வியாழன், செப்டம்பர் 22, 2016

வழிகாட்டப்பட்ட வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சிக்கு வழிகாட்டுவதாக நினைத்து
பிடித்து பிடித்து விடுகிறீர்கள்
முதலில் வண்ணங்கள் ஒட்டிக்கொண்டன
பின்னர் சிறகுகளும்
இப்போது
பிடித்து பிடித்து விட வாகாக
இல்லையே என்பதுதான்
உங்கள் காருண்யக்கவலை


**********************************************************
உங்களை மிரட்டுவது எது
நடந்து பழகு
தனித்து நட
குனியாதிரு
வீணே பணியாதிரு 
எல்லாம் அறிவித்தீர்கள்
கற்றது கைக்கொள்ளும் போது
உங்களை மிரட்டுவது எது
நீங்கள் நீங்கலாக என்று
நினைத்தீர்களோ


*************************************************************
களிமண் பிசைந்த கையோடு பேத்தி தந்த
பிளாஸ்டிக் குவளைத் தேநீரை
உறிஞ்சிவிட்டு
அழுத்திய அச்சிலிருந்து
கடவுளை விடுவித்த கிழவி
இன்று மாலை
கடற்கரை வந்திருக்கமாட்டாள்

****************************************************************
ஒரேமாதிரியாக இருக்க ஆசைதான் நமக்கு
ஆனால் அவ்வப்போது
ஒருமாதிரியாக
இருக்கும்படி நேர்ந்துவிடுகிறது


**************************************************
புதிய மனிதர்கள்
நல்லவர்கள்
அவர்களைப் புரிந்துகொள்ளச்சொல்லி
பழைய தொந்தரவைச்
செய்யாதவரை...

*******************************************************
நான் நானாக இருப்பது
கடும்நடையென்றீர்கள்
விளக்க உரை போட்டு
விநியோகமும் நடக்கிறது
செம்பதிப்பில்லையென
செய்தி சொல்ல வந்துவிட்டீர்

****************************************************************

டாட்

உங்கள்மாலையில்
நிலவு இருந்தது
உங்கள்விடியலில்
மலர் விரிந்தது
மாலை விடியலுக்கும்
விடியல் மாலைக்கும்
இடம்பெயர்ந்துவிட்டது அறியாமல்
இன்னும் மலரில் நிலவையும்
நிலவில் மலரையும்.......

**********************************************************
பகடியால் உயிர்பிடுங்கும்
வித்தைக்காரர்களை
தனதுவிஸ்வரூப உயரத்தின்
மீட்டர்களை உடனுக்குடன்அளந்து எடுத்துரைப்பதற்கான
அளவுநாடாக்களைப் பைக்குள் சுமந்தபடி
உரையாடிக்கொண்டிருப்பவர்களை
அவர்களே பாரம்சுமப்போர்
எனக்கூவித்திரிவோரை
நாளையும்சந்திக்க
இந்தஇரவுவணக்கம் உதவட்டும்.
அதென்ன அப்புறம்...
ம்ம்...டாட்.

********************************************************

நீங்கள் உங்களைப் போலில்லை

ஏதோ செய்துவிடப்போவதான
நம்பிக்கையில்தான் வாழ்கிறோம்
எதையுமே செய்துவிடவில்லை
என்பது புரிந்தாலும்
இனியாவது
ஏதோ செய்துவிடப்போவதான
நம்பிக்கைதான்
எவ்வளவு உவப்பாகஇருக்கிறது
உப்புபோட மறந்துபோன
சாம்பாரில்
பரிமாறலுக்குமுன் கலந்துவிடுவதுபோல்
ஏதாவது செய்துவிட முடிந்தாலாவது......
நம்பிக்கைகள் எளிமையானவை மட்டுமல்ல
கொடுமையானவையும்
****************************************************************
காத்திருத்தல் எவ்வளவு கடினமானது
காலகாலமாகச் சொல்லப்பட்ட
உதாரணங்களாலும்
அனுபவத்தாலும் அறிந்திருக்கிறோம்
எங்கெங்கோ காத்திருப்பவர்களின்
எதிர்பார்ப்புக்கு மாறாக
காத்திருப்பின் சுவையை உணராமல்
எவரோ கரைந்துகொண்டிருக்கிறார்கள்
முறையின்றி
*****************************************************************
யாரைப் போலிருக்கிறீர்கள்
என்று யாராவது சொல்லிக்கொண்டே
இருப்பார்கள்
உங்களைப்போல் இருப்பதாக
எப்போது சொல்வார்களோ என்று
காத்திருந்து காத்திருந்து
இப்போது
நீங்களே உங்களைப் போலில்லை
*************************************************************

