எல்லாம் என் தலையெழுத்து
என்ற முடிப்போடு
நீ நகர்ந்து விட்டாய்
அதில் என் எழுத்தின் பிரதி உண்டா
ஆராய்ச்சியிலிருந்து
மீளாத்திகைப்புடன்
நான்
செம்பாதி இல்லாவிடினும்
ஒவ்வொரு குவளையின் கசப்பையும்
பாகம் பிரித்துக்கொண்டதற்கு
பொருளிருக்கிறதா
உன் தலையெழுத்துக்குத்
தனி அடையாளம் சூட்டுகையில்
*************************************************
இவ்வளவு தித்திப்பாக எதையும் தராதே
கொஞ்சம் குறைவாக இட்டே பழக்கமாகிவிட்டதா
பட்டதும் பல் கூசுகிறது
அறுசுவை என்பது
எல்லோர் அகராதியிலும்
அதே அளவாக இருக்கவில்லை
முழுசாக ஒன்று
வந்தால் கிடுகிடுத்துப்போகிறது
*********************************************************
பேனாக்கத்தியால்
தோல் சீவிக்கொண்டே
விவாதிக்கிறாய்
இடையில் ஒரு சீவல்
இரத்தப்பொட்டை உறிஞ்சிவிட்டு
மீண்டும் பழம் திருத்துகிறாய்
எங்கே விட்டேன் என்று
எனக்குதான் புரியவில்லை
******************************************
நேரத்துக்குக் கிளம்ப வேண்டியிருக்கிறது
நேரத்துக்குக் குளி
உண்
உறங்கு
திரும்பு
எழு
களி
முன்வாசல் முருங்கைக்கீரை போல
நேரத்தின் காம்புகளில்
சின்னதிலிருந்து
பெருசாக
பெருசிலிருந்து சின்னதாக
இதோ ஒரு நாள்
ஆய்ந்தாயிற்று
அலகில்
இழுபடும் கொத்து