வியாழன், ஜனவரி 13, 2022

உடன் நடக்கும் வயது

 முக்கியம் முக்கியம் எனச் சேர்த்தவற்றுக்குள்

எங்கோ இருக்கிறது
நண்பனின் வாழ்த்து அட்டை
ஆத்தாவின் புடவைத்துண்டு
எனாமல் பதித்த ஒற்றைக் கொலுசு
பழைய நகைக்கடை டப்பாவிற்குள்
தாலிபிரித்துக்கோர்த்த கயிறு
சிங்கப்பூர் மாமா கொடுத்த நாணயம்
அஞ்சல்வில்லைகளை ஒட்டி ஒட்டிப் புடைத்த பழைய நோட்டு....
இப்படியே வைத்துக்கொள்ள
எத்தனை நாள் வாய்க்குமோ
அதுவரை உடன் நடக்கும் வயது
உங்கள் வயது உங்களுடன் நடக்கிறதா *************************************************
ஏறுமாறான அளவுகளில்
வந்துவிட்ட ரவிக்கைக்கென
ஊக்குகள் தொங்கும் கறுத்த மஞ்சள்கயிற்றில்
முடிச்சிட்ட விரலி மஞ்சளும்
எப்போது வேண்டுமானாலும் உதிரலாம்
புடவை புதிதுதான்
பார்த்துப்பார்த்து வாங்கிய எவளோ
நனைத்தவுடன் நிறம் குழம்பிப்போகும்படி
சாயம் தோய்த்தவனை வாழ்த்தியபடி கொசுவத்தை நீவி நீவிக்
கட்டிக்கொள்கிறாள்
மனசைச் செல்லமாகக் கண்டித்தும் வைக்கிறாள்
இதுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக்காதே என்று

அரூபப் பெருக்கு

 எங்கள் தெருவோர வாய்க்காலின் குட்டி மீன்

கோரைகளுக்குள் புகுந்து புகுந்து துள்ளி ஓடும்
நெடுங்காலத்துக்குப்
பின்
குளியலறைக் குவளைக்குள்ளும்
அதே துள்ளல்
பாசிவாடை வர
வாளியின் பச்சை நிறம் போதுமாயிருந்தது
வாட்சப் வழி
பார்த்த பெரியப்பாவின்
பொக்கை வாய் வழிதான்
அந்த வாய்க்கால் பெருகி வந்திருக்க வேண்டும்
தலைமுறைக் காலம் கடந்தும்
உயிர்வாழும் மீன்
ஒரே தாவு தாவியிருக்கும்
கால இயந்திரத்தில்
************************************************
எப்பொழுதாவது
ஒருமுறை
அழைப்பாள் அவள்
அவளுக்குப் பொழுது போகாத பொழுது
என்று நினைத்துக் கொள்வேன்
பிடித்தவற்றை அறிவிக்கவும்
பிடிக்காதவற்றைப்
பகடி செய்யவும்
தீர்மானங்களைப் பட்டியலிடவும்
இப்படி ஒரு பொழுது இருக்கிறதே உனக்கு என்பதை
மனதுக்குள்ளும்
ம் களை உரக்கவும் சொல்லும்போது
ஒரு தட்டு கத்தி
மாதுளை எடுத்து நீட்டிவிடு
உதிர்த்துவிடலாம்
ஒன்றாக

சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி

 ஏதோ சொல்ல வந்தாய்

சொன்னாய்
ஆனால் முழுமையாக சொல்லப்பட்டதா
முழுமையாக கவனிக்கப்பட்டதா
இருவருக்குமே தெரியவில்லை
பின் எப்போதோ ஒருகணத்தில்
சொன்னேனே என்பாய்
சொல்லப்படாத சொற்கள் என்னவாயின
பால்யத்தில்
இதழ்க்கடையிலோ
உதடுகளிலோ
ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சூண்டு தித்திப்பை
நா நீட்டி இழுத்து
சப்புக்கொட்டியதுபோல மென்றுவிட்டாயா