குற்றமாகாது

விடைபெற வேண்டிய தருணத்தில்
மீண்டும் சந்திப்போம் என்றுதான்
நினைக்கிறீர்கள்
அந்ததைரியத்தில்தான்
சொல்லிக்கொள்ளாமல் கிளம்புகிறீர்கள் 
கொடுஞ்சொல்லால் ஒரு கிழி
கிழித்துவிட்டு
எதுவும்நடக்காததுபோல்
உங்கள்ஆடையை சீர்திருத்தியபடி
வாகனம் ஏறுகிறீர்கள்
பார்க்காததுபோல நழுவுகிறீர்கள்
அவசரத்தில்இருப்பதுபோலவும்
ரயில்ஓடத்தொடங்கிவிட்டது போலவும்
விதவிதமான கற்பிதங்களோடும்
பாவனைகளோடும்
நகர்ந்திருக்கிறீர்கள்
மீண்டும் சந்திக்க முடியும்வரை
எதுவும் குற்றமாகத் தோன்றுவதில்லை

ஒற்றை நந்தியாவட்டை


கரங்கள் அதன் சிறகை வருடின
ஏந்திய பறவைக்கு காற்றை
அறிமுகம் செய்தபோது
மலர்ந்தவைதான் சூழ்ந்திருக்கும் இந்த வாடாமலர்கள்
சொந்தம் கொண்டாட எவர் வரினும்
பூத்த கணம் நித்தியமே
**************************************************************************
நிறைவேறா யோசனை
எழுத்தை விட்டுவிட்டு
எழுந்து பறந்துவிட்ட முத்துக்குமார்
காரணகாரியமில்லாது 
எவரையோ எவரோ 
செய்துகொண்டிருக்கும் அவமானம்
வலிகுறித்த தெளிவின்றி
நகர்ந்துசெல்லும் பெண்
விடைதரவியலாக் கேள்விகள்
துன்புறுத்தும் வரிசைக்கு
புதுவரவு 
தனித்தாடும் ஒற்றை நந்தியாவட்டை
**************************************************************
திடீரெனத் துவங்கும்
தூறல் எப்போதும்போல
சீரற்றே விழுகிறது
சீறல் போலக் கேட்கும் ஓசை
வயதின் எண்ணிக்கையை
சொல்லிவிட
யாருக்கும் கேட்குமுன்
துடைத்துவிட்டேன்
மூடும் சன்னலை எவர் கவனிக்காவிடினும்
வழிந்தோடும் மழை கவனிக்கத்தான் செய்கிறது
******************************************************************
என்னைப்போலவே நீயும்இருக்கிறாய்
உன்னைப்போலவே நானும்
கொந்தளிக்கும் கடலாக
தெறித்துவிழ இடம்தேர்வு செய்யா
நெருப்புக்குழம்பாக
சொற்களுக்காக உயிரைக்
கையளிக்கும் தத்தளிப்பாக
ஓட்டுக்குள் ஒடுங்கிய நத்தையாக
முகையவிழ அதிகாலையை
எதிர்பார்த்திருக்கும் கொடியாக
பருக்கையோ செத்த எலியோ
கைப்பற்றக் காத்திருக்கும் காக்கையாக....
இன்னபிறவாகவும்
என்னைப்போலவே நீயும்இருக்கிறாய்
ஒருபோது
அது ஒரேபோதாக இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்
என்னைப்போல்இருப்பதை
நீயும்
உன்னைப்போல் இருப்பதை
நானும்
உணராமலும் போகலாம்
போகவே.....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...