செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பிடிமானம்

 ஜிலுஜிலு ஓடையிலே ஹே ஹே

என்று பாடிக்கொண்டிருந்த பன்னீர் சித்தப்பா
இரண்டுநாளில் தீக்குளித்து செத்தார்
எல்லோரும் பன்னீரு நல்லவன் வல்லவன்
அதைக்கொடுத்தான்
இதைச் செய்தான்
என்றே புலம்பினார்கள்
அதென்ன என்காதில் மட்டும் விழுந்ததா
காலமெல்லாம்
ஓடையில் நெருப்பே மிதக்கும்படி *******************************************
இதென்ன இந்தப்பிடியா உனக்குத் திணறுகிறது
ஒற்றைவிரல் நீக்குகிறேன் போதுமா
இன்னொன்றும் எடுத்துவிட்டேன்
அட
மூன்றுவிரல்களை உன் கழுத்தில் பற்றியிருப்பது அசௌகரியமாய் இருக்கிறது
என் கைவலி நீ தாங்கமாட்டாய்
பழையபடியே
ஐந்துவிரல்களாலும்
பற்றிவிடுகிறேன்
இதுவும் எத்தனை கசகசப்புக்கிடையில்
என உணர்ந்தால்
நீ முகம் சுளிக்க மாட்டாய்

தரும மருமம்

 நசுங்கிப்போன பித்தளை கூஜாவைப் போட்டுவிட்டு எவர்சில்வர் கூஜா வாங்கிவந்தபோதே வீட்டில் அவ்வளவு வரவேற்பில்லை

அன்று
பள்ளியில்
ரயிலடியில்
தெருமுனையில்
மைதானத்தில்
குழாய்களில் கைகுவித்துப் பருகுவதில் தயக்கமில்லை
தயங்குபவர்க்கு
அருகமை வீடுகளில்
ஒரு லோட்டா தண்ணீர் உபசாரமுண்டு
நூற்றிலொரு குழந்தை
தோளில் நாடா தொங்க பிளாஸ்டிக் குடுவைகளோடு பள்ளி வந்த அதிசயம் தொடங்கியது
தங்கம் கூடத் தருவார்
தண்ணீர் தரமாட்டாரென்ற வாழ்வு நிலைப்பட்டு விட்ட மண்ணில்
தண்ணீர்ப்பந்தலும்
தர்மமல்ல
போத்தல்களில்
குடுவைகளில்
விற்ற நீரை
ஆற்றோடு
குளத்தோடு
அரசுகளே விற்கும் காலம்
கூஜாவைப் படம் போட்டு
பார்த்திருக்கிறாயா எனக் கேட்கிறது இணையம்

வீடு முழுக்க உட்கார்ந்த டங்

 சின்ன அணில் பெரிய அணில்

எது எதைத் துரத்துகிறது தெரியவில்லை.
சமயத்தில்
சின்னது முன்னே
அப்படியே ஒரு அரைவட்டத்திருப்பலில்
மாறிவிடுகிறது
அன்பா
பந்தயமா
அடிதடியா
ஒன்றும் புரியவில்லை
சட்டென்று ஓட்டக்கோடுகளை விட்டுப் படியிறங்கி
என் பாதம் நெருங்கிவிட்டது ஒன்று
பதட்டத்தில் நகர்ந்துகொண்ட பின்தான் தோன்றியது
சின்னதா,பெரிதா எது மிரட்டியதெனப் புரியாதது ************************************************
வாசல் திறந்துவிடுவதென்பது
ஒரு சம்பிரதாயம்
அடைப்பதென்பதும்
விழுந்த சருகு
காற்றிலடித்துக்கூட
உள்நுழையா நாளுண்டு
வந்தவரெல்லாம்
வெளியேறியும்
கிராதிக்கதவின் டங்
வீடு முழுக்க உட்கார்ந்து விடும் நாளும் உண்டு
*******************************************************

பிரம்ம சோம்பல்

 தீர்க்கமான மூக்கு கொண்ட ஒரு பெண்ணின் ஓவியம் உன் நினைவைக் கிளறியது நகைமுரண்

உன்னுடையது
படுத்தவாக்கில் இரு துவாரங்களுக்கும்
கோடாக இடம்விட்டு
முடிந்துவிட்டிருக்கும்
நிறம் கூடுதலாய் இருந்திருந்தால்
சைனாக்காரி என்றாவது சொல்லியிருப்பார்கள்
சப்பைமூக்கி என்பதைத்தவிர வேறெந்த வழியும் அவர்களுக்கில்லை
அந்த துவாரங்கள்
சற்றே பெரிதாயிருந்தால்
அந்தக்கோடு சற்றே உயர்ந்திருந்தால்
இந்த வாழ்க்கை
எவ்வளவு சுலபமாகப் போய்வந்திருக்கும்
உன் சுவாசத்தோடு
அந்த வழியில் குனிந்தபடி
நடக்க முடியுமென
நம்பியது ஒன்றுதான் இவன் தகுதி
நிமிராத மூக்கை வரைந்த பிரம்மனின் சோம்பேறித்தனத்தைச் சபித்தவாறே
உன் வாழ்வு முடிந்தது

