வெள்ளி, மார்ச் 28, 2014

சில நூறு கிலோ மீட்டர்களும் கொஞ்சம் மைல் கற்களும்-எஸ் வி வேணுகோபாலன்

டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து எழுதிய பகிர்வு 



கவிதைக்கும், கவிதை தொகுதிக்கும் தலைப்பு வைப்பதில் பெண் கவிஞர்கள் நேர்த்தியான கவனம் செலுத்துபவர்கள். உலகப் போர்களுக்கு ஆண்களே காரணம் என்று இடித்துரைக்கும் நோக்கில் ரஷ்ய கவி அன்னா அக்மதோவா  தமது படைப்பு ஒன்றுக்கு எம் டபிள்யூ 2 என்ற தலைப்பிட்டார் ! கிறிஸ்துமஸ் தாத்தா பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். சாண்டினியா கிளாஸ் என்று கிறிஸ்துமஸ் பாட்டியை உருவகப்படுத்தினார் பெல்லா அக்மதூலினா.  அலுவலக மனைவி என்ற தலைப்பில் கவிதை ஒன்றைப் படைத்தார்அன்னா மேரி. இப்படி தலைப்புகளிலேயே கலகக் குரல் எழுப்பும் பல பெண் படைப்பாளிகளைப் பார்க்கிறோம். கவிஞர் உமா மோகன் அவர்களது டார்வின் படிக்காத குருவி என்ற தலைப்பும் அப்படித்தான்...பரிணாம வளர்ச்சி குறித்து அறியாத குருவி என்றும், டார்வின் படிக்க விடுபட்ட குருவி என்றும் வெவ்வேறு பொருள் தரும் தலைப்பு அது. காணாமல் போய்க் கொண்டிருக்கும் உயிரினம் பற்றிய அற்புதக் கவிதை அது.  சொல்லவரும் சமூக அதிர்ச்சிக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் சொற்கள் இவை என்றார் ஆயிஷா இரா நடராசன். 

ஜனவரி 11 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில், அகில இந்திய வானொலியின் புதுவை நிலைய அறிவிப்பாளராக இயங்கும் கவிஞர் உமா மோகன் அவர்களின் கவிதை நூலை வெளியிட்டுப் பேசிய அவர், சம கால சிக்கல்கள், முரண்பாடுகள் குறித்த முக்கிய கவிதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பு என்று பாராட்டினார். 

நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட கவிஞர் சுகிர்தராணி, சுவாரசியமான முறையில் பேச்சைத் தொடங்கினார். தான் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணிப்பேட்டையிலிருந்து வந்திருக்கும் தமக்கு பத்து கிலோமீட்டருக்கு ஒரு நிமிடம் என்று பார்த்தாலும் பேசுவதற்கு 15 நிமிடங்கள் கொடுத்திருக்க வேண்டும், நட்பின் நிமித்தம் அதிலும் ஐந்து நிமிடம் குறைத்துக் கொண்டால் என்ன பேசுவது என்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தமது போராட்ட வாழ்க்கை, இலக்கிய தளத்தில் செயல்பாடு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், உமா மோகனின் கவிதைகளின் உணர்வு வெளிப்பாடு, கூர்ந்த பார்வை, உலகமய காலத்தின் பிரதிபலிப்பு ஆகியவை கவனத்தை ஈர்ப்பதாக இருப்பதை கவிதைகள் சிலவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்.

வாழ்த்துரை வழங்கிய அகில இந்திய வானொலியின் தென் மண்டல கூடுதல் இயக்குனர் க பொ சீனிவாசன் தான் ஹைதராபாத், பெங்களூரு என்றெல்லாம் சென்று அலுவல்கள் முடித்துக் கொண்டு பாண்டி வந்திருப்பதால் அவர் பயணம் செய்தது இன்னும் அதிக கிலோமீட்டர் தூரம் என்று சுகிர்தராணி எழுப்பிய தூர-நேர விகிதக் கணக்கைச் சுட்டிக் காட்டினார். தங்களது நிறுவன ஊழியர் சிறந்த கவியாக பரிணமிப்பது துறைக்கே பெருமை என்று பாராட்டினார். புதுவை நிலைய இயக்குனர் சிவபிரகாசம், கவிஞர் கோவிந்தராசு ஆகியோரும் வாழ்த்திப் பேசினார். 

ஆய்வுரை வழங்கிய முனைவர் நா இளங்கோ, மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப பொருளோடு அழகியலையும் முன்னெடுக்கும் கவிதைகளின் வரிசையில் உமா மோகன் கவிதைகள் பாராட்டுக்குரியவை என்றார். இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் எஸ் வி வேணுகோபாலன், மனிதர்களை ஒற்றை ஒற்றை ஆளாகப் பிரித்துப் போடும் உலகமய சவாலைப் பண்பாட்டுத் தளத்திலும் எதிர்கொள்ளவேண்டும், அந்த சவாலை ஏற்று பளீரென பதிலடி கொடுக்கும் கவிதைகள் உமா மோகனுடையவை என்றார். விளைநிலங்கள்மீது கட்டிடங்கள் எழுவதன் வேதனைக் காலத்தை, தானியம் தேடி வந்து டெட்ரா பேக்குகளைக் கொத்தி ஏமாறும் குருவியைப் பார்த்து சுவரொட்டி தின்னும் பசு சிரிப்பதை விவரிக்கும் தலைப்புக் கவிதை மக்களிடம் பேசப்பட வேண்டிய விவாதப் பொருள் என்றார் அவர். 

முன்னதாக நூலைப் பதிப்பித்த முரண்களரி வெளியீட்டகத்தின் யாழினி முனுசாமி வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று நடத்திய மன்னர் மன்னன், தனி முத்திரை பதிக்கும் கவிதைகள் என்று பாராட்டினார். குழந்தைகள் உலகத்தை உமா அறிமுகப் படுத்தும் பாங்கு அற்புதமானது என்றார். உமா மோகன் அவர்களுடைய இளைய மகன் பிரணவ ஸ்வரூப் தாயைப் பாராட்டி கவிதை வாசித்தார்.

நிறைந்திருந்த அவையில் ஒரு கவிதை நூல் வெளியீடு நடந்த சிலிர்ப்போடு ஏற்புரை நிகழ்த்திய உமா மோகன், இங்கே கிலோமீட்டர் தூரம் பற்றிய பேச்சு எழுந்தது. உள்ளபடியே நான் கடந்துவந்த மைல் கற்களின் தொலைவு இது என்றார். அன்பான குடும்பச் சூழல், ஊக்குவிக்கும் அலுவலக நண்பர்கள் வட்டம்-அங்கீகரிக்கும் அதிகாரிகள் நிரம்பிய நிர்வாகம் ஆகிய சாதக அம்சங்களைக் குறிப்பிட்ட அவர் தமது தொகுப்பு வருவதற்கு உதவிய நண்பர்கள் வட்டத்திற்கு நன்றி பாராட்டனார். விருந்தினர்களுக்கு பாரதி-செல்லம்மா படங்களோடு மகாகவியின் வசன கவிதை தாங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

மேற்கோள் காட்டப்பட்டுக் குவிந்திருந்த கவிதைச் சொற்களின் உள நிறைவோடு விடைபெற்றனர் பார்வையாளர்கள். 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...