******************************************
மொத்த வீட்டின் இருளுக்கும்
சவால் விடுக்கிறது ஒற்றை நீலப்புள்ளி
சுழியத்தைப்பருகி
சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி
இந்த வேம்பு இங்குதான் இருக்கிறது
அட குயிலே
நீ ஏன் இந்த கிடுகிடு நிசப்த இரவில்
எசப்பாட்டு பாடி எனக்குத் துணையிருக்கக்கூடாது
காலையில்தான்
வெளிச்சத்தின் பின்னணியில்
சேர்ந்திசை பாடுவாயா
நீ குக்கூ என்றால்
குக்கர் உஷ் என்கிறது

துண்டு துண்டான பக்கம்

 நீ கேட்டாய் என்று

வழியில்
அடையாளமாகப்
போட்டுவைக்க
என்
வாழ்வின் ஒரு பக்கத்தைத்
துண்டு துண்டாகக்
கிழித்து
ஒன்றும் பறந்துவிடாமல் அமுக்கிஅமுக்கி
உன்கையில் கொடுத்து அனுப்பினேன்
அடைந்ததும்
அழைத்துவிட மாட்டாயா என்று காத்திருக்கிறேன்
உன் பாதை என்ன
அத்தனை நீளமாகவா போகிறது
*****************************************************
பிரயாசை என்ன புதிதா
யார்தான் படவில்லை
என்னைப்போல் இல்லை
என்பது மட்டுமல்ல
எனக்கல்ல
என்பதும்தானே
உங்கள் மற்றும் என் சிக்கல்
************************************************

கையுறையணிந்த கடவுள்கள்

      மாணவப்பருவத்திலிருந்தே அவர்களுக்கு வேறு கடிகாரம்

அது 48
72 மணிநேரங்களைக் கொண்டது
அவர்கள் உணவு
அவர்கள் உறக்கம்
உங்கள் கையில்தான்
அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு வெளியே
நாம் கையைப்பிசைந்து கொண்டு
காத்திருக்கையில்
கையுறையோடு பரபரத்து இயங்கும் அந்தக் கைகள்
கடவுளின் கைகள்
அளவாய் இருக்கிறீர்களா என்று எண்களால்
கண்களால் அறிந்துகொள்ளும்
வித்தைக்காரர்கள்
காதலால் பேசாத இதயங்களின்
லப் டப் உரையாடல் அவர்கள் காதுகளுக்கு மட்டும் கேட்கும் சரியான மொழியில்
இப்போதெல்லாம்
ஏற்ற இறக்கங்களை
மாற்றி அமைத்து
பழுது நீக்கும் பொறியாளனாக உங்கள் உடலைத் தட்டிக்கொடுக்கிறார்கள்
உலகையே ஆட்டிப்படைக்கும்
பெருந்தொற்றுகளிலும்
ஒளிந்துகொள்ளாத
தொண்டர்குலம் அது
கவசங்களைப் பழகிக்கொண்டு
காத்திருப்பைப் பழகிக்கொண்டு
கண்ணீர்,வியர்வை காட்டிக்கொள்ளாது
நேரத்துக்கு உண்
அடக்காது கழிப்பறை செல்
என்று ஊருக்குச்சொல்வதை
தன் உடம்புக்குச் செய்யாது
ஓடும் யோகிகளால்
வாழும் வரம் நமக்கு
அலைகளை வெல்லும் இந்த ஆயுதங்களை
உங்கள் முறை என்னவோ அப்படி வணங்குங்கள்
கை தொழலாம்
நெடுஞ்சாண்கிடையாக நெற்றி
நிலத்தில் படலாம்
பரிசு தர விரும்பி
என்ன வேண்டும் எனக்கேட்டால்
சொன்ன பேச்சைக் கேளுங்க அது போதும்
என்பார்கள் அம்மாவாகி
எம் தேசத்தீரே
நன்றிசொல்ல
நல்லவழி உண்டு
லட்சியங்களை மட்டுமே பற்றி உயர்ந்து
வெள்ளைக் கோட்டுக்குள் புகுந்த
எம் தலைமுறை வழி
லட்சங்களை அறியாத பாதங்களும்
நடக்க வழிவிடுங்கள்
நீட்' ஆன நெடுஞ்சுவர் இடித்து.