சம்பிரதாய சந்தோஷங்கள்

 எப்போதும் உண்டுதானே சில சம்பிரதாயங்கள்

எதைச் சொன்னாலும்
சரிதான்... ஆனாலும்
என்றொரு பிடிமானத்தைப் போட்டு வைப்பது
எல்லோரும் அடுத்த சொல்லுக்காக முகம் பார்த்திருக்கையில்
நிதானமாக நீர்பருகி
தொண்டை செருமி
தொடர்பற்று தொடர்வது
உள்ளதைச் சொல்லப் போவதில்லை என்றாலும்
என்னைப்பற்றி
என்ன நினைக்கிறாய் எனக் கேட்பது...
சரி
சம்பிரதாயத்தை
நாம் முறிப்பானேன்

கனவு இறக்கை

 ஒருவேளை

இறக்கை முளைத்தால்
என்ன செய்வாய்
முதலில் அந்த வேம்பின் தாழ்கிளையில் உட்கார்ந்து பம்பம்மென்று ஒரு ஆட்டு ஆட்டுவேன்
நீ அதட்டுவாய்
பின்
உன் கண்ணுக்கெட்டா தொலைவுக்குப்
பறந்து விடுவேன் ***********************************************
இங்கேதான் இருந்தது
இப்படி இல்லை
இப்படித்தான் தோன்றியது
அப்படி இல்லை
என்னோடுதான் நின்றாய்
இப்போது இல்லை ********************************************
நீல மெழுகுக்கடல்
சிவப்புக் கோடுகளால் ஒரு சூரியன்
கூர்நுனி கைவராத இலைகள்
ஏ பொன்வண்டே
கொஞ்சம் மகரந்தம் தூவி வையேன்
முடிக்காமல் தூங்கிப்போன பாப்புக்குட்டியின் நோட்டுப்பக்கத்தில் **********************************************

பெயரிடப்படா உறவுகள்

 கிண்ணங்களில் நிரப்பிய உப்பு

கைதூக்கிச் சிரிக்கும் சீன புத்தர்
அஞ்சோ ஆறோ எண்ணெய் கலந்து எரியும் தீபம்
வாசல் சுவரில் அகோரமாய் நாக்கு தொங்க விழிக்கும்
மழையில் வெளுத்த முகமூடி
கோர்த்த பச்சைமிளகாய்
படிகாரக்கல்லோடு தொங்கும் கறுப்புக்கயிறு
நிலைக்குமேலே
மஞ்சள்,சிவப்பு
கறுப்பு
வகைக்கொன்றாய்
பொதிந்தவை மறந்த முடிச்சுகள்
வழியென்னவோ
மூத்தவளுக்கு
மட்டுந்தான் தெரிகிறது ***************************************************
இவ்வளவு தூரம் கடந்தபிறகு
ஏனோ படுத்துகிறது
எங்கோ ஒரு வீட்டில் ஒருக்களித்துத் திறந்திருந்த
கதவுவழி உருண்டு வெளியேற முயற்சித்த பந்து.. *****************************************************

.துண்டு துண்டாகக்
கத்தரித்துப்போட்ட
வெறுப்பைக்
கைக்குழந்தையும்
நடைக்குழந்தையுமாக
இடுப்பிலும் கையிலும் இடுக்கிக் கொள்கிறாய்
முந்தானையோடு
சேர்த்துக்கட்டிய ஒன்றோ
தரதரவென உன்னை இழுத்துப் போகிறது
நானென்ன செய்ய ***************************************
ஏதோ ஒன்று
ஒட்டவில்லை
என்னவென்று கேட்காதே
அதற்கெல்லாம்
இன்னும் பெயர் வைக்கவில்லை

கடன் வாங்கிக் கழித்த காலம்

 சுற்றிலும் கனத்த மௌனம் பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது

இழந்த உறவு
இப்போதில்லை
முன்பே இழந்ததுதான்
ஆனால்
இப்போதைய இழப்பைதான் எல்லோரும் இழப்பு எனக் கருதுகிறார்கள்
அவளைப்பற்றி இல்லை
அவர்களைப்பற்றி
சுகந்தமும் முள்ளும்
முற்றிலும்
அவளுடையதாக
இருந்த நாட்களை
எப்போதோ
கிழித்தெறிந்தாயிற்று
தூலமாக இல்லாத
உறவுக்கு
பிரிவைச் சொந்தம் கொண்டாட நாரில்லை
ஆனாலும்
செய்தி
சொட்டுச் சொட்டாக அவளைச்சுற்றி
விழுந்ததும்
உறைந்ததும்
உண்மை
அப்படியே தன்னை உருவிக்கொண்டு மேலெழுந்துவிடுவாள்
என்றுதான் கடக்கிறார்கள்
அவளுக்கும் அதுதான் கணக்கு
இறந்தகாலமென்பது
கடன் வாங்கிக் கழித்தல்

