்
காற்று சுத்தமாகும்
ஒரு வாரம் என்பது ஒரு வரம் எனச்சொல்ல 

நீங்கள் இல்லாவிட்டால்தான் என்ன
பி கேர்ஃபுல்
நாங்கள் எங்களைத்தான்
சொல்லிக்கொண்டோம்


படம் இணையம் 

தோடுடைய செவியன்

உணர்வின் குமிழில் தப்பித்தப்பி 
ஆடும் வண்ணங்களைக் கணக்கெடுக்க 
தலைசாய்த்தும் குழைந்தும் 
நிமிர்ந்தும் நின்றாடுகிறாள்
தோடுடைய செவியனோ தோட்டைத்தொட்டு சிரிக்கிறான்
நர்த்தனம் நர்த்தனம்
இடைவிடா நர்த்தனம்
குமிழ்கள் உடைந்து பறக்கின்றன
புதிய குமிழ்கள் எழும்பி எழும்பி வரவர 

நர்த்தனம் நர்த்தனம்
இடைவிடா நர்த்தனம்
இடையில் ஆரண்யத்தின் 

முறுக்கேறிய கொடிகள் காய்ந்து கிடக்க 
குமிழ்களைக் கைவிட்டு
சுள்ளிகளைச் சேர்த்தெடுக்கிறாள்
தோடுடைய செவியனே
அவளுக்கு உன் திருவோடு நினைவுக்கு வந்துவிட்டது


கோடையை முடித்துவைக்கும் தூறல்

கனன்று தணியும் முச்சந்தியின் பூக்குழிகள்
உதிர்ந்த  இலைகள் பூக்கள்
புதிய காய்கள்
சற்றே நீர் ஏறும் கிணறு
கவணைகளில் சரணடையும் மாடுகள்
பள்ளி திரும்பும் சிறார்கள்
எதனாலும் நிறைவடையா கோடையை
வானம் முடித்து வைக்கையில் தூறலாய்ச்சிரித்தபடி
மெய்யாகவே முடிகிறது

************************
பாகம்பிரியாள்
 ஆண்டுக்கொருமுறை  
தவறாது குடுமிபிடி சண்டை
எத்தனை ஏச்சுபேச்சென்றாலும் 
தனிப்பொங்கலிட 
பயமுறுத்தும் பாகத்தால் 
தட்டிப்போகிறது இன்னொரு படையல்
காய்ந்த சரத்தோடு  காத்துநிற்கும் 
களத்துமேட்டு கண்ணுடையாளுக்குஇலை அழுத துளி

அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் 
என்கிற 
உன் சொல்லில் நிற்கிறது முள்

*****************************************************

செம்மண் பள்ளமெங்கும் நீர்
இறைத்து ஊறியதோ
இரைந்து ஊறியதோ
***********************************************
சரளைக்கல் நொறுங்க நொறுங்க 
குறுக்கு மறுக்காக 
ஓடிக்கொண்டிருக்கின்றன சக்கரங்கள்
பூசி மெழுகியபின் வரலாம்
உறுத்தாது
*******************************************************

எத்தனை துளிர்க்கையிலும் 
மலரா முகத்துக்காக 
இலை அழுத துளி 
மழை மாலையில்
************************************************************
ஒரு இளஞ்சிரிப்போடு
கடந்துவிடுகிறீர்கள் பேரன்பை
கொடுஞ்சொற்களுக்கு தாரை வார்க்க 
முழு இரவை ஏந்தியபடி
***************************************************
உரசுகிறது வேர்
துண்டுப்பலகையின் துணையில் 
பள்ளத்தைக் கடக்க முடிகையில்
*****************************************************************
மனக்கொடி

மெல்லிய கோடுகளுக்கிடையிலோ 
சின்னப் புள்ளிகளுக்கிடையிலோ 
பரப்பாத வண்ணம் 
அரூபமாய்
அவரவர் எண்ணப்படி நிரப்ப ஏலுமோ

******************************************************
ஊறிக்கொண்டே வரும் நினைவுகளை உலர்த்தவும்
மனக்கொடி
நனைத்திடும் அதேபிடி

************************************************************
நீலவானத்துக்குள் நிறைந்த மனமே 
சாம்பல் கண்டு வெம்பாதிரு
நீலமே இயல்பு
நீலமே இருப்பு