 




ஞாயிறு, ஜனவரி 09, 2022

துன்பக்கேணி

 சுரந்துகொண்டேயிருக்கும் துன்பக்கேணி

தாம்புக்கயிற்றை
சரசரவென்று விட்டு இழுத்து இறைத்துக்கொண்டால்
வலிக்கவில்லை என்று பாவனையா

***************************************************
நீ சுட்டுவிரலில் மாட்டிச் சுழற்றிக்கொண்டேயிருக்கும்
ஒற்றைச்சாவி
வாகனம் ஓடும்போது
எத்தனை பெருமூச்சு விடும்
எனக்கும் தெரியும்
***********************************************
பதியன் போட உடைத்தாலும்
பக்குவம் பார்க்கச் சொல்லும் உனக்கு
விதையோ பூவோ பிஞ்சோ
எது கருகுமென்றே கவனிக்காமல்
சட்டென மருந்தடிப்பதில் தயக்கமேயில்லை
ஒற்றை அருகம்புல் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறது
பச்சைப்பைகளையே நகர்த்திக்கொண்டிருக்கும்
உன் கண்ணில் படுவதில்லை அவ்வளவே
************************************************

கருவறையில் தங்கிய மிச்சம்

     கால் வைக்க முடியாதபடி கொழகொழத்துக்கிடக்கும்

பாதையை எப்படியோ தாண்டிவிடுகிறேன்

ஒருநாள்தானே
நாளை உலர்ந்துவிடும் என்ற
நினைவின் கைபிடித்தபடி
*************************************************
பிணைத்து வைத்தே பழக்கமான கால்கள்
அறுந்த
சங்கிலியை உதறப்பார்க்கின்றன
அனிச்சையாய்

***********************************
புதிய தருணங்கள்
என்று நம்பிதான்
கதவைத்திறந்து தலையசைத்து
அகலப் புன்னகையுடன் வரவேற்றாய்
அதில் வீசிய துர்வாடை
புறப்பட்டுவந்த கருவறையில் தங்கிய மிச்சம்
கண்டுபிடித்துவிட்டாய்
எனச் சொல்ல முடியாதபோது
அத்தனை உலர்ந்த புன்னகைக்குள்தான்
மூக்கைப் பிடித்துக்கொண்டு
ஒளிய வேண்டியிருக்கிறது

இடைவெளிகளுக்கு வந்த வாழ்வு

 மறந்தே போய்விட்டது

கவிச்சி கலந்து
முகத்திலறையும் உப்புக்காற்றில் கூந்தல் பறக்க
அலை மோதும் பாதங்களுக்கடியில் கரையும் மணலில்
தடுமாறித்தடுமாறி
நகர்ந்து கொள்ளும் கடலோரப் பொழுதுகள்
பெயர் தெரியாச்செடிகளும் பூக்களுமான கலவையான மணத்தோடு
உயரும் மலைப்பாதையின்
சுற்றுச்சுவர்களில்
தாவும் குரங்குகளும்
சிறுதீனி இடைநிற்றலுமான
இலக்கற்ற குறிஞ்சி நாட்கள்
பெருவழியற்ற
மரங்களூடே
குறைந்த ஒளியில்
விரையும் வாகனத்தினுள் சுழலும் இசைவரிசையை
அடுத்தடுத்து
உன்னுடையது
என்னுடையது
எனப் பங்குபிரித்துச் சொந்தம் கொண்டாடிய
முல்லைவழிவாசம்
பெருகும் நதியோரப் பாதையின் மறுபக்கம் விரிந்த
பச்சைப்பாயில் போய்ப்படுத்துக்கொள்ளும்
மனசை அள்ளியள்ளி மீட்டுவரும்
மருதயோகம்
எதுவுமில்லாது
எங்கு
எங்குதான் இருக்கிறேன்
வயதும் மறந்து வாழ்வும் மறந்து
நினைவிருப்பதெல்லாம்
இடைவெளிகள்தான்

