manasu kadavul லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manasu kadavul லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 19, 2012

அவன் பார்க்கக் கூடாத கதவு

மே16 சொல்வனம் மின்னிதழில் 
திறக்கப்போவதில்லை 
என்ற தெளிவின்றிப் 
பூட்டப்பட்ட கதவு அது.

யாரேனும்
முன் வந்தால் -
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.
இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..

சனி, மே 12, 2012

பூட்டாத பூட்டுக்கள்


 May 11,வல்லமையில் 

பூட்ட ஏதும் 
பொருளிலாத போதும்
பூட்டிச் செல்வது 
வழக்கத்தின் காரணமாய் 
நிகழ்கிறது.
கதவைத் திறக்கும்போது 
ஞாபகமாய் 
மனசைப் பூட்டிக் கொள்ள 
வேண்டியிருக்கிறது …..
உள் சுவர்களெங்கும் 
பிறர் அறியாப் 
பூட்டுகள் 
தொங்கிக்கொண்டே இருக்கின்றன …..
தேவைக்கேற்ப 
அவரவர் 
எடுத்துக் கொள்வதுண்டு 
சிலசமயம் 
தனக்கு….
சிலசமயம் 
பிறர் வாய்க்கு….
பலசமயம் விஷயங்களுக்கு ….
எப்போதும் கனவுகளுக்கு

 

வெள்ளி, மே 04, 2012

மோகினிச் சொல்

.ஏப்ரல் 30 கீற்று இணைய இதழில் வெளியானது 

ஒரு சுள்ளிக்கட்டு சுமந்து சென்றாய் நீ

சிறியதும், பெரியதும், நீளமும், குட்டையுமாய்
அடக்கி மடக்கிக் கட்டி வைத்திருந்த கட்டுமீறி 
ஒரு சுள்ளி பாதையில் விழுந்து விட்டது.
பின்னால் வந்த ஒருவன் எடுத்துப்பார்த்தான்.
"கோடு போலிருக்கே...."
இன்னொன்றைத் தேடி வைத்து இணை கோடாக்கினான். 
பக்கத்திலிருந்தவன், கேலிச்சித்திரக்காரன் போல்
ஒரு வளையத்தை மேலே வைத்து,
"தலையும்,கையும்" எனச் சிரித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன்,
தோதான இன்னும் இரு குச்சியால் 
உடல் கொடுக்க, உயிர் கொடுக்க வந்தான் மற்றவன்.
ஆடை ஒருவர் தர,"மூளியாக இருக்காதே" என 
ஆபரணம் சூட்டினாள் ஒருத்தி.
பால் பழத்தோடு ஒவ்வொருவர் போஷாக்கு தர,
லாஹிரி வஸ்துக்களோடு சிலர் சந்தித்ததாகவும் கேள்வி!
மறுநாள் நீ திரும்புகையில் 
ஒற்றைச் சுள்ளி மோகினி அங்கே உலவுவதாகவும் 
சூட்சுமக் கயிற்றின் முனை பிடித்தவாறு 
வழிப்போக்கன் வெகுகாலம் முன்பு கடந்துவிட்டதாகவும் 
கதைத்துக்கொண்டிருந்தார்கள் .....
உன்னிடமும் சொன்னார்கள் "எச்சரிக்கையாக இருக்கும்படி..."

திங்கள், ஏப்ரல் 30, 2012

ரோஜா ரோஜாவல்ல....

ஏப்ரல் 30 திண்ணை இணைய இதழில் 



சந்தேகமும் எரிச்சலுமாய்ப்                         
  
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில்
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப்
 பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக்
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...