***********************************************************

அறியவும் கூடும்யாருமிலாப்பொழுதின் ஒற்றை முக்காலி காப்போன்
பண்பலை துணையில்
பயத்தையோ தனிமையையோ விரட்ட முற்படுகிறான்

தூசிவரா குளிரினுள் அமர்ந்து
கண்துடைத்தபடி
ஆத்தங்கர மரமே வை ஒலி கூட்டுவதைப்பார்த்தால்
ஆச்சர்யம் வரலாம் உங்களுக்கு

 விட்டுவந்த
ஆற்றங்கரையும்
கிள்ளிப்போட்ட அரசமர இலையும்
தள்ளிநின்று தள்ளியே போன துணையும் 
விழித்துரும்பானதை
அறியமாட்டீர்களல்லவா 

அறியவும் கூடும்
"ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற 
நேரத்திலே 
வீற்றிருந்த மணற்பரப்பு" கேட்டு 
மௌனம் போர்த்திக் கொள்பவர்கள்-

ஆகஸ்ட் 6 காமதேனு இதழ் -
                             

உயிரற்ற பகடி

பகடிகளுக்கு ஒரு வால்
இருந்திருக்க வேண்டும்
நான்கு கைகள் அல்லது கால்கள்
ஒரு பூனைக்குட்டி போலவோ சிங்கம் போலவோ 
இயங்கிக்கொண்டிருந்தது
யாராவது பார்க்கும்போது
வாலை அனாயாசமாகச்
சுழற்றி
உன்னால் முடியாது பார் என 

கர்வமாக அசைந்து போகும்
நான்கு கையோ காலோ இயல்பில்லை
வால் என்பது extra fitting
இருபத்தோராம் நூற்றாண்டு பிறந்ததை மறந்துவிட்டாயா
என உலுக்கியது யாரோ
நட்டமாய் நிமிர்த்திவிட்ட
தோசை திருப்பி நடக்கும்
கார்ட்டூன் போலக்
கர்ணகொடூரம்-
மழை வழியும் ஜன்னல்

நிழலோ வெயிலோ 
நிற்க ஒன்று இருக்கிறதே
வேறெப்படி தேற்றிக்கொள்ள
வெற்று கணங்களை

**********************************************
நீங்கள் புறக்கணிப்பீர்கள் 
எனத்தெரிந்தாலும் 
காற்றோடு போராடிக்கிழிந்து 
உங்கள் கொல்லை வாழையிலேயே 
தங்கிவிடுகிறது இலை
ஆறுதலாக இரண்டு துளி
தெளித்து நகர்கிறது மழை
***************************************************
மழையின் குளுமை மனங்கொள்ள
வா
என்னை ஓரமாக எடுத்து வை 
யாரைக் கூப்பிடுவதெனத் 
தவிக்கிறது தொட்டிச்செடி

***************************************************
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவது போலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது 
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்


இருவண்ணக்கிளி

அந்தக்கிளி
வெளியில் நின்று புரளும் 
உண்மைக்கண்ணீரில் இருக்கிறது
அந்தக்கிளி
எங்கோ ஒலிபரப்பாகும் வசனத்தில் இருக்கிறது
அந்தக்கிளி
இன்னும் வாசிக்காது சேர்ந்திருக்கும் 
நூல்களின்மேல் உட்கார்ந்திருக்கிறது
அந்தக்கிளி
எழுதி முடிக்காத 
உடன்பிறப்பு மடல்களுக்குள் 
உறங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு கறுப்புக்கண்ணாடியும் மஞ்சள்துண்டும் 
வைக்கப்பட்ட அலமாரியிலும்
இப்போதைக்கு ஒதுங்கியிருக்கும் 
சக்கர நாற்காலி இருக்கையிலும்
ஏதோ ஓர் இழுப்பறையில்
இருக்கக்கூடிய 
கல்லக்குடி கண்ட கருணாநிதி வாழ்கவே 
என்ற ஹனீபா குறுந்தகட்டிலும்
இருவண்ணக்கொடியிலும்
சமூகநீதிச்சட்டவரிகளிலும் 
இருக்கலாம் அந்த உயிர்க்கிளி
என்றும் இருக்கும் அப்படியே

கலைஞரின் உடல்நலம் குன்றியிருந்த இறுதிநாட்களில் ஜூலை 30ல் எழுதியது 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...