மீண்டும் பள்ளிக்கு

 டைமன் கல்கண்டில் எண்ணி

அஞ்சோ ஆறோதான் நைவேத்தியம்

அதில் ஆளுக்கொன்றாய் பிரிவினை
நூறுகிராம் மிளகுகாராசேவோ
மணிக்காராபூந்தியோ
சரிபங்கு வைத்தால் போதுமாயிருந்தது
பெருமாள் கோயிலில்
அத்தனை குட்டி உருண்டைகளாய்ச்
சீடை உருட்டிய மாதுவின்
பின்னாலேயே போய் வாங்கிக்கொண்ட
இரண்டிரண்டில்
என்ன ருசி
நிறைய வைத்த நிறைவுக்காகவே பந்திகளுக்கு வாங்கப்பட்டன கலர் பூந்திகள்
பட்டை சாக்லேட்டுகள் கடித்து உதட்டோரம் வழிய
வழியத்தின்பவர்களைப் பார்த்து
வியக்குமுன்
எவனோ
மாத்திரைப் பட்டையைத் திணித்துவிட்டான்
ஒரே ஒரு ஆரஞ்சு மிட்டாய் போதும்
யாராவது பள்ளிக்கூடத்துக்கு
அழைத்துப் போங்களேன்

உறையைப் பிரித்தால் அவ்வளவுதான்

 நிறைய சந்தேகம் வந்துவிடுகிறது ஒவ்வொருவருக்கும்

ஏன் காத்திருக்கிறோம்
ஏன் புன்னகைக்கிறோம்
ஏன் மறுதலிக்காமல்
தலையசைக்கிறோம்
முதலில் அவரவர்
அவரவர் தேநீரைக்
கொதிக்க விடுங்கள்
***************************************
முன்னர் நடந்தவற்றை நீ சரியாக நிறைவு செய்யவில்லை
மீண்டும் அப்படியே திரும்பத்தரவா
என்ற கேள்வியை
கணிணிக்குச்
சொல்லிக்கொடுத்தவனை விட
வாழ்வை யார் புரிந்துகொண்டார்

*********************************************
உறையைப் பிரித்துக் கொட்டியதும்
உறைந்திருந்த பட்டாணி துண்டாக
உடைந்து
உருள்கிறது
இதம் முடிந்துவிட்டது தெரியாத ஆசுவாசத்தோடு

காவிய பாத்திரங்கள்

 சன்னலுக்கு வெளியில் அலமாரிக்கும் கதவுக்குமான இடுக்கில் கிணற்றடி வாழையிலைகளில் குடியிருந்த பேய்கள் பாய்நனைந்த அவமானங்களின் பின்புலத்தில் நின்றாடியது அறியாத

அப்பா

ஒரு குண்டு பல்பை மாட்டி
வைத்தார்.
முறுக்கிய வயர்களில்தான்
அந்தப் பேய்கள் தூக்கில் தொங்கின
அறிந்திருந்தால்
அதற்கும் இரண்டு ரூபாய்
ஏற்றி வைத்திருப்பான்
கம்பெனிகாரன்
அன்றாடம்
பாய் அலசும் வேலை அற்றுப் போனபின்
அம்மா செல்லமாகச் சலித்துக்கொண்டாள்
”இந்தப்பிசாசுங்க
இவ்வளவுநாள் படுத்துன பாடு” என்று ********************************************************
வாங்கிய கடன் டெமக்ரானில் கரையுமா என
யோசிக்காது தொண்டையில் கவிழ்த்த தகப்பன்
தகனமேடையிலிருந்து பிடிசாம்பலோடு
பொறுப்புகளையும் அள்ளிவந்த
பிள்ளைகளின் கதையிலும்
தொடுகையின் இதம் அறியாது
வசவுச்சொற்களின் கைப்போடு
தள்ளியிருந்தே நெருப்பு விழுங்கிய
பிள்ளைகளின் கதையிலும்
தன் தேவை தன் சுகம் தன் உரிமையென்று
அணுவழி உறவன்றி
அணுவளவும் யோசிக்காது
அலையவிட்ட அப்பனின் குடும்பக் கதையிலும்
அப்பா என்ற சொல்லை
அழிரப்பர் வைத்து அழித்துவிட்டு
கோடிட்ட இடங்களாகவே வைத்திருக்கும்
பக்கங்களில் தவறுதலாகப் போய் தந்தையர்தினச் சித்திரங்களைக்
கவிழ்க்காதீர்கள்
எல்லாச்சொல்லுக்கும்
எல்லார் வாழ்விலும் ஒரு பொருள் இல்லை ***************************************************************
இத்தனை செல்லம்கொஞ்சும் வார்த்தைகளை
எங்கே கற்றான் இவன்
வியப்புடன் பார்க்கிறான் மகனை
எம்பிராணனை எடுக்காதே என்று
அந்தநாளில் பிள்ளைகளிடம் கத்திக்கொண்டிருந்த
மனைவியும் மருமளுக்குப் போட்டியாகத்
தலையாட்டி ,உடல் நெளித்து ,குரல் மாற்றிகூடக்
கதை பேசுகிறாள்
மனதுக்குள்ளான ஒத்திகைகள் மறந்துபோக
ஒவ்வொரு முறையும்
ம்
சரி
என்றே பதில் சொல்லித் தொலைக்கும் அவன்
அப்பாவாகவே உறைந்துவிட்டதை
உதறித் தாத்தாவாக வளர வேண்டுமென
நினைத்துக் கொள்கிறான்
தங்கமே என்று பேத்தியை விளிக்கும் நாளில்
சொல்லு ராசா என்று மகனை
அழைத்தால்...
முழிக்கப்போகும்
முகங்களை நினைத்து முளைத்த புன்னகையை
அவசரமாக விழுங்கியபடி
பத்திரிகை படிக்கிறது அந்த அப்பா காரெக்டர் ************************************************************
என்னிக்கி சொன்ன பேச்சு கேட்டிருக்கான்
பனிக்குடத்தண்ணிய குடிச்சுராதேன்னு சொன்னா
கொடிசுத்தி உருண்டவன்தானே
கெப்புறு புடுச்ச கிழவி
திட்டுதா பெருமை பேசுதான்னே
அவனுக்கும் புரியல
ஊருக்கும் புரியல
உருண்டு திரண்ட
உடம்பை வச்சுகிட்டு
ஒருவேளை சோறுகூட சம்பாதிக்காதவனுக்கு
வண்ணமா வடிச்சி கொட்டுற கிழவி
வாரியலோட துரத்துனப்ப ஏன்னு புரியல
போதை தெளிஞ்ச காலைலயும் புரியல
ஆனா
கிழவி எல்லாத்தையும் பெருமையாப் பேச மாட்டான்னு மட்டும்
அவன் வயசுல
அன்னிக்கிதான் புரிஞ்சுது

