கறை படிந்த பாய்

 

மே 14  வல்லமையில்

இடுப்பு தரிக்கா காற்சட்டைக்கு 
அரைஞாண் கயிறுக்
காப்பு..
முறுக்குவாளியில்
மட்டுமன்றி 
கடுகுடப்பி சில்லறையிலும் 
வைத்திருப்பாய் என் தீனி...
பால்காசு,
பயிறெடுப்பு...
உன் 
எல்லா வரவிலும் 
என் செலவு...
அழுக்குப் படிந்த 
உன் மஞ்சள் கயிறு 
நினைவிலாடுகிறது 
இந்த அடையாள அட்டையை 
தொங்கவிடும்தோறும்.....
வெடிப்புகளுக்கு இட்ட 
மஞ்சள் விளக்கெண்ணையால் 
கறை படிந்து போன 
உன் பாயைப் பார்ப்பதுண்டு 
அம்மா 
அந்தி வானத்தின் நிறக்கலவையில்...  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்