சனி, ஏப்ரல் 27, 2013

அவளுக்கு என்னவென்று பெயர்

அவள்....
தூரிகை பழகலாம்...
நல்ல மாவறிந்து
பூரிக்கும் ரொட்டி சுடலாம்....
இயந்திரம் பொருத்தலாம்
திருத்தலாம்...

தங்கம் விலை பார்த்துப்
பொருமிப் புலம்பலாம் .....
அலங்கார பூஷிதையாய்
அபிநயம் பிடிக்கலாம் ..
தெருக்குழாயருகே
சண்டையில் கூந்தல் பறக்கலாம் ..
காதணி இழைந்தாட
கானம் படிக்கலாம்...
வரிசைகளில் மேலும் ஒருத்தியாய்
கால்கடுக்கலாம்...
நிலவிலும் நடக்கலாம்..

கழிப்பறை சென்று
பத்திரமாய்த் திரும்பி விட்டாளா ..?
பார்த்துவா..

வியாழன், ஏப்ரல் 25, 2013

மண்ணரசி

நம்பிக்கையின் இதழ்கள்
சேர்ந்த கணம்
நானறியேன்...
கரையிலிருந்து "மொட்டு.."
எனப் பெயர் சூட்டினான்...
நகரவா,எழும்பவா,
மிதக்கவா,விரியவா,
சேரவா,தனிக்கவா...
இதழ்களைவிட
மேலதிக வினாக்களோடு
இலையுரசிப் பிரிந்து
அலைமோதிக் கிடக்க...
நீ
ஆகாயத் தாமரை
எனக் கூவி விடாதே....
நீராகாரம் பருகி வாழும்
பழமைவாதி நான்...
காற்றருந்தி வாழ இயலாது

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

பொருளறியாமல் .....
அலைகளினூடே சாய்ந்து ,
சரிந்து....
அடிவைக்கும்  பாதங்களை,
துடுப்புகளின் தீண்டலை,பாய்ச்சலை
 சுடுகதிர்களின் ஆக்கிரமிப்பை,
நீர்த் தட ஆறுதலை ,
உலவலின் விறுவிறுப்பை ...
எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
கரையோர ஓடங்கள் ...


மௌனித்துக் கிடக்கிறது கரை...

முகட்டின் இப்புறமான
நதியின் தடமறியாது
மலையேறிக் கொண்டிருக்கிறது
கூட்டம்.

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

வண்ணம் வளர்ப்பேன்
ஒரு சோப்புக்குமிழுக்குள்ள 

உரிமையாவது வேண்டாமா....?உன் கற்பித  நிறங்களைக்
கவிழ்த்துக் குழப்பித்
தீற்றி
த்தடவி
என் வானவில்லை
வரையாதே ..


ஏழு நிறங்களுக்கும்
இடம் வேண்டுமே
என்பது  உன் பொய்க்கவலை.


இரண்டே நிறக் கீறலையும்
வானவில்லாக
வளர்த்துக் கொள்வேன்..
விலகிப்போ...உன் குழம்புக் குவளைகளோடு..!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...