பாயும்குதிரை மேகம்

 இந்த மேகம்தானா என்று தெரியாது

ஆனால் இப்படியாக ஒரு
பாயும்குதிரை மேகத்திடம்தான் சொன்னேன்
ஒருநாள் என் சுட்டுவிரல் மிக நீளமாக வளரும்
அப்போது உன் பிடரிமயிரை நீவிவிட்டு
என்பெயரை எழுதிவிடுவேன் என்று
அத்தனை நம்பிக்கை போல
மேகத்துக்கு
புதிது புதிதாகத் திரண்டாலும்
மறக்காமல் ஒரு குதிரையை அனுப்புகிறது
என் சுட்டுவிரல்தான் வளரவேயில்லை

*************************************************************

கேக்”கறீங்களா

 பேக்கிங் சோடா,முட்டை,மைதா,சர்க்கரை,எசென்ஸ்

என்று நீண்ட பட்டியலை எழுதிக்கொண்டாள்

வீட்டுக்குப் பக்கத்தில் சாமான் வாங்குங்க
கண்டித்தது அரசு
தண்ணியில்லாக்காடு
என்பதன் புதிய சொல்முறை
டெலிவரி கிடையாது என்பதாகும்
மைக்ரோவேவ் அடுப்பின் மேல் போர்த்தியிருந்த துணியைத்
தூசு
போர்த்தியிருக்கிறது
ஒரு கூடைகேக்கில்
நிறைந்தவற்றை
நிறைவாக்க
எத்தனை ஆயத்தங்கள்
சன்னல் சன்னலாகப் பாடமெடுக்கும் யுடியூப் குருமார்கள்
லைக் பண்ணுங்க
பெல் பட்டனை அழுத்துங்க
என்று விதவிதமான எசென்ஸ்களைக்
கலந்துகொண்டிருந்தார்கள்
எப்போதாவது பிறந்து வைக்காதீர்கள்
என்று சொல்லலாம்
அப்போதைக்கப்போது கற்றுவிடுங்கள்
என்றும் சொல்லலாம்
சென்றவருட நட்சத்திரத்தொப்பிகளையும்
குட்டி மெழுகுவத்திகளையும்
தேடி எடுக்கவாவது கூடாதா அப்பா
என்கிறாள் பாப்புக்குட்டி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...