எண்கரத்தாள்

 கடிகாரத்தாலோ நாட்காட்டியாலோ புதிய நாள் புதிய காலம்

முகக் கவசத்தின் காதை
காதோடு தொங்கவிட்டுக்கொண்டு
பீடி பிடித்தபடி வம்பளந்து கொண்டிருக்கும்
பணியாளர் கூட்டம்
வியர்வையை முந்தானையால் ஒற்றிக்கொண்டு வாடிக்கையாளர் குரலுக்கெல்லாம் நீளும் எண்கரத்தாள்
காற்றிலாடும் நிறநிறநிறப் பொட்டலங்கள்
கிழமை தெரியாது சுழலும் இந்தக்காலம்தான்
நிகழ்காலம் அவளுக்கு
ஒருநிமிடம் இடைவெளி கொடுத்தீர்களானால்
அந்த தம்ளரில் ஆறிக்கிடக்கும்
தேநீரால் தொண்டையை நனைத்துக்கொண்டு கேட்பாள்
என்னங்க வேணும்

சிறு பள்ள மழைநீர்

 சொல்லிவிட்டதாகத்தான்

தோன்றுகிறது
உனை அடைந்துவிட்டதா
எனத் தெரியவில்லை
இன்றைய இடி மின்னலில்
ஒடிந்த கிளைகளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு ஊர்வலத்தின் பூக்கள் சக்கரங்களில் ஒட்டிக் கொள்கின்றன
சிறு பள்ள மழைநீர் போதுமாயிருக்கிறது
அத்தனை பெரிய ஆகாயம் முகம் பார்க்க
நமக்குதான் எத்தனை போதாமை ************************************************
ஆம்
உன்னைத்தான்
நீஈஈண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்
உன் அடையாளங்களை
அறியாதவள் முன்
வந்து
போய்விட்டாயாமே
சிறு இரக்கம்
நெகிழ்நகை ஏதொன்றுமிலாது எப்படிக் கடக்க முடிந்தது உன்னால்
அவ்வளவு கல்மிஷமென்றால்
வந்தது நீயில்லை
அல்லது
தேடியது உன்னையில்லை

அடையாளக் குழப்பம்

     இதென்ன கெட்டபழக்கம்

சொன்னதும் கேட்பது
சந்தேகமாகி விடுகிறது
நீதானா
நீ மாதிரியா ******************************
மழைவாசலில்
இறைந்து கிடக்கின்றன
குட்டிப்பூச்சிகள்
உயிர்ப்பிப்பது எல்லாம்
உயிர்ப்பிக்க மட்டுமல்ல *********************************
சூரியனும் எரிக்காத
மழையும் நனைக்காத பகலில் உங்கள் வாகனம் வேகம் பிடிக்க மறுக்கிறது
உங்கள் தலைவலியோ
எதைச்சொல்லி அலுத்துக் கொள்வது என்பதுதான்
மிதமும் இதமும்
அடையாளக் குழப்பத்தில் அடைந்துவிட்டதா நம்மை
என்றே தோன்றுகிறது
****************************************


செவ்வாய், ஏப்ரல் 13, 2021

மென்னி திருகப்பட்ட புன்னகை

 படுகளத்தில் பிணந்தின்பவளையும் குழையவிழ்க்கும் நடனம் வராதவளென்றே உட்காரச் சொல்கிறது வீடு **********************************************

சமீபமாக
அவள் கண்சுருக்கி
சற்றே புருவம் நெறிய
ஒரு பக்கமாகச் சாய்ந்தபடிதான் கவனிக்கிறாள்
அவள் உலகத்தின்
ஒலிபெருக்கியை யாரோ நன்றாகத் திருகிக் குறைத்து விட்டார்கள்
ஆனாலும் விஷமக்காரி
அவ அந்த நாள்ளயிருந்து இன்னிக்கிவரெக்கும் அப்பிடிதான் நிக்கிறா
சிரிச்ச மூஞ்சி மாறுதா பாரு
என்று கை காட்டிப்போவது மூலஸ்தானத்தை ***************************************
முகம் முறித்த தருணம் நினைவிலில்லாது போகிறது
கொப்புளம் உடைந்தாலும்
தழும்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது தோல்
கடக்கும் தருணத்தில் அநிச்சையாய்த் தழும்பைத் தடவிக்கொள்கிறாய்
வெளிப்பட விரும்பிய புன்னகை மென்னி திருகப்பட்டு முனகுகிறதோ
அன்பே சிவம